மனோஜ்: பெண்ணாகப் பிறந்து 17 வயதில் 'ஆணாக' உணர்வதை கூறியதும் கிராமத்தில் என்ன செய்தனர் தெரியுமா?

தன்பாலின தம்பதி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், திவ்யா ஆர்யா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

மனோஜ் பிறக்கும்போது பெண்ணாக அடையாளப்படுத்தப்பட்டவர். 17 வயதில் மனோஜ் தனது பெற்றோரிடம் சென்று தன்னை ஆணாக உணர்வதாகவும் ஒரு பெண்ணை விரும்புவதாகவும் கூறியபோது அவர்களது வீட்டில் களேபரமே நடந்துவிட்டது.

தனது விருப்பத்தை பெற்றோர் ஏற்க மறுத்து கை, கால்களை கட்டிப்போட்டு கடுமையாக தாக்கியதாக மனோஜ் கூறுகிறார். அவரை வீட்டின் ஒரு மூலையில் அடைத்து வைத்ததோடு, `கொலை செய்துவிடுவேன்` என்றும் அவரது அப்பா மிரட்டியுள்ளார்.

"அவர்கள் என் குடும்பம்தானே! எனவே நான் எந்த பாலினமாக இருந்தாலும் ஏற்றுகொள்வார்கள் என்று நினைத்தேன். ஆனால், அவர்களின் கௌரவத்துக்காக என்னை கொல்லவும் என் பெற்றோர் துணிந்தனர். நான் நினைத்தைவிட கடுமையான வன்முறை என் மீது பிரயோகிக்கப்பட்டது. " என்கிறார் மனோஜ்.

இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள ஒரு பெண், தன்னை திருநங்கையாக அடையாளப்படுத்திக் கொள்வதற்கான உரிமையைக் கோர விரும்புவது அவருக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

தன்பாலின திருமணம்
படக்குறிப்பு, இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள ஒரு பெண், தன்னை திருநங்கையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் உரிமையைக் கோர விரும்புவது அவருக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்

பள்ளிப் படிப்பு வயதிலேயே திருமணம்

இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களில் ஒன்றான பிகாரைச் சேர்ந்த மனோஜ் பள்ளி படிப்பு படித்துக்கொண்டிருந்தபோதே பள்ளியில் இருந்து நிறுத்தப்பட்டு அவரைவிட 2 மடங்கு வயதில் மூத்த ஆண் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார்.

"என் உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால் என் காதலி எல்லாவற்றிலும் எனக்கு ஆதரவாக நின்றார். வாழ்க்கையின் எந்த சூழலிலும் அவர் என்னை விட்டுக்கொடுக்கவில்லை, நான் தற்போது உயிரோடு இருப்பதற்கும் நாங்கள் இருவரும் ஒன்றாக இருப்பதற்கும் இதுதான் காரணம்," என்று அவர் கூறுகிறார்.

தற்போது, 22 வயதாகும் மனோஜ் தனது காதலி ராஷ்மியுடன் ஒரு பெரிய நகரத்தில் ஒளிந்து வாழ்ந்து வருகிறார். திருமணம் செய்து கொள்வதற்கான சட்டப்பூர்வ உரிமை கோரிய மனு மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவர்கள் இருவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

தன்பாலின ஈர்ப்பு குற்றமாகாது என்று கடந்த 2018ஆம் ஆண்டு இந்தியாவின் உச்சநீதிமன்மன்றம் தீர்ப்பளித்தது. எனினும் தன்பாலின திருமணங்கள் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட 21 மனுக்களை இந்த ஆண்டில் உச்சநீதிமன்றம் விசாரித்துள்ளது. இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருநர்களுக்கு திருமணம் செய்துகொள்வதற்கான உரிமையை வழங்குவது என்பது சமத்துவம் தொடர்பானது என்று பலர் கருதுகின்றனர். அதேநேரத்தில் இரண்டு ஜோடிகள், பெண்ணிய ஆர்வலர்களுடன் மனோஜ் மற்றும் ராஷ்மி தாக்கல் செய்துள்ள மனு, திருமணம் என்பது அவர்களின் சொந்த குடும்பங்களால் ஏற்படும் கொடூரமான உடல் மற்றும் மன வன்முறையிலிருந்து தப்புவதற்கான வழி என்று வலியுறுத்துகிறது.

"எங்கள் உறவுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் மட்டுமே இந்த பயந்து வாழும் வாழ்க்கையிலிருந்து வெளியேற ஒரே வழி" என்று மனோஜ் கூறுகிறார்.

கடந்த 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனர். ஆனால் அவர்களின் எண்ணிக்கை குறைத்து மதிப்பிடப்பட்டது என்று ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

2014-ல் உச்ச நீதிமன்றம் திருநர்களை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து தீர்ப்பளித்தது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் ஆகியவற்றில் பாகுபாடு காட்டுவதைத் தடுக்கும் விதமாகவும் அவர்களுக்கு எதிரான உடல் , பாலியல், உணர்ச்சி மற்றும் பொருளாதார ரீதியிலான துஷ்பிரயோகங்களை குற்றமாக்கும் விதமாகவும் இந்தியா சட்டம் நிறைவேற்றியது.

ஆனாலும் திருநர்களுக்கு எதிராக குடும்பங்களில் இருந்து வரும் வன்முறை ஒரு சிக்கல் நிறைந்த சவாலாக இருக்கிறது.

தன்பாலின திருமணம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, திருநர்களுக்கு எதிராக குடும்பங்களில் இருந்து வரும் வன்முறை ஒரு சிக்கல் நிறைந்த சவாலாக இருக்கிறது

குடும்ப வன்முறை

பெரும்பாலான சட்டங்களும் சமூகமும் ரத்த பந்தம், திருமணம் அல்லது தத்தெடுப்பு மூலம் உண்டாகும் குடும்பத்தை தனிநபர்களுக்கு பாதுகாப்பான இடமாக கருதுகின்றன என்று மும்பையைச் சேர்ந்த பெண்ணிய வழக்கறிஞர் வீனா கவுடா கூறுகிறார்.

" குடும்பத்தில் நிகழும் வன்முறை என்பது நமக்கு தெரியாத ஒன்றில்லை. மனைவிக்கு எதிரானதாகவோ, குழந்தைகளுக்கு எதிரானதாகவோ, திருநர்களுக்கு எதிரானதாகவோ இருக்கலாம். ஆனால் அது உணர்வுபூர்வமாக கண்ணுக்கு தெரியாததாக மாற்றப்படுகிறது, ஏனெனில் அதைப் பார்த்து ஒப்புக்கொள்வது 'குடும்பத்தின்' அமைப்பையே கேள்விக்குள்ளாக்குவதாகும்," என்று அவர் தெரிவித்தார்.

ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி, வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் அரசாங்க சமூக சேவகர் ஆகியோர் அடங்கிய குழுவில் வீனாவும் ஒருவராக இருந்தார். வழக்கு தொடர்பான பொது விசாரணையில், 31 பால் புதுமையினர் மற்றும் திருநர்கள் எதிர்கொண்ட குடும்ப வன்முறை பற்றிய விரிவான சாட்சியங்களை ரகசிய அறையில் வைத்து இந்த குழு கேட்டறிந்தது.

இதில் தெரியவந்தவை தொடர்பாக இந்த ஆண்டு ஏப்ரலில் 'அப்னோ கா பஹுத் லக்தா ஹை (நம்மை சேர்ந்தவர்களே காயப்படுத்துவது அதிகம் வலியை தருகிறது) என்ற தலைப்பில் ஒரு அறிக்கையாக வெளியிடப்பட்டது. அதில், பால்புதுமையினருக்கு அவர்களின் சொந்த குடும்பத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.

"சாட்சியம் அளித்தவர்கள் எதிர்கொள்ளும் வன்முறையின் தன்மையைப் பார்க்கும்போது, வன்முறையிலிருந்து விடுபட்டு தங்கள் சொந்தக் குடும்பத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு இல்லை என்றால், அது அவர்களின் வாழ்வுக்கும், கண்ணியத்துடன் வாழ்வதற்குமான உரிமையை மறுப்பதற்குச் சமம். திருமணம் செய்வதற்கான உரிமை இந்த புதிய குடும்பத்தை உருவாக்குவதற்கும் அதை மறுவரையறை செய்வதற்கும் ஒரு வழியாகும்." என்கிறார் வீனா கவுடா.

தனக்கு நடந்த கட்டாயத் திருமணத்துக்கு பிறகு, சில மாதங்கள் கழித்து ராஷ்மியுடன் மனோஜ் மீண்டும் பழக முயன்றார். ஆனால், இதை கண்டுபிடித்த அவரது 'துணைவர்' அவர்கள் இருவரையும் பாலியல் வன்கொடுமை செய்துவிடுவதாக அச்சுறுத்தியுள்ளார்.

தன்பாலின திருமணம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தனக்கு நடந்த கட்டாயத் திருமணத்துக்கு பிறகு, சில மாதங்கள் கழித்து ராஷ்மியுடன் மனோஜ் மீண்டும் பழக முயன்றார். ஆனால், இதை கண்டுபிடித்த அவரது `துணைவர்` அவர்கள் இருவரையும் பாலியல் வன்கொடுமை செய்துவிடுவதாக அச்சுறுத்தியுள்ளார்

ஒருமுறை இருவரும் வீட்டை விட்டு தப்பிச் செல்ல முடிவெடுத்து, அருகில் உள்ள ரயில் நிலையத்துக்கு சென்றனர். அங்கிருந்து ரயிலில் தப்பிச் செல்லலாம் என்று முயன்றபோது அவர்களின் குடும்பத்தினரிடம் சிக்கிக்கொண்டனர். தங்களை வீட்டுக்கு அழைத்து சென்ற குடும்பத்தினர் கடுமையாக தாக்கியதாக மனோஜ் நினைவுக் கூர்கிறார்.

"அவர் ஒரு 'தற்கொலை கடிதத்தில்' கையெழுத்திடும்படி கட்டாயப்படுத்தப்பட்டார், அது அவரது மரணத்திற்கு என்னைக் குற்றம் சாட்டுகிறது," என்று ராஷ்மி விவரிக்கிறார்.

"அவர் மரணத்துக்கு நான் தான் காரணம் என்று எழுதப்பட்டிருந்த ஒரு `தற்கொலை கடிதத்தில்` கையெழுத்திடும்படி மனோஜை அவரது குடும்பத்தினர் கட்டாயப்படுத்தினர் " என்று ராஷ்மி விவரிக்கிறார்.

மனோஜ் மீண்டும் வீட்டில் பூட்டி வைக்கப்பட்டார், அவரிடம் இருந்து மொபைல் போன் பறிக்கப்பட்டது.

இந்த சூழலில் ஒரு பால்புதுமையினர் பெண்ணிய குழுவுவையும் உள்ளூர் காவல்துறையின் மகளிர் பிரிவையும் ராஷ்மி தொடர்புக்கொண்டு பேசினார். அவர்களின் உதவியால், மனோஜின் குடும்பத்தினரிடம் இருந்து அவர்கள் பாதுகாப்பாக தப்பினர்.

பின்னர், திருநர்களுக்கான அரசாங்க தங்குமிடத்தில் அவர்கள் தங்கினர். எனினும், ராஷ்மி திருநர் இல்லை என்பதால் அங்கிருந்து அவர்கள் வெளியேற வேண்டியிருந்தது.

தன்பாலின திருமணம்
படக்குறிப்பு, இந்தியாவில் கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, திருநர்களின் கல்வியறிவு விகிதம் 49.76%

தப்பித்து பிழைத்தல்

இதற்கு மத்தியில் மனோஜுக்கும் விவகாரத்து கிடைத்தது. ஆனால் வன்முறை குடும்பங்களில் இருந்து தப்பித்து புதிய வாழ்க்கையை கட்டியெழுப்ப உதவும் ஆதரவு அமைப்புகள் குறைவாகவே இருந்தன.

20 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு இந்தியாவில் முதன்முதலில் தொடங்கப்பட்ட லெஸ்பியன்-இருபாலின-பால்புதுமை மக்கள் உரிமைக் கூட்டான Sappho for Equality இன் நிர்வாக அறங்காவலராக கோயல் கோஷ் உள்ளார். புகழ்பெற்ற கிரேக்க கவிஞர் சாப்போவின் பெயரில் இருந்து தனது அமைப்பிற்கு இந்த பெயரை அவர் தேர்வு செய்துள்ளார்.

2020 ஆம் ஆண்டின் ஒரு நாளில் , கிழக்கு இந்தியாவில் உள்ள ஒரு நகரத்திற்கு ஓடிப்போய், நடைப்பாதையில் தூங்கவேண்டிய சூழலில் இருந்த பால்புதுமையினர் ஜோடி பற்றி தங்களின் ஹெல்ப்லைன் எண்ணுக்கு அழைப்பு வந்தது குறித்து கோயல் கோஷ் இன்றும் நினைவில் வைத்துள்ளார்.

"நாங்கள் ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து அவர்களை அங்கே தங்கவைத்தோம். இதன் மூலம் அவர்கள் மூன்று மாதத்திற்கு தங்குவதற்கு தற்காலிக தங்குமிடம் கிடைத்தது. மேலும் அவர்கள் ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்குவதற்கான ஒரே வழியான வேலை குறித்தும் சிந்திக்க முடிந்தது" என்று கோயல் கூறுகிறார்.

சமூக இழிவு, குடும்பத்தினரால் ஏற்படும் வன்முறை அச்சுறுத்தல், கல்வி கற்கும் வாய்ப்பு பறிபோதல், மற்றும் கட்டாய திருமணம் என்பதைத் தாண்டி பல திருநர்களும் தங்களுக்கான நிலையான வேலைவாய்ப்பைக் கண்டுபிடிக்க போராடுகிறார்கள்.

இந்தியாவில் கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, திருநர்களின் கல்வியறிவு விகிதம் 49.76% . இது நாட்டின் கல்வியறிவு விகிதமான 74.04% ஐ விட மிகக் குறைவு.

2017 ஆம் ஆண்டில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் 900 திருநங்கைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின்படி, 96% பேருக்கு வேலை மறுக்கப்பட்டது அல்லது பிச்சையெடுக்கும் மற்றும் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வீட்டைவிட்டு வெளியேறும் தம்பதிகள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதற்காக சாப்போ அமைப்பு ஒரு தங்குமிடம் அமைத்துள்ளது . கடந்த இரண்டு ஆண்டுகளில் 35 தம்பதிகள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தன்பாலின திருமணம்
படக்குறிப்பு, கோயல் கோஷ்

இது கடினமான வேலையாக இருக்கிறது. கோயலுக்கு தினமும் இதுபோன்று உதவுமாறு மூன்று முதல் ஐந்து அழைப்புகள் வருவதோடு, தீர்வுகளைக் கண்டறிய வழக்கறிஞர்களின் ஆதரவு குழுக்களையும் அவர் தொடர்ந்து தொடர்பு கொள்கிறார்.

"எனக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. கிராமங்களில் கும்பல்களை எதிர்கொண்டுள்ளேன். சொல்லப்போனால், காவல் நிலையங்களிலும் விரோதப் போக்கை நான் எதிர்கொண்டேன். நான் எனது பால்புதுமை அடையாளத்தை வெளிப்படையாக வெளிப்படுத்துகிறேன். அவர்களால் அதை சமாளிக்க முடியவில்லை " என்று கோயல் கூறுகிறார்.

ஒருமுறை திருநரான ஆசிஃப் மற்றும் அவரது காதலி சமீனா ஆகியோர் கோயலை தொடர்புகொண்டபோது, கிழக்கு இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் அமைந்துள்ள காவல் நிலையத்தில் அவர்கள் இருந்தனர்.

காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் தன்னை அயோக்கியர் என்று கூறியதோடு, தனது உறவு குறித்து அவர் வெளிப்படையாக பேசியதற்கு பதிலாக செத்துபோய் இருக்கலாம் என்று கூறியதாக சமீனா தெரிவிக்கிறார்.

இருவருமே சிறுவயதில் நண்பர்களாக இருந்து பின்னர் காதலர்களாக மாறியவர்கள். ஏற்கனவே, இருமுறை வீட்டில் இருந்து தப்பிக்க முயன்று மாட்டிக்கொண்டனர். தற்போது மூன்றாவது முறை மட்டுமல்ல கடைசி வாய்ப்பு என்று கருதிய அவர்கள் தங்களுக்கு ஆதரவு தேவை என்று எண்ணினர்.

"கோயல் வந்த பிறகுதான் காவல்துறையினர் எங்களிடம் மோசமாக நடந்துகொள்வது நின்றது. ஒரு மூத்த அதிகாரி அவருடைய ஜூனியர்களை பொது ஊழியர்களின் தப்பெண்ணம் மற்றும் சட்டங்களின் அறியாமைக்காகத் திட்டினார்," என்கிறார் சமினா.

இப்போது ஒரு பெரிய நகரத்தில் பாதுகாப்பாக இருவரும் வாழ்கின்றனர். உச்ச நீதிமன்றத்தில் மனோஜ் மற்றும் ராஷ்மியுடன் மனு தாக்கல் செய்த இணை மனுதாரர்கள் இவர்கள்.

"நாங்கள் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஆனால், எங்கள் குடும்பத்திடமும் சமூகத்திடமும் இருந்து தப்பிக்கவும் காவல் நிலையத்தால் விதிக்கப்படும் அபராதங்கள் குறித்து பயப்படாமல் இருக்கவும் திருமண சான்றிதழ் என்ற காகிதம் எங்களுக்கு அவசியமாக இருக்கிறது " என்று ஆசிஃப் கூறுகிறார்.

"உச்ச நீதிமன்றம் எங்களுக்கு உதவவில்லை என்றால், நாங்கள் இறக்க நேரிடலாம். நாங்கள் எப்படி இருக்கிறோமோ அப்படி ஏற்றுக்கொள்ளப்பட மாட்டோம். தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்போம். எங்களை பிரித்துவிடுவார்களோ என்ற பயத்துடனே எப்போதும் இருப்போம் " என்று அவர் கூறுகிறார்.

மனுதாரர்களின் அடையாளத்தை பாதுகாக்க அவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: