மனிதப் புதைகுழிகள்: இலங்கை போரில் சரணடைந்தவர்கள் கொன்று புதைப்பா? சர்வதேச விசாரணை கோரும் தமிழர்கள்

- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று(ஜுலை 28) முழு கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி விவகாரத்தில் நீதியை பெற்றுத் தரக் கோரி இந்த முழு கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டம் காரணம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, முல்லைத்தீவு மனிதப் புதைக்குழி உள்ளிட்ட நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைக்குழிகளுக்கு நீதியைப் பெற்றுத் தருமாறு வலியுறுத்தி, முல்லைத்தீவில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடத்தப்பட்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மதகுருமார், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல்வாதிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டிருந்தனர்.
முல்லைத்தீவு மனிதப் புதைக்குழி
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த மாதம் 29 ஆம் தேதி குடிநீர் குழாய் பொருத்தும் நடவடிக்கைகளுக்காக பிரதான வீதியோரத்தில் குழி தோண்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன்போது, சில மனித எச்சங்கள் மற்றும் பெண்களின் உள்ளாடைகள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
அத்துடன், குறித்த இடத்திலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்புக்கு சொந்தமான சீருடையை ஒத்ததான சில ஆடைகளும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து, இறுதிக் கட்ட போரின் போது ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் போன தமது உறவுகளே, கொலை செய்யப்பட்டு, இவ்வாறு புதைக்கப்பட்டிருக்கலாம் என காணாமல் போனோரின் உறவினர்கள் குற்றஞ்சுமத்தியிருந்தனர்.
எனினும், தமிழர் தரப்பின் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை இலங்கை ராணுவம் நிராகரித்திருந்தது.
இந்த நிலையில், குறித்த பகுதியில் மனித புதைக்குழியொன்று உள்ளமையை உறுதிப்படுத்தும் நோக்கில் கடந்த 6ம் தேதி முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்த அகழ்வு பணிகளின் ஊடாக, குறித்த இடத்தில் மனிதப் புதைக்குழியொன்று காணப்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, முல்லைத்தீவு நீதவான் தலைமையில் கடந்த 13ம் தேதி விசேட கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் காணாமல் போனோரின் உறவினர்கள், அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், சட்ட மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்துக்கொண்டிருந்தனர்.
குறித்த பகுதியில் அகழ்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பிலான அறிக்கையொன்றை சமர்பிக்குமாறு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த நிலையில், அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கு சர்வதேச தலையீடு அத்தியாவசியமானது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இதை முன்னிலைப்படுத்தியே, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

''வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பத்தினர் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றோம். அண்மை காலத்தில் கொக்குத் தொடுவாய் பகுதியில் புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறுதி யுத்தத்தின் போது பிடிப்பட்ட பிள்ளைகள், சரணடைந்த பிள்ளைகளை அங்கே புதைத்திருப்பார்கள் என்ற சந்தேகம் எமக்குள்ளது.
அதை சர்வதேசத்தின் கண்காணிப்புடன் இந்த விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று மனித உரிமை அமைப்புக்கள் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்." என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் ஒருவர் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

அத்துடன், உள்நாட்டு விசாரணைகளின் மீது தமக்கு நம்பிக்கை கிடையாது எனவும் அவர் கூறுகின்றார்.
''உள்நாட்டு விசாரணைகள் மீது நம்பிக்கை இல்லை. எனெனில், ஆரம்பத்தில் அமைக்கப்பட்ட பல காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுக்களிடம் போயிருந்தோம். அங்கே எங்களுக்கு சரியான பதில் எதுவும் சொல்லவில்லை. இதுவரை எங்களில் ஒருவரை கூட சண்டையில் இறந்தார்கள், பிடித்து வைத்திருக்கின்றோம் என்ற எந்தவொரு உத்தரவாதமும் வழங்கப்படவில்லை. எங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே சர்வதேச விசாரணை ஒன்றே எமக்கான தீர்வாக அமையும்" என அவர் மேலும் கூறினார்.
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 20திற்கு மேற்பட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை சரியான விசாரணைகளை நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டையும் தமிழர்கள் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்ற நிலையில், அந்த குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் நிராகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












