விந்தணுக்களின் எண்ணிக்கை ஏன் குறைகிறது? அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

விந்தணு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், நிலேஷ் தோத்ரே
    • பதவி, பிபிசி மராத்தி

ஆண்களின் உடல்நலத்தில் விந்தணுக்களின் எண்ணிக்கை மிக முக்கியம். மனித சமூகம் தழைக்க பெண்களின் உடல்நலம் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு ஆண்களின் உடல்நலமும் முக்கியம்.

தம்பதிகள் குழந்தை பெற்றெடுக்க விரும்பினால், ஆணின் விந்தணு எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டியது அவசியம்.

தற்போதைய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை, உடல் உழைப்பில்லாத வேலை, போதிய உடற்பயிற்சியின்மை போன்ற பல காரணங்களால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகப் படிக்கிறோம்.

விந்தணுக்களின் எண்ணிக்கை ஏன் முக்கியம், அவை எவ்வாறு அளவிடப்படும் என்பது குறித்து பார்ப்போம்.

விந்தணு என்றால் என்ன?

ஆண்களின் விந்துவில் உள்ள சிறு பகுதி விந்தணுவாகும்.

ஆரோக்கியமான ஆணின் 1மில்லி விந்துவில் மில்லியன் கணக்கான விந்தணுக்கள் இருக்கும். அதில் ஒரு விந்தணு கருமுட்டையை அடையும் போது பெண்கள் கருத்தரிக்கிறார்கள்.

பெண்கள் கருத்தரிக்காத போது தம்பதி இருவருக்குமே சில பரிசோதனைகள் செய்யப்படும் நிலையில், ஆண்களுக்கு விந்து பரிசோதனை செய்யப்படும். இதில், விந்தணுக்களின் எண்ணிக்கை, தரம், அதன் இயக்கம் ஆகியவை ஆய்வு செய்யப்படும்.

ஒரு மில்லி விந்துவில் 15 லட்சத்திற்கும் குறைவான விந்தணுக்கள் இருந்தால் ஆண்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

“35 வயதிற்குப் பிறகு ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கிறது. 80 வயது வரை ஆண்களால் குழந்தை பிறப்பில் பங்களிக்க முடியும் என்று கூறப்படுகிறது. ஆனால், வயது அதிகரிக்க அதிகரிக்க விந்தணு எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கிறது. எனவே தாமதமாக திருமணம் செய்யும் போது ஏற்கனவே விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கும்” என்று மும்பை ஜேஜே மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் அசோக் ஆனந்த் பிபிசி மராத்தி சேவையிடம் கூறினார்.

சுறுசுறுப்பாக இருக்கும் ஆண்களுடன் ஒப்பிடும்போது குறைந்த உடற்பயிற்சி மற்றும் அதிக தொலைக்காட்சி பார்க்கும் ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

எனவே விந்தணுவை அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும் மற்றும் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்ன என்பது குறித்து பார்ப்போம்.

விந்தணு

பட மூலாதாரம், Getty Images

விந்தணு எண்ணிக்கை அதிகமாக இருப்பது ஏன் முக்கியம்?

இந்தக் கேள்வியை மகப்பேறு மருத்துவர் சாலிஸ் கானிடம் கேட்டோம். அவர் ஒரு நோயாளியை உதாரணமாகக் கூறினார்.

ஜல்கானில் வசிக்கும் அஜய் மற்றும் பூஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தம்பதிக்கு மூன்று வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. மகிழ்ச்சியாக தொடங்கிய திருமண வாழ்க்கை, எந்தப் பிரச்னையும் இல்லாமல் சென்ற நிலையில், மூன்று ஆண்டுகள் கழிந்தும் அவர்களுக்கு குழந்தை இல்லை. அதன் பின்னர் இருவரும் மருத்துவரை அணுக முடிவு செய்தனர்.

அஜய் மற்றும் பூஜாவை சில பரிசோதனைகள் செய்யுமாறு மருத்துவர் அறிவுறுத்திய நிலையில், பரிசோதனை முடிவில் பூஜாவிடம் எந்தக் குறையும் இல்லை எனத் தெரியவந்தது. பின்னர், அஜய்யின் விந்துவை ஆய்வு செய்த போது அதில் விந்தணு எண்ணிக்கை குறைவாக இருப்பது தெரியவந்தது.

மருத்துவர்

பட மூலாதாரம், Getty Images

அஜய்க்கு மூன்று மாதங்களுக்கு மருத்துகள் பரிந்துரைக்கப்பட்டன. மேலும், புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதலை தவிர்த்தல், மன அழுத்தத்தை தவிர்த்தல், சரியான நேரத்தில் தூங்குதல், போதுமான உணவு எடுத்துக்கொள்தல் மற்றும் தினசரி உடற்பயிற்சி ஆகிய பழக்கங்களை இந்தக் காலகட்டத்தில் கடைபிடிக்கும்படி மருத்துவர் அறிவுறுத்தினார்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு அஜய்யின் விந்தணு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருந்தது.

"அஜய்யின் விந்தணு எண்ணிக்கை மோசமாக இல்லை. ஆனால் அவரது விந்தணுக்கள் சுறுசுறுப்பாக இல்லை. பெண் கர்ப்பம் தரிக்க ஆணின் விந்தணுக்கள் குறைந்தது 70 சதவிகிதம் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். உண்மையில், மில்லியன் கணக்கான விந்தணுக்களில் ஒரே ஒரு விந்தணு மட்டுமே பெண்ணை கருத்தரிக்க வைக்கிறது. பெண் கருமுட்டையில் ஜோனா பெல்லுசிடா என்ற உறை உள்ளது. அது வெடிக்கும் வரை, விந்தணுக்களால் கருமுட்டைக்குள் நுழைய முடியாது. பெண்ணின் உடலில் நுழைந்த பிறகு, விந்தணுக்கள் போட்டியிடுகின்றன" என்கிறார் மருத்துவர் சஞ்சய்.

"ஆண் விந்தணுக்கள் ஜோனா பெல்லுசிடா மீது மோதுகின்றன. அந்த மோதலில் உறை சிதைந்துவிடும், பின்னர் ஒரு விந்தணு நுழைந்து பெண்ணை கருவுறச் செய்கிறது. அந்த உறையை உடைக்க வலுவான சுறுசுறுப்பான விந்தணுக்கள் தேவை. எனவே, அதற்கு நல்ல விந்தணுக்களின் எண்ணிக்கை அவசியம்" என்றும் அவர் கூறுகிறார்.

விந்தணுக்களின் எண்ணிக்கை சீராக இருக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி உடல்நலத்திற்கு நன்மை பயக்கும். ஆனால், சில உடற்பயிற்சிகள் விந்தணு எண்ணிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

உதாரணமாக, நீண்ட தூரம் சைக்கிள் ஓட்டுவது, இறுக்கமான உடைகளை அணிந்து நீண்ட தூரம் ஓடுவது ஆகியவை விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும்.

உடற்பயிற்சி

பட மூலாதாரம், Getty Images

இறுக்கமான உள்ளாடைகளை விட ட்ரவுசர் வடிவில் இருக்கும் தளர்வான உள்ளாடைகளைப் பயன்படுத்துவது விந்தணுக்களின் எண்ணிக்கையை சிறப்பாக வைத்திருக்கும். இவை தவிர சிகரெட், மது போன்ற போதை பழக்கங்களை தவிர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

மன அழுத்தமும் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைய காரணம் என்பதால் அதிக மன அழுத்தம் கூடாது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

விந்தணுக்களின் எண்ணிக்கை சீராக இருக்க முறையான உணவுப்பழக்கமும் முக்கியம். இறைச்சி, பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும், அனைத்து வகையான பழங்கள், வெங்காயம், பூண்டு, தேன், வேர்க்கடலை, பசு நெய் ஆகியவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

குளிர்ந்த நீரில் குளிப்பது மிகவும் நல்லது. பிறப்புறுப்பு பகுதி காற்றோட்டமாக இருக்க தளர்வான ஆடைகளை உடுத்த வேண்டும்.

தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். வாரத்தில் சில மணிநேரம் உடற்பயிற்சி செய்வது விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்துவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

தவறான புரிதல்

உடற்பயிற்சி கூடங்களில் அதிக உடற்பயிற்சி செய்வது விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று ஒரு கட்டுக்கதை உள்ளது. ஆனால் இவை இரண்டிற்கும் நேரடி தொடர்பு இல்லை என்கிறார் மருத்துவர் அசோக் ஆனந்த்.

போதுமான தினசரி உடற்பயிற்சியின் காரணமாக, விந்தணுக்களின் எண்ணிக்கை நன்றாக இருக்கும். அதோடு, சரியான உணவுமுறையும் அவசியம் என்கிறார் அவர்.

மேலும், விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க உடற்பயிற்சி கூடத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கூறுகிறார்.

நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வது விந்தணு எண்ணிக்கையை பாதிக்காது, ஆனால் உட்கார்ந்திருக்கும் போது உங்கள் உடல் வெப்பநிலை அதிகரித்தால், அது விந்தணு எண்ணிக்கையை பாதிக்கும் என்று கூறும் மருத்துவர் அசோக் ஆனந்த், புகைபிடிப்பது கண்டிப்பாக விந்தணு எண்ணிக்கையை குறைக்கும் என்கிறார்.

“தொடர்ச்சியாக புகைப்பிடிப்பவர்களுக்கு நிச்சயம் விந்தணு எண்ணிக்கை குறைவாக இருக்கும். சிகரெட்டில் தீங்கு விளைவிக்கும் நிகோடின் உள்ளது. மேலும், புகைப்பிடிப்பதால் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது. இது விந்தணு எண்ணிக்கையை பாதிக்கும். எனவே, புகைப்பிடிப்பதை நிறுத்தினால் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்" என்கிறார் அவர்.

சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தமும் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையச் செய்கின்றன என்று மருத்துவர்களின் கருதுகின்றனர்.

மன அழுத்தத்திற்கும் விந்தணு எண்ணிக்கைக்கும் நேரடியான தொடர்பு இல்லை, ஆனால் கண்டிப்பாக மறைமுக தொடர்பு இருக்கிறது என்கிறார் பாலியல் நிபுணரும் மனநல மருத்துவருமான சாகர் முண்டாடா.

"நாள்பட்ட மன அழுத்தம் ஹார்மோன்களில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இது விந்தணுக்களின் எண்ணிக்கையை பாதிக்கும்" என்கிறார் மருத்துவர் முண்டாடா.

சூடான நீரில் குளிப்பது விந்தணு உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சூடான நீர் காரணமாக விதைப்பையின் வெப்பநிலை அதிகரிக்கிறது.

இதன் விளைவாக, விதைப் பைகள் விந்தணுக்களை உற்பத்தி செய்ய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இது மாதிரியான சூழல்களில் கூடுதல் அழுத்தம் காரணமாக விந்தணுவின் தரம் மோசமடையும். மேலும், அவற்றின் எண்ணிக்கையும் குறையும்.

மடிக்கணினியை நீண்ட நேரம் மடியில் வைத்திருப்பது விந்தணுக்களை பாதிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் எந்த ஆராய்ச்சியிலும் இதற்கான உறுதியான பதில் இல்லை என்கிறார் மருத்துவர் முண்டாடா.

ஆனால், தொடர்ந்து மடிக்கணினியை மடியில் வைத்து வேலை செய்யும் போது தொடைப்பகுதிகள் சூடாகும் என்பதால் சில விளைவுகளை அது ஏற்படுத்தலாம்.

சுய இன்பம் செய்வதும் விந்தணு எண்ணிக்கையை குறைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

“இது உண்மையல்ல. ஆனால், அதிகப்படியான சுய இன்பம் உடலுறவின் போது ஆண்குறி விறைப்புத்தன்மையை பாதிக்கும்" என்கிறார் மருத்துவர் முண்டாடா.

ஆண்களில் விந்தணுக்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்தால் மனித இனம் ஒரு நாள் அழிந்துவிடும் என்ற அதிர்ச்சித் தகவல் சில தினங்களுக்கு முன் ஹியூமன் ரீப்ரோடக்‌ஷன் அப்டேட் என்ற சஞ்சிகையில் வெளியானது.

இது குறித்து ஆராய்ந்து வரும் மருத்துவர் ஹகாய் லெவின் பிபிசியிடம் பேசுகையில், இது எதிர்காலத்தில் சாத்தியம் என்றும், இது கவலைக்குரிய விஷயம் என்றும் தெரிவித்தார்.

காணொளிக் குறிப்பு, உடல்நலம்: கீழ் முதுகு வலிக்கு என்ன காரணம், விடுபடுவது எப்படி?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: