இறைச்சி, பூண்டு, மசாலா உணவுகள் உடல் துர்நாற்றத்தை உண்டாக்குமா? உண்மை என்ன?

உடல் துர்நாற்றம், வியர்வை, உணவுமுறை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சூடாக இருக்கும் போது நமது உடல் அதிகமாக வியர்க்கும் என்பது நாம் அறிந்ததே.

இது நமது உடலை தன்னையே குளிர்ச்சியாக வைத்திருக்கப் பயன்படுத்தும் ஒரு வழி.

நமது தோலில் இருந்து ஆவியாகும் ஒவ்வொரு துளி வியர்வையும் நமது உடல் வெப்பநிலையைக் குறைக்க உதவுகிறது.

இது அவசியமான ஒரு செயல்முறை என்றால்கூட, இது சில நேரங்களில் விரும்பத்தகாத பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.

ஆம், நீங்கள் நினப்பது சரி - துர்நாற்றம்.

துர்நாற்றத்திற்கான முக்கியக் காரணிகள் என்ன?

வியர்க்கும் போது ஒவ்வொருவரின் உடலில் இருந்தும் வித்தியாசமான வாசனை வரும். சிலரிடம் இருந்து துர்நாற்றத்தின் சிறு அறிகுறிகூட இருக்காது. சிலரது உடல் துர்நாற்றமோ மிக மோசமாக இருக்கும்.

ஸ்வீடனின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜோஹன் லுண்ட்ஸ்த்ரோம், உடல் துர்நாற்றம் குறித்தும் உடல் வாசனைகள் குறித்தும் பரந்துபட்ட ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளார்.

நமது வியர்வையின் துர்நாற்றம் பல்வேறு காரணிகளால் உண்டாவது என்று என்கிறார் அவர்.

"நம் உடலின் துர்நாற்றங்கள் வெவ்வேறு சுரப்பிகளால் வெளியேற்றப்படும் சேர்மங்களின் கலவையிலிருந்து உருவாகின்றன. இவை நமது மரபணுக்கள், நமது உடலில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை (இது சுத்தம் மற்றும் மரபணு சார்ந்தது), மற்றும் சுற்றுச்சூழல் (ஈரப்பதம், வெப்பநிலை, காற்று மற்றும் காற்றழுத்தம் ஆகியவை) போன்றவற்றைச் சார்ந்தது,” என்கிறார் லுண்ட்ஸ்த்ரோம்.

இறுதியாக, நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதும் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருக்கலாம், என்று கூறுகிறார் இந்தப் பேராசியர்.

அதாவது மரபியல் மற்றும் சுத்தம் போன்ற வெளிப்படையான காரணிகளுடன், நாம் உண்ணும் உணவும், நமது வியர்வையின் வாசனையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

உடல் துர்நாற்றம், வியர்வை, உணவுமுறை

பட மூலாதாரம், Getty Images

எந்தெந்த உணவுகள் துர்நாற்றத்தை உண்டாக்கும்?

நாம் உண்ணும் உணவு, நமக்கு வியர்க்கும் போது ஏற்படும் துர்நாற்றத்தை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பது இன்னும் நமக்கு முழுதாகத் தெரியாது.

"எனக்கு தெரிந்தவரை, இது இன்னும் முறையாக மதிப்பீடு செய்யப்படவில்லை," என்கிறார் லுண்ட்ஸ்த்ரோம்.

ஆனால் எந்தெந்த உணவுகள் உடல் துர்நாற்றத்தை உண்டாக்கக்கூடும் என்பது நமக்கு பொதுவாகத் தெரியும்.

"பொதுவாக, அதிக இறைச்சி உண்பவர்களின் உடலில், சைவ உணவு உண்பவர்களைக் உடலைக் காட்டிலும் அதிக துர்நாற்றம் உண்டாகும். மேலும், பொதுவாக பூண்டு சாப்பிடுபவர்களின் வியர்வை துர்நாற்றத்தைக் கொண்டிருக்கலாம்," என்று அவர் கூறுகிறார்.

மசாலாவும் பூண்டும் உடல் துர்நாற்றத்தை அதிகரிக்குமா?

உடல் துர்நாற்றம், வியர்வை, உணவுமுறை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பூண்டு மற்றும் இறைச்சியில் கந்தகம் நிறைந்துள்ளது. இது ஒரு முறை உட்கொண்டால், வியர்வை உட்பட பல்வேறு வழிகளில் வெளியேறுகிறது

அதேபோல் மசாலா பொருட்களும் நமது உடலின் வாசனையை பாதிக்கும்.

ஆனால் இந்தக் குறிப்பிட்டப் பொருட்கள் எப்படி நமது வியர்வையின் வாசனையை மாற்றுகின்றன?

"அடிப்படையில், அவற்றில் உள்ள ரசாயனங்கள் நமது ரத்த ஓட்டத்துடன் கலக்கும் தன்மை கொண்டவை. அங்கிருந்து அவை வெளியேற்றப் படுகின்றன,” என்கிறார் லுண்ட்ஸ்த்ரோம்.

“இரத்த ஓட்டத்தில் நுழையும் பெரும்பாலான விஷயங்கள் ஏதாவது ஒரு வடிவத்தில் நமது உடல் துர்நாற்றம் மூலம் வெளியேற்றப்படுகின்றன,” என்கிறார் லுண்ட்ஸ்த்ரோம்.

எடுத்துக்காட்டாக, பூண்டு மற்றும் இறைச்சியில் கந்தகம் நிறைந்துள்ளது. இது ஒரு முறை உட்கொண்டால், வியர்வை உட்பட பல்வேறு வழிகளில் வெளியேறுகிறது.

வியர்வை வாசனையை ‘கவர்ச்சிகரமானதாக’ மாற்ற முடியுமா?

உடல் துர்நாற்றம், வியர்வை, உணவுமுறை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக உட்கொண்டவர்கள், எவ்வளவு வியர்வையை உற்பத்தி செய்திருந்தாலும், அது ‘இனிமையான மணம்’ கொண்டதாக இருந்தது

வியர்வையின் வாசனையை ‘கவர்ச்சியனதாக’ மாற்றும் உணவுகள் குறித்த ஆய்வு ஆஸ்திரேலியாவில் உள்ள மக்வாரி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது.

இதில் 43 ஆண்கள் பங்கேற்றனர். அவர்கள் வெறும் தண்ணீரில் குளித்துவிட்டு பருத்தி டி-ஷர்ட்களை அணிந்தனர். யாரும் டியோடரண்ட் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை.

அந்தச் சட்டைகளை அவர்கள் 48 மணி நேரம் அணிந்திருந்தனர். வியர்வைச் சுரப்பிகளைத் தூண்டுவதற்கு ஒரு மணிநேர உடற்பயிற்சியும் செய்தனர்.

பிறகு அவை வாசனைப் பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டன.

இந்த ஆராய்ச்சியின் முடிவு?

பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக உட்கொண்டவர்கள், எவ்வளவு வியர்வையை உற்பத்தி செய்திருந்தாலும், அது ‘இனிமையான மணம்’ கொண்டதாக இருந்தது.

அதேபோல், கொழுப்பு, இறைச்சி, முட்டை, டோஃபு போன்ற உணவுகளை உட்கொண்டவர்களும் சாப்பிட்டவர்களின் வியர்வையும் மோசமானதாக இல்லை.

ஆனால், அதிக மாவுச்சத்து உள்ள உணவுகளை உட்கொண்டவர்களின் வியர்வை துர்நாற்றம் கொண்டதாக இருந்தது.

இறைச்சி சாப்பிட்டால் என்ன மாற்றம் ஏற்படும்?

உடல் துர்நாற்றம், வியர்வை, உணவுமுறை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிவப்பு இறைச்சி உண்பது உடல் துர்நாற்றத்தை உண்டாக்குகிறது என்பதை ஒரு ஆய்வு கண்டறிந்தது

இதேபோல், ஆண்களின் வியர்வை பற்றிய மற்றொரு ஆய்வில், 17 ஆண்கள் பங்கேற்றனர்.

இவர்களில் ஒரு பகுதியினர் சிவப்பு இறைச்சி நிறைந்த உணவை உட்கொண்டனர். மற்றொரு பகுதியினர் இறைச்சியே இல்லாத உணவை உண்டனர்.

இந்த ஆய்வு இரண்டு வாரங்களுக்கு நடந்தது.

அதன்பிறகு இவர்களது வியர்வை மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

ஒரு மாதம் கழித்து, அவர்கள், மீண்டும் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

ஆனால் இரண்டு குழுக்களுக்கும் இப்போது உணவு மாற்றியளிக்கப்பட்டது.

இறுதியாக, 30 பெண்களைக் கொண்ட ஒரு குழு, அவர்களது வியர்வை எவ்வளவு கவர்ச்சியாகவும், ‘ஆண்மை’ நிறந்ததாகவும் இருந்தது என்பதை மதிப்பிட்டது.

இறைச்சி இல்லாத உணவு முறையைப் பின்பற்றும் போது, ஆண்களின் வியர்வை ‘இனிமையானதாக’ இருப்பது கண்டறியப்பட்டது.

இதன் மூலம் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்ற சிவப்பு இறைச்சி உணவுகளை உண்பது உடல் துர்நாற்றத்தை உண்டாக்குகிறது என்பதைக் குறிக்கிறது, என இந்த ஆய்வினை மேற்கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

உடல் துர்நாற்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வியர்க்கும் போது ஒவ்வொருவரின் உடலில் இருந்தும் வித்தியாசமான வாசனை வரும்.

பெண்களின் வியர்வையைப் பற்றி ஆண்கள் சொல்வது என்ன?

வழக்கமாக அறிவியல் ஆய்வுகளில் நிகழ்வது போலவே, வியர்ப்வை விஷயத்திலும் பெண் பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய ஆராய்ச்சிகள் மிகவும் குறைவாகவே உள்ளன.

ஆனாலும் பெண்களை வைத்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் மூன்று பெண்கள் பங்கேற்றனர்.

அவர்கள் வழக்கமான உணவு உட்கொள்ளும்போது அவர்களது வியர்வை மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அதன்பிறகு, அவர்கள் உணவு உட்கொள்வதை முற்றிலுமாக நிறுத்தினர். அப்போது அவர்களின் வியர்வை மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவர்கள் மீண்டும் வழக்கம்போல் உணவு உட்கொள்ளத் துவங்கியவுடன் அவர்களின் வியர்வை மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

இந்த மாதிரிகளை ஆண்கள் சோதித்துப் பார்த்தனர்.

ஆய்வின் முடிவில், அதில் பங்குபெற்றப் பெண்கள் உணவு உட்கொள்ளாமல் இருந்தபோது அவர்களின் வியர்வையின் வாசனை உவப்பாக இல்லை எனவும், அவர்கள் மீண்டும் வழக்கம்போல் உணவு உண்ணத்துவங்கியதும் அவர்களின் வியர்வையின் வாசனை உவப்பானதாக இருந்ததெனவும் அந்த ஆண்கள் கூறினர்.

உடல் வாசனையை மேம்படுத்த உணவைமுறையை மாற்றுவது சரியானதா?

உடல் துர்நாற்றம், வியர்வை, உணவுமுறை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வியர்வை துர்நாற்றத்தைக் குறைக்க சுலபமாக டியோடொரன்ட் அல்லது வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்தலாம்

நடைமுறையில், வியர்வை துர்நாற்றத்தைக் குறைக்க உணவு முறையை மாற்றியமைப்பதையோ, குறிப்பிட்ட உணவுகளை உட்கொள்வதையோ விட, சுலபமாக டியோடொரன்ட் அல்லது வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்தலாம் என்கிறார் லுண்ட்ஸ்த்ரோம்.

மேலும், உங்கள் உடலில் இருந்து ‘துர்நாற்றம்’ வீசினாலும், அது எப்போதும் மோசமான விஷயமாக கருதப்படாது என்கிறார் லுண்ட்ஸ்த்ரோம்.

“எந்தெந்த உடல் நாற்றங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை என்பதில் நாடுகளுக்கு இடையே வேறுபாடுகள் உள்ளன. மேலும் உடல் துர்நாற்றம் எந்த சூழலில் உணரப்படுகிறது என்பதிலும் வேறுபாடுகள் உள்ளன,” என்கிறார் அவர்.

இதற்கு உதாரணமாக, gym அல்லது நீங்கள் விரும்பும் ஒருவருடன் படுக்கையில் இருக்கும் போது உங்கள் உடல் வாசனை ஒரு வகையில் உணரப்படும். அதுவே பேருந்தில் நீங்கள் முன்பின் தெரியாத ஒருவருக்கு அருகில் அமர்ந்திருக்கும் போது அதே வாசனையை வேறுவிதமாக உணரப்படும்.

"மேலும், உங்கள் வாழ்க்கைக்குப் பொருத்தமான துணையாக வரக்கூடியவர் உங்கள் இயற்கையான உடல் வாசனையை விரும்புவார்," என்கிறார் லுண்ட்ஸ்த்ரோம்.

உண்மையில், உங்கள் உடல் வாசனையை ஒருவர் விரும்புகிறாரா இல்லையா என்பது, அவர் உங்களுடன் எவ்வளவு இணக்கமாக இருக்கக்கூடும் அன்பதை அளவிடுவதற்கான ஒரு வழியும் கூட.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: