சிஃபிலிஸ்: அபாய அளவில் மீண்டும் பரவும் இந்த 'பால்வினை நோய்' கருவில் உள்ள குழந்தைக்கும் வருமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க்ருபா பதியால்
- பதவி, பிபிசி நியூஸ்
சிஃபிலிஸ் என்பது மிகவும் பழமையான, பாலுறவின் மூலம் பரவும் நோய்த்தொற்றுகளில் ஒன்றாகும். ஒரு காலத்தில் சரிவைச் சந்தித்ததாகக் கருதப்பட்ட அது, இப்போது அபாயகரமான விகிதத்தில் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.
1490 களில் சிஃபிலிஸ் அதன் முதல் பதிவிலிருந்து பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. அவற்றில் "பிரெஞ்சு நோய், நியோபோலிடன் நோய், போலந்து நோய்" என்ற பெயர்களும் அடக்கம்.
இந்நிலையில் இந்த தொற்று எப்படியோ மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. சிஃபிலிஸ் மற்ற நோய்த்தொற்றுகளை மிக எளிதாகப் பிரதிபலிப்பதால் ஒரு நபர் இந்நோயின் ஆரம்பகட்ட அறிகுறிகளைத் எளிதாகத் தவறவிடுகிறார். நோய் முற்றிய பின் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், விளைவுகள் மிகமோசமாக இருக்கும்.
ஆம்ஸ்டர்டாமில் திட்ட அதிகாரியாகப் பணியாற்றும் 33 வயதான துஷாருக்கு இரண்டு முறை சிஃபிலிஸ் பாதிப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் தனது பாலியல் துணையிடமிருந்து வாட்ஸ்அப் மூலம் செய்தி வந்ததை அவர் நினைவு கூர்ந்தார்.
"அவர் மிகவும் வருத்தப்பட்டார்," என்று அவர் கூறுகிறார். "நோய் பாதித்த பின் அது முற்றும் வரை நான் கவனக்குறைவாக இருந்ததாக அவர்கள் என்னை குற்றம் சாட்டினார்கள.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் என்மீதான குற்றச்சாட்டு சாத்தியமற்றது என்பதுடன் நான் குற்றம் சாட்டப்படுவது விசித்திரமாக இருந்தது. மேலும் அந்நோய் குணமடைய சிறிது காலம் பிடித்தது." அந்த வாரம் துஷாருக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
"சிஃபிலிஸ் குணப்படுத்த முடியாத ஒன்று என்று மக்கள் தவறாக நினைக்கிறார்கள். இன்னும் சிஃபிலிஸ் ஆன்டிபாடிகள் புழக்கத்தில் இருப்பது மற்றும் தற்காலத்தில் இந்நோய் பாதிப்பு இல்லை என்பதன் பொருள் என்னவென்று மக்களுக்குப் புரியவில்லை."
ஏப்ரலில், பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் (STI) பற்றிய சமீபத்திய தரவுகளை அமெரிக்கா வெளியிட்டது. 2020 மற்றும் 2021 க்கு இடையில் இது போன்ற நோய் பாதிப்பு 32% அதிகரித்து, 70 ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புக்களை எட்டியதன் மூலம், சிஃபிலிஸின் நோயாளிகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அதிகரிப்பைக் கண்டது. அதே நேரம் இத்தொற்றுநோய் குறைவதற்கான அறிகுறிகள் எவையும் தென்படவில்லை என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் எச்சரித்தது.
மேலும் இதுபோல் பாதிப்புக்கள் வேகமாக அதிகரிப்பது, சில "எச்சரிக்கைகளை" உருவாக்கியுள்ளது என்பதையே அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சுட்டிக்காட்டுகிறது.
பிறவியிலேயே ஏற்படும் இந்நோய் பாதிப்பு, கர்ப்ப காலத்தில் ஒரு தாய் தனது குழந்தைக்கு நோய்தொற்றைக் கடத்தும்போது ஏற்படுகிறது. இதுபோன்ற பாதிப்புக்கள், பெரும்பாலும் அவர்களின் பாலியல் துணையிடமிருந்து பரவுகின்றன. இப்படி கர்ப்பகாலத்தில் கருவில் இருக்கும் சிசுவுக்கு நோய் பரவும் வேகமும் திடீரென கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த அதிகரிப்பு, 2020-2021 க்கு இடையில் அமெரிக்காவில் 32% ஆக உள்ளது. இது போன்ற பாதிப்பினால் குறைப்பிரசவம், குழந்தை இறப்பு மற்றும் வாழ்நாள் முழுவதும் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

பட மூலாதாரம், Getty Images
இது பல சுகாதார நிபுணர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
"பதினைந்து அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் சிஃபிலிஸை அகற்றும் விளிம்பில் இருப்பதாக நினைத்தோம்," என்கிறார் அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் பாலுறவு மூலம் பரவும் நோய் தடுப்பு பிரிவின் இயக்குனர் லியாண்ட்ரோ மெனா. "கடந்த 20 ஆண்டுகளில் நாம் காணாத அளவுக்கு சிஃபிலிஸ் பரவும் விகிதங்கள் அதிகரித்து வருவதை நாங்கள் காண்கிறோம் என்பதில் சந்தேகமில்லை."
மேலும் இது அமெரிக்காவில் மட்டும் நடப்பது அல்ல. உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, 2020 ஆம் ஆண்டில் உலகளவில் 71 லட்சம் பேருக்கு புதிதாக சிஃபிலிஸ் பாதிப்பு ஏற்பட்டது. 2022 இல், பிரிட்டனில் சிஃபிலிஸ் பாதிப்பு 1948 க்குப் பிறகு மிக அதிக அளவுக்கு உயர்ந்தது.
இது போல் புதிதாக தொற்று பாதிப்பு அதிகரிப்பதை பாலியல் சுகாதாரப் பணியாளர்கள் நன்கு அறிந்துள்ளனர்.
"2005 ஆம் ஆண்டில் நான் முதன்முதலில் பாலியல் சுகாதார நர்சிங் பணியைத் தொடங்கியபோது, சிட்டி சென்டர் கிளினிக்கில் கூட புதிதாய் சிஃபிலிஸ் பாதிப்பைப் பார்ப்பது மிகவும் அரிதாக இருந்தது," என்று இங்கிலாந்தில் உள்ள STI அறக்கட்டளையின் இணைத் தலைவர் ஜோடி கிராஸ்மேன் கூறுகிறார். அங்கு சிஃபிலிஸ் பரவல் விகிதம் 8.4% உயர்ந்துள்ளது. 2020 முதல் 2021-ம் ஆண்டுக்கு இடையே குறைந்தபட்சம் 2021 நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர்.
ட்ரிபோன்மா பாலிடியம் (Treponema palidum) எனப்படும் பாக்டீரியத்தால் இந்த தொற்று ஏற்படுகிறது. இதன் அறிகுறிகள் நான்கு நிலைகளாக பிரிக்கப்படுகின்றன. இந்த நோய் பாதிப்பு ஏற்படும் போது தொடக்கத்தில் பாலுறவுத் தொடர்பு ஏற்பட்ட இடத்தில் வலியற்ற புண் அல்லது சொறி போன்ற அறிகுறிகள் தென்படும். இந்த பாதிப்பு ஏற்பட்டால் பென்சிலின் ஊசி போடுவதே அதைச் சரிசெய்வதற்குச் சரியான வழியாகும். இருப்பினும், சிஃபிலிஸ் பாதிப்பு ஏற்பட்டபின்னர் சிகிச்சையளிக்கப்படாமல் விட்டால், நீண்ட கால நரம்பியல் மற்றும் இருதய நோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
டொராண்டோ பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் மருத்துவரும் ஆராய்ச்சியாளருமான ஐசக் போகோச், கனடாவின் எல்லைக்கு அப்பால் இருந்து அமெரிக்காவில் தொற்றுநோய் பரவத் தொடங்குவதாகத் தெரிவிக்கிறார்.
"இது போல் சிஃபிலிஸ் நோய் பரவுவது உலகெங்கிலும் பல நாடுகளில் காணப்படுகிறது," என்று அவர் கூறுகிறார். மேலும், "இருப்பினும் இது மிகவும் கவலைக்குரியது. ஏனெனில் பொதுவாக, சிஃபிலிஸுக்கு சிகிச்சையளிப்பது மிகவும் எளிதானது என்பது மட்டுமின்றி, சிகிச்சை பரவலாக அனைத்து இடத்திலும் கிடைக்கிறது. எனவே, இது போன்ற பெரும்பாலான பாதிப்புக்கள் பொது சுகாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவை பிரதிபலிக்கின்றன."
2011 மற்றும் 2019 க்கு இடையில், பாலுறவு முலம் பரவும் பிற நோய்களை விட கனடாவில் சிஃபிலிஸ் தொற்று 389% அதிகரித்துள்ளது .
சமீபத்திய தசாப்தங்களில், சிஃபிலிஸின் பெரும்பாலான பரவல்கள் தன்பாலின ஈர்ப்பாளர்கள், இருபாலினம் மற்றும் ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் பிற ஆண்களிடையே அதிகம் காணப்படுகிறது. இருப்பினும், உலகின் சில பகுதிகளில், ஆண்களிடையே சிஃபிலிஸ் பாதிப்புக்கள் குறைந்து வருகின்றன. உதாரணமாக கனடாவில் சிஃபிலிஸ் தொற்று விகிதம் ஆண்களிடையே குறைந்துள்ளது.
ஆனால் அதே நேரத்தில் கனடாவில் மட்டுமல்ல, உலகளவில் பெண்களிடையே இந்த பாதிப்பின் விகிதங்கள் அதிகரித்துள்ளன. இது உலகின் பல பகுதிகளில் பிறவியிலேயே சிஃபிலிஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்குக் காரணமாக அமைந்தது. 2021 ஆம் ஆண்டில் அமெரிக்கா முழுவதும் 30,000 குழந்தைகளுக்கு தாயிடமிருந்து சிஃபிலிஸ் பரவியுள்ளது. இது சுகாதார அதிகாரிகள் "ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகமாக " அதிகமான அளவாக உள்ளது. .

பட மூலாதாரம், Getty Images
கருச்சிதைவு, பிரசவம், முன்கூட்டிய குழந்தை பிறப்பு, குறைந்த எடையுடன் கூடிய குழந்தை பிறப்பு, பிறந்த சிறிது நேரத்திலேயே குழந்தை இறப்பு போன்ற பேரழிவுகரமான விளைவுகள் கர்ப்ப காலத்தில் குழந்தைக்கு இந்நோய் பரவுவதால் ஏற்படுகின்றன.
அமெரிக்காவில், பிறக்குப் போதே சிஃபிலிஸ் பாதிப்பு விகிதங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அவை 2016 உடன் ஒப்பிடும்போது 2020 இல் 3.5 மடங்கு அதிகமாக இருந்தன. மேலும், 2021 இல் இது மீண்டும் அதிகரித்தது. இதன் விளைவாக 220 குழந்தைகள் 'இறந்து பிறத்தல் அல்லது பிறந்த பின் இறத்தல்' சம்பவங்கள் நேரிட்டன.
தேசிய புள்ளிவிவரங்கள் பதிவேட்டில், நாட்டின் சில பகுதிகளில் சில விதிவிலக்கான அதிர்ச்சியூட்டும் அளவுக்கான உயர்வுகளை மறைப்பதாகத் தெரிகிறது. மிசிசிப்பியில் உள்ள மருத்துவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில், குழந்தை பிறக்கும் போதே சிஃபிலிஸ் பாதிப்பு ஏற்படுவது 900% உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர் .
கறுப்பின அமெரிக்க மற்றும் ஹிஸ்பானிக் பெண்களிடையே இது போன்ற பாதிப்பு அதிக எண்ணிக்கையில் காணப்படுகிறது.
விஸ்கான்சினில் உள்ள மார்ஷ்ஃபீல்ட் கிளினிக் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணை ஆராய்ச்சி விஞ்ஞானி மரியா சுந்தரம் கூறுகையில், "எங்கள் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பில் இன்னும் அடிப்படை சமத்துவமின்மை மற்றும் இனவெறி நிலவுவதை இது பிரதிபலிக்கிறது. பெண்களில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழுக்கள், அதாவது வீட்டை இழந்தவர்கள் அல்லது போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் போன்றவர்களும் இந்த நோயால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். உலகெங்கிலும் கோவிட் -19 தொற்றுநோய் பரவியதால் இந்த ஏற்றத்தாழ்வுகள் மேலும் மோசமடைந்தன.
பொது சுகாதார சமூகத்தில் உள்ள ஒருமித்த கருத்து என்னவென்றால், சிஃபிலிஸ் உள்ளிட்ட பால்வினை நோய்களின் அதிகரிப்பு, கொரோனா தொற்று பரவியபோது, அவற்றைத் தடுக்கும் வளங்கள் முடங்கியதன் காரணமாக இருக்கலாம்," என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
இந்தச் சிக்கலைத் தூண்டக்கூடிய ஏற்றத்தாழ்வுகளில், பால்வினை நோய் சிகிச்சை பெறுவதைத் தடுக்கும் காரணிகளாக, சிஃபிலிஸைச் சுற்றியுள்ள களங்கம்- அதாவது இது போல் பால்வினை நோய் பாதிப்பு ஏற்படுவது ஒரு அவமானகரமானது என்ற சிந்தனை- மொழிப் பிரச்னைகள் ஆகியவை கருதப்படுகின்றன. பிரேசிலில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், குறைந்த அளவிலான பள்ளிப்படிப்பு மற்றும் பிறக்கும் போதே சிஃபிலிஸ் பாதிப்பு உள்ள கறுப்பினப் பெண்களுக்கு இடையே ஒரு தொடர்பு தெரியவந்துள்ளது. பல சந்தர்ப்பங்களில், கருவுற்ற பெண்கள் சிஃபிலிஸ் நோய் பரிசோதனை செய்யும் வசதிகள் இன்றித் தவிக்கின்றனர்.
கலிபோர்னியாவின் கெர்ன் கவுண்டியில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஆய்வு, 2018 ஆம் ஆண்டில் 'பிறக்கும் போதே சிஃபிலிஸ் பாதிப்பு' ஏற்படுபம் குழந்தைகளின் தாய்மார்களில் 17% பேர் மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் 2.3% மட்டுமே இருந்தபோதிலும், குடியேற்ற நிலை, மருத்துவ காப்பீட்டு நிலை மற்றும் கர்ப்பிணிப் பெண்களில் பாலியல் பாதிப்பு அல்லது குடும்ப வன்முறை போன்ற பின்னணியைக் கொண்டுள்ளவர்கள் என்பதை அடையாளம் கண்டுள்ளது. மகப்பேறு காலப் பராமரிப்பின் போது சிஃபிலிஸ் பாதிப்பு ஏற்பட்ட பெண்களில் பாதி பேர் ஹிஸ்பானிக், லத்தீன் அல்லது ஸ்பானிஷ் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
ஆஸ்திரேலியாவில் 2020இல் மேற்கொள்ளப்பட்ட சிஃபிலிஸ் பற்றிய ஆய்வில், 2015 இல் பதிவு செய்யப்பட்ட விகிதங்களில் இருந்து கிட்டத்தட்ட 90% அதிகரித்துள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மொத்த ஆஸ்திரேலிய மக்கள்தொகையில் வெறும் 3.8% மட்டுமே உள்ள பழங்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவுகளின் சமூகங்களில் சுமார் 4,000 சிஃபிலிஸ் நோயாளிகள் கண்டறியப்பட்டனர்.
தொற்றுநோய் பாதிப்பைச் சரிசெய்ய ஒரு தேசிய சோதனை மற்றும் சிகிச்சைக்குப் பிந்தைய நிலையை அறியும் திட்டம் நடைமுறைக்கு வந்தாலும், கொரோனா தொற்று பரவலுக்கு முந்தைய புள்ளிவிவரங்களின் அளவுக்கு இந்த பாதிப்பின் அளவைக் குறைக்கவேண்டுமானால், பரவலான சமூகங்களிடம் அதிக எண்ணிக்கையிலான சோதனைகள் தேவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், நாட்டின் சில பகுதிகளில் கருவுற்ற பெண்களுக்கு சிஃபிலிஸ் பரிசோதனை வசதிகள் கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளன .
ஆனால் வாழ்க்கைச் செலவு நெருக்கடி மற்றும் தொற்றுநோய் போன்ற காரணிகள் பொது சுகாதார வளங்களை பாதித்துள்ள நிலையில், மனித நடத்தை மற்றும் பால்வினை நோய்களின் மீதான அணுகுமுறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
"1990 களின் நடுப்பகுதியில், எச்.ஐ.வி-க்கான ஆன்டி-ரெட்ரோவைரல் சிகிச்சையின் வருகையுடன் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது," என்கிறார் மேனா. "இப்போது, எச்.ஐ.வி நோய்த்தொற்றின் தடுப்பு மற்றும் சிகிச்சையின் முன்னேற்றங்களைக் கண்டு நாம் பெருமகிழ்ச்சி அடையவேண்டும். எச்.ஐ.வி. ஒரு நாள்பட்ட நோயாகக் காணப்படுகிறது. எச்.ஐ.வி. நோய்த்தொற்றின் ஆபத்து மக்கள் ஆணுறைகளைப் பயன்படுத்தவோ அல்லது பால்வினை நோய்களுக்கு எதிராக பிற தடுப்பு முறைக்ளைப் பயன்படுத்தவோ ஊக்குவிப்பதில்லை."
பாலியல் நடைமுறையில் ஒரு மாற்றம் ஏற்பட்டதால் சிஃபிலிஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதா என்பது குறித்து ஜப்பானில் ஆராய்ச்சியாளர்கள் குழு ஆய்வு செய்துவரும் நிலையில், டேட்டிங் செயலிகளைப் பயன்பாடுத்துதலுக்கும் சிஃபிலிஸ் நோய் பாதிப்புக்கும் உள்ள தொடர்பைப் பார்த்து ஆய்வு செய்து வருகின்றனர். டேட்டிங் செயலிகளைப் பயன்படுத்துவது "சிஃபிலிஸ் பரவுவதற்கு குறிப்பிடத்தக்க வகையில் தொடர்புடையது," என்று அவர்கள் முடிவு செய்தனர் .

பட மூலாதாரம், Getty Images
ஜப்பானிய இளைஞர்களின் கலாச்சாரம் மற்றும் பாலியல் தொழில் பற்றி எழுதும் சசாகி சிவாவா, பாலியல் தொழிலாளர்களுடனான தனது உரையாடல்களின் போது, பெரும்பாலான பாலியல் தொழிலாளர்கள் ஆணுறை போன்ற பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுவதில்லை என்றும், அவர்களுக்கு பால்வினை நோய் பாதிப்பு இருக்கிதா என சோதனை மேற்கொள்வதில்லை என்றும் கண்டறிந்துள்ளார். பாலியல் தொழிலாளர்கள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டால், அவர்கள் அதை "மாபெரும் துரதிர்ஷ்டம்" என்று கருதுவதால், ஆபத்தைக் கடந்து பணம் சம்பாதிப்பதே முக்கியம் எனக்கருதுகின்றனர்.
பெரும்பாலான சுகாதார அதிகாரிகளுக்கு, சிஃபிலிஸைச் சமாளிப்பதற்கான பாதை தெளிவாக உள்ளது. சிஃபிலிஸ் பாதிப்புக்குக் காரணமான பாக்டீரியாக்கள் மருந்து எதிர்ப்பு சக்தியை அதிகரித்தாலும், பென்சிலின் இன்னும் சிறந்த மருந்தாக இருப்பதால், அதை எதிர்த்துப் போராடுவதற்கான மருந்துகள் நம்மிடம் உள்ளன . அதிக பரிசோதனை, பால்வினை நோய் பாதிப்பு என வெளியில் சொல்வது அவமானகரமானது என்ற சிந்தனையை அகற்ற முயற்சித்தல், மற்றும் பாதுகாப்பான பாலியல் பழக்கங்களை ஊக்குவிக்கும் வகையில் பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற அனைத்தும் இந்நோயைக் குறைப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
"நாங்கள் சமூக உயிரினங்கள். எனவே பால்வினை நோய் தாக்குதல் என்பது சாதாரணமாக சளி பிடிப்பதைப் போன்றது தான். இதில் அவமானம் ஒன்றுமில்லை என்று அனைவரும் நம்பவேண்டும்," என்கிறார் கிராஸ்மேன். "பால்வினை நோய் பரிசோதனையின் மீதான கவனத்தை பயமுறுத்தும் விஷயமாகக் கருதும் நிலையை மாற்றி, பாலியல் நல்வாழ்வின் ஒரு பகுதிதான் அது என்ற சிந்தனையை உருவாக்க முயல்கிறோம். அது தான் உண்மை. அது பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான பாலியல் வாழ்க்கையின் முக்கிய பகுதியாகும்."
ஆனால் மற்ற பால்வினை நோய்களை விட ஏன் சிஃபிலிஸ் வேகமாக அதிகரிக்கிறது என்பது பற்றிய ஒரு முடிவை எட்டும் நிலைக்கு விஞ்ஞானிகள் இதுவரை வரவில்லை . சிஃபிலிஸ் பரவுவதன் வேகம் இன்னும் வீரியம் மிக்கதாக மாறிவிட்டது எனக்கருதுவதற்கு வலுவான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்கிறார் மேனா. பாக்டீரியாக்களின் மருந்து எதிர்ப்புத் தன்மையும் இந்நோய் அதிக அளவில் பாதிக்கக் காரணமாக அமைந்துள்ளது என விளக்குவதற்கு போதுமானதாக இல்லை என்று போகோச் கூறுகிறார்.
ஏற்கெனவே சிஃபிலிஸ் பாதிப்புக்கு ஆளான துஷார், அவரது பங்கிற்கு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு முறை தொடர்ந்து பரிசோதனை செய்துகொள்கிறார்.
"சிஃபிலிஸ் பற்றி பேசுவதற்கு நாங்கள் சரியான நேரத்துக்காகக் காத்திருக்கவேண்டும்," என்று அவர் கூறுகிறார். "நன்கு அறிவுள்ளவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் அறிவியல் ரீதியாக அதைப் பற்றி சிந்திப்பதற்கு மாறாக பாலியல் ஒரு குற்றம் என திசைதிருப்புகின்றனர். இந்த நிலை மாறவேண்டும்."
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












