அமெரிக்காவில் சாலையோரம் கிடந்த ஹைதராபாத் பெண் - உயர் கல்விக்காக சென்ற இடத்தில் என்ன நடந்தது?

எம்.எஸ். படிக்க அமெரிக்கா சென்ற ஹைதராபாத் பெண்

பட மூலாதாரம், Social Media

படக்குறிப்பு, எம்.எஸ். படிக்க அமெரிக்கா சென்ற ஹைதராபாத் பெண்மின்ஹாஜ் ஜைதி
    • எழுதியவர், அமரேந்திர யர்லகட்டா சதானந்தம்
    • பதவி, பிபிசிக்காக

அமெரிக்காவின் சிகாகோ நகரில் இந்தியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சாலையோரம் படுத்திருக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ஹைதராபாத்தை சேர்ந்த மின்ஹாஜ் ஜைதி என்ற அந்தப் பெண், எம்.எஸ் படித்து வாழ்வில் சாதிக்க வேண்டுமென்ற கனவுகளோடு அமெரிக்காவுக்கு கிளம்பிச் சென்றவர்.

சாலையோரத்தில் கிடக்கும் மிஹாஜ் ஜைதி கருப்பு ஜாக்கெட், கருப்பு போர்வை அணிந்துள்ளார். வீடியோவை எடுத்துக் கொண்டிருந்த நபர் கேட்ட கேள்விகளுக்கு அவரால் சரியாக பதிலளிக்க முடியவில்லை.

நீண்ட நாட்களாக சரியாகச் சாப்பிடாமல், உறங்காமல் இருந்தவர் போல அவரது கண்கள் குழி விழுந்திருந்தன. பசியும் சோர்வும் பீடித்திருந்த அவரது உதடுகளில் இருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் எதுவும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இருக்கவில்லை.

அவருடைய ஆடைகள் பழையனவாக இருந்தன. அவரது தலைமுடி கலைந்திருந்தது. அவரால் தன் பெயரைக்கூட சரியாகச் சொல்ல முடியவில்லை.

ஹைதராபாத்தை சேர்ந்த பிஆர்எஸ் தலைவர் கலேகர் ரெஹ்மான் இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சிகாகோ பெண்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மின்ஹாஜ் ஜைதி ஹைதராபாத்தில் உள்ள ஷதன் கல்லூரியில் 2017 இல் எம்.டெக் (கணினி அறிவியல்) முடித்தார்

அமெரிக்காவுக்கு படிக்கச் சென்ற மின்ஹாஜ் ஜைதி

ஹைதராபாத்தில் உள்ள மௌலாலி பகுதியைச் சேர்ந்தவர். முழுப் பெயர் சையதா லுலு மின்ஹாஜ் ஜைதி (37).

இவரது தாயார் பெயர் சையதா வஹாஜ் பாத்திமா. அவர் ஓய்வு பெற்ற ஆசிரியை. தர்னாகாவில் உள்ள ஐஐசிடி வளாகப் பள்ளியில் சுமார் 35 ஆண்டுகள் அறிவியல் மற்றும் ஆங்கிலம் கற்பித்தார். தற்போது வீட்டிலேயே பயிற்சி அளித்து வருகிறார்.

மின்ஹாஜ் ஜைதி ஹைதராபாத்தில் உள்ள ஷதன் கல்லூரியில் 2017இல் எம்.டெக் (கணினி அறிவியல்) முடித்தார்.

அதன்பிறகு, அதே கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

இருப்பினும், கோவிட் பொதுமுடக்கத்தின்போது அவர் தனது வேலையை இழந்தார். அதற்குப் பிறகு, மின்ஹாஜ் மேற்படிப்பைத் தொடர முடிவு செய்தார். இதுகுறித்து மின்ஹாஜின் தாய் ஃபாத்திமா பிபிசியிடம் பேசினார்.

“எம்.எஸ். முடித்தால் நல்ல வேலை கிடைக்கும் என்று நினைத்தாள். அதனால்தான் அவள் பல பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்தாள். பொது முடக்கத்தின்போது, ஆன்லைனில் தேர்வு எழுதினாள். நான் எம்.எஸ் படித்தால், பணியமர்த்தும்போது அதிக முன்னுரிமை தருவார்கள் என்று என்னிடம் சொன்னாள்.”

மின்ஹாஜ் ஜைதிக்கு டெட்ராய்டில் உள்ள ட்ரெய்ன் பல்கலைக்கழகத்தில் தகவல் அறிவியல் துறையில் எம்எஸ் படிக்க 2021ஆம் ஆண்டில் இடம் கிடைத்தது.

அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் F1 விசாவில் அவர் அமெரிக்கா சென்றார். கல்விக்கான விசா ஐந்து ஆண்டு காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்.

சிறுவயதில் இருந்தே மின்ஹாஜ் நன்றாகப் படித்து நல்ல வேலையில் செட்டில் ஆக விரும்பியதாக அவரது தாய் ஃபாத்திமா பிபிசியிடம் தெரிவித்தார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை அவரது உடல்நிலை நன்றாக இருந்ததாகவும், திடீரென என்ன ஆனது என்று தெரியவில்லை என்றும் சொன்னார்கள்.

எம்.எஸ். படிக்க அமெரிக்கா சென்ற ஹைதராபாத் பெண் மோசமான நிலையில் சாலையோரம் கிடந்த கொடுமை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிறுவயதில் இருந்தே மின்ஹாஜ் நன்றாகப் படித்து நல்ல வேலையில் செட்டில் ஆக விரும்பியதாக ஃபாத்திமா பிபிசியிடம் தெரிவித்தார்.

கண்ணீர் விடும் தாய் ஃபாத்திமா

மகள் மின்ஹாஜின் அவலநிலையைக் கண்டு தாய் ஃபாத்திமா மிகவும் வேதனைப்பட்டார்.

“மின்ஹாஜிடம் பேசி இரண்டு மாதங்கள் ஆகிறது. எவ்வளவு விசாரித்தும் என்ன நடந்தது, எங்கே போனாள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

இத்தனைக்கும் இரண்டு மாதங்களாக தூதரகத்திடம் தொடர்பில்தான் இருக்கிறேன்," என்று ஃபாத்திமா கண்ணீருடன் பிபிசியிடம் கூறினார்.

யாரோ அவளிடமிருந்து அனைத்து பொருட்கள், சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களை எடுத்துச் சென்றதாக அவர்கள் தெரிவித்தனர்.

தொலைபேசி அழைப்பும் இல்லை. அவளுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. அவள் உடல்நிலை சரியில்லை. அவளை மருத்துவமனையில் அனுமதிக்க இந்திய தூதரகம் ஒத்துழைக்க வேண்டும். அவள் பையில் இன்சூரன்ஸ் கார்டு இருக்க வேண்டும்," என்றார் ஃபாத்திமா.

மின்ஹாஜ் ஜைதியை இந்தியாவுக்கு அனுப்ப தெலுங்கானா தெலுங்கு சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் முயற்சித்து வருகின்றன.

பட மூலாதாரம், SOCIAL MEDIA

படக்குறிப்பு, இந்திய வெளியுறவுத் துறைக்கு ஃபாத்திமா எழுதிய கடிதம்

இதுவரை என்ன நடந்தது?

இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை மின்ஹாஜ் ஜைதி நன்றாகவே பேசியதாக ஃபாத்திமா கூறுகிறார்.

ஆனால் இப்போது மின்ஹாஜின் நிலைமை முற்றிலும் மாறுபட்டதாகத் தெரிகிறது. அமெரிக்காவிலுள்ள தெலுங்கு பிரதிநிதிகள், அவர் பொருளாதாரச் சிக்கல்களால் படிப்பைத் தொடர முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சிகாகோவை சேர்ந்த சமூக சேவகர் முகமது மின்ஹாஜ் அக்தரிடம் பிபிசி பேசியது.

"அமெரிக்கா வரும் மாணவர்கள் தங்கள் செலவுக்கு பகுதிநேர வேலை செய்ய வேண்டியுள்ளது. ஒவ்வொரு செமஸ்டருக்கும் செலவு அதிகரித்து வருகிறது. பெண்கள் பணம் சம்பாதிக்க மிகவும் சிரமப்படுகிறார்கள்.

ஆண்கள் எந்த வேலையும் செய்வார்கள். பெண்கள் சில வேலைகளை மட்டுமே செய்ய முடியும். அதனால்தான் அவர்கள் இங்கு தங்க முடியாமல் தவிக்கின்றனர். படிப்பைத் தொடர முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.”

“கடந்த ஆண்டு மின்ஹாஜ் ஜைதி எங்கள் அலுவலகத்திற்கு வந்தபோது, அவர் சில நிதி சிக்கல்களை எதிர்கொண்டதைக் கண்டோம். அவரால் F1 விசாவில் இங்கு வேலை செய்ய முடியவில்லை.

ஆனால், மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும் என்று நான் நினைக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு அவரைப் பார்த்தபோது அவர் மோசமான மனநிலையில் இருந்தார். அவர் உடல்நிலையும் மோசமாக இருந்தது,” என்று அக்தர் கூறினார்.

சமூக செயற்பாட்டாளர் முகமது அக்தர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சமூக செயற்பாட்டாளர் முகமது அக்தர்

இந்தியாவிற்கு எப்படி அழைத்து வருவது.?

மின்ஹாஜ் ஜைதியை இந்தியாவுக்கு அனுப்ப தெலுங்கானா தெலுங்கு சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் முயன்று வருகின்றன.

இந்த விஷயத்தை அமெரிக்காவின் பிபிசி பிரதிநிதி தெரிவித்தார். அவரது வீடியோ சமூக ஊடகங்களிலும், வாட்ஸ் அப் குழுக்களிலும் பகிரப்பட்டு வருகிறது. யாரை பார்த்தாலும் தகவல் தருமாறு சங்கங்களின் பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

"அவரை இந்தியாவுக்கு அனுப்புவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அவருடைய பாஸ்போர்ட் சேதமடைந்துவிட்டது. நான் இந்திய துணைத் தூதரகத்திடம் பேசியபோது ஒரு மணிநேரத்திற்குள் பாஸ்போர்ட்டை ஏற்பாடு செய்யலாம் என்று சொன்னார்கள்.

ஆனால் அவருடைய உடல்நிலையும் சரியில்லை. அவருக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட வேண்டும். யாரேனும் அவரைப் பார்த்தால், எனக்குத் தெரிவிக்கவும்," என்று முகமது அக்தர் கூறினார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம்

மின்ஹாஜ் ஜைதியின் உடல்நிலை குறித்து, அவரது தாயார் ஃபாத்திமா இம்மாதம் 22ஆம் தேதி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் தனது மகள் மன அழுத்தத்தால் சிகாகோ தெருக்களில் பல நாட்கள் பட்டினியாகக் கிடப்பதாக எழுதியிருந்தார். கடந்த இரண்டு மாதங்களாகத் தனது மகள் தன்னிடம் பேசவில்லை என்று கூறியுள்ளார்.

ஹைதராபாத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அவரை அடையாளம் கண்டு, மகளின் நிலை தங்களுக்குத் தெரியும் என்று சொன்னார்கள்.

தனது பொருட்களை யாரோ திருடிச் சென்றதால், அழுத்தத்தின் காரணமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகத் தெரிகிறது.

தனது மகள் விவகாரத்தில் இந்திய தூதரகமும், இந்திய துணை தூதரகமும் தலையிட்டு உதவ வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார்.

அந்தக் கடிதத்தில் ஃபாத்திமா, தனது மகளை இந்தியாவுக்கு அழைத்து வர தூதரகத்திடம் பேசுமாறு மத்திய அமைச்சரிடம் கேட்டுக் கொண்டார்.

அமெரிக்காவில் சமூக சேவகர் முகமது மின்ஹாஜ் அக்தர், மின்ஹாஜ் ஜைதியை கண்டுபிடிக்க உதவுவார் என்றும் அவர் தெரிவித்தார்.

"மின்ஹாஜ் ஜைதியை காணவில்லை என்று இரண்டு மாதங்களாக இந்திய தூதரகத்திடம் பேசி வருகிறேன். அங்கிருந்து எந்தத் தகவலும் இல்லை." என்று பாத்திமா பிபிசியிடம் தெரிவித்தார்.

மின்ஹாஜ் ஜைதியிடம் செல்போன் இல்லாததால் அவர் இருக்கும் இடத்தை அறிய முடியவில்லை என்கிறார் அவரது தாய் மின்ஹாஜ் ஜைதி.

மின்ஹாஜுக்கு உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சை அளித்து இந்தியாவுக்கு அனுப்புமாறு தாய் ஃபாத்திமா வேண்டுகோள் விடுத்துள்ளார். மகளால் வர முடியாவிட்டால், தனக்கு விசா கொடுத்து அமெரிக்காவுக்கு அனுப்புமாறு ஃபாத்திமா கேட்டுக் கொண்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: