‘ஹாஷ்டேக் அரசியல்’ செய்து யாரும் பேசாத விஷயங்களை விவாதம் ஆக்குகிறாரா சீமான்?

சீமான், இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள், மணிப்பூர்

பட மூலாதாரம், NAAM TAMILAR

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய சிறுபான்மையினர் தொடர்பான சர்ச்சைப் பேச்சுக்குப் பிறகு, ‘SeeMAN Breaks Barriers’ என்ற ஹாஷ்டாகை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர் நாம் தமிழர் கட்சியினர்.

இதன் பொருள் என்ன?

அதேபோல், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளான ஆகஸ்ட் 7ஆம் தேதி இந்த ஹாஷ்டாகை பயன்படுத்தி, சில மோசமான ட்வீட்களும் பதிவு செய்யப்பட்டிருந்தன.

அதில் நாம் தமிழர் கட்சிக்குப் பங்கு உண்டா?

சர்ச்சைக்கு உள்ளான சிறுபான்மையினர் பற்றிய பேச்சு

சிறுபான்மையினரை 'சாத்தானின் பிள்ளைகள்' என சீமான் பேசிய பேச்சுகளுக்கு இஸ்லாமிய, கிறிஸ்தவ தலைவர்கள் கடுமையாக எதிர்வினையாற்றினர். அதற்கு சீமான் மீண்டும் கடுமையாக எதிர்வினையாற்றினார்.

சீமானின் இந்தப் பேச்சு, அரசியல்ரீதியாக அவருக்கு எந்த அளவுக்கு உதவும் என சந்தேகங்களும் எழுப்பப்பட்டன.

பொதுவாக தமிழக அரசியல் களத்தில் சிறுபான்மையினரை தனிமைப்படுத்தி விமர்சிப்பதை எந்த அரசியல் தலைவரும் செய்வதில்லை.

ஆனால், சிறுபான்மையினரை முன்வைத்து சீமான் தொடர்ந்து சில நாட்களாகப் பேசிய பேச்சுகள், சிறுபான்மையினரை மட்டுமல்ல தமிழக அரசியல் களத்தைத் தொடர்ந்த கவனிப்பவர்களையே அதிர வைத்தன.

சீமான், இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள், மணிப்பூர்

பட மூலாதாரம், PACKIARAJAN/TWITTER

படக்குறிப்பு, இந்த அரசியலை செய்யத்தான் நாம் தமிழர் கட்சி வந்திருப்பதாகக் கூறுகிறார் அக்கட்சியின் சர்வதேச பொறுப்பாளரான செ. பாக்கியராசன்

‘விமர்சனங்களுக்கு பதில் சொல்லவே ஹாஷ்டாக் ட்ரெண்ட் செய்யப்பட்டது’

இந்த நிலையில்தான், ஆகஸ்ட் 6ஆம் தேதி, 'எல்லைகளை மீறும் சீமான்' என்று பொருள்படும் ‘SeeMAN Breaks Barriers’ என்ற ஹாஷ்டாகின் கீழ் ஆயிரக்கணக்கான ட்வீட்களை நாம் தமிழர் கட்சியினர் பதிவு செய்தனர்.

சிறுபான்மையினர் குறித்தான சீமானின் கருத்துகளுக்கு எழுந்த விமர்சனங்களுக்குப் பதில் சொல்லும் விதமாகவே இந்த ஹாஷ்டாக் ட்ரெண்ட் செய்யப்பட்டதாகக் கருதப்பட்டது. அது உண்மைதான் என்கிறார் அந்தக் கட்சியின் சர்வதேசப் பொறுப்பாளரான செ. பாக்கியராசன்.

"நாம் தமிழர் கட்சி துவங்கியதிலிருந்து யாரும் சொல்லாத விஷயங்களை தொடர்ச்சியாக சொல்லி வருகிறோம். இதுவரை தமிழக அரசியல் களத்தில் எது பேசப்பட்டதோ, அதற்கு மாறான கதையாடல்களை முன்வைத்தோம். இங்கே எது வழக்கமாக இருந்ததோ, அதற்கு மாறான ஒன்றைச் செய்தோம்,” என்கிறார் அவர்.

“இங்கே சாதி இருக்கிறது என்றார்கள். ஆனால், தமிழர் என்று இணைந்தாலே சாதி கிடையாது என்று சொன்னோம். தொடர்ச்சியாக கூட்டணி இல்லை என்று கூறி வந்திருக்கிறோம்.

ஆனால், அது இன்னொரு கட்சிக்கு சாதகம் என்றார்கள். அதேபோல, இந்து என்பது மதமல்ல, மாறாக வீரசைவமும் வைணவமும்தான் மதம் என்றோம். அதேபோல சிறுபான்மையினர் என்பதையும் நாங்கள் ஏற்கவில்லை. அவர்கள், மொழி அடிப்படையில் தமிழ் தேசிய இனத்தின் ஓர் அங்கம் என்கிறோம்,” என்றார் அவர்.

மேலும் பேசிய பாக்கியராசன், சீமான் ‘வீரத்தமிழர் முன்னணி’ என ஒரு கலாசார அமைப்பை ஆரம்பித்தார், அது ஓர் இந்து அமைப்பு என்கிறார்கள், என்றும், விநாயகர் ஊர்வலத்திற்குப் பதிலாக முருகன் ஊர்வலம் விடலாம் என்றால் அதை விமர்சிக்கிறார்கள், என்றும் கூறினார்.

“ஆனால், இந்தக் கருத்துகள் எல்லாம் தமிழக அரசியலில் வைக்கப்படாத வாதங்கள். பேசப்படாத கருத்துகளாக இருந்தவை. அதை உடைத்து, விவாதத்தை உருவாக்க வேண்டும் என நினைத்தோம். ஆகவே, ஏற்கெனவே நிறுவப்பட்டவற்றை, மாற்றி எழுதுகிறார் சீமான் என்பதைக் குறிக்கும் வகையில் இந்த ஹாஷ்டாகை ட்ரெண்ட் செய்தோம்,” என்கிறார் அவர்.

இதற்கான காரணத்தைச் சொல்லும் அவர், இந்த அரசியலைச் செய்யத்தான் அவர்கள் வந்திருப்பதாகக் கூறுகிறார்.

“எல்லோரும் விமார்சிக்கிறார்கள் என்பதற்காக சும்மா இருக்க முடியாது. தமிழ்நாட்டில் ஈழம் ஒரு அரசியலே இல்லை என்றார்கள். ஆனால் அதை அரசியலாகச் செய்துதான் நாங்கள் இத்தனை லட்சம் வாக்குகளை வாங்கியிருக்கிறோம்,” என்றார்.

'மொழிரீதியான பிராந்தியவாதம் தான் செல்லும்'

மேலும், “கேள்வியே எழுப்ப முடியாத ஒரு விஷயம் இருக்கக்கூடாது. அப்படி ஒரு விவாதத்தை உருவாக்கத்தான் சீமான் இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிக்கிறார். அதைப் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்" என்கிறார் பாக்கியராசன்.

'வட மாநிலங்களில் ஒரே மொழியைப் பேசுபவர்கள் மதத்தின் அடிப்படையில்தானே சிறுபான்மையினர் எனப் பிரிக்கப்பட்டு, தாக்கப்படுகிறார்கள் அல்லது கொல்லப்படுகிறார்கள்? ஆகவே, சீமான் சொல்லும் கருத்து அடிப்படையிலேயே தவறு அல்லவா?' என்று கேள்வி எழுப்பியபோது, தமிழ்நாட்டில் அதுபோலச் செய்ய முடியாது என்கிறார் பாக்கியராசன்.

"அப்படியில்லை, தமிழ்நாட்டில் அதுபோல செய்ய முடியாது. மாநிலங்கள் மொழி அடிப்படையில்தானே பிரிக்கப்பட்டிருக்கின்றன. இங்கே அதையெல்லாம் ஏற்க முடியாது. தமிழ்நாட்டில் மொழிரீதியான பிராந்தியவாதம்தான் செல்லும். அதைத்தான் சீமான் சொல்ல விரும்பினார்," என்கிறார் பாக்கியராசன்.

நாம் தமிழர் கட்சி டிரெண்ட் செய்த இந்த ஹாஷ்டாகின் கீழ் சுமார் 1,07,000 ட்வீட்டுகள் பதிவுசெய்யப்பட்டிருந்தன.

சீமான், இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள், மணிப்பூர்

பட மூலாதாரம், AAZHI SENTHIL NATHAN

படக்குறிப்பு, ‘தன்னாட்சி தமிழகம்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆழி செந்தில்நாதன்.

‘இது அபாயகரமான போக்கு’

ஆனால், இது ஓர் அபாயகரமான போக்கு என்கிறார் ‘தன்னாட்சி தமிழகம்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான ஆழி செந்தில்நாதன்.

"வித்தியாசமாகப் பேசுகிறோம் என்பதற்காக எதை வேண்டுமாலானும் பேச முடியாது. 1990களில் பா.ஜ.க. தன்னை ஒரு வித்தியாசமான கட்சியாகத்தான் முன்னிறுத்தியது. அவர்களிடம் என்ன வித்தியாசமாக இருந்தது? அப்படியே ஒரு வித்தியாசம் இருந்தது என்றாலும் அது ஏற்கத்தக்கதா? வித்தியாசமாக இருந்தால் மட்டும் போதாது. அது பயனுடையதாக இருக்க வேண்டும்,” என்கிறார்.

மேலும், “நாம் தமிழர் கட்சி தமிழ் தேசியத்தை முன்வைக்கிறது. ஆனால், தமிழ் தேசியத்திற்கும் இவர்கள் பேசுவதற்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா? ஒரு நாட்டில் மதரீதியான பெரும்பான்மையை சிலர் முன்வைக்கும்போது, அதற்கு எதிராக மதரீதியான சிறுபான்மையைத்தான் முன்வைப்பார்கள். ஒரு நாட்டில் பெரும்பான்மைவாதம் உருவாக்கப்படும்போதுதான் சிறுபான்மைவாதம் உருவாகிறது. இது இந்துக்களின் நாடு என்று சிலர் சொல்லும்போதுதான், இது மதச்சார்பற்ற நாடு எனச் சொல்ல வேண்டியிருக்கிறது,” என்றார்.

இதற்கு உதாரணமாக அவர், “இளையராஜா பெரும்பான்மை அவர் மகன் யுவன் சங்கர் சிறுபான்மையா என்று கேட்கிறார். இளையராஜாவை ஏற்பதைப் போலவே பா.ஜ.க. யுவன் சங்கர் ராஜாவை ஏற்குமா என்ற கேள்வியை எழுப்பினாலே இதற்குப் பதில் கிடைத்துவிடும்.

இந்த நாட்டில் ஒவ்வொரு சாதியைச் சேர்ந்தவர்களும் தாங்கள்தான் பெரும்பான்மை சாதி என்கிறார்கள். பெரும்பான்மை - சிறுபான்மை கேள்வியை அவர்களிடம் கேட்க வேண்டியதுதானே?" என்கிறார் செந்தில்நாதன்.

கருணாநிதியை பற்றிய அவதூறான ட்வீட்கள்

இதற்கிடையில், மறைந்த தி.மு.க. தலைவர் மு. கருணாநிதியின் நினைவு தினமான ஆகஸ்ட் ஏழாம் தேதி மிக மோசமான ஒரு ஹாஷ்டாகுடன் அவரைப் பற்றிய கேலியான கருத்துகளும் 'மீம்ஸ்'களும் பகிரப்பட்டன.

தங்கள் ட்விட்டர் ப்ரொஃபைலில் நாம் தமிழர் என்று குறிப்பிட்டிருந்த பலரும் இதில் ஈடுபட்டனர். ஆகஸ்ட் 7ஆம் தேதி மாலைக்குள் கிட்டத்தட்ட 45 ட்வீட்டுகள் இந்த ஹாஷ்டாகுடன் பகிரப்பட்டன.

ஆனால், "இதற்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது நாகரீக அரசியல் அல்ல. இந்த ஹாஷ்டாகில் கலந்துகொள்ள வேண்டாம் என நாம் தமிழர் நிர்வாகிகளை அறிவுறுத்தியிருக்கிறோம். இதை வெளிநாடுகளில் இருந்து சிலர் செய்கிறார்கள். நாங்கள் இதில் ஈடுபடவேயில்லை," என்கிறார் பாக்கியராசன்.

இதுபோல செய்வதெல்லாம் நிச்சயம் வாக்குகளைப் பெற்றுத் தராது என்கிறார் செந்தில்நாதன்.

"நாம் தமிழர் கட்சி தேர்தலில் ஜெயிக்க நினைக்கும் கட்சியா என்ற சந்தேகமே வந்துவிட்டது. ஏனென்றால் அவர்கள் தேர்தலில் வெல்வதற்கு எதிராகவே செயல்படுகிறார்கள். சிறுபான்மையினரை சாத்தானின் பிள்ளைகள் என்று பேசுவதெல்லாம் அம்மாதிரியானதுதான்.

ம.பொ.சி. பேசாத தமிழ் தேசியத்தையா இவர்கள் பேசுகிறார்கள்? அவர் பல பிரச்னைகளில் திராவிடக் கட்சிகளுடன் முரண்பட்டார். ஆனால், பல பிரச்னைகளில் இணைந்து செயல்பட்டார். சீமான் தமிழ் தேசியம் பேசவில்லை. அவர் திராவிட எதிர்ப்பாளர். அதுவும் தி.மு.க. எதிர்ப்பாளர்," என்கிறார் செந்தில்நாதன்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: