விந்து ஒவ்வாமை: இதன் அறிகுறிகள் என்ன? பெண்களை இது எப்படி பாதிக்கிறது? பாலியல் உடல்நலம்

பட மூலாதாரம், Thinkstock
- எழுதியவர், பத்மா மீனாட்சி
- பதவி, பிபிசி தெலுங்கு
ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 26 வயதான பிரணதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தான் பழகிவந்த ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அவருடைய திருமண உறவு எதிர்பார்த்த மாதிரி செல்லவில்லை.
கணவருடனான முதல் உடலுறவிலேயே பிரணதியின் பிறப்புறுப்பில் எரிச்சலுடன் கூடிய தீவிரமான வலி மற்றும் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இது என்ன பிரச்னை என்பது அவருக்குப் புரியவில்லை.
"இதனை என் அம்மாவிடம் தெரிவித்தபோது, புதிதாகத் திருமணம் ஆனவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்னைதான் என்று கூறிக் கடந்து சென்றார்" என்கிறார் பிரணதி.
ஆனால், உடலுறவுக்குப் பின் ஏற்படக்கூடிய வலி காரணமாக, உடலுறவு குறித்து நினைப்பதே பிரணதிக்கு பயத்தை ஏற்படுத்தியது.


பிரணதியின் நிலைமை தாங்கிக் கொள்ள முடியாததாக இருந்தது. பிரணதியின் பிரச்னை குறித்து அவருடைய கணவருக்கும் புரியவில்லை. இதனால், தான் உடலுறவின் மீது ஆர்வம் காட்டவில்லை என கணவர் வருத்தம் அடைவதாக பிரணதி தெரிவித்தார்.
திருமணத்திற்கு பிறகு பிரணதி கணவருடன் லண்டனுக்கு சென்ற நிலையில், இதுகுறித்து பகிர்ந்துகொள்ள யாரும் இல்லாததால் அவருடைய பிரச்னை இன்னும் மோசமானது. அவருடைய பிரச்னை அவசர சிகிச்சைக்கான தேவை இல்லாத பிரிவில் இருப்பதால், பொது மருத்துவரை சந்திப்பதற்கான முன் அனுமதியை பெறுவதும் சிரமமாகியுள்ளது.
சரியான நோய் கண்டறிதலை மேற்கொள்ளாமல் மாறாக அவருக்கு சிறுநீர்ப்பாதை தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வழங்கப்பட்ட மருந்துகளும் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை.
"என்னுடைய பாலியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக நினைத்தேன்," என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
"மருத்துவரின் முன் அனுமதிக்காக வாரக் கணக்கில் காத்திருந்து, மருந்துகளை வாங்க வழியில்லாமல், நான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டேன்" என்றார் பிரணதி.
"என்னுடைய பிரச்னையை புரிந்துகொள்ள யாரும் இல்லாத நிலையில் நான் தனிமையாக உணர்ந்தேன்" என அவர் தெரிவித்தார்.
"சில சந்தேகங்கள் வளர்ந்தன. என் கணவரின் உடல் தேவைகளை என்னால் பூர்த்தி செய்ய முடியாததால் அவர் எனக்கு துரோகம் இழைத்துவிடுவாரோ என வருந்தினேன்" என்றார்.
"என் திருமணத்தின் ஆரம்ப நாட்கள், இனிமை மிகுந்த நினைவுகளைவிட கசப்பான நினைவுகளையே அளித்தன".
அவரின் பிரச்னைக்கு தீர்வு கண்டறிய முடியாத நிலையில், தேவையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள அவர் இந்தியா வந்தார்.
அவருக்கு 'விந்து ஒவ்வாமை' (semen alergy) இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. முதன்முறையாக அந்த வார்த்தையை அவர் கேட்பதால், அதுகுறித்து அவர் ஆச்சர்யப்பட்டார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் உடலுறவுக்குப் பின் தீவிர ஒவ்வாமை ஏற்பட்டதையடுத்து அவருக்கும் இதே மாதிரியான பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டது.
விந்து ஒவ்வாமை என்றால் என்ன?
விந்து ஒவ்வாமை குறித்து விசாகப்பட்டினத்தில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனையின் இம்யூனாலஜி பிரிவின் முன்னாள் தலைவரும் ஆந்திர பல்கலைக்கழகத்தின் மைக்ரோ பயாலஜி பிரிவின் பேராசிரியருமான மருத்துவர் அப்பாராவ் பிபிசிக்கு விளக்கினார்.
"விந்து அலர்ஜி என்பது ஹியூமன் ஹைப்பர் சென்சிட்டிவிட்டி (ஹெச்.எஸ்.பி) என்றும் அறியப்படுகிறது. இது ஆண்களின் விந்தணுக்களில் காணப்படும் புரதங்களால் ஏற்படும் ஓர் ஒவ்வாமை எதிர்வினையாகும். இது உடலுறவில் உச்சகட்டத்திற்கு பிந்தைய நோய்க்குறி என அறியப்படுகிறது. இது ஓர் ஆன்டிபாடி, ஆன்டிஜென் எதிர்வினை, இது பெண்களை அதிகம் பாதிக்கிறது," என அவர் விவரித்தார்.

பட மூலாதாரம், Getty Images
அறிகுறிகள் என்னென்ன?
உடலுறவுக்குப் பின்னர் பிறப்புறுப்பு சிவந்துபோதல், எரிச்சல், வீக்கம், வலி, படை போன்றவை ஏற்படும். உடலுறவுக்குப் பின் 20-30 நிமிடங்களில் பெண்ணின் சினைப்பை அல்லது பிறப்புறுப்பில் இந்த அறிகுறிகள் ஏற்படும்.
ஹைதராபாத்தில் ஒரு பெண்ணுக்கு இப்பிரச்னை கண்டறியப்பட்டதில், அவருக்கு உடலுறவுக்குப் பின் 30 நிமிடங்கள் முதல் 6 மணிநேரம் வரை இந்த ஒவ்வாமை அறிகுறிகள் தோன்றியுள்ளன.
"பிறப்புறுப்பில் மட்டும் இத்தகைய அறிகுறிகள் ஏற்படுவதில்லை. விந்தணு படும் எந்த உடல் பாகத்திலும், அதாவது கை, வாய், சிறுநீர் பாதை, மார்பகம் போன்றவற்றிலும் ஏற்படலாம்," என விளக்குகிறார் மருத்துவர் அப்பாராவ்.
சிலருக்கு சளி, தும்மல் போன்ற வடிவங்களிலும் அறிகுறிகள் வெளிப்படும்.

பட மூலாதாரம், Thinkstock
இப்பிரச்னை மோசமானால் அனஃபிலாக்சிஸ் என்ற பாதிப்பு ஏற்படும். இதனால் மூச்சுவிடுதலில் சிரமம், மூச்சுத்திணறல், தொண்டை வீக்கம், பலவீனமான அல்லது வேகமான நாடித்துடிப்பு, மயக்கம், குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படும்.
"பலரும் தங்களுக்கு விந்து ஒவ்வாமை இருப்பதை உணர மாட்டார்கள், இதற்கு மருத்துவரை சந்திக்கவும் தயங்குவார்கள்" என்கிறார் அப்பாராவ்.
ஒவ்வாமை இருப்பதை எப்படி கண்டறிவது?
உடலுறவுக்குப் பின் வழக்கத்திற்கு மாறான இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால், அதனை சிறுநீர் பாதை தொற்று அல்லது பிறப்புறுப்பு அழற்சி என்றே கருதுகின்றனர்.
"விந்து ஒவ்வாமை ஏற்படும் ஒரு பெண் வேறோரு துணையுடன் உடலுறவு கொள்ளும்போதும் அதே அறிகுறிகளை உணர வேண்டும் என்பதில்லை. ஒருவருடன் உடலுறவு கொள்ளும்போது மட்டும் இத்தகைய அறிகுறிகள் தோன்றுகின்றன, அல்லது வேறொருவருடன் அவ்வாறு இல்லை என்றால், அப்பெண்ணின் துணையும் மருத்துவ ஆலோசனைக்கு செல்ல வேண்டும்" என்கிறார் அவர்.


பிறப்புறுப்பு அழற்சியால் பாதிக்கப்படுபவருக்கும் பிறப்புறுப்பில் வீக்கம், அரிப்பு, திரவம் வெளியேறுவது போன்ற அறிகுறிகள் ஏற்படும் என, மயோ கிளீனிக் அளித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருவர் உடலுறவில் ஈடுபட்டதற்கு பின்னரே விந்து ஒவ்வாமை ஏற்படும். இதனை கண்டறிவதற்கு பரிசோதனை உண்டு. விந்து ஒவ்வாமை உடலுறவால் பரவக்கூடிய நோய் அல்ல.

பட மூலாதாரம், Getty Images
விந்து ஒவ்வாமைக்கு என்ன சிகிச்சை உள்ளது?
விந்து ஒவ்வாமை தீவிரமாக இருந்தால், ஆணுறை அணிவதே உடனடி தீர்வாகும் என, மருத்துவர் அப்பாராவ் தெரிவிக்கிறார்.
ஆன்டிஹிஸ்டமைன் மாத்திரையை உடலுறவுக்கு முன்னர் எடுத்துக்கொள்ளுமாறு அவர் பரிந்துரைக்கிறார். ஆனால், இது உடல் பரிசோதனை மற்றும் மருத்துவர் அறிவுரைக்குப் பின்னரே எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒவ்வாமையைக் கண்டறிவதற்கான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கென சிறப்பு மருத்துவரை சந்திக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைக்கிறார்.
ஒவ்வாமையின் அளவு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஒரே மாதிரி இருக்காது என்றும், ஒருவருடைய நோயெதிர்ப்பு சக்திக்கு ஏற்ப மாறுபடும் என்றும் விளக்குகிறார் மருத்துவர் அப்பாராவ்.
"கர்ப்பம் அடைய வேண்டும் என விரும்புபவர்கள், அதற்கான சிறப்பு மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்," என அவர் அறிவுறுத்துகிறார்.

பட மூலாதாரம், Getty Images
பாலியல் வாழ்க்கையை பாதிக்குமா?
ஹைதராபாத்தை சேர்ந்த தம்பதிக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் கழித்தும் குழந்தை இல்லாததால், மருத்துவர்களை ஆலோசித்தபோது, அவருக்கு செமன் ஹைப்பர் சென்சிட்டிவிட்டி ரியாக்ஷன் இருப்பது கண்டறியப்பட்டது.
எனினும், அந்த பெண்ணின் கணவருக்கும் சிறுவயதில் இருந்து ஆஸ்துமா, தடிப்புகள், நாசியழற்சி இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால், உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகள் ஏற்படுவதைத் தடுக்க வீட்டிலேயே சில ஊசிகளை வைத்துக்கொள்ள அத்தம்பதிக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
பிரணதியும் அவரது கணவரும் இப்பிரச்னைக்காக சிகிச்சை எடுத்துவருகின்றனர். மூன்று மாதங்களுக்கு மருந்துகள் எடுத்துக்கொண்ட பின்னர் பிரணதிக்கு இப்பிரச்னை சரியாகியுள்ளது. இரு குழந்தைகளும் அவருக்கு பிறந்துள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













