கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய குடும்பங்களை மீனவ கிராமம் ஒதுக்கி வைத்ததா? பூம்புகாரில் என்ன நடக்கிறது?

- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
பூம்புகார் மீனவ கிராமத்தில் உள்ள ஏழு குடும்பத்தினர் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுவதால், பல ஆண்டுகளாக அந்த ஊரின் மீனவர் நிர்வாகம் அந்தக் குடும்பங்களை ஒதுக்கி வைத்துள்ளது.
ஊர் கட்டுப்பாட்டை ஏற்காவிட்டால் அவர்களோடு உறவாட முடியாது என்கிறார்கள் கிராம நிர்வாகத்தினர். என்ன நடக்கிறது?
சிலப்பதிகாரம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் பலவற்றில் இடம்பெற்ற நகரம் காவிரி பூம்பட்டினம். முற்காலச் சோழர்களின் முக்கியமான துறைமுகமாகவும் இருந்த நகரம். தற்போது பூம்புகார் என்ற பெயரில் சிறுநகரமாக இருக்கும் இந்தப் பகுதி, மிக சிக்கலான ஒரு காரணத்திற்காக செய்திகளில் அடிபட ஆரம்பித்துள்ளது.
பூம்புகார் மீனவ கிராமத்தில், கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகிறார்கள் என்ற காரணத்தால் 7 குடும்பங்களை அந்த மீனவ கிராமத்தின் நிர்வாகம் ஒதுக்கி வைத்திருக்கிறது.
கடந்த 2014ஆம் ஆண்டு முதலே பெரும் எண்ணிக்கையிலான குடும்பங்கள் இப்படி ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தாலும், அந்த எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருப்பதால், ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பவர்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளனர். இதனால், அந்தப் பகுதியே பரபரப்பாகிக் கிடக்கிறது.
இந்து மத கடவுளை வணங்க வேண்டுமென வற்புறுத்தினார்களா?

இந்த ஏழு குடும்பங்ளில் ஒன்றைச் சேர்ந்த அல்லிமுத்துவின் கதை வேதனையையும் விசித்திரத்தையும் கொண்டது.
முதலில் இவரது குடும்பமே ஊரைவிட்டு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இவரது மனைவி ஊரோடு சேர்ந்துகொண்டிருக்கிறார். இதனால் இவர் தற்போது குடும்பத்திலிருந்தும் ஒதுக்கப்பட்டிருக்கிறார்.
"எனக்கும் என் மனைவிக்கும் நான்கு மகள்கள், ஒரு மகன். ஒரு கட்டத்தில் எங்கள் மகள்களுக்கு திருமணம் செய்யும் வயது வந்துவிட்டது. ஆனால், எங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்திருப்பதால், எங்கள் சமூகத்திற்குள் கல்யாணம் செய்ய முடியவில்லை.
ஊருக்குள் எங்களைச் சேர்க்க வேண்டுமென நாங்கள் சென்று கேட்டபோது, கணவன் - மனைவி இருவரும் இந்து மதக் கடவுளை வணங்க வேண்டும். நெற்றியில் திருநீறு அணிய வேண்டும். மேலும் ஊர் விதிக்கும் அபராதத்தையும் (ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை) செலுத்த வேண்டும் என்று சொன்னார்கள்.
நான் அதற்கு மறுத்துவிட்டேன். ஆனால், மகள்களுக்கு கல்யாணம் செய்ய வேண்டும் என்பதால் என் மனைவி அதை ஏற்றுக்கொண்டாள். அபராதமும் செலுத்தி, ஊரில் இணைந்துகொண்டுவிட்டார்.
நான் என் கடைசி மகளை மட்டும் அழைத்துக்கொண்டு தனியாக வந்துவிட்டேன். சில நாட்களுக்கு முன்பாக என் மூத்த மகள் அபிதாவுக்கு கல்யாணம் செய்தார்கள். அப்போது எனக்குத் தகவல்கூட தெரிவிக்கவில்லை," என்கிறார் அல்லிமுத்து.
ஊர் கட்டுப்பாட்டை ஏற்க மறுத்ததால் தாக்கப்பட்ட பெண்

அல்லிமுத்து ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதால், உள்ளூரில் உள்ள படகுத் துறையிலிருந்து இவர் மீன் பிடிக்கச் சென்றால் இவரது படகில் யாரும் பணியாற்ற வர மாட்டார்கள் என்று கூறுகிறார் அவர்.
ஆகவே, காரைக்கால், பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் வேலைக்குச் சென்று, அதில் கிடைக்கும் வருவாயில் அல்லிமுத்துவும் அவரது மகளும் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்தார்.
இதேபோல ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள பாப்பாத்தி என்பவர், ஊர் கட்டுப்பாட்டை ஏற்க மறுத்ததால், தனது குடும்பத்தினர் தாக்கப்பட்டதாகச் சொல்கிறார்.
"சில ஆண்டுகளுக்கு முன்பாக என்னுடைய மகனையும் கணவரையும் அக்கம்பக்கத்தினர் கடுமையாகத் தாக்கினார்கள். பிறகு, என்னுடைய சேலையையும் உறிந்தார்கள்.
காவல்துறையில் புகார் அளித்தும் பயன் இல்லை. இப்போது உள்ளூரில் ஏதும் செய்ய முடியாமல் வெளியூர் சென்று கருவாடு வாங்கி விற்று வருகிறேன். அங்கேயும் சென்று, எனக்கு யாரும் கருவாடு விற்கக்கூடாது என்கிறார்கள்," என்று தனது நிலைமையைக் கூறி அழுகிறார் பாப்பாத்தி.
ஊரைவிட்டு ஒதுக்கி வைத்திருப்பது மட்டுமல்லாமல், மாதம் இரண்டு முறை, ஒரு வாகனத்தில் ஒலிப்பெருக்கி ஒன்றை வைத்து ஒதுக்கி வைக்கப்பட்டவர்களின் குடும்பத்தின் பெயரைச் சொல்லி, அவர்களோடு யாரும் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதாகவும் இது தங்களுக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் சொல்கிறார்கள் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள்.
கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு செல்லத் தொடங்கிய குடும்பங்கள்

இதுபோல ஒதுக்கி வைக்கப்பட்ட முத்துச்செட்டி என்பவரின் மனைவி அஞ்சலி தேவிக்கு சில மாதங்களுக்கு முன்பாக திடீரென நெஞ்சுவலி வந்து தெருவிலேயே மயங்கி விழுந்திருக்கிறார். ஆனால், யாரும் அவரைத் தூக்கி முதலுதவி அளிக்கக்கூட முன்வரவில்லை என்கிறார் முத்துச்செட்டி.
பிறகு அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டு வீடு திரும்பினார்.
இந்த சில நாட்களுக்கு முன்பு, வாகனத்தில் ஒலிப்பெருக்கிகள் மூலம் தங்களது குடும்பத்தை ஒதுக்கி வைக்க வேண்டுமென்பது வலியுறுத்தப்பட்டதால், அதில் பயந்துபோய் அவர் மயங்கி விழுந்துவிட்டதாகவும் பல நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தே வீடு திரும்பியிருப்பதாகவும் கூறுகிறார் முத்துச் செட்டி.
பூம்புகார் கிராமத்தைப் பொறுத்தவரை, சுமார் 1300 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் இந்து மதத்தைப் பின்பற்றுபவர்கள். இவர்களில் பலரும் உறவினர்களும்கூட.
தற்போது உச்சமடைந்திருக்கும் இந்தப் பிரச்னையின் தொடக்கம் 2014ஆம் ஆண்டில் ஏற்பட்டது. அந்தத் தருணத்தில் இந்த மீனவ கிராமத்தைச் சேர்ந்த சுமார் 300 குடும்பங்கள் கிறிஸ்தவ மதத்தை நோக்கி நகர்ந்தனர். அதிகாரபூர்வமாக மதம் மாறவில்லை என்றாலும், அந்தப் பகுதியில் அமைந்திருக்கும் பல்வேறு தேவாலயங்களுக்கும் கிறிஸ்தவ வழிபாட்டுக் கூடங்களுக்கும் செல்ல ஆரம்பித்தனர்.
இந்து மதத்திற்கு திரும்பாத மக்களுக்கு என்ன நடந்தது?

இது மீனவ கிராமத்திற்குள் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த ஊரின் நிர்வாகம் கூடி இதுபோல சில குடும்பத்தினர் மட்டும் வேறு மதத்தை நோக்கிச் செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
அப்படி கிறிஸ்தவ மதத்தை நோக்கிச் சென்றவர்கள் மீண்டும் தங்கள் மத கடவுள்களையே வணங்க வேண்டுமென்றும் அதற்கு அடையாளமாக தாம் இத்தனை நாட்களாக வணங்கி வந்த கோவிலுக்குச் சென்று திருநீறு அணிய வேண்டுமென்றும் கூறினர். அபராதமும் விதிக்கப்பட்டது. இதை மீறுபவர்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்படுவார்கள் எனவும் ஊர் நிர்வாகம் கூறியது.
அந்த 300 குடும்பங்களில் பல குடும்பங்கள் படிப்படியாக இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டன. 22 குடும்பங்கள் மட்டும் தொடர்ந்து கிறிஸ்தவ மதத்திலேயே இருந்த நிலையில், அந்தக் குடும்பத்தினர் பல வகையிலும் ஒதுக்கப்பட்டதாகவும், சில குடும்பத்தினர் தாக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. நெருங்கிய உறவினர்களின் மரணத்திற்குக்கூட வரவிடாமல் தடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இப்படி ஒதுக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து வாங்கிய வலைகள் எரிக்கப்பட்டதாகவும் மீன்பிடித் தொழிலில் வேலை செய்ய முடியாமல் தடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதற்குப் பிறகு 15 குடும்பத்தினர், கிராம நிர்வாகத்தினர் சொன்னதை ஏற்றுக்கொண்டு இந்து மதத்திற்கே திரும்பிவிட்டனர்.
நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகம்

இதையடுத்து தற்போது அந்த கிராமத்தில் 7 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் கிறிஸ்தவர்களாக இருந்து வருகின்றனர்.
இந்த ஏழு குடும்பத்தினரும் தொடர்ந்து ஒடுக்கப்படும் நிலையில் அவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் இதுதொடர்பாக முறையிட்டும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என கிறிஸ்தவர்கள் தரப்பு குற்றம் சாட்டுகிறது.
கடந்த இரண்டு மாதங்களாக இந்தப் பிரச்னை தீவிரமடைந்திருக்கும் நிலையில், இதுதொடர்பாக தாசில்தார் தலைமையில் அமைதிக் கூட்டம் நடைபெற்றும் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படவில்லை.
இந்நிலையில் கடந்த ஜூலை 3ஆம் தேதி ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட அல்லிமுத்து, தினேஷ் உள்ளிட்ட 7 குடும்பங்களைச் சேர்ந்த 27 பேர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த விவகாரம் தொடர்பாகப் புகார் அளித்தனர்.
அதையடுத்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இவர்களோடு பேச்சு வார்த்தை நடத்தினார். அதையடுத்து பூம்புகார் காவல் நிலையத்தில் இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு இந்த ஏழு குடும்பத்தினரும் ஜூலை 10ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்து மதத்திற்கு திரும்பும் வரை ஏற்கப்போவதில்லை - கிராம நிர்வாகம்

இது தொடர்பாக கிராம நிர்வாகத்தினர் தரப்பு என்ன சொல்கிறது?
ஏழு குடும்பத்தினரை ஒதுக்கி வைத்திருக்கும் பூம்புகார் மீனவர் கிராம நிர்வாகத்தின் நிர்வாகிகளைக் கேட்டபோது, "அவர்கள் எங்களுக்குப் பிடிக்காத காரியத்தைச் செய்வதால், நாங்கள் அவர்களிடமிருந்து விலகியிருக்கிறோம். மற்றபடி அவர்கள் சொல்வது எல்லாம் தவறான தகவல்கள்," என்பதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்.
பூம்புகார் கிராமத்தைப் பொறுத்தவரை சுமார் 1,300 மீனவர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. மொத்தமாக ஏழாயிரம் பேர் வசிக்கின்றனர். அரசின் உள்ளாட்சி அமைப்பு தவிர, மீனவர் குடும்பங்களுக்கு எனத் தனி நிர்வாகமும் இருந்து வருகிறது. நாட்டார், காரியதரிசி என 12 நிர்வாகிகளைக் கொண்ட ஓர் அமைப்பின் மூலம் இந்த மீனவ கிராமம் செயல்பட்டு வருகிறது.
இவர்களின் சார்பில் அந்த கிராமத்தின் நாட்டாரான ஆர். ராஜேந்திரன் பிபிசியிடம் பேசினார்.
"எங்கள் தரப்பிலிருந்து யாரையும் ஒதுக்கி வைக்கவில்லை. மீன்பிடி தடைக் காலத்தில் வழங்கப்படும் நிதியை நாங்கள் தடுப்பதில்லை. ரேஷனில் பொருட்கள் வாங்குகிறார்கள். அவர்கள் எல்லோரையும் மதமாற்றம் செய்ய நினைக்கிறார்கள். அதை நாங்கள் ஏற்கவில்லை, அவ்வளவுதான். அவர்கள் வேலையை அவர்கள் பார்க்கிறார்கள். எங்கள் வேலையை நாங்கள் பார்க்கிறோம்.
அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு வாருங்கள் என்று அழைப்பதாலும் எங்கள் கடவுள்களை மோசமாகக் குறிப்பிடுவதாலும் அவர்களோடு நாங்கள் பேசுவதில்லை. நாங்கள் செய்யும் காரியத்தால் பயப்படுவதாகக் கூறுவது தவறான தகவல். அவர் மதம் மாறியது இப்போதுதான் நடந்திருந்தால், நாங்கள் அவர்களை அச்சுறுத்துவதாகக் கூறலாம். அவர்கள் மதம் மாறி 10 ஆண்டுகள் ஆகின்றன. அவர்களும் கிராமத்திற்குள்ளேயேதான் வசிக்கிறார்கள்," என்று கூறுகிறார்.

மேலும், "இப்போது அவர்கள் குடும்பத்தில் உள்ள குழந்தைகள் வளர்ந்துவிட்டதால், திருமணங்களை நடக்க விரும்பி, இப்போது எங்களோடு சேர வேண்டுமென நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் எங்கள் வழிக்கு வராவிட்டால், நாங்கள் எதற்காக அவர்களைச் சேர்க்க வேண்டும்?
இந்த கிராமத்தில் மொத்தமாக ஏழாயிரம் பேர் இருக்கிறோம். அவர்களுக்காக இறங்கிப் போனால், எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்கும். ஊரின் கட்டுப்பாட்டுக்காகத்தான் அவர்கள் வாழ வேண்டும். அவர்களுக்காக நாங்கள் வாழ முடியாது," என்கிறார் அவர்.
மதம் மாறியவர்களைத் தாக்கியதாகச் சொல்லப்படுவது குறித்தும் ஒரு பெண்ணின் ஆடைகளை அவிழ்க்க முயன்றதாகக் கூறப்படுவது குறித்தும் கேட்டபோது, அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்கிறார் ராஜேந்திரன். அவர்களை யாரும் தொடவே இல்லை என்கிறார்.
"ஒரு பெண்ணை அப்படியெல்லாம் செய்தால் காவல்துறை சும்மா விடுவார்களா? யாரையும் நாங்கள் தாக்கவோ, மானபங்கப்படுத்தவோ இல்லை. இருந்தபோதும் எங்கள் மீது பொய்ப் புகார் கொடுத்திருக்கிறார்கள். எங்களில் ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது," என்கிறார் ஆர். ராஜேந்திரன்.
இந்த ஏழு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மீன் பிடிக்கச் செல்வதையோ, வேறு எதையும் செய்வதையோ தாங்கள் தடுக்கவில்லை என்கிறார் அவர். ஆனால், தங்கள் கோவிலுக்கு வந்து, தங்கள் கடவுளை ஏற்கும்வரை அவர்களோடு பழகப் போவதில்லை என்பதையும் உறுதியாகச் சொல்கிறார்.
ஒருவருக்கொருவர் பேசாததற்கு மாவட்ட நிர்வாகம் என்ன செய்யும் ? - மாவட்ட ஆட்சியர்

இந்த ஊரின் ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கும் சசிகுமாரிடமும் இந்த விவகாரம் சென்றிருக்கிறது. ஆனால், முடிவு ஏதும் எட்டப்படவில்லை.
"இரு தரப்பிடமும் பேசிப் பார்த்துவிட்டேன். ஒவ்வொருவரும் அவரவர் முடிவில் உறுதியாக இருக்கிறார்கள். இந்த நிலையில் நான் இதைப் பற்றி எதையும் பேச விரும்பவில்லை" என்கிறார் சசிகுமார்.
மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் இதைப் பற்றிக் கேட்டபோது, இது மிகவும் சிக்கலான பிரச்சனை; வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார்.
"இவர்கள் எல்லோருமே ஒருவருக்கு ஒருவர் உறவினர்கள். ஒரு கடையில் சிலருக்கு மட்டும் பொருளைக் கொடுக்க மறுத்தால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், பேசவில்லை என்றால் என்ன செய்ய முடியும்?
கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள் குடும்பத்திலிருந்து பெண் எடுக்க மற்றொரு தரப்பினர் மறுக்கிறார்கள். இது மாவட்ட நிர்வாகத்தால் தலையிட முடியாத பிரச்னையாக உள்ளது.
பல முறை அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தோம். அதில் எந்த முடிவும் எட்ட முடியவில்லை. ஒதுக்கப்பட்ட கிறிஸ்தவர்கள், கிராம நிர்வாகத்தைச் சேர்ந்த ஏழு பேர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்கள்.
அந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், தற்போது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ளது. இனி வாக்குமூலங்கள் பெறப்பட்டு, நீதிமன்றரீதியாக இந்த விவகாரத்தில் தொடர் நடவடிக்கைகள் இருக்கும்," என்கிறார் மகாபாரதி.
ஆனால், எங்கள் மதத்தோடு எங்களை ஏற்க வேண்டுமென ஒரு தரப்பும், மதத்தைக் கைவிட்டு வந்தால்தான் ஏற்க முடியுமென மற்றொரு தரப்பும் பிடிவாதமாக இருக்கும் நிலையில், இந்தப் பிரச்னைக்கு இப்போதைக்கு தீர்வு கிடைப்பதாகத் தெரியவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












