ஓப்பன்ஹெய்மர்: அணுகுண்டு வெடிப்புக்கு முன் வாசித்த 'கீதை வரிகள்' என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி இந்தியா செய்தியாளர்
‘அணுகுண்டின் தந்தை’ என்றழைக்கப்படும் ஜூலியஸ் ராபர்ட் ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் ‘ஓப்பன்ஹெய்மர்’ எனும் ஹாலிவுட் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள இத்திரைப்படம் இந்தியாவிலும் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
ஆனால், ஹிந்து மதத்தின் புனித நூல்களில் ஒன்றான பகவத் கீதையை உடலுறவுக்குப் பிறகு கதாநாயகன் படிப்பதை போன்று படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள காட்சிக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், பண்டைய சமஸ்கிருத மொழியை கற்றுக் கொண்டவரான ஓப்பன்ஹெய்மர், தன் வாழ்நாளில் தமக்கு மிகவும் பிடித்த புத்தகங்களில் ஒன்றாக பகவத் கீதையை கருதினார்.
ஜூலை 1945 இல், நியூ மெக்சிகோ பாலைவனத்தில் முதல் அணுகுண்டு வெடிக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன், ஓப்பன்ஹைமர் பகவத் கீதையில் இருந்து ஒரு செய்யுளை வாசித்தார்.
ஓர் தத்துவார்த்த இயற்பியலாளரான அவருக்கு, பண்டைய இந்திய மொழியான சமஸ்கிருதமும், அதன் பின் பகவத் கீதையும், பெர்க்லியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் இளம் ஆசிரியராக பணியாற்றியபோது ஹெய்மருக்கு அறிமுகமாகின. 2000 ஆண்டுகள் பழமையான பகவத் கீதை, இந்து மத இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். அத்துடன் 700 வசனங்களை கொண்ட உலகின் மிக நீண்ட காவியமாகவும் கீதை திகழ்கிறது.

பட மூலாதாரம், Getty Images
அணுகுண்டு சோதனைக்கு முன் பகவத் கீதை வாசிப்பு
கீதையில் இடம்பெற்றுள்ள ஒரு செய்யுளை தான் சமஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் ஓப்பன்ஹெய்மர். உலக வரலாற்றை மாற்றப்போகும் அணுகுண்டு சோதனை எனும் மிக முக்கியமான நிகழ்வுக்கு முன், அணுகுண்டின் தந்தையான அவர் தமது பதற்றத்தை போக்கிக் கொள்ளும் விதத்தில் அதை வாசித்தார்.
அந்த செய்யுள் இதுதான்:
போரில், காட்டில், மலைகளின் சரிவில், இருண்ட பெரிய கடலில், ஈட்டிகள் மற்றும் அம்புகளுக்கு நடுவே, தூக்கத்தில், குழப்பத்தில், அவமானத்தின் உச்சத்தில், ஒரு மனிதனை முன்பு அவன் நற்செயல்கள் பாதுகாக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
ஹெய்மருக்கு கீதையை கற்றுக் கொடுத்த பேராசிரியர்
தமது 25 வயதில், பெர்க்லியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்தார் ஓப்பன்ஹெய்மர். அப்போது இப்பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத பேராசிரியராக இருந்த ஆர்தர் டபிள்யூ ரைடரால், இளைஞரான ஹெய்மருக்கு சமஸ்கிருதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
‘American Prometheus: The Triumph and Tragedy of J Robert Oppenheimer’ எனும் 2005 இல் வெளியான ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கை வரலாற்று நூலில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது. காய் பேர்ட் மற்றும் மார்ட்டின் ஜே ஷெர்வின் ஆகியோர் இந்த நூலை எழுதி இருந்தனர்.
குடியரசு ஆதரவாளரும், வாதத்திறமையும் கொண்ட பேராசிரியர் ரைடர், ஓப்பன்ஹெய்மரால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். அவரும் ரைடரை மிகச்சிறந்த அறிவுஜீவியாக கருதினார். ஜவுளி இறக்குமதியாளரான ஹெய்மரின் தந்தையும் தமது மகனுக்கும், ரைடருக்கும் இடையேயான தொடர்பை கண்டு வியந்தார்.
ரைடர் உடனான ஓப்பன்ஹெய்மரின் புரிதல் அவரிடம் இருந்து விரைவில் சமஸ்கிருதத்தை கற்றுக் கொள்ள வித்திட்டது. வாரந்தோறும் வியாழக்கிழமை மாலை வேளையில் ஹெய்மருக்கு ரைடர் தனியாக சமஸ்கிருதம் கற்றுக்கொடுக்க தொடங்கினார்.
“நான் சமஸ்கிருதம் பயின்று வருகிறேன். இந்த பயிற்சியை நான் மிகவும் அனுபவித்து மேற்கொள்கிறேன்” என்று தமது சகோதரர் ஃபிராங்கிற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் ராபர்ட் ஓப்பன்ஹெய்மர்.
சமஸ்கிருதம் மீதான நாட்டம்
இந்திய மொழியான சமஸ்கிருதம் மீதான ஓப்பன்ஹெய்மரின் நாட்டத்தை அவரது நண்பர்கள் பலர் கண்கூடாக கண்டு வியந்தனர்.
“ஓப்பன்ஹெய்மருக்கு மாயத்தோற்றம் மற்றும் மறைப்பொருள் மீது பற்றுதல் இருந்ததால், பகவத் கீதை படிக்கும் அவரது உணர்வு சரியானதே” என்கிறார்
ஹெய்மரை ரைடரிடம் அறிமுகப்படுத்தியவரும், அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்களில் ஒருவருமான ஹரோல்ட் எஃப் செர்னிஸ்.
எனவே, அவரை பற்றிய பல்வேறு தரப்பினரின் கூற்றின்படி, சமஸ்கிருதம் மற்றும் பகவத் கீதையில் அவருக்கு இருந்த அறிவு தெளிவாகிறது. ஆனால், ‘ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படத்தில் நாயகன், தமது காதலியான ஜீன் டாட்லாக் உடன் உடலுறவு கொள்ளும் காட்சிக்கு பின், அவர் பகவத் கீதையை படிப்பது போன்று வரும் காட்சி, பிற மதத்தினர் மீதான தாக்குதலாகவே சில வலதுசாரி அமைப்புகள் பார்க்கின்றனர். எனவே குறிப்பிட்ட அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், இதில் எந்த பிரச்னையும் இல்லை என்றும், ஓப்பன்ஹெய்மர் இந்தியாவில் இந்த ஆண்டு சூப்பர் ஹிட் ஆகும் ஹாலிவுட் திரைப்படம் எனவும் இந்திய திரைப்பட தணிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பன்முகத் திறமை
ஓப்பன்ஹெய்மர் ஓர் விஞ்ஞானியாக மட்டுமில்லாமல், மெத்தப்படித்தவராகவும், பன்முகத்திறமை கொண்டவராகவும் திகழ்ந்தார்.
தத்துவம், பிரெஞ்சு இலக்கியம், ஆங்கிலம், வரலாறு போன்ற பாடங்களை அவர் படித்திருந்தார். கட்டடக்கலை பற்றிய ஞானமும் அவருக்கு இருந்தது. மேலும் அவர் சிறந்த கவிஞர் அல்லது ஓவியராகவும் திகழ்ந்தார். சோகம் மற்றும் தனிமையை கருப்பொருளாகக் கொண்டு அவர் கவிதைகள் வடித்தார்.
“வாழ்வில் கடினமான விஷயங்களை அவர் விரும்பினார். ஆனால் கிட்டத்தட்ட எல்லா விஷயங்களுக்கு அவருக்கு எளிதாக இருந்தன. அதன் காரணமாக, அடிப்படையில் கடினமாக இருந்த அம்சங்கள் அவரது கவனத்தை உண்மையில் ஈர்த்தன” என்கிறார் செர்னிஸ்.

பட மூலாதாரம், Getty Images
பன்மொழித் திறன்
கிரேக்கம், லத்தீன், பிரெஞ்ச் மற்றும் ஜெர்மன் மொழிகளைப் படித்திருந்த ஓப்பன்ஹெய்மர், ஆறே வாரங்களில் டச்சு மொழியைக் கற்றுக் கொண்டார். அதற்கு முன்பிருந்தே அவர் பகவத்கீதையை படித்துக் கொண்டிருந்தார். அதில் எளிமை மற்றும் அற்புதத்தை உணர்ந்த ஹைமர், “தான் அறிந்த எந்த மொழியிலும், மிகவும் அற்புதமான தத்துவ பாடல்களை கொண்டது பகவத் கீதை” என்று தமது நண்பர்களிடம் கூறி சிலாகித்தார்.
ரைடர் அவருக்கு பரிசாக அளித்த, இளஞ்சிவப்பு நிற அட்டை போடப்பட்ட பகவத் கீதை நூல், அவரது புத்தக அலமாரியில் எப்போதும் இடம்பெற்றிருந்தது. அத்துடன், அந்நூலின் பிரதிகளை தமது நண்பர்களுக்கு ஓப்பன்ஹெய்மர் பரிசளித்து வந்தார்.
கருடன் பற்றியும் அறிந்திருந்த ஓப்பன்ஹெய்மர்
விஞ்ஞானியான ஹெய்மர், சமஸ்கிருத மொழி படிப்பால் மிகவும் ஈர்க்கப்பட்டார் என்று அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ள ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் ஓப்பன்ஹெய்மரின் தந்தை, அவருக்கு 1933 இல் கிறிஸ்லர் காரை வாங்கி கொடுத்தார். அப்போது ஹிந்து புராணத்தில் கடவுளாக கருதப்படும் பெரிய பறவையான கருடனை நினைவுறுத்தும் வகையில், காருக்கு அதன் பெயரை சூட்டினார் ஹெய்மர்.
ஒழுக்கத்தை கொள்கையாக கொண்டவர்
அந்த ஆண்டின் வசந்த காலம் அது. அப்போது ஒழுக்கமும், வேலையும் ஏன் தம்மை எப்போதும் வழிநடத்தும் கொள்கைகளாக உள்ள என்பதை விளக்கி, தனது சகோதரருக்கு ஓப்பன்ஹெய்மர் ஒரு அழகான கடிதம் எழுதினார்.
அதில், “ ஒழுக்கத்தை கடைபிடிப்பதன் மூலம் மட்டுமே நாம் வாழ்வில் அமைதி நிலையை அடைய முடியும். அளவற்ற சுதந்திரத்தையும், உலகின் மீதான பற்றின்மையையும் ஒழுக்கத்தின் மூலமே உணர முடியும். அத்துடன் ஒருவரின் தனிப்பட்ட விருப்பத்தின் விளைவாக உண்டாகும் கவனச்சிதறல் இல்லாமல் இந்த உலகைப் பார்க்க முடியுமானால், அப்போது இந்த பூமியின் தனிமை மற்றும் அதைப் பற்றிய பயத்தையும் நம்மால் எளிதில் ஏற்றுக் கொள்ள இயலும்” என்று தனது சகோதரருக்கு எழுதியிருந்த கடிதத்தில் தத்துவார்த்தமாக குறிப்பிட்டிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
இருவேறு மனநிலை
“1920களின் பிற்பகுதியில், ஓப்பன்ஹெய்மர் இந்த பூமிக்கான பற்றின்மையை தேடுவது போல் தோன்றியது. இதையே வேறுவிதமாக கூற வேண்டுமானால், ஒரு விஞ்ஞானியாக புற உலகின் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும் என்று விரும்பிய அவர், அந்த விருப்பத்தில் இருந்து விடுபடும் மனநிலையிலும் இருந்தார்” என்று அவரது வாழ்க்கையை எழுதிய வரலாற்றாசிரியர்கள் கூறியுள்ளனர்.
“அதற்காக, புறவாழ்வில் இருந்து தப்பித்து அவர் முற்றிலும் ஆன்மிகத்திற்கு செல்ல முற்படவில்லை. அவர் மதத்தையும் தேடவில்லை. ஆனால் மனஅமைதியை விரும்பிய அறிவுஜீவியான அவருக்கு பகவத் கீதை சரியான தத்துவத்தை வழங்கியதாகத் தோன்றியது” என்கின்றனர் அவர்கள்.
காளிதாசரின் மேகதூதத்தையும் அறிந்திருந்த ஹெய்மர்
பகவத் கீதையை போலவே அவருக்கு விருப்பமான மற்றொரு சமஸ்கிருத நூலாக, சிறந்த கவிஞரான காளிதாசர் எழுதிய ‘மேகதூதம்’ விளங்கியது.
“ரைடருடன் சேர்ந்து படித்த மேகதூதம், எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும், மிகுந்த மயக்கத்தையும் அளித்தது” என்று தன் சகோதரர் ஃபிராங்கிற்கு எழுதிய கடிதத்தில் ஓப்பன்ஹெய்மர் குறிப்பிட்டிருந்தார்.
பகவத் கீதையால் ஈர்க்கப்பட்ட பிற பிரபலங்கள்
விஞ்ஞானியான ஓப்பன்ஹெய்மர், பகவத் கீதை மற்றும் அதில் இடம்பெற்றுள்ள கர்மா, விதி போன்ற கருத்துக்களை நோக்கி ஏன் ஈர்க்கப்பட்டார் என்பது குறித்து அவரது வாழ்க்கை சரிதத்தை எழுதிய வரலாற்று ஆசிரியர்கள் இவ்வாறு யூகித்தனர்.
“ராபர்ட் ஓப்பன்ஹெய்மரின் இளமைக் காலத்தில் வாழ்க்கை குறித்து அவருக்கு கற்பிக்கப்பட்ட விஷயங்களுக்கு எதிரான எண்ணங்கள் பிறகு அவருக்கு தோன்றி இருக்கலாம். அந்த எண்ணங்களின் தூண்டுதல்களால் பகவத் கீதை மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டிருக்கலாம்” என்று கருதுகின்றனர் அவர்கள்.
ஆனால், ஓப்பன்ஹெய்மர் மட்டும் பகவத் கீதையால் ஈர்க்கப்படவில்லை. பகவத் கீதையின் பிரம்மாண்டமான மற்றும் அண்டவியல் தத்துவத்தை ஒப்பிடும்போது நமது நவீன உலகமும், அதன் இலக்கியமும் அற்பத்திலும் அற்பமானவையாக தோன்றுகின்றன என்று பகவத் கீதை தன் ஆட்கொண்டது குறித்து எழுதியுள்ளார் அமெரிக்காவின் இயற்கை ஆராய்ச்சியாளரான ஹென்றி டேவிட் தோரோ.
ஜெர்மனியின் முக்கிய அரசியல் தலைவராக திகழ்ந்த ஹென்ரிச் ஹிம்லர், மகாத்மா காந்தி போன்றவர்களும் பகவத் கீதை மீது நாட்டம் கொண்டிருந்தனர். பிரிட்டனை சேர்ந்த கவிஞர்கள் டபள்யூ.பி.யீட்ஸ், டி.எஸ். எலியட் ஆகியோரை மகாபாரதம் படித்திருந்ததற்காக ஓப்பன்ஹெய்மர் பாராட்டினார்.
அணுகுண்டு சோதனைக்கு பின் கீதையில் ஆழ்ந்த ஹெய்மர்
முதல் அணுகுண்டு சோதனைக்கு பிறகு, வானத்தில் ராட்சத வடிவில் ஆரஞ்சு நிறத்தில் மேகம் எழுவதை கண்ட ஓப்பன்ஹெய்மர் மீண்டும் கீதைக்கு திரும்பினார். இறுதியில் இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது அணுகுண்டு வீசப்பட்டதில் பல்லாயிரக்கணக்கானோர் மடிந்தனர்.
“உலகம் ஒரே மாதிரியாக இருக்காது என்று எங்களுக்குத் தெரியும். சிலர் சிரித்தார்கள்; சிலர் அழுதார்கள்; பெரும்பாலான மக்கள் அமைதியாக இருந்தனர்” என்று அணுகுண்டு வீசப்பட்டது குறித்து, அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியான NBC, 1965இல் தயாரித்த ஆவணப்படத்தில் ஓப்பன்ஹெய்மர் தெரிவித்திருந்தார்.
அத்துடன் அதில் அவர் பகவத் கீதையின் வரிகளை மேற்கோள்காட்டி இருந்தார். “எனக்கு பகவத் கீதையின் ஒரு வரி நினைவுக்கு வருகிறது. ஹிந்துக்களின் முக்கிய கடவுள்களில் ஒருவரான விஷ்ணு, இளவரசரை அவர் தனது கடமையைச் செய்ய வேண்டும் என்று வற்புறுத்த முயற்சிக்கிறார். மேலும் அவரைக் கவர, அவரது பல ஆயுதங்களின் வடிவங்களை எடுத்து, “இப்போது நான் மரணமாகிவிட்டேன், உலகங்களை அழிப்பவன்' என்று அவர் கூறுகிறார். உலக அழிவிற்கு நாம் அனைவரும் ஒரு வழி அல்லது வேறு வழிகள் இருக்கின்றன என்று நினைத்தோம்" என எண்ணுகிறேன் என்று, பகவத் கீதையின் வரிகளை அந்த ஆவணப்படத்தில் மேற்கோள்காட்டி பேசியிருந்தார் ஓப்பன்ஹெய்மர்.
ஆனால், அவரது இந்த மேற்கோள் ஓப்பன்ஹெய்மரின் ஆதரவாளர்களால் மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாக தெரிகிறது என்று அவரது நண்பர் ஒருவர் தெரிவித்திருந்தார். ஆனாலும், பிறருக்கு எளிதில் புரியாத புதிராக திகழ்ந்த விஞ்ஞானியான ஓப்பன்ஹெய்மர், பகவத் கீதை மூலம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தினார்.
தங்களின் தத்துவ கண்ணோட்டத்தை மிகவும் ஆழமாக பாதித்த புத்தகங்களின் பெயர்களை பகிர்ந்து கொள்ளுமாறு, The Christian Century பதிப்பகத்தின் ஆசிரியர்கள் ஒரு முறை ஓப்பன்ஹெய்மரிடம் கேட்டறிந்தனர்.
அதற்கு முதல் புத்தகமாக, பாட்லேயரின் ‘லெஸ் ஃப்ளூர்ஸ் டு மால்’ (Baudelaire's Les Fleurs du Mal) நூலை குறிப்பிட்ட ஓப்பன்ஹெய்மர், இரண்டாவதாக பகவத் கீதையை குறிப்பிட்டிருந்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












