ரூ.2 கோடி கேட்டு நோட்டீஸ்: 'ஆஸ்கர்' புகழ் பொம்மன் - பெள்ளியை ஆவணப்பட இயக்குநர் ஏமாற்றினாரா?

பொம்மன் பெள்ளி
படக்குறிப்பு, பொம்மன், பெள்ளி தம்பதியை மையமாகக் கொண்ட ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ என்ற குறு ஆவணப்படம், சமீபத்தில் ஆஸ்கர் விருதை வென்று சாதனை படைத்தது
    • எழுதியவர், ச.பிரசாந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகளைப் பராமரிக்கும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் பொம்மன், பெள்ளி தம்பதி.

இவர்களை மையமாகக்கொண்ட ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ என்ற குறு ஆவணப்படம், சமீபத்தில் ஆஸ்கர் விருதை வென்று சாதனை படைத்தது.

ஆவணப்படத்தின் மையக்கருவாக உள்ள பொம்மன் - பெள்ளி தம்பதி, இந்த ஆணவப்படத்தை எடுத்த இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் மீது, பரபரப்பான பல குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில், யானைகளை பராமரித்து வரும் தம்பதி தான் பொம்மன்-பெள்ளி.

காட்டுக்குள் தாயைப் பிரிந்து, உடம்பில் பல காயங்களுடன் இறக்கும் தருவாயில் மீட்கப்பட்ட ஒரு குட்டி யானை, இந்த தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டது.

பொம்மன் பெள்ளி
படக்குறிப்பு, தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில், யானைகளைப் பராமரித்து வரும் தம்பதி தான் பொம்மன்-பெள்ளி.

அந்த யானைக்கு ‘ரகு’ எனப் பெயரிட்ட இவர்கள், தங்களது குழந்தையைப் போல அதை வளர்த்து, தங்களின் அதீத அன்பு கலந்த கவனிப்பால் யானையின் ஆரோக்கியத்தைத் தேற்றினர்.

பிறகு, இதேபோன்று அம்மு என்ற பெண் குட்டி யானையும் இவர்களிடம் பராமரிக்க கொடுக்கப்பட்டது.

இரண்டு யானைகளை அன்போடு பராமரித்து காப்பாற்றிய பொம்மன் – பெள்ளி தம்பதியின் வாழ்க்கை மற்றும் யானைகளுடனான அவர்களின் பாசப் பிணைப்பை மையமாக வைத்து, கார்த்திகி கொன்சால்வ்ஸ் ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்‘ என்ற ஆவணப்படத்தை உருவாக்கினார்.

அது நெட் ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகி உலக அளவில் பிரபலமானதோடு ஆஸ்கர் விருதையும் வென்று சாதனை படைத்தது.

பிரதமர், குடியரசுத்தலைவர் பாராட்டு..

பொம்மன் பெள்ளி தம்பதியை பிரதமர் நரேந்திர மோதி பாராட்டியதுடன், தமிழக முதல்வர் ஸ்டாலின் ரூ.1 லட்சம் பரிசளித்து, பெள்ளிக்கு காவடி (பாகனுக்கு உதவியாக யானையைப் பராமரிக்கும் பணி) அரசு வேலையும் கொடுத்துள்ளார்.

ஆகஸ்ட் 5ஆம் தேதி சனிக்கிழமை, முதுமலை தெப்பக்காடு பகுதிக்கு வந்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மூ, பொம்மன் – பெள்ளி தம்பதியை நேரில் சந்தித்துப் பாராட்டினார்.

இப்படியான நிலையில், பொம்மன் – பெள்ளி தம்பதி ஆவணப்படத்தின் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் மீது பரபரப்பான பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது தேசிய அளவில் பேசுபொருளாகி உள்ளது.

பொம்மன் பெள்ளி
படக்குறிப்பு, பொம்மன் – பெள்ளி தம்பதி நல்லெண்ண அடிப்படையில் (Good will gesture) ரூ.2 கோடி ரூபாய் கேட்டு, ஷிக்யா என்டர்டெயின்மென்ட், இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் ஆகியோருக்கு சட்டரீதியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

பொம்மன் – பெள்ளியின் குற்றச்சாட்டுகள் என்ன?

பிபிசி தமிழிடம் பேசிய பொம்மன் – பெள்ளி தம்பதி, ‘‘நாங்கள் சாதாரணமாக எங்கள் வேலைகளைச் செய்து, யானைகளைப் பராமரித்து வந்தோம்.

இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் எங்களைச் சந்தித்து குறு ஆவணப்படம் எடுப்பதாகக் கூறி, எங்களைப் படம் பிடித்தார்கள். இந்தப் படம் விருது (ஆஸ்கர்) பெறும் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. நாங்கள் அவர் சொல்லியதைச் செய்தோம்,’’ என்றனர்.

‘‘படப்பிடிப்பின் போது இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் எங்களிடம், ‘உங்கள் இருவருக்கும் வீடு கட்டித் தருகிறேன், வீட்டிற்குப் பொருட்கள், வாகனம் வாங்கித் தருகிறேன்; பணம் கொடுக்கிறேன்,’ என்று பல வாக்குறுதிகளை" அளித்ததாக பொம்மன், பெள்ளி கூறுகின்றனர்.

ஆனால் அவர்கள் தங்களது வங்கிக் கணக்கு விபரங்களைப் பார்த்தபோது எந்தப் பணமும் தங்களுக்கு வரவில்லை என்பதை அறிந்ததாகவும் அதுகுறித்து இயக்குநர் கார்த்திகியிடம் கேட்டதாகவும் பிபிசியிடம் தெரிவித்தனர்.

அதுமட்டுமின்றி, படப்பிடிப்பின்போது தங்களிடம் இயக்குநர் கார்த்திகி 40 ஆயிரம் ரூபாய் வரை கடனாகப் பெற்றதாகவும் அதையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாகவும் பொம்மன், பெள்ளி இருவரும் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், பேசிய அவர்கள், ‘‘முதல்வர் கொடுத்த ரூ.1 லட்சம் மற்றும் அரசு வேலையைத் தவிர வேறு எதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. படப்பிடிப்பு எடுக்கத் தொடங்கியது முதல் இன்று வரை எங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை கார்த்திகி கொன்சால்வ்ஸ் நிறைவேற்றவில்லை, பணமும் கொடுக்கவில்லை. அவர் எங்களுக்கு எதுவுமே செய்யவில்லை,’’ என்று கூறுகிறார் பொம்மன்.

இப்படியான நிலையில், பொம்மன் – பெள்ளி தம்பதி நல்லெண்ண அடிப்படையில் (Good will gesture) ரூ.2 கோடி ரூபாய் கேட்டு, ஷிக்யா என்டர்டெயின்மென்ட், இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் ஆகியோருக்கு சட்டரீதியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இயக்குநரின் விளக்கம் என்ன?

தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் குறு ஆவணப்படத்தின் இயக்குநர் தரப்பு விளக்கம்
படக்குறிப்பு, இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் மற்றும் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் குறு ஆவணப்படத்தைத் தயாரித்த ஷிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் பிபிசி தமிழுக்கு அளித்த விளக்கம்

பொம்மன் – பெள்ளியின் குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்க பிபிசி தமிழ் தொடர்புகொண்டபோது, இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் வாட்ஸ் ஆப் வாயிலாகப் பதிலளித்தார்.

அப்போது, ‘‘பொம்மன் – பெள்ளி கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய், அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை,’’ என்று கூறினார்.

மேலும், இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் மற்றும் ஆவணப்படத்தை தயாரித்த ஷிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் பிபிசி தமிழுக்கு விளக்கமளித்துள்ளனர்.

அதில், ‘‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படம் தயாரித்ததன் நோக்கமே, யானைகள் பாதுகாப்பு, வனத்துறை மற்றும் பொம்மன் – பெள்ளியின் அளப்பரிய முயற்சிகளை வெளிக்காட்டுவதே," என்று கூறினர்.

இந்த குறு ஆவணப்படம் பாகன்கள் (Mahouts) மற்றும் அவர்களது உதவியாளர்கள் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் தங்கள் விளக்கத்தில் குறிப்பிட்டனர்.

மேலும், "ஆவணப்படம் வெளியான பிறகு, தமிழக முதல்வர் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள, 91 பாகன்களையும் மேம்படுத்த பரிசளித்துள்ளார். இந்த ஆவணப்படம் இந்தியா முழுவதும் உள்ள தலைவர்களால் கொண்டாடப்படுகிறது.

அகாடமி விருது பெற்றது தேசத்தின் பெருமை என்பதுடன், இது பொம்மன் – பெள்ளி போன்ற பாகன்களுக்குப் பெரும் அங்கீகாரத்தை வழங்கியுள்ளது," என்று தெரிவித்தனர்.

அதோடு, "அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது. இந்தக் கதையின் பங்களிப்பார்கள் அனைவரது மீதும் நாங்கள் ஆழ்ந்த மரியாதை வைத்துள்ளோம்,’’ என்றும் தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: