புதையலுக்காக 11 பெண்கள் நரபலி: தூக்கு மேடையில் இருந்து இவர்களை 'பணம்' காப்பாற்றியது எப்படி?

நரபலி போன்ற கொடூரங்களும், சூனியம் போன்ற மூடநம்பிக்கைகளும் இன்றைய நவீன உலகிலும் ஒழிந்துவிட்டதாக கருத முடியாது. மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்துக்குட்பட்ட மாலேகானில் கடந்த மாதம், ஒன்பது வயது சிறுவன் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஓரிடத்தில் ரகசியமாக புதைக்கப்பட்டிருப்பதாக கருதப்படும் பணத்தை கண்டுபிடிப்பதற்காக அச்சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில், ‘மூடநம்பிக்கை மற்றும் மாந்திரீகத் தடைச் சட்டம்’ அமலுக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. ஆனால் நரபலி போன்ற சம்பவங்கள் அங்கு தொடர்ந்து நடைபெற்றுதான் வருகின்றன.
அண்மையில் அங்கு, ஒன்பது வயது சிறுவன் நரபலிக்கு ஆளானதைப் போன்று, ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த கொடூர தொடர் கொலை சம்பவங்கள், அந்த மாநிலத்தையே உலுக்கியது.
மராத்வாடா, பர்பானி உள்ளிட்ட பகுதிகளுக்கு உட்பட்ட கிராமத்தில் இருந்து சிறுமிகளும், பெண்களும் ஒருவர் பின் ஒருவராக காணாமல் போகத் தொடங்கினர். அவர்கள் தொலைந்த சில நாட்களுக்கு பிறகு சிதைந்த உடல்கள் வயல்வெளிகளிலும், கிணற்றடிகளிலும் கண்டெடுக்கப்பட்டன. நவம்பர் 1972 இல் தொடங்கி ஜனவரி 1974 வரை, இந்தக் கொடூர சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
மகாராஷ்டிரா மாநிலத்தையே உலுக்கிய, தொடர் கொலை வழக்கின் விசாரணை நடைபெற்றது எப்படி? கொலையின் மர்மம் விலகியது எப்படி? குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்களா? அவர்களில் சிலர் தண்டனையில் இருந்து தப்பியது எப்படி?
இந்தக் கொலை வழக்கு நடைபெற்று முடிந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு, இதில் பிரதானமாக குற்றம்சாட்டப்பட்டிருந்த உத்தம்ராவ் பர்ஹதேவை, பத்திரிகையாளர் ஷரத் டியுல்கோங்கர் பேட்டி கண்டார்.
அந்தப் பேட்டியின் அடிப்படையில் டியுல்கோங்கர் எழுதியுள்ள ‘மானாவத் ஹதகண்ட்’ என்ற புத்தகத்தில், 11 தொடர் கொலைகள் பற்றிய விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

கொலைக்குப் பின் கொலை
நவம்பர் 14, 1972 அன்று மதியம், மானாவத் கிராமத்தைச் சேர்ந்த கயாபாய் சகாரம் கச்வே என்ற 10 வயது சிறுமி, மேய்ச்சலுக்கு சென்றிந்த பசுக்களை கூட்டிவர, வீட்டை விட்டு வெளியே சென்றார்.
சூரியன் அஸ்தமிப்பதற்குள் பசுக்களை அழைத்து கொண்டு அவர் வீடு திரும்புவது வழக்கம். ஆனால் அன்றைய தினம் குறித்த நேரத்தில் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர் இரவு முழுக்க தன் மகளை கிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் எல்லாம் தேடி அலைந்தனர்.
அடுத்த நாள் பொழுது புலர்ந்தது. அன்று நாள் முழுவதும் தேடல் வேட்டை தொடர்ந்தபோதும் சிறுமி கிடைக்கவில்லை. மூன்றாம் நாள் உத்தம்ராவ் பர்ஹதேவின் பண்ணைக்கு அருகில் ஓடையில் சிறுமியின் உடல் கிடந்தது. அவளது தலையில் அடிபட்டதற்கான அடையாளமும், பிறப்புறுப்பில் காயங்களும் இருந்தன.
இரண்டு வார இடைவெளியில் இன்னொரு சம்பவம்
மாயமான சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்ட துயர சம்பவம் நிகழ்ந்த 15 நாட்களுக்கு பிறகு ஷகீலா அலாவுதீன் என்ற ஒன்பது வயது சிறுமி மாயமானார். விறகு எடுக்க வெளியே வயல்வெளிக்கு சென்றவர், வீடு திரும்பவே இல்லை. அவரது வீட்டில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்த வயல்வெளியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது உடலிலும் காயங்கள் இருக்கவே, அவரின் உடல் சிதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பட்டது.
இவ்விரு சிறுமிகளின் பெற்றோரும் ஏழைகள் என்பதாலோ என்னவோ, அவர்களின் கொலை வழக்குகளை விசாரிப்பதில் போலீசார் வேகம் காட்டவில்லை.
அடுத்தடுத்த சம்பவங்கள்
இந்த நிலையில் பிப்ரவரி, 1973 இல் மற்றொரு கொலை நிகழ்ந்தது. பார்தி வாடா என்ற இடத்துக்கு அருகே வசித்துவந்த 35 வயதான சுகந்தா சந்தரேயா மாங் என்ற பெண் இந்த முறை மர்மமான முறையில் உயிரிழந்தார்.
கூடைகளை முடைந்து விற்கும் தொழிலை செய்து வந்த அவர். அதற்காக மூங்கில் வெட்டுவதற்காக ஷிண்டி கிராமத்துக்குச் சென்றபோது அங்கு மர்ம நபர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக தெரிய வந்தது.
பின்னர் ஏப்ரல் மாதம். கட்டாக் என்பவரின் 10 வயது மகள் நசீமா சையத் கரீம் திடீரென காணாமல் போனார். மறுநாள் அவரின் உடல் மிகவும் மோசமான நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவரின் தலைகள் துண்டிக்கப்பட்டு, வலது சுண்டு விரல் உடைக்கப்பட்டிருந்தது. சிறுமியின் இக்கொடூர கொலை பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதன் பின்னரே விழித்து கொண்ட போலீசார், மூன்று சிறுமிகள் மற்றும் ஒரு பெண்ணை கொலை செய்தது யார் என்பது குறித்து தீவிரமாக விசாரிக்க தொடங்கினர்.
ஜூன் 18, 1973இல், உத்தம்ராவ் பர்ஹதே, ருக்மணி பாகோஜி காலே, பாகோஜி காலே, தக்து பாகோஜி காலே ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

பட மூலாதாரம், Getty Images
தொடர்ந்த கொலைகள்
கைதான நபர்களில் ஒருவரான உத்தம்ராவ் பர்ஹதே மனிதநேயம் மிக்க மனிதராக கிராம மக்களால் அறியப்பட்டார். தனது சொந்த கிராமத்தில் விவசாயமும், பெரிய வியாபாரமும் செய்து வந்த அவர் பெரும் செல்வந்தர். கிராம நிர்வாகத்தில் உயர்பொறுப்பு வகித்த வந்த உத்தம்ராவுக்கு அங்கு ஒரு பெரிய அரண்மனையும் இருந்தது.
கைதான மற்றொரு நபரான ருக்மணி பாகோஜி காலே, பார்தி சமூகத்தைச் சேர்ந்த பெண். திருமணமான இவர், கணவனை விட்டு பிரிந்து தன் தாய் வீட்டுக்கே திரும்பி இருந்தார். இச்சமூகத்தினர், தங்களின் கிராமத்தில் இருந்து சிறிது தொலைவில் இருந்த தங்களது இல்லங்களில் மதுபானம் தயாரிக்கும் தொழிலை செய்து வந்தனர். ருக்மணியும் அதே தொழிலை செய்துவர, ஒருநாள் அவர் உத்தம்ராவ் கண்களில் பட்டார்.
உடனே அவருக்காக தனி மாளிகையை வாங்கிய அவர், ருக்மணியின் கொட்டகைக்கு அவ்வபோது வந்து சென்ற வண்ணம் இருந்தார். ருக்மணி செய்து வந்த தொழில் குறித்தும், உத்தம்ராவ் உடனான அவரின் தொடர்பு பற்றியும் போலீசாருக்கு தெரிய வந்தது.
தொடர் கொலை சம்பவங்களில் சந்தேகிப்பட்ட உத்தம்ராவ், ருக்மணி உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தபோதும், மர்ம கொலைகள் மீண்டும் தொடர்ந்தன.
இந்த முறை மணவாட் என்ற இடத்தில் 32 வயதான கலாவதி பாம்ப்ளே என்ற பெண் படுகொலை செய்யப்பட்டார். கலாவதிக்கு குழந்தைகள் இல்லாத நிலையில்,கொல்லப்பட்ட அவரது உடல்நிலையை பார்த்தபோது. அவரது படுகொலைக்கு பின்னால் நரபலி, சூன்யம் போன்றவை இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இந்தக் கொலை குறித்த விசாரணை நடைபெற்று கொண்டிருந்தபோதே. மற்றொரு 10 வயது சிறுமி திடீரென காணாமல் போனார். மறுநாள் அவரது உடலும் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இப்படி சில மாதங்கள் இடைவெளியில் நான்கு சிறுமிகள், இரண்டு பெண்கள் என ஆறு பேர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம், மகாராஷ்டிரா மாநிலத்தையே உலுக்கியது. ஆனால், இந்த தொடர் கொலை சம்பவத்தில் போலீசாருக்கு துப்பும் துலங்கவில்லை. எந்த ஆதாரமும் சிக்கவில்லை.
இதனிடையே, இந்த விவகாரம் மகாராஷ்டிர மாநில சட்டமன்றத்தில் புயலை கிளப்பியது. அதையடுத்து, மர்ம கொலைகள் குறித்து விசாரணை மேற்கொள்ள மும்பையில் இருந்து மூத்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்ட சரத் பவார்
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு, ஜுலை 30, 1973 அன்று, உத்தமராவ் உள்ளிட்ட நான்கு பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஆனால், தொடர் கொலை சம்பவங்களை முன்வைத்து, மாநில சட்டமன்றத்தில் கடும் அமளி தொடர்ந்தது.
அதையடுத்து அப்போது மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சராக இருந்த சரத் பவார், மும்பையில் இருந்து சிஐடி போலீசார் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகளை மணவாட் உள்ளிட்ட சம்பவம் நிகழ்ந்த இடங்களுக்கு அனுப்பினார்.
அப்போதைய, மும்பை துணை காவல் ஆணையர் ரமாகாந்த் குல்கர்னி, மாநில குற்றப் புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் என்.எம்.வாக்மரே, குற்றப்பிரிவு காவல் அதிகாரி விநாயக் வகட்கர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுக்கு இக்கொலை சம்பவங்களை விசாரிக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டது.
ஆனால் அதன் பிறகும் மர்ம கொலைகள் தொடர்ந்து கொண்டு தான் இருந்தன. 1973 டிசம்பர் முதல் வாரத்தில் கொண்டியா ரிலே என்ற பெண் கொலை செய்யப்பட்டார்.
இந்தப் பெண்ணின் கொலை தொடர்பாக ருக்மணி காலேவின் சகோதரி சமீந்தரியை விசாரணை அதிகாரிகள் கைது செய்தனர். இவரது கைதை அடுத்து, கொலைகளுக்கான மர்மம் வெளிவரத் தொடங்கியது.

பட மூலாதாரம், Getty Images
ஒரே நாளில் நிகழ்ந்த மூன்று கொலைகள்
குறிப்பிட்ட மாதங்கள் இடைவெளியில் சிறுமிகள், பெண்கள் என ஏழு கொலைகள் நடைபெற்றிருந்தன. அவற்றுக்கும் மேலாக ஜனவரி 4. 1974 அன்று, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், ஒரே நாளில் கொலைச் செய்யப்பட்டனர்.
பாஸ்திஷி பகுதியைச் சேர்ந்த ஹரிபாய் ஞானோபா போர்வானே என்ற பெண், கமல் என்ற தனது ஒரு வயது பெண் குழந்தை மற்றும் ஒன்பது வயது மகளுடன் தனது கணவர் உழுதுக்கொண்டிருந்த வயலுக்கு சென்று கொண்டிருந்தார்.
ஒன்பது வயது சிறுமியான தாராமதி, சமைத்த உணவுப் பொருட்களை தலையில் சுமந்தபடி வயல்வெளியில் நடந்து சென்றுக் கொண்டிருந்த தன் தாய் ஹரிபாயை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென பாய்ந்த கோடாரி, ஹரிபாயின் தலையை தாக்கியது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சரிந்தார். அவர் இடுப்பில் சுமந்திருந்த ஒரு வயது குழந்தையும் அந்தத் தாக்குதலுக்கு தப்பவில்லை. இதைக் கண்டு அஞ்சி ஓடிய சிறுமி தாராமதியும் தாக்கப்பட்டார். ஒரே நேரத்தில் நிகழ்ந்த மூன்று கொலைகளுக்கும் உமாஜி பிடலே என்பவர் சாட்சியாக இருந்தார்.
“ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் ஒரே நாளில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மகாராஷ்டிரா மாநிலத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்தக் கொடூர சம்பவத்தைக் கண்டித்து, மும்பை மாநகரில் மறுநாள் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது” என்று தமது புத்தகத்தில் எழுதுகிறார் பத்திரிகையாளர் ஷரத் டியுல்கோன்கர்.
கொலை சம்பவங்கள் மாநிலத்தில் பெரும் புயலை கிளப்பவே. அப்போதைய மகாராஷ்டிரா மாநில காவல் துறை ஐ.ஜி.,யாக இருந்த, ஏ.ஜி.ராஜதக்ஷா இந்த விவகாரத்தை நேரடியாக கையில் எடுக்கவே, கைது நடவடிக்கைகள் வேகமெடுத்தன என்றும் விவரிக்கிறார் டியுல்கோன்கர்.
மந்திரவாதி கைதும், ஒப்புதல் வாக்குமூலமும்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, அதாவது ஜனவரி 6 ஆம் தேதி கன்பத் சால்வே என்ற மந்திரவாதி, பாராமதியில் கைது செய்யப்பட்டார். அவரது வாக்குமூலத்தில் இருந்து தொடர் கொலைகளுக்கான நோக்கம் மற்றும் சதித் திட்டம் என்ன என்பது போலீசாருக்கு தெரிய வந்தது.
ருக்மணியின் அரண்மனையில் மேற்கொள்ளப்பட்ட ‘முஞ்சா’ எனும் தெய்வ வழிபாடும், அங்கிருந்த பிம்லா மரமுமே அனைத்து கொலைகளுக்கும் முக்கிய காரணம் என்று போலீசாரின் விசாரணையில தெரிய வந்தது.
திருமணமாகாத பிராமணர் இளம் வயதிலேயே இறக்க நேரிட்டால், அவரது பெயரில் முஞ்சா எனும் தெய்வ வழிபாடு நடத்தப்படும் வழக்கம், மகாராஷ்டிரா மாநிலத்தில் சில கிராமப்புற பகுதியில் இருந்து வந்தது.
முஞ்சா தெய்வ வழிப்பாட்டுக்காக கன்னிப் பெண்ணின் ரத்தம் தேவைப்படும் என்று உத்தம் ராவிடம் தான் கூறியதாக, 60 வயது மந்திரவாதியான கன்பத், போலீசாரிடம் கூறிய சாட்சியத்தில் ஒப்புகொண்டார்.
“மந்திரவாதியான என்னை உத்தம்ராவும், ருக்மணியும் ஒரு நாள் அரண்மனைக்கு அழைத்தார்கள். அங்கு புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் நம்பிய பணத்தை கண்டெடுக்கவும், ருக்மணிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவும் வழி கூறுங்கள் என்று என்னிடம் கேட்டனர்.
அவற்றுடன் முஞ்சா தெய்வத்தை மகிழ்விப்பதற்கான பூஜையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் என்னை பணித்தனர்” என்று தனது சாட்சியத்தில் கன்பத் கூறினார்.
உடனே தான், இந்த பூஜைக்கு கன்னிப் பெண் ஒருவர் பலியிடப்பட்டு, அவரது இரத்தம் வேண்டும் என்று தெரிவித்ததாகவும் மந்திரவாதி போலீசிடம் தெரிவித்தார்.
உத்தம்ராவின் வேலை ஆட்களான சோபம் மற்றும் சங்கர், இளம்பெண்ணின் ரத்தத்தை கொண்டு வர முடிவு செய்தனர். அவர்கள் கொண்டு வந்த இரத்தத்தை வைத்து, உத்தம்ராவும், ருக்மணியும் தான் நடத்திய பூஜையில் பங்கேற்றனர் எனவும் கன்பத் தமது வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
அத்துடன், தான் நடத்த கொலை சம்பவங்கள் குறித்து சாட்சியம் அளித்ததன் பேரில், தம்மை மன்னித்து இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் மந்திரவாதி கன்பத் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதே கோரிக்கையை உத்தம் ராவின் பணியாளரான சங்கரும் விடுத்திருந்தார்.
இவர்கள் இருவரை தவிர, கடைசியாக நடைபெற்ற மூன்று கொலைகளை நேரில் கண்டவரான உமாஜி பிடலேவின் சாட்சியத்தை ஏற்று, இந்த வழக்கில் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
யாருக்கு என்ன தண்டனை?
உத்தம்ராவ் பராஹதேவும், ருக்மணியும் தங்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டியும், அரண்மனையில் ரகசிய இடத்தில் இருப்பதாக கருதிய பணத்தை கண்டெடுக்கவும் மேற்கொண்ட பூஜைகளுக்காக இந்தக் கொலையைச் செய்திருந்தார்கள் என்பது இரண்டு சாட்சியங்கள் அளித்த வாக்குமூலத்தில் தெளிவாகத் தெரிந்ததாக நீதிமன்றம் கருதியது. சாட்சியங்களின் இந்த வாக்குமூலத்தை கணக்கில் கொண்டு, மிகவும் பரபரப்பான இந்த வழக்கில், நவம்பர் 20, 1975 இல், மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த கொலை வழக்குகளில் மொத்தம் குற்றம்சாட்டப்பட்டிருந்த மொத்தம் 18 பேரில், ஒருவர் விசாரணை தொடங்கும் முன்பே இறந்துவிட்டார். அவரை தவிர, இவ்வழக்கில் பிரதானமாக குற்றம்சாட்டப்பட்டிருந்த உத்தம்ராவ் மற்றும் ருக்மணிக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டது. கொலையாளியான சோபன் தோட்டேவுக்கும் மரணத் தண்டனை அளிக்கப்பட்டது.
தக்டு மற்றும் அவரது நான்கு கூட்டாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதேநேரம், ருக்மணியின் சகோதரியான சமீந்தரி மற்றும் கொலை சதிக்கு உதவிய பத்து பேர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
மரண தண்டனையை மகிழ்ச்சியாக ஏற்ற உத்தம்ராவ்
கொலை வழக்கில் தமக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டதை எண்ணி, உத்தம்ராவோ, ருக்மணியோ கொஞ்சமும் மனம் வருந்தியதாக தெரியவில்லை. மாறாக இருவரும் சிரித்துக் கொண்டே நீதிமன்றத்தைவிட்டு வெளியே வந்தனர்.
“நீதிமன்றத்தை விட்டு வெளியேறுவதற்கு முன், உத்தம்ராவ் தனது சட்டைப் பையில் இருந்த புகையிலையை எடுத்து, அமைதியாக கையால் சுருட்டினார்” என்று மகாராஷ்டிராவை உலுக்கிய இக்கொலை சம்பவம் குறித்த தனது புத்தகத்தில் விவரித்துள்ளார் பத்திரிகையாளர் ஷரத்.
ரத்தான தூக்குத் தண்டனை
மாவட்ட அமர்வு நீதிமன்றம் தங்களுக்கு விதித்த தூக்குத் தண்டனை எதிர்த்து, உத்தம்ராவ் மற்றும் ருக்மணி மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
அவர்களின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இருவருக்கும் எதிரான சந்தர்ப்ப, சூழ்நிலை ஆதாரங்களை நிராகரித்தது. அத்துடன் அவர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லையெனக் கூறி, உத்தம்ராவ் மற்றும் ருக்மணியை விடுதலை செய்து உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து, மகாராஷ்டிர மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையே உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இதையடுத்து, 1976 மார்ச் 18 அன்று, உத்தம்ராவ் மற்றும் ருக்மணி விடுதலை செய்யப்பட்டனர். அதே நாளில் இருவருக்கும் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு கீர்த்தி என்று பெயர் சூட்டப்பட்டது.
தண்டனையை மாற்றி எழுதிய உயர் நீதிமன்றம்
உத்தம் ராவ் மற்றும் ருக்மணி மரணத் தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பிற குற்றவாளிகளின் தண்டனைகளையும் மாற்றி, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தக்து காலே, தேவ்யா சவான், சுக்லியா சிந்தியா மற்றும் வாமன் அன்னாவுக்கு மாவட்ட அமர்வு விதித்திருந்த ஆயுள் தண்டனைக்கு பதிலாக, அவர்களுக்கு மரணத் தண்டனை விதிக்கப்படுவதாக உயர் நீதிமன்றம் தமது தீர்ப்பில் தெரிவித்திருந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், வாமன் அன்னாவுக்கு மட்டும் சந்தேகத்தின் பலனை அளித்து, அவர் மீதான தூக்குத் தண்டனையை ரத்து செய்து அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது. மீதமிருந்த நால்வரின் மரணத் தண்டனையை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
நீதிமன்ற தீர்ப்பின்படி நான்கு பேர் தூக்கில் இடப்பட்ட பிறகு, இந்தக் கொலை வழக்கின் சட்டபூர்வ நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தன.
‘குற்றமற்றவர் என்று நிரூபிக்க 4.5 லட்சம் ரூபாய் தேவைப்பட்டது’
மகாராஷ்டிரா மாநிலத்தை உலுக்கிய இந்த தொடர் கொலை சம்பவங்கள் நிகழ்ந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு, 1989 ஆகஸ்ட் 26 அன்று, உத்தம்பாவ் பர்ஹதேவை, பத்திரிகையாளர் ஷரத் டியுல்கோன்கர் நேர்காணல் செய்தார்.
இந்த விரிவான நேர்காணல் அவரது ‘மானாவத் ஹதகண்ட்’ என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
அதில், உத்தம்ராவை தான் சந்திக்க அவரது மாளிகைக்கு சென்றபோது, அவர் ருக்மணி மற்றும் தன் 12 வயது மகளுடன் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார் என்று ஷரத் தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.
“இந்த கொலை வழக்கில் நான் நிரபாதி என்பதை நிரூபிக்க 4.5 லட்சம் ரூபாய் செலவிட வேண்டியதானது. என்னிடம் பணம் இல்லாமல் போயிருந்தால், நான் தூக்கு மேடைக்கு போயிருப்பேன்” என்று பத்திரிகையாளர் ஷரத் உடனான நேர்காணலின்போது 70 வயதாகி இருந்த உத்தம்ராவ் கூறியிருந்தார்.
கடந்த 2011 இல், தனது 92வது வயதில் அவர் காலமானார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












