பொக்லைன் மூலம் நெல் பயிர்களை அழித்த என்.எல்.சி நிறுவனம் - உண்மையில் என்ன நடந்தது?

என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிக்கு நெல் பயிர்கள் அழிப்பு கிராம மக்கள் போராட்டம்
படக்குறிப்பு, கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே என்.எல்.சி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன
    • எழுதியவர், மாயகிருஷ்ணன் க
    • பதவி, பிபிசி தமிழுக்காக

விருதாச்சலத்தில் இருந்து சேத்தியோதோப்பு வழியாக கத்தாழை கிராமத்திற்குச் சென்றோம். மதிய நேர உச்சி வெயில் ஏற்படுத்திய களைப்புக்கு நடுவே, நெற்பயிர்களின் முற்றிய கதிர்களுடைய பால் வாசம் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால், அந்தப் பால் வாசம் வீசிய நெற்பயிர்களுக்கு நடுவே, நிலத்தை அழித்து வேலை செய்துகொண்டிருந்த இயந்திரங்களின் சத்தமும் அதிகமாகவே கேட்டது. கிராமத்தின் முகப்புப் பகுதியிலேயே போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஊருக்குள்ளே செல்பவர்கள், வெளியே வருபவர்களை போலீசார் விசாரித்து அனுப்பிக் கொண்டிருந்தனர். அங்கு கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே என்.எல்.சி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

கடந்த புதன்கிழமையன்று மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின்போது, அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிர்கள் அழிக்கப்பட்டது, விவசாயிகள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ள கத்தாழை, கரிவெட்டி, மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, கோ.ஆதனூர் ஆகிய கிராமங்களுக்கு பிபிசி தமிழ் நேரடியாகச் சென்று கள ஆய்வு மேற்கொண்டது. அதன் முழு விவரங்களையும் இங்கு காண்போம்.

நசுங்கிக் கிடந்த நெற்பயிர்கள்

என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிக்கு நெல் பயிர்கள் அழிப்பு கிராம மக்கள் போராட்டம்
படக்குறிப்பு, பெரும்பாலான விவசாயிகள் இனி என்ன பேசியும் பயனேதும் இல்லையென்று சலித்துக்கொண்டே பேசியபடி அங்கு நடப்பதை, கனத்த இதயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்

மேல் வளையமாதேவியில் நெல் வயல்களின் குறுக்கே அகன்ற சாலை உருவாக்கப்பட்டு அதில் கருப்பு நிற மண்ணுடன் வண்டல் மண் சேர்த்து குவிக்கப்பட்டிருந்தது.

அந்த மண் குவியலுக்கு நடுவில் நெற்பயிர்கள் நசுங்கிக் கிடந்தன. அருகிலேயே இயந்திரங்களின் உதவியுடன் பாலம் அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. இயந்திரங்களுடைய சத்தத்தில் விவசாயிகளுடைய வேதனைக் குரல்கள் அடங்கிப் போயிருந்தன.

பெரும்பாலான விவசாயிகள் இனி என்ன பேசியும் பயனேதும் இல்லையென்று சலித்துக்கொண்டே பேசியபடி அங்கு நடப்பதை, கனத்த இதயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஜேசிபி இயந்திரத்தை தடுத்து நிறுத்திய விவசாயிகள்

என்.எல்.சி நிறுவனத்துடைய இரண்டாம் சுரங்க விரிவாக்கப் பணியின் ஓர் அங்கமாக வளையமாதேவி பகுதியில் பரவனாறு விரிவாக்க வாய்க்கால் வெட்டும் பணி ஒன்றரை கி.மீ தொலைவுக்கு நடைபெற்று வருகிறது.

என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிக்கு நெல் பயிர்கள் அழிப்பு கிராம மக்கள் போராட்டம்
படக்குறிப்பு, “எங்களுக்கு விவசாயத்தை விட்டால் வேறு எந்தத் தொழிலும் தெரியாது," என்று கூறுகிறார் முத்தையன்.

இந்த நிலையில் சாத்தப்பாடி அருகே விவசாயிகள் பயன்படுத்திய பொதுப் பாதை வழியாக வடிகால் வாய்க்கால் வெட்டுவதற்கு ஜேசிபி இயந்திரம் மூலம் பணி துவங்கப்பட்டது.

இந்த பாதையைத் துண்டித்துவிட்டால் விவசாயிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுவிடும். எனவே தற்காலிக பாதை அமைத்துவிட்டு இந்த பாதையை அகற்றிக் கொள்ளுங்கள் எனக் கூறி ஜேசிபி இயந்திரத்தை விவசாயிகள் சிறிதுநேரம் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் பேச்சுவார்ததை நடத்தி தற்காலிக பாதை அமைத்து குழாய் பதிக்கபடும் என வாக்குறுதி அளித்த பிறகு விவசாயிகள் கலைந்து சென்றனர்.

விவசாயிகள் ஏன் போராடுகிறார்கள்?

மேல் வளையமாதேவி கிராமத்தைச் சேர்ந்த முத்தையன் பிபிசியிடம் பேசும் போது, “எங்களுக்கு விவசாயத்தை விட்டால் வேறு எந்தத் தொழிலும் தெரியாது. என்எல்சி நிறுவனத்தார் எங்களிடம் நிலத்தை வாங்கிக் கொண்டது உண்மைதான்.

ஆனால் ஒரே அளவீடாக பணம் தராமல் மூன்று கட்டங்களாக நிலத்தை எடுத்துக்கொண்டு பணத்தைப் பிரித்து தந்துள்ளார்கள்.”

என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிக்கு நெல் பயிர்கள் அழிப்பு கிராம மக்கள் போராட்டம்
படக்குறிப்பு, தங்களுக்கான வாழ்வாதாரம் குறித்து எந்த உதவியும் செய்வதாக என்.எல்.சி. கூறவில்லை என்று கூறுகிறார் முத்தையன்.

கடந்த 2003ஆம் ஆண்டு முதலில் நிலம் எடுத்தவர்களுக்கு ஏக்கருக்கு 6 லட்சமும், அடுத்ததாக நிலம் எடுத்தவர்களுக்கு 15 லட்சமும், தற்போது 25 லட்சம் ரூபாயும் இழப்பீடாக என்.எல்.சி நிர்வாகத்தால் வழங்கியதாக முத்தையன் தெரிவித்தார்.

“இந்த வித்தியாசம் எங்களை அதிகமாகப் பாதித்துள்ளது. மேலும் எங்களுக்கான வாழ்வாதாரம் குறித்து எந்த உதவியும் செய்வதாக அவர்கள் கூறவில்லை. எங்களுக்கு வேறு எந்த வேலையும் தெரியாது. எங்களுக்கு என்.எல்.சி நிறுவனத்தில் வேலை தந்தால் நன்றாக இருக்கும்," என்றார் அவர்.

"நன்கு முற்றிய பயிர்களை அவசர அவசரமாக அழித்து ஏன் கால்வாய் அமைக்க வேண்டும்? இன்னும் 15 நாள் கழித்து இந்தப் பணியை என்.எல்.சி நிர்வாகம் வேற்கொண்டிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்காது," என விவசாயிகள் தெரிவித்தனர்.

நெல் பயிர்களை அழிப்பது கர்ப்பிணியை கொலை செய்வதற்கு சமம் - சுந்தரி

வளையமாதேவி கிராமத்தில் இருந்து கரிவெட்டி கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது மாடு மேய்த்துக் கொண்டிருந்த சுந்தரி நம்மிடம் பேசினார்.

என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிக்கு நெல் பயிர்கள் அழிப்பு கிராம மக்கள் போராட்டம்
படக்குறிப்பு, "பச்சை கட்டிய நெல்பயிரை அழிப்பது, பத்து மாத கர்ப்பிணியை கொலை செய்வதற்குச் சமம். என்.எல்.சி. ஏன் இப்படி செய்யவேண்டும்?" என்று கண்ணீர் மல்கக் கூறினார் சுந்தரி(வலது).

“எனக்கு இரண்டு ஏக்கர் நிலம் இருந்தது. ஆனால் இப்போது இல்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக என்.எல்.சி நிர்வாகம் எங்களிடமிருந்து வாங்கிக் கொண்டது.

அப்போது எங்களுக்கு விவரம் தெரியாது. நான் படிக்கவில்லை. இப்போது மற்ற இடங்களுக்கு கூடுதலாக பணம் தருகிறார்கள். மேலும் எங்களுக்கு விவசாயம், கூலி வேலை மட்டும்தான் தெரியும். அதிலும் ஆடு, மாடு மேய்த்துதான் எங்கள் பிழைப்பை நடத்துகிறோம்.

திடீரென்று இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு 25க்கு மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்களை எடுத்து வந்து எங்களுக்குத் தெரியாமல் வயலில் தோண்டிவிட்டார்கள். எங்களுக்கு விடியற்காலையில்தான் விவரஸ தெரிய வந்தது," என்று தன் வயலில் நடந்ததை விவரித்தார் சுந்தரி.

"பச்சை கட்டிய நெல்பயிரை அழிப்பது, பத்து மாத கர்ப்பிணியை கொலை செய்வதற்குச் சமம். என்.எல்.சி. ஏன் இப்படி செய்யவேண்டும்?" என்று கண்ணீர் மல்கக் கூறினார் சுந்தரி.

எங்கள் நிலத்தை எடுத்துக்கொண்டு அதைத் தோண்டி விட்டதால் இனி வரும் நாட்களில் மாடு மேய்க்க சிரமங்களை எதிர்கொள்ள வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்தவரும் மாடுகளை மேய்த்து பிழைப்பு நடத்தி வருபவருமான தமிழ்மணி தெரிவித்தார்.

என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிக்கு நெல் பயிர்கள் அழிப்பு கிராம மக்கள் போராட்டம்
படக்குறிப்பு, தன்னுடைய 20 ஏக்கர் நிலத்தை பத்து வருடங்களுக்கு முன்பு ஏக்கருக்கு 6 லட்சம் கொடுத்து என்.எல்.சி நிர்வாகம் வாங்கிக்கொண்டதாகக் கூறுகிறார் முதியவரான ராமலிங்கம்

முத்துகிருஷ்ணாபுரத்தில் வசித்து வரும் முதியவரான ராமலிங்கம், “என்னுடைய 20 ஏக்கர் நிலத்தை பத்து வருடங்களுக்கு முன்பு ஏக்கருக்கு 6 லட்சம் கொடுத்து என்.எல்.சி நிர்வாகம் வாங்கிக்கொண்டது. என்னுடைய வீட்டையும் நான் அப்போது கொடுத்துவிட்டேன்.

ஆனால் இப்போது சிலருக்கு 25 லட்சம் கொடுப்பதாகச் சொல்கிறார்கள். இதில், 70 வயதான் என்னால் இப்போது ஒன்றும் செய்ய முடியவில்லை,” என பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது?

வளையமாதேவி கிராமத்தில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தில் இருந்த விவசாயியான ராஜகீர்த்தி பிபிசி தமிழிடம் பேசினார்.

“பத்து ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் உதவியுடன் எங்கள் இடங்களை ஏக்கருக்கு 6 லட்சம் கொடுத்து வாங்கிக் கொண்டார்கள்.

ஒப்புக்கொள்ளாத நபர்கள் மீது அடக்குமுறை ஏவப்பட்டது. பணத்தை இப்போது வாங்காவிட்டால் நீதிமன்றத்தில் சென்று வழக்கு நடத்தி வாங்கவேண்டும் என மிரட்டினார்கள். அதனால்தான் என் நிலத்தை நான் கொடுத்தேன்,” என்கிறார் ராஜகீர்த்தி.

