உணவு, உடலுறவு, உடல்நலம்: உடற்பயிற்சியும் வாழைப்பழமும் பாலியல் திருப்தியை அடைய உதவுமா?

உடற்பயிற்சி

பட மூலாதாரம், Getty Images

(பாலியல் உடல்நலம் தொடர்பாக பிபிசி தமிழ் வெளியிட்டு வரும் தொடரின் 7-வது கட்டுரை இது)

பாலுறவு ஆசையும், திறனும் குறைவாக இருக்கும் ஆண்களும் பெண்களும் அவற்றைத் தூண்டுவதற்காக பலவகையான வழிமுறையைக் கடைப்பிடிக்கின்றனர்.

அடிப்படையில் இவை பலன் தருகின்றனவா, முறையாகப் பாலுணர்வையும் திறனையும் அதிகப்படுத்து என்னென்ன வழிமுறைகள் இருக்கின்றன, மனநலனும் உடற்பயிற்சியும் எந்த அளவுக்குப் பங்கு வகிக்கின்றன என்பன உள்ளிட்ட கேள்விகள் எழுகின்றன.

இவை தொடர்பாக பிபிசி தமிழுக்காக ஹேமா ராகேஷிடம் பாலியல், மகப்பேறு மருத்துவர் ஜெயராணி காமராஜ் அளித்த பேட்டியின் உரை வடிவம்.

பழங்காலத்தில் பாலுணர்வைத் தூண்டுவதற்காக என்னென்ன உணவுகள் அல்லது மருந்துகளை எடுத்துக்கொண்டனர்?

இந்திய, கிரேக்க பழங்கால நாகரிகத்தில் பாலுணர்வைத் தூண்டுவதற்கு புளித்த திராட்சை ரசத்தைப் பயன்படுத்தியிருக்கின்றனர். இது பலன் தருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. சில மரப்பட்டைகள், வேர்கள் போன்றவையும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

தற்காலத்தில் பயன்படுத்தப்படும் பட்டை, லவங்கம் போன்றவையும் பாலுணர்வைத் தூண்டுவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. ரோம நாகரிகத்தில் திமிலங்கத்தின் விந்து உற்பத்தி செய்யும் உறுப்பை எடுத்து பொடியாக்கி சாப்பிட்டதாக தகவல்கள் இருக்கின்றன. ஆனால் இதற்கான ஆய்வுகள் எதுவும் இல்லை.

ஆண்களுக்கு வயாகரா போல பெண்களுக்கு பாலுணர்வைத் தூண்டுவதற்கான மருந்துகள் ஏதேனும் இருக்கின்றனவா?

மருந்துகளை வாங்கும்போது அது அங்கீகரிக்கப்பட்டதா என்று தெரிந்து கொள்வது அவசியம். பெரும்பாலும் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து முகமை (FDA) அங்கீகரிக்கும் மருந்துகள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன. வயாகராவை இந்த அமைப்பு அங்கீகரித்திருக்கிறது.

பெண்களுக்கு பாலியல் விருப்பம் குறைந்திருப்பது, ஆசை இல்லை என்பது போன்ற பிரச்னைகள் இருக்கின்றன. ஆனால் பெண்களுக்கு FDA-வால் அங்கீகரிக்கப்பட்ட எந்த மருந்தும் இல்லை.

உடற்பயிற்சி

பட மூலாதாரம், Getty Images

பெண்களின் பாலியல் விருப்பத்தைத் தூண்டுவதற்காக டெஸ்ட்ரோஜன் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் இதற்கு FDA அமைப்பு இன்னும் அனுமதி அளிக்கவில்லை.

ஏனெனில் இதனால் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும், எந்த அளவுக்கு பலன் கிடைக்கிறது, எந்த அளவு கொடுக்கப்பட வேண்டும் என்பது பற்றிய விரிவான ஆராய்ச்சிகள் இல்லை.

பெண்கள் பாலுறவில் திருப்தியடைவதற்கு மன, உடல் ரீதியாக எந்தெந்த வகையில் தயாராக இருக்க வேண்டும்?

உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் மனம் ஆரோக்கியமாக இருக்கும். மனம் ஆரோக்கியமாக இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இரண்டும் ஒன்றுக்கொண்டு தொடர்பு கொண்டது. மனமும் உடலும் ஆரோக்கியமாக இருந்தால்தான் பாலியல் உறவு மகிழ்ச்சியாக இருக்கும்.

உடற்பயிற்சி

பட மூலாதாரம், Getty Images

அதனால் உடலுறவுக்கு நலமான உடல் அவசியம். இதற்கு உடற்பயிற்சி அவசியம். வேலைக்குச் செல்லும், வீட்டில் இருக்கும் நிறையப் பெண்கள் வேலைகளுக்கு இடையே எப்படி உடற்பயிற்சி செய்வது என கேட்கின்றனர்.

ஆனால் உடற்பயிற்சி செய்யும்போது உடலின் அனைத்துச் தசைகளும் ஆரோக்கியமாக இயங்கும்போது "என்டார்ஃபின்" என்ற நல்ல ஹார்மோன் உற்பத்தியாகிறது. இது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. உணர்வுகளைத் தூண்ட இது பயன்படுகிறது.

வீட்டு வேலைகளைச் செய்தால் போதும், அதைவிட வேறு என்ன உடற்பயிற்சி வேண்டும் என்று பெண்கள் நினைக்கிறார்களே?

வீட்டு வேலைகளைச் செய்தாலும், உடல் ரீதியாக ஒரு நடனம், ஒரு ஏரோபிக் உடற்பயிற்சி போன்ற ஏதாவது ஒன்றை பெண்கள் செய்ய வேண்டும். இரண்டாவது மன அழுத்தத்தை கையாள பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டும். மன அழுத்தம் இருக்கும்போது பாலுறவு தொடர்பான எண்ணமே வராது.

மன அழுத்தத்துக்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து அதைப் போக்க முயற்சிக்க வேண்டும். பொருளாதாரப் பிரச்னை, குழந்தைகள் படிப்பு என எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு நிரந்தரத் தீர்வைக் கண்டுபிடித்து மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் மூலமாக பாலுணர்வைத் தூண்ட முடியும். பின்னர் அதுவே பிரச்னைகளுக்குத் தீர்வாகவும் அமையும். எனவே உடற்பயிற்சிக்கு நேரத்தை ஒதுக்குவது அவசியம்.

உடற்பயிற்சி

பட மூலாதாரம், Getty Images

தேவையில்லாத மருந்துகளை எடுத்துக் கொள்ளவே கூடாது. ஆரோக்கியமான, இயற்கையான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தக் காலத்தில் புதுமணத் தம்பதிகளுக்கு பாலும் பழமும் கொடுக்கப்பட்டது.

ஏனென்றால் வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது. பாலில் கால்சியம் இருக்கிறது. அதேபோல் Nuts எனப்படும் கொட்டைவகைகளைச் சாப்பிடலாம். இவை இயற்கையான பாலியல் தூண்டுதலுக்கு உதவும்.

உடல் ரீதியாக எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அவற்றை உடனடியாகச் சரி செய்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் இரண்டாவது, மூன்றாவது தேனிலவுகூடச் செல்லலாம். இது பாலியல் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும்.

முழுமையான பேட்டி:

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: