உடலுறவும் உடல் நலமும்: இதயத்துக்கும் ஆணுறுப்பு விரைப்புத் தன்மைக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?

பட மூலாதாரம், Getty Images
நீண்ட நேரம் பாலுறவு கொள்வதற்கும், பாலியல் ஆசைகளைத் தூண்டுவதற்கும் பலவிதமான மாத்திரைகளையும், மருந்துகளையும் பலரும் எடுத்துக் கொள்கிறார்கள். இதில் பல மருந்துகள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் மருந்துகளும் இருக்கின்றன என மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.
உண்மையில் பாலுணர்வைத் தூண்டுவதற்கும், ஆற்றலை அதிகரிப்பதற்கும் மருந்துகள் தேவையா, அத்தகைய ஏற்படும் பலன்கள், பக்க விளைவுகள் என்னென்ன? இதுபோன்ற பல்வேறு சந்தேகங்கள் குறித்து பிபிசி தமிழுக்காக ஹேமா ராகேஷிடம் பாலியல், மகப்பேறு மருத்துவர் ஜெயராணி காமராஜ் அளித்த பேட்டியின் உரை வடிவம்.
பாலுணர்வைத் தூண்டுவதற்கு என்னென்ன மருந்துகள் பயன்படுத்தப் படுகின்றன?
நீண்ட நேரம் உடலுறவு கொள்ள வேண்டும், ஆர்வமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பாலியல் மாத்திரைகள், மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்கள். பொதுவாக மேம்பட்ட உடலுறவுக்கு உடலும் மனமும் ஒத்துழைக்க வேண்டும். இதனால் சில மருந்துகள் உடல் ரீதியாக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாமல், பிளாசிபோ எனப்படும் போலி விளைவுகளைத் தரக்கூடியவையாக இருக்கலாம்.
தற்காலத்தில் பாலுணர்வைத் தூண்டுவதற்காக அதிகமாக எடுத்துக் கொள்ளப்படுவது ஆல்கஹால். மது குடிக்கும்போது எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்ற உணர்வு குறைவதால், பாலியல் ரீதியான ஆசை அதிகரிக்கிறது. இதற்காகவே பலரும் ஆல்ஹகாலை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் அதுவே அளவுக்கு அதிகமாகும்போது பாலுணர்வு குறைந்து போகிறது. ஆற்றலும் குறைகிறது.
அடுத்ததாக மிகவும் தவறாக இருக்கும் பழக்கம் கொகைன் போதை மருந்து. குறிப்பாக கல்லூரி மாணவர்கள் வார இறுதி நாள்களில் பாலுணர்வுக்காக கொகைன் உள்ளிட்ட போதை மருந்தை எடுத்துக் கொள்கிறார்கள். இது மிகவும் தவறான பழக்கம்.
பாலுணர்வைத் தூண்டும் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுத்துக் கொள்ளலாமா?
உடலில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதை மருத்துவர்களிடம் ஆலோசித்து அதற்கேற்ப மருந்துகளை எடுப்பது சிறந்த நடைமுறை. எந்தக் குறைபாடும் இல்லாதவர்களும், பாலியல் திறனை மேம்படுத்துவதற்காக மருந்துகளை நாடுகிறார்கள். ஆனால் அதுவும் மருத்துவரின் ஆலோசனையின்படி இருப்பது நல்லது.

புள்ளிவிவரங்களின்படி உலகம் முழுவதும் 38 சதவிகித ஆண்டுகளுக்கு ஆணுறுப்பு விரைப்புத் தன்மை குறைபாடு இருக்கிறது. 41 சதவிகித பெண்களுக்கு பாலியல் பிரச்னைகள் இருக்கின்றன. இந்தக் குறைபாடுகளுக்காக மருத்துவர்களிடம் வரும்போது அவர்களது உடல் குறைபாடுக்கு ஏற்பட மருந்துகளும், உளவியில் பிரச்னைகளைத் தீர்க்க ஆலோசனைகளையும் வழங்குவார்கள். அதனால் பிரத்யேகமாக பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். அப்படியில்லாமல் மற்றவர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளையே எடுத்துக் கொள்வது தவறு.
மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் என்னென்ன பின்விளைவுகள் ஏற்படும்?
சில அங்கீகரிக்கப்பட்ட மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமலேயே கடைகளில் வாங்கலாம். உதாரணத்துக்கு வயாக்ரா. இந்த மருந்து பாலியல் திறனை மேம்படுத்தும் என்பது பொதுவாக அறியப்பட்ட ஒன்று.
பலர் அங்கீகரிக்கப்படாத மருத்துவர்களையும், விளம்பரங்களையும் நம்பி பலவிதமான பொருள்களை வாங்கிச் சாப்பிடுகின்றனர். மேலும் பலர் நேரடியாக கடைகளில் மருந்துகளை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். இவையும் பெரும்பாலும் பெரிய அளவிலான பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதில்லை. காரணம் அவை எந்த விதமான மாற்றத்தையும் உடலில் ஏற்படுத்தாததுதான்.

பட மூலாதாரம், Getty Images
பாலுணர்வு ஆசை மற்றும் பாலியல் திறன் ஆகியவை பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இப்போது எந்த அளவு இருக்கிறது?
பாலியல் ரீதியிலான குறைபாடு இருப்பதற்குக் காரணமே அறியாமைதான். ஒரு காலத்தில் சுய இன்பம் செய்து கொள்வதே தவறு, அதனால் ஆண்மை பறிபோய்விடும் என்ற கருத்து இருந்து வந்தது. இப்போது அது பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.
நாற்பது வயதை அடைந்து விட்டால், விரைப்புத் தன்மை குறையும்போது இனி எதுவும் செய்ய முடியாது என்று பலரும் நினைக்கிறார்கள். உண்மையில் விரைப்புத் தன்மைக்கும் இதயத்துக்கும் தொடர்பு இருக்கிறது. இதயப் பிரச்னைக்கான அறிகுறி இது. ஆணுறுப்புகச் செல்லும் ரத்தக் குழாயும், இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாயும் நேரடியாகத் தொடர் கொண்டவை. அதனால் இதயத்தில் ஒரு பிரச்னை என்றால் அது ஆணுறுப்பில் தெரிந்துவிடும். முன்னைவிட தற்காலத்தில் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.
பாலியல் திறனை மேம்படுத்துவதற்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் என்னென்ன?
ஆண்களுக்கு பெரும்பாலும் வயாக்ரா. இதில் நான்கு கட்டங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கட்டத்திலும் உடல்நிலையைப் பரிசோதித்து அதற்கேற்ப மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. முன்கூட்டியே விந்து வெளியேறுவதற்கு சில பயிற்சி முறைகளும் மருந்துகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.
இந்த பேட்டியின் காணொளி வடிவை இங்கே பார்க்கலாம்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












