என்.எல்.சி முற்றுகை போராட்டத்தின்போது கலவரத்தில் ஈடுபட்ட பாமகவினர் 28 பேர் கைது - என்ன நடந்தது?

நெய்வேலியில் என்.எல்.சி.,க்கு எதிரான போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சுமார் நான்கு மணி நேரத்திற்குப் பிறகு மாலை விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையில், இன்று என்.எல்.சி. தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பயிரிடப்பட்ட நிலத்தில் புல்டோசர்களை விட்டு கால்வாய் தோண்டும் பணிகளை பார்க்கும்போது அழுகை வந்ததாக நீதிபதி தண்டபாணி வேதனை தெரிவித்தார்.
என்.எல்.சி நிர்வாகத்தைக் கண்டித்து இன்று கடலூரில் நடந்த போராட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து பாமக தொண்டர்கள் சிலர் வஜ்ரா வாகனம் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்தக் கலவரத்தின்போது வன்முறையில் ஈடுபட்ட 28 பேரை நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் கைது செய்துள்ளனர்.
பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த இவர்கள் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொலை முயற்சி, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் போன்ற 10 பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு சிறுவர்கள் உட்பட 28 பேரும் வன்முறையில் ஈடுபட்டதாக 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கலவரத்தின்போது பாமகவினர் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி, தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதற்கிடையே அங்கு ஏற்பட்டுள்ள பிரச்னையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
நிலைமை குறித்து நேரில் ஆய்வு செய்ய தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் நெய்வேலி புறப்பட்டு சென்றார். "போலீசார் மீதும், வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்; 3000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்," என்றார் அவர்.
என்ன நடந்தது ?

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி., நிறுவனம் இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்கான பணியை மேற்கொண்டு வருகிறது. இதற்காக சேத்தியாதோப்பு அருகே கத்தாழை, கரிவட்டி, ஆதனூர், வளையமாதேவி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்கனவே கையகப்படுத்திய விவசாய நிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணிகளில் என்.எல்.சி கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகிறது. அங்கு பயிர் செய்யப்பட்ட வயல்களில் இராட்சத பொக்லைன் இயந்திரங்கள் மூலம் பணி விரிவாக நடைபெற்று வருகிறது.
தற்போது அங்கு முற்றிய நெற்பயிற்களை அழித்து கால்வாய் வெட்டுவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு அதிமுக,பாமக உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே என்.எல்.சி விரிவாக்க பணிகளை கண்டித்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று (ஜுலை 28) முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
மண்ணையும் மனிதனையும் காப்பாற்றும் போராட்டம்: அன்புமணி ராமதாஸ் பேச்சு

நெய்வேலி என்.எல்.சி. நுழைவு வாயிலில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பேசிய அன்புமணி, “300 கிராமங்களில் 300 கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு விளைநிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என்ற தீர்மானம் போடப்பட்டது. ஆனால் தற்போது காவல் துறையை ஏவி பொக்லைன் இயந்திரம் வைத்து நிலத்தை கையகப்படுத்தி வருகின்றனர். இன்றைய போராட்டத்தால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது மண்ணையும் மனிதனையும் காப்பாற்றும் போராட்டம்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நிலக்கரியை எரித்து மக்களின் உடல்நிலையை பாதிக்க காரணம் என்.எல்.சி தான். மூன்று தலைமுறைகள் நாசமாக்கப்பட்டுள்ளது. மீண்டும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நாளை தொடங்கப்பட்டால் ஒட்டுமொத்த மாவட்டமும் கூடி சாலை மறியல் போரட்டம் நடத்தப்படும்” என எச்சரித்தார்.
இந்த முற்றுகை போராட்டத்தை தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார்

அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து காவல்துறையினர் மீது போராட்டக்காரர்கள் கற்களை எறிந்தனர். அவர்களை விரட்ட போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மேலும் தண்ணீர் பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர். இந்த கலவரத்தில் போலீசார் ஒருவரின் மண்டை கல்வீச்சில் காயம் அடைந்தது. அதேபோல் நான்கு போலீஸ் வாகனங்களும் சேதமடைந்துள்ளன.
தொடர்ந்து, போலீசார் கலவரத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். முன்னதாக முற்றுகை போராட்டம் நடைபெறுவதையொட்டி அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.
என்.எல்.சி.-யில் பா.ம.க. தலைவர் அன்புமணி கைது செய்யப்பட்டதை அடுத்து கலவரம் கட்டுக்குள் வந்தது. என்.எல்.சி. நுழைவுவாயிலில் வன்முறை நடத்த இடத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் ஆய்வு செய்தார். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். அன்புமணி ராமதாஸ் அவர்கள் கைது கண்டித்து உளுந்தூர்பேட்டை, திருப்பத்தூர் பகுதியில் பாமகவினர் சாலை மறியல் ஈடுபட்டனர்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் - வருந்திய நீதிபதி

நெய்வேலியில் நெற்பயிரை புல்டோசர் கொண்டு அழித்தது குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், பயிரை அறுவடை செய்யும் வரை இரண்டு மாதங்கள் காத்திருக்க முடியாதா எனக் கேள்வி எழுப்பியுள்ளது.
என்.எல்.சி நிர்வாகத்துக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பிரச்னை தொடர்பாக தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதிக்க வலியுறுத்தி, என்.எல்.சி. தரப்பில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பாக விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, என்.எல்.சி நிறுவனம் மற்றும் அங்கு பணிக்குச் செல்லும் ஊழியர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் கடலூர் மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும், இதுதொடர்பாக ஆகஸ்ட் 3ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவுஸ உத்தரவிட்டு வழக்கின் விசாரணையைத் தள்ளி வைத்துள்ளார்.
வழக்கு விசாரணையின்போது, பயிரிடப்பட்ட நிலத்தில் புல்டோசர்களை விட்டு கால்வாய் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதைப் பார்க்கும்போது கண்ணீர் வந்ததாக நீதிபதி வேதனை தெரிவித்தார்.
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் எனக் கூறிய வள்ளலார் பிறந்த ஊருக்கு அருகிலே பயிர்கள் அழிக்கப்படுவதைக் காண முடியவில்லை என்றும், நிலத்தை எடுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், பயிர்கள் அழிக்கப்படுவதை ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












