பூமியின் மையம்: உலோக கடலுக்குள் இரும்பு, நிக்கல் கோளம் - தாதுக்களை வெளியே எடுத்து வர முடியுமா?

பட மூலாதாரம், Getty Images
சுமார் 160 ஆண்டுகளுக்கு முன்பு, ஜெர்மனியச் சேர்ந்த புகழ்பெற்ற புவியியல் பேராசிரியர் ஓட்டோ லிடன்ப்ராக் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சாகசப் பயணியின் சங்கேதக் கையெழுத்துப் பிரதியைக் கண்டுபிடித்தார். அது உலகம் முழுதும் பிரபலமானது.
அவரது மருமகன் ஆக்சலுடன் சேர்ந்து அவர் அந்தச் சங்கேதச் குறிப்பு மொழியைக் கட்டுடைத்து மொழிபெயர்த்தார். அதில், பூமியின் மையப்பகுதிக்கு இட்டுச்செல்லும் சில குகைகளுக்கான ரகசிய நுழைவாயில்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அறிவியல் ஆர்வம் உந்த, பேராசிரியரும் அவரது மருமகனும் ஐஸ்லாந்திற்குச் சென்றனர். அங்கு பூர்வகுடியைச் சேர்ந்த ஹான்ஸ் ப்யெல்கே என்பவரை வழிகாட்டியாக உடன் அழைத்துக்கொண்டு அவர்கள் நமது கிரகத்தின் ஆழத்திற்குத் தங்கள் பயணத்தைத் தொடங்கினர்.
மூவரும், அழிந்துபோன ஒரு எரிமலையினுள் இறங்கி, சூரிய வெளிச்சம் படாத ஒரு கடலுக்குள் சென்றனர். பூமிக்கு அடியில் அவர்கள் கண்டது: ஒளிரும் பாறைகள், ஆதிகாலக் காடுகள், மற்றும் அற்புதமான கடல் வாழ் உயிரினங்கள்.
அந்த இடம், மனிதனின் தோற்றம் குறித்த ரகசியங்களைத் தன்னிடம் வைத்திருந்தது.

அறிவியல் புனைகதைகளை விரும்பிப் படிப்பவர்கள் இந்நேரம் இந்தக் கதை என்னவென்று கண்டுபிடித்திருப்பார்கள்.
இது பிரெஞ்சு எழுத்தாளர் ஜூல்ஸ் வெர்னின் கற்பனையில் உருவானது. அவரது ‘பூமியின் மையத்திற்கு ஒரு பயணம்’ (Journey to the Center of the Earth) என்ற அவரது நாவலின் கதை இது. அதில் பூமிக்கடியில் என்ன இருக்கிறது என்பதைப் பற்றி அப்போது நிலவிய கோட்பாடுகளை ஆராய்ந்தார்.
ஆனால், உண்மையிலேயே அந்தக் கதையில் வருவது போல 6,371கி.மீ. பூமிக்குள் சென்றால் அங்கு என்ன இருக்கும்?
அறிந்துகொள்ள, நாமும் பூமியின் மையத்திற்குச் செல்வோம்.
பூமியின் மேலடுக்கில் என்ன உள்ளது?
நம் உலகம் பல அடுக்குகளால் ஆனது, ஒரு வெங்காயத்தைப் போல. நமக்குத் தெரிந்தவரை, உயிரினங்கள் மேற்பரப்பு, அதாவது முதல் அடுக்கில் மட்டுமே உள்ளன. இதுதான் பூமியின் மேலோடு.
இதில் சில விலங்குகளின் வளைகளைக் காணலாம். எலிகள் போன்ற உயிரினங்களின் வளைகள். இவற்றில் மிக ஆழமானவை நைல் முதலைகளால் தோண்டப்பட்டவை. இவை 12 மீட்டர் ஆழம் வரை இருக்கும்.

பூமியின் இந்த மேலோட்டில் தான், துருக்கியில் உள்ள எலெங்குபு என்ற புராதன நிலத்தடி நகரம் உள்ளது. இது கி.மு. 370-ம் ஆண்டு கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இது இன்று டெரிங்குயு என்று அழைக்கப்படுகிறது. இது பூமியின் மேற்பரப்பில் இருந்து 85மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் உள்ளது.
இது 18 நிலை சுரங்கப்பாதைகளுடன் கூடிய இந்த நிலத்தடிச் சுரங்கப்பாதை 20,000 மக்கள் வசிக்கும் அளவு பெரியது.
இந்த நகரம், மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலையான பயன்பாட்டில் இருந்து வந்தது.
உலகின் மிக ஆழமான சுரங்கங்கள் சுமார் 4கி.மீ ஆழம் வரை செல்பவை.
தென்னாப்பிரிக்காவின் தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் பூமிக்கடியில் 2 கி.மீ ஆழத்தில் புழுக்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
ஆனால் 3 கி.மீ ஆழத்திற்கு மேல் உயிரினங்களைக் காண முடியாது.
அதற்கும் கீழே, இதுவரை தோண்டப்பட்டதில் ஆழமான துளை உள்ளது: ரஷ்யாவில் உள்ள கோலா கிணறு.
சிலர் அதை ‘நரகத்தின் நுழைவாயில்’ என்று அழைக்கிறார்கள். உள்ளூர்வாசிகள் அதிலிருந்து சித்திரவதை செய்யப்பட்ட ஆத்மாக்களின் அலறல்களைக் கேட்பதாகச் சொல்கிறார்கள்.
பூமிக்குள் இருக்கும் பிரகாசமான கடல்

பூமிக்கடியில் 30 கி.மீ முதல் 50 கி.மீ ஆழத்தில், பூமியின் அடுத்த அடுக்கை அடைகிறோம்: மேன்டில் (mantle).
இது நமது கிரகத்தின் அடுக்குகளிலேயே மிகப்பெரியது ஆகும். இது பூமியின் அளவில் 82% மற்றும் அதன் கனத்தில் 65% ஆகும்.
இது சூடான பாறைகளால் ஆனது. இது நமக்கு திடமான கற்களைப்போல் தோன்றுகின்றன. ஆனால் உண்மையில் இவை மிக மெதுவாகப் பாய்கின்றன. ஒரு வருடத்திற்குச் சில சென்டிமீட்டர்கள் மட்டுமே நகர்கின்றன.
கீழே உள்ள இந்த நுட்பமான மாற்றங்கள், மேலே பூகம்பங்களை உருவாக்கலாம்.
பூமிக்கு அடியில், மேலே உள்ள அனைத்துப் பெருங்கடல்களும் ஒன்றிணைந்த அளவு நீரைக் கொண்டிருக்கும் ஒரு பிரமாண்டமான பிரகாசிக்கும் கடல் உள்ளது.
இருப்பினும், அதில் ஒரு துளி திரவம் கூட இல்லை.
இது ஆலிவின் எனும் ஒருவகைக் கனிமத்திற்குள் சிக்கியுள்ள தண்ணீரால் ஆனது. மேன்டிலின் பாதிக்கும் மேற்பட்டப் பகுதி இதனால் ஆனதுதான்.
ஆழமான மட்டங்களில், இது நீல வண்ணப் படிகங்களாக மாறுகிறது.
நாம் பூமிக்குள் இன்னும் ஆழமாகப் போகும்போது, அதிகரிக்கும் அழுத்தத்தினால் அணுக்கள் சிதைந்து, நமக்கு மிகவும் பழக்கமான பொருட்கள்கூட விசித்திரமாக நடந்து கொள்கின்றன.
இங்கிருக்கும் படிகங்கள் பச்சை நிறத்தில் இருந்து நீலம் மற்றும் பழுப்பு நிறமாக மாறி, படிகங்களின் ஒரு கெலைடோஸ்கோப் போன்று காட்சியளிக்கும். இது சுழன்று கொண்டே இருக்கும். இங்கிருக்கும் பாறைகள் பிளாஸ்டிக் போன்று இலகுவானவை. இங்கிருக்கும் தாதுக்கள் மிகவும் அரிதானது, அவை பூமியின் மேற்பரப்பில் கிடைக்காதவை.
இப்பகுதியில் மிகுதியாகக் காணக்கிடைக்கும் பிரிட்ஜ்மனைட் மற்றும் டேவ்மாவோயிட் ஆகிய தாதுக்கள் உருவாக பூமியின் உட்புறத்தில் இருக்கும் தனித்துவமான அதி உயர் அழுத்தம் தேவை. அவைற்றை பூமியின் மேற்பரப்பிற்குக் கொண்டு வரப்பட்டால் அவை சிதைந்துவிடும்.
இன்னும் கீழே சென்று 2,900கி.மீ ஆழத்தை அடைந்தால், நாம் மேன்டிலின் அடிப்பகுதிக்கு வந்துவிடுவோம்.

பூமிக்குள் இருக்கும் எவரெஸ்ட் சிகரத்தினும் உயரமான வடிவங்கள்
அந்த இரண்டு இளஞ்சிவப்பு வடிவங்கள் தெரிகின்றன அல்லவா?
அவை மிகப்பெரும் கட்டமைப்புகள். அவை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் அகலம் கொண்டவை. பூமியின் முழு பரப்பில் 6 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளன.
இவை ‘Large Low Shear Rate Provinces’ (LLSVPS) என்று அழைக்கப்படுகின்றன. இவற்றுகுத் தனிப்பட்டப் பெயர்களும் உள்ளன.
ஆப்பிரிக்காவின் கீழ் அமைந்துள்ளது ‘துசோ’, பசிபிக் பெருங்கடலின் கீழ் உள்ளது ‘ஜேசன்’.
அவற்றின் உயரங்களின் மதிப்பீடுகள் வேறுபடுகின்றன. ஆனால் துசோவின் உயரம் 800கி.மீ. என்று நம்பப்படுகிறது. இது சுமார் 90 எவரெஸ்ட் சிகரங்களின் உயரத்துக்குச் சமமானதாகும்.
ஜேசனின் உயரம் 1,800கி.மீ. வரை இருப்பதாக நம்பப்படுகிறது இது சுமார் 203 எவரெஸ்ட்கள்.
ஆனால் அவற்றின் வடிவங்கள் எவ்வளவு பெரியவை என்பதைத் தெரிந்துகொள்வதைத் தவிர, அவை எவ்வாறு உருவாகின, அவை நமது கிரகத்தின்மீது எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றன என்பது உட்பட, அவற்றைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் நிச்சயமற்றதாகவே உள்ளன.
ஆனால் இவற்றைப்பற்றி ஒன்று மட்டும் தெரியும். இவை அடுத்த அடுக்கான பூமியின் வெளிப்புற மையத்தோடு ஒட்டியிருக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
பூமியின் 'இதயத்தில்' என்ன இருக்கிறது?
ஜூல்ஸ் வெர்னின் பிரசித்தமான நாவலில், பேராசிரியர் லிடென்ப்ராக் பூமிக்கு அடியில் ஒரு முழு உலகத்தையே காண்கிறார். புராதான உயிரினங்கள் மற்றும் ஒரு நிலத்தடிக் கடல் ஆகியவற்றைப் பார்க்கிறார்.
அக்கதையில் வரும் டைனோசர்கள் ஒரு மிகைப்படுத்தல் தான் என்றாலும், உண்மையில் அக்கதையில் வருவதுபோல பூமிக்கடியில் திரவ உலோகத்தினாலான ஒரு கடல் உள்ளது.
அந்த இயக்கம் ஒரு காந்தப்புலத்தை உருவாக்குகிறது, அது இல்லாமல் பூமியில் வாழ்க்கை சாத்தியமில்லை.
இந்தக் காந்தப்புலம் சூரிய கதிர்வீச்சின் பெரும்பகுதியிலிருந்தும், வளிமண்டலத்தை அழிக்கவல்ல அணுத்துகள்களின் ஓட்டத்திலிருந்தும் பூமியைப் பாதுகாக்கிறது.
அங்கிருந்து இன்னும் உள்ளே போனால், பூமியின் மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றான அதன் உள் மையத்திற்கு வருகிறோம்.
இது சூரியனின் மேற்பரப்பைப் போலச் சூடாகவும், சந்திரனை விட சற்றுச் சிறியதான, திடமான இரும்பு மற்றும் நிக்கல் உலோகத்தாலான ஒரு அடர் கனமான பந்து.
இதன் அழுத்தம் மிகவும் தீவிரமானது. இதனால் உலோகங்கள் படிகமாகி, நமது கிரகத்தின் மையத்தில் ஒரு திடமான கோளத்தை உருவாக்குகிறது.
இது நாம் செல்லவே முடியாத இடம்.
இது ஒரு பயங்கரமான பகுதி. இதன் வெப்பம் 6,000 °C. இதன் அழுத்தம் நமது வளிமண்டலத்தின் அழுத்தத்தைப் போன்று 3.5மில்லியன் மடங்கு. இந்த நிலையை எந்த ஆய்வுக் கருவியும்.
ஒரு திரவ உலோகக் கடலில் மூழ்கியிருக்கும் ஒரு படிகக் கோளம் நமக்கு ஒரு புதிராக இருக்கலாம்.
ஆனால் இன்று விஞ்ஞானிகள் அதனை பூமியின் மேற்பரப்பிலிருந்து ஆய்வு செய்கிறார்கள். சில சமயங்களில் அதைப் பற்றி நாம் அறிந்துகொண்டுவிட்டோம் என்று தோன்றினாலும், அது மிகவும் விசித்திரமானது, இன்னும் முழுதாகப் புரிந்து கொள்ளப்படாதது.
அறிவியலுக்கும் கற்பனைக்கும் வரம்புகள் இல்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












