உடலுறவில் உடல்நலம்: இன்பமும் பாதுகாப்பும் அடைவது பற்றி உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது என்ன?

ஆணுறை பயன்படுத்துவது பாதுகாப்பானது

பட மூலாதாரம், Getty Images

உடலுறவில் இன்பத்தை அடைவது பற்றி அனைவருக்கும் கற்பிப்பது மூலம் பாதுகாப்பான உடலுறவு பற்றிய செய்திகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய ஆய்வில் பாதுகாப்பற்ற உடலுறவால் ஏற்படும் ஆபத்துகளை கூறும் விழிப்புணர்வு பிரசாரங்களைவிட, உடலுறவில் இன்பத்தை அடைவதற்கான வழிமுறைகளை மையப்படுத்தி செய்யக்கூடிய பிரசாரங்கள் மூலம் ஆணுறையின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.

படபடப்பை ஏற்படுத்தக்கூடிய செய்திகளை விட, மகிழ்ச்சியை மையப்படுத்தும்போது அது ஆரோக்கியமான அணுகுமுறையாக இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இந்த ஆராய்ச்சி ஆய்வாளர்கள் கூறும்போது, உடலுறவு பாதுகாப்பாக இருக்கும் அதே நேரத்தில் மகிழ்ச்சியானதாகவும் இருக்கக்கூடியது என குறிப்பிடுகின்றனர்.

ஒவ்வோர் ஆண்டும், பாலியல் மற்றும் இனப்பெருக்க நலம் தொடர்பான சேவைகளுக்காக பலகோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. ஆனால் இத்தகைய சேவைகளைில், எதற்காக மக்கள் அனைவரும் உடலுறவு கொள்கிறார்கள் என்பதன் காரணத்தை சொல்வதில்லை. அடிப்படையில் உடலுறவு கொள்வதற்கான காரணமாக இருப்பது 'நல்ல உணர்வை உடலுறவு கொள்பவருக்கு ஏற்படுத்துவது' என்பதே.

கடந்த 2004ஆம் ஆண்டில், பொது சுகாதார நிபுணரான ஆன் பில்பாட் உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து 'தீ ப்ளஷர் பிராஜக்ட்' என்ற குழுவை நிறுவினார். பல்வேறு உடலுறவு விழிப்புணர்வு முகாம்களில் மக்கள் எதற்காக உடலுறவு கொள்கிறார்கள் என்பதை பற்றிப் பேசுவதில்லை. இதன் விளைவாகத்தான் இது நிறுவப்பட்டது.

அவர் கூறுகையில், "மக்கள் அனைவரும் உடலுறவு கொள்வதற்கான காரணம், அது "இன்பத்தை தருகிறது" என்பதால் மட்டுமே. ஆனால் உடலுறவு விழிப்புணர்வு முகாம்களில் இது சொல்லப்படுவது இல்லை. அதேபோல உடலுறவு விழிப்புணர்வு முகாம்களில் பங்கெடுக்கும் பயனாளர்கள் விழிப்புணர்வு முகாம்களின் மூலம் உறவு மற்றும் பாலியல் வாழ்க்கை மேம்படுவதற்கான எந்த பயனையும் அடைவதில்லை என்று கூறுவர். உடலுறவு பற்றிய வெளிப்படையான உரையாடல் மூலமாக தான் உடலுறவு பற்றிய உண்மையான புரிதல் அனைவருக்கும் ஏற்படும்" என்று கூறினார்.

ஒவ்வொரு நாளும் பல லட்சம் பேர் உலகளவில், பால்வினை நோய்த் தொற்றுகளால் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள், இவர்களில் பெரும்பாலானோர் அறிகுறிகள் இல்லாமல் பாதிக்கப்படுகிறார்கள் . ஆணுறை பயன்படுத்துவதன் மூலம் இப்படியான தொற்றை தவிர்க்கலாம். அத்துடன் கர்ப்பமாவதை தடுக்க முடியும் . எனவே ஆணுறையை 'ப்ளஷர் டூல்' என்ற பட்டியலின் கீழ் விற்க வேண்டும் என்றார் ஆன்.

காணொளிக் குறிப்பு, செக்ஸுவல் ஃபேண்டஸி: பாலியல் கற்பனை குறித்து மருத்துவர் ஜெயராணி காமராஜ் விளக்கம்

உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வாளர்கள் பல்வேறு மருத்துவ கட்டுரைகளை ஆராய்ந்து, சமீபத்தில் நடந்த பாதுகாப்பான உடலுறவு விழிப்புணர்வு நிகழ்வுகள் மற்றும் அதனால் ஏற்பட்ட மாற்றங்களை ஆராய்ந்தனர்.

இதில் 33 திட்டங்கள், பாதுகாப்பான உடலுறவு செய்தியுடன் சேர்த்து இன்பத்தைப் பற்றி கூறுவதை மையமாக கொண்டுள்ளன. இவை, உடலுறவால் ஏற்படும் தொற்றுகள் மற்றும் அதன் ஆபத்துகளை குறைப்பதை மையமாகக் கொண்ட மற்ற விழிப்புணர்வு நிகழ்வுகளை விட, ஆணுறை பயன்பாட்டை அதிகப்படுத்தியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

உறவு கொள்வதற்கான ஒப்புதல், நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுடன் இன்பம், ஆசை மற்றும் மகிழ்ச்சியைப் பற்றி கற்பிப்பது இன்பம் சார்ந்த பாலியல் கல்வித் திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை ப்ளோஸ் ஒன் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான லியான் கோன்சால்வ்ஸ் கூறும்போது "இந்த ஆய்வின்படி விழிப்புணர்வு முகாம்களில், எதற்காக உடலுறவு மேற்கொள்கிறோம் என்ற கருத்தை சொல்வதன் மூலம் ஆரோக்கியமான பலன்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் இனிவரும் காலங்களில் நடத்தக்கூடிய உடலுறவு விழிப்புணர்வு முகாம்களில் எதற்காக உடலுறவு கொள்கிறோம் என்பது வலியுறுத்தப்படும்" எனக் குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: