சிங்கப்பூர் அரசியலில் புயலைக் கிளப்பும் திருமணம் கடந்த உறவுகள்

பட மூலாதாரம், Reuters
சிங்கப்பூர் ஸ்திரமான அரசியல் பின்புலம் கொண்டது. ஆனால் இப்போது அங்கு அரசியலில் ஊழலும் முறைகேடுகளும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
கடந்த வாரம், ஊழல் தொடர்பாக மூத்த அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த நான்கு தசாப்தங்களில் இல்லாத வகையில் முதல் முறையாக எடுக்கப்பட்ட அத்தகைய நடவடிக்கை நாட்டில் பேரதிர்ச்சியாக அமைந்தது. இதனால் 64 வருடங்களாக ஆட்சி செய்துவரும் மக்கள் செயல் கட்சி தனது நற்பெயரை இழந்து வருவதாகவும் கருதப்படுகிறது.
கடந்த வாரம் திங்கட்கிழமை, நாடாளுமன்ற சபாநாயகரும், பெண் நாடாளுமன்ற உறுப்பினரும் திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருப்பது தெரியவந்ததும் ராஜிநாமா செய்தனர்.
மிகவும் தூய்மையான நிர்வாகத்துக்குப் பெயர் பெற்ற, உலகிலேயே அதிக ஊதியம் பெறும் தலைவர்களைக் கொண்ட சிங்கப்பூர் மக்களை இது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஆளுங்கட்சி மாத்திரமல்லாமல் எதிர்க்கட்சியிலும் இதேபோன்ற சிக்கல் ஏற்பட்டது. எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஆண், பெண் மூத்த உறுப்பினர்கள் இருவர் உணவகத்தில் கையைப் பிடித்திருப்பது போன்ற காணொளி வெளியானதால் அவர்கள் இருவரும் பதவி விலக நேர்ந்தது.
1959 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஆட்சியை கைவசப்படுத்தி நாடாளுமன்றத்திலும் பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் ஆளும் மக்கள் செயல் கட்சிக்கு (PAP) தற்போதைய நெருக்கடி ஆதரவைக் பெருமளவில் குறைத்துவிடும் எனப் பல அரசியல் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்
பிரதமர் லீ சியென் லூங் எப்போது அடுத்த வரிசைத் தலைவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்க முடியும் என்பதில் சந்தேகம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
54 வயதான சபாநாயகர் டான் சுவான்-ஜின் 47 வயதான நாடாளுமன்ற உறுப்பினர் செங் லி ஹியூர் ஆகியோர் இடையே திருமணத்தை தாண்டிய உறவு இருப்பது தெரியவந்ததும் கட்சி, நாடாளுமன்ற பதவிகளை ராஜினாமா செய்தனர். இவர்களில் டான் திருமணமானவர், செங் திருமணமாகாதவர்.

பட மூலாதாரம், Reuters
கடந்த வாரத்தில் சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் மற்றும் ஹோட்டல் அதிபர் ஓங் பெங் செங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அப்போதே வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகள் எழுந்தன. 2008-இல் சிங்கப்பூருக்கு கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தைக் கொண்டு வந்ததில் இருவரும் முக்கிய பங்கு வகித்தனர்.
ஈஸ்வரன் தனது அமைச்சர் பணிகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக கடந்த புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
ஊழல் தொடர்பான விசாரணை "முழுமையானதாகவும், சுதந்திரமாகவும்" இருக்கும் என்றும், எந்த ஒளிவுமறைவுமின்றி நடக்கும் என்றும் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
ஆனால் அவர்கள் உண்மையில் நடந்து முடிந்து மூன்று நாட்களுக்குப் பிறகுதான் கைது பற்றிய விவரங்களை அறிவித்தனர். தற்போது இருவர் மீதும் குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்படவில்லை. தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.
வேறு 2 மூத்த அமைச்சர்கள் காலனித்துவ காலத்துப் பங்களாக்களை சந்தையை விட குறைவான விலையில் வாடகைக்கு எடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து இந்தக் கைதுகள் நடந்தன.

பட மூலாதாரம், Getty Images
ஊழலுக்கு எதிரான விசாரணையில் அமைச்சர்களான கே.சண்முகம் மற்றும் விவியன் பாலகிருஷ்ணன் ஆகிய இருவர் மீதும் தவறு இல்லை என்று தெரியவந்தாலும், இது சிங்கப்பூரில் சமத்துவமின்மை பற்றிய விவாதத்தையும் அரசியல் விமர்சனங்களையும் உருவாக்கியது.
இதுபோன்ற அசாதாரணமான தொடர் நிகழ்வுகள் பல தவிர்க்க முடியாத மீம்கள் வெளியாவதற்கும் காரணமாகின. "இந்தக் காலத்தில் சிங்கப்பூர் எழுத்தாளர்கள் தங்களைத் தாங்களே விஞ்சியுள்ளனர்" என்று திங்களன்று yeolo.sg இன் Instagram பக்கத்தில் எழுதினர்.
கட்சியினர் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று மக்கள் செயல் கட்சி நீண்ட காலமாக என்று வலியுறுத்தி வருகிறது.
கடந்த தசாப்தத்தில் அப்போதைய நாடாளுமன்ற சபாநாயகரும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் திருமணத்தைத் தாண்டிய உறவு காரணமாக பதவி விலகினர். ஆனால் இப்போது அடுத்தடுத்து ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் வந்திருப்பதால், மக்களின் விமர்சனம் அதிகரித்திருக்கிறது.
மக்கள் செயல் கட்சி தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. அதன் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர் ஒருமுறை இந்தக் கட்சியில் சேருவதை பிரமச்சரியத்துடன் ஒப்பிட்டார்.
தற்போது எழுந்திருக்கும் சிக்கல்களை தங்களது கட்சி கையாண்ட விதத்தை பிரதமர் லீ பாராட்டும் வகையில் பேசினாலும், அது தொடர்பான கடுமையான விமர்சனப் பார்வைகளும் உள்ளன.
பிற வளர்ந்த நாடுகளில் பொதுவாக இருக்கும் அரசியல் நடைமுறைகளை மக்கள் செயல் கட்சி இதுவரை செயல்படுத்தவில்லை. அரசியல் பதவியில் இருப்பவர்கள், மூத்த அரசு ஊழியர்கள், அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் தங்களது வருமானத்தையும் சொத்து விவரங்களையும் பொதுவில் வெளியிடுவது போன்றவற்றை சிங்கப்பூர் செயல்படுத்தவில்லை என்று கூறுகிறார் சிங்கப்பூரை தளமாகக் கொண்ட அரசியல் ஆய்வாளர் இயான் சோங்.

பட மூலாதாரம், Getty Images
அதிகாரத்தில் உள்ளவர்களை பொறுப்பாக்குவதற்கான வலுவான வழிமுறைகள் எதுவும் சிங்கப்பூரில் இல்லை என்கிறார் சிங்கப்பூர் அரசியல் பற்றி பல புத்தகங்களை எழுதிய ஆஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட பேராசிரியரான மைக்கேல் பார்.
"நீங்கள் அவர்களை நம்பியாக வேண்டும். அதனால்தான் இதுபோன்ற அரசாங்கத்திற்கு மிகவும் ஆபத்தான, இதுவரை இல்லாத நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. அவர்கள் மக்கள் நம்பிக்கையை குப்பையில் போடுகிறார்கள்," என்று அவர் கூறினார்.
ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனலின் சமீபத்திய ஊழல் புலனாய்வுக் குறியீட்டில் சிங்கப்பூர் ஐந்தாவது குறைந்த ஊழல் நிறைந்த நாடு என்று பட்டியலிடப்பட்டிருக்கிறது. அமைச்சர்களுக்கு அதிகம் சம்பளம் வழங்குவதே ஊழலை ஒழிப்பதற்கான ஒரு வழி என்ன பல காலமாக சிங்கப்பூர் கூறி வருகிறது.
பிரதமர் லீ எப்போது பதவி விலகுவார் என்ற சந்தேகத்தையும் சமீபத்திய நிகழ்வுகள் ஏற்படுத்துகின்றன.
2004-ஆம் ஆண்டு முதல் பிரதமராக இருக்கும் 71 வயதான அவர், ஓய்வு பெற விரும்புவதாக அடிக்கடி பேசி வந்தார். அவரது அடுத்த வாரிசாக நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் சமீபத்திய சர்ச்சைகள் குறித்து வோங் வெளிப்படையாக பேசவில்லை என்ற குற்றச்சாட்டு அவர் மீது உள்ளது.
இதேபோல் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி அதன் இரண்டு மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே ‘பொருத்தமற்ற உறவு’ இருப்பதாக எழுந்த விவகாரத்தை ஆராய்வதாகக் கூறிய நிலையில், அவர்கள் இருவரும் பதவி விலகினர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோன் பெரைராவும் கட்சியின் மற்றொரு உறுப்பினர் நிகோல் சியாவும் உணவகம் ஒன்றில் கையைப் பிடித்துக் கொண்டிருப்பது போன்ற காணொளி ஒன்று அண்மையில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து அவர்கள் இருவரும் பதவி விலகியதாக கட்சியின் பொதுச் செயலாளர் ப்ரீதம் சிங் அண்மையில் அறிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