குறைந்த விலைக்கு நிலங்களைக் கொடுத்த விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தலையிட்டு என்.எல்.சி. நிர்வாகத்திடம் இருந்து இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என அவர் கோரிக்கையை முன்வைத்தார்.

அரசியல் கட்சித் தலைவர்களின் கண்டனம்

என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிக்கு நெல் பயிர்கள் அழிப்பு கிராம மக்கள் போராட்டம்

விவசாயிகள் எதிர்ப்பை மீறி என்எல்சி நிறுவனத்திற்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதாகக் கூறி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முழு இழப்பீடு வழங்காத நிலையில் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் என்எல்சி நிறுவனத்தின் முயற்சிக்கு துணை நிற்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி.கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் என்எல்சி நிறுவனம் தனது இரண்டாம் சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இந்த நிலையில் அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் பொதுமக்கள் ஆகியோரது வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் உறுதி செய்யவேண்டும் என்ற நிலையில் அதிமுக உறுதியாக இருக்கின்றது.

மேலும் மறு சீரமைப்பு, மறுகுடியமர்வு சட்டப்படி போதிய சம அளவிலான இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் என்று விரிவாக அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.

வயல்களில் ராட்சத இயந்திரங்களை இறக்கி நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் என்எல்சி நிறுவனமும், மாவட்ட நிர்வாகமும் ஈடுபட்டுள்ளது.

கதிர்விடும் நிலையில் உள்ள பயிர்களை அழிப்பது என்பது குழந்தைகளை கருவில் கொள்வதற்கு இணையான கொடுமை. உள்ளூர் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு நிறுத்த வேண்டும். அனைத்தையும் இழந்து விட்டு கொதித்து நிற்கும் விவசாயிகள் வெகுண்டு எழுந்து போராடும் நிலையையும் அதனால் சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படக்கூடிய நிலையும் தமிழக அரசும், என்எல்சி நிறுவனம் ஏற்படுத்தி விடக்கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார் .

என்.எல்.சி நிர்வாகத்தின் நடவடிக்கை எதிர்த்து பாமக சார்பாக கடலூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற போராட்டத்தின் போது அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.

என்எல்சிக்காக விலை நிலங்களை தமிழக அரசு கையகப் படுத்துவது கண்டிக்கத்தக்கது. என்எல்சி நிர்வாகத்திடம் மத்திய அரசு பேசி பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற துணை நிற்க வேண்டும் என்று தாமாக தலைவர் ஜி .கே. வாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் டிடிவி தினகரன் வெளியீட்டுள்ள அறிக்கையில் விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிக்களுக்காக விளைநிலங்களை என்எல்சி நிறுவனம் கையப்படுத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வேளாண்மை தொழிலுக்கு பேராபத்து விளைவிக்கும் சுரங்கத்திற்கான விரிவாக்க பணிகளை உடனே கைவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அழிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு என்ன பதில்?

என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிக்கு நெல் பயிர்கள் அழிப்பு கிராம மக்கள் போராட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணி தொடர்பாக செய்தியாளரிடம் பேசியபோது, "தற்போது கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே என்.எல்.சி நிறுவன சுரங்க விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றது. அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி 2006 முதல் 2013இல் முடிவடைந்து விட்டது. அந்த நிலங்களுக்கான தொகை அப்போது விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது விவசாயிகளுக்கு ஏற்படும் பயிர் இழப்பிற்காக நிச்சயமாக இழுப்பீடு வழங்கப்படும் அதற்காக தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் 10 ஆண்டுகளாக விவசாயிகள் கருணை அடிப்படையில் அந்த இடத்தில் என்எல்சி நிர்வாகத்தால் பயிர் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

எனவே பணிகள் தொடங்கவுள்ள நிலையில் அதற்குத் தேவையான இடங்களில் மட்டுமே தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது," என்று தெரிவித்தார்.

மேலும் பயிர் இழப்பீடு குறித்து விவசாயிகளுடைய கோரிக்கையை ஏற்று 266 ஹெக்டேருக்கு தற்போது கூடுதலாக இழுப்பீடு வழங்குவதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது, அது விவசாயிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

முந்தைய ஆட்சியர் இருந்தபோதே டிசம்பர் மாதத்தில் விவசாயிகளிடம் பயிர் செய்யவேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது விவசாயிகள் அனைவருக்கும் தெரியும். எனவே பணிகள் சுமூகமாக நடைபெற ஒத்துழைப்பு வேண்டும் என்றும் கூறினார்.

என்.எல்.சி. தரப்பின் விளக்கம்

என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிக்கு நெல் பயிர்கள் அழிப்பு கிராம மக்கள் போராட்டம்

தற்போது பரமனாறு மாற்றுப்பாதை பணி நடந்து கொண்டிருக்கிறது என்றும் அது 10 மீட்டர் அகலம் 900 மீட்டர் நீள அளவுக்கு உட்பட்ட பகுதியில் நடைபெறுவதாகவும் தெரிவித்தார் பிபிசி தமிழிடம் தொலைபேசி வாயிலாகப் பேசிய என்.எல்.சி. நிறுவன மக்கள் தொடர்பு அலுவலர் அப்துல் காதர் கூறினார்.

மேலும், "இதனால் மற்ற இடங்களுக்குப் பாதிப்பு இல்லை. நிர்வாகம் கையகப்படுத்திய இழப்பீடு வழங்கிய இடங்களில்தான் பணிகள் நடைபெறுகின்றது.

இது விவசாயிகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது. என்.எல்.சி. இடங்களில் மட்டுமே பணிகள் நடைபெறுகிறது," என்றும் கூறி முடித்துக் கொண்டார்.

கடலூர் மாவட்டத்தில் தீவிர போலீஸ் பாதுகாப்பு

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு கிராமத்தை அடுத்துள்ள வளையமாதேவி, கற்றாழை, கறிவெட்டி, மேல் வலையமாதேவி, ஆதனூர் மும்முடி சோழகன், சாத்தப்பாடி உள்ளிட்ட கிராம விவசாய நிலங்கள் என்.எல்.சி நிறுவன விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்டது 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழுப்பிடும் கொடுக்கப்பட்டுவிட்டது.

என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிக்கு நெல் பயிர்கள் அழிப்பு கிராம மக்கள் போராட்டம்

இந்நிலையில் கையகப்படுத்திய நிலங்களில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த நெல் தற்பொழுது கதிர் பருவத்தில் நன்கு வளர்ந்துள்ளது. இந்தநேரத்தில் என்எல்சி நிறுவனம் நேற்று முன்தினம் திடீரென்று விரிவாக்கப் பணியைத் தொடங்கியது.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 25க்கும் மேற்பட்ட மண்வெட்டும் பொக்லைன் இயந்திரங்களுடன் புதிய பரவனாறு வாய்க்கால் வெட்டும் பணியும் தொடங்கப்பட்டது.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைக் கண்டித்து சேத்தியாதோப்பு, விருதாச்சலம், பண்ருட்டி, திட்டக்குடி உள்ளிட்ட பல இடங்களில் விவசாயிகள் மற்றும் சில அரசியல் கட்சிகள் மறியலில் ஈடுபட்டனர். சில இடங்களில் பேருந்துகள் மீது கல்வீச்சும் நடைபெற்றது. இதில் 17 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

இந்நிலையில் விழுப்புரம் டிஐஜி ஜியா உல்ஹக் தலைமையில் விழுப்புரம் எஸ்.பி .கார்த்திகேயன் கள்ளக்குறிச்சி எஸ்பி மோகன்ராஜ், கடலூர் எஸ்பி ராஜாராம் மற்றும் ஆயிரம் போலீசாருடன் சேத்தியாதோப்பு பகுதியில் முகாமிட்டுள்ளனர். பிரச்னையுள்ள பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றார்கள்.

பெரும்பாலான கிராமங்களில் விவசாயிகள் வீட்டினுள் முடங்கியுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: