தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இட ஒதுக்கீடு மாற்றங்களைக் கொண்டுவருமா?
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR / GETTY IMAGES
தமிழ்நாட்டில் விரைவில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முக்கியமான மாநகராட்சிகள் பட்டியலினத்தவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன் முக்கியத்துவம் என்ன?
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்ட நிலையில், விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், எந்தெந்த மாநகராட்சிகள் பட்டியலினத்தவருக்கும் பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என்ற அறிவிப்பு தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 1996ஆம் ஆண்டின் தமிழ்நாடு டவுன் பஞ்சாயத்து, முனிசிபாலிடி மற்றும் மாநகராட்சிகளுக்கான விதிகளின்படி இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, சென்னை மாநகராட்சி, தாம்பரம் மாநகராட்சியின் மேயர் பதவிகள் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆவடி மாநகராட்சியின் மேயர் பதவி பட்டியலின வேட்பாளருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், சிவகாசி, காஞ்சிபுரம், மதுரை, கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய ஒன்பது மாநகராட்சிகள் பொதுப் பிரிவில் பெண்களுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை, அதில் உள்ள 200 வார்டுகளில் 16 வார்டுகள் பட்டியலினத்தவருக்கென பொதுவாகவும் 16 வார்டுகள் பட்டியலினப் பெண்களுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்படடுள்ளன. மேலும், 84 வார்டுகள் பொதுப் பிரிவினரில் பெண்களுக்கு என்றும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தற்போது செய்யப்பட்டுள்ள இடஒதுக்கீடு அறிவிப்பு மிக முக்கியமானது என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான து. ரவிக்குமார்.

பட மூலாதாரம், Ravi Kumar facebook
"உள்ளாட்சித் தேர்தல்களில் இட ஒதுக்கீடு என்பதைப் பொறுத்தவரை, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு செய்யும்போது, தமிழ்நாட்டை ஒரே அலகாக எடுத்துக்கொண்டு எந்தெந்த நகரங்களில் அதிகம் பட்டியலினத்தவர் வசிக்கின்றனர் என்பதன் அடிப்படையில் ஒரு பட்டியல் உருவாக்கப்படும். மக்கள் தொகையில் அதிக பட்டியலினத்தவர் வசிக்கும் மாநகராட்சி முதலிடத்திலும் மிகக் குறைவாக பட்டியலினத்தவர் வசிக்கும் மாநகராட்சி கடைசி இடத்திலும் இருக்கும்படி பட்டியல் உருவாக்கப்படும்.
அதன்படி பார்க்கும்போது சென்னையில் எப்போதுமே பட்டியலினத்தவர் எண்ணிக்கை அதிகம். அதனால்தான், முனுசாமிப் பிள்ளை, என். சிவராஜ், வை. பாலசுந்தரம் போன்றவர்கள் தொடர்ச்சியாக இங்கே மேயர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால், சென்னை தலைநகராக இருப்பதால், ஒருகட்டத்தில் பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட நிலை மாறியது.
1990களில் பஞ்சாயத்து ராஜ் சட்டம் அமல்படுத்தப்பட்டபோது, தேர்தல் அரசியலுக்கு வராத நிலையிலேயே இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போராட்டம் எல்லாம் நடத்தியது. தேர்தல் அரசியலுக்கு வந்த பிறகும் இது தொடர்பாக கோரிக்கை வைத்தோம்.
பிறகு, 2006ல் இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். சென்னை நகர மேயர் பதவியை பட்டியலினத்தவருக்கு ஒதுக்க வேண்டும். துணைத் தலைவர் பதவிகளிலும் இட ஒதுக்கீடு வேண்டுமென அந்த வழக்கில் கோரப்பட்டது.

2016ல் இந்த வழக்கில் தீர்ப்பு வந்தபோது, இது தொடர்பாக அரசு பரிசீலிக்க வேண்டுமென கூறி, வழக்கு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில்தான் இப்போது தமிழ்நாடு அரசு சென்னையையும் தாம்பரத்தையும் பட்டியலினத்தவருக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. இது ஒரு மிக முக்கியமான முடிவு" என்கிறார் ரவிக்குமார்.
சென்னையில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் 32 வார்டுகள் பட்டியலினத்தவருக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதால் சுமார் 16 சதவீதம் பேர் இங்கே பட்டியலினத்தவர் எனப் புரிந்துகொள்ளலாம் என்கிறார் அவர். இதில் ஐம்பது சதவீத இடங்கள் பட்டியலினப் பெண்களுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும் என்கிறார் உள்ளாட்சி அமைப்புகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டிருக்கும் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் க. பழனித்துரை.
"இந்தியாவில் எத்தனை அரசமைப்புகள் என்று கேட்டால் எல்லோரும் மத்திய அரசு - மாநில அரசு என இரு அரசுகள் இருப்பதாகச் சொல்வார்கள். ஆனால், அரசியலமைப்புச் சட்டங்களில் செய்யப்பட்ட திருத்தங்களின் மூலம் உள்ளாட்சி அமைப்புகளும் ஓர் அரசுதான்.
இந்தியா போன்ற ஆணாதிக்க சமூகத்தில் குடியரசுத் தலைவர் போன்ற பெரிய பதவிகளை பெண்களுக்கு எளிதாகக் கொடுத்துவிடுவார்கள். ஆனால், கீழ் மட்டத்தில் மக்களுடன் புழங்கக்கூடிய பதவிகளை எளிதில் பெண்களுக்குத் தர மாட்டார்கள். ஆனால், தற்போது செயல்படுத்தப்படும் 50 சதவீத இட ஒதுக்கீட்டின் காரணமாக, பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளில் பெருமளவில் பங்கேற்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இது சமூகத்தில் மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்கும்" என்கிறார் பழனித்துரை.
சமூகத்தில் நாம் தினந்தோறும் சந்திக்கும் எல்லாப் பிரச்னைகளிலும் பெண்களுக்கு என தனித்த பார்வைகள் உண்டு. "குறிப்பாக தண்ணீர் பிரச்னையை எடுத்துக்கொண்டால், அதனை பெண்கள் அணுகும்விதம் வேறு, ஆண்கள் அணுகும்விதம் வேறாக இருக்கும். இதுபோலத்தான் எல்லா பிரச்சனைகளிலும் பெண்களுக்கென தனித்த பார்வை உண்டு. அவர்கள் அந்தப் பார்வையுடன் செயல்படும்போது அது சமூகத்தில் மிகத் தீவிரமான மாற்றங்களைக் கொண்டுவரும்.
பல இடங்கள் பட்டியலினப் பெண்களுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் இருவிதங்களில் ஒடுக்கப்பட்டவர்கள். அவர்கள் அதிகாரத்திற்கு வரும்போது அர்த்தமுள்ள மாற்றங்களைக் கொண்டுவருவார்கள். அந்த வகையில் இந்த ஒதுக்கீடு மிக முக்கியமானது" என்கிறார் பழனித்துரை.

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு என இடங்களை ஒதுக்கீடுசெய்தால், அவர்களை முன்னிறுத்தி ஆண்களே ஆதிக்கம் செலுத்தியதாக குற்றச்சாட்டுகள் முன்பிருந்தன. "அது இப்போது மாறி வருகிறது. துவக்கத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு என இட ஒதுக்கீடு வந்தபோது, பல இடங்களில் அவர்களது கணவர்கள் பதவியேற்றுக்கொண்ட சம்பவங்கள் எல்லாம் நடந்தன. தங்கள் கணவர்களின் செல்வாக்கைப் பயன்படுத்தும் விதமாக, அவர்களது பெயர்களை தங்கள் பெயருக்குப் பின்னால் சேர்த்துக்கொள்ளும் போக்கும் துவங்கியது. ஆனால், தற்போது பெண்கள் சுயமாக முடிவெடுக்கும் சூழல் பல இடங்களில் ஏற்பட்டிருக்கிறது" என்கிறார் ரவிக்குமார்.
இந்த உள்ளாட்சித் தேர்தலில் உள்ள வேறு சில பிரச்னைகளையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். "மேயர் போன்ற பதவிகளுக்கு மீண்டும் நேரடித் தேர்தல் முறையைக் கொண்டுவர வேண்டும். இந்த மறைமுகத் தேர்தல் இருக்கும்வரை, அந்தப் பதவிகள் பெரும்பாலும் தி.மு.க. - அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுக்கே கிடைக்கும். சிறிய கட்சிகள் தலைவர் பதவிக்கு வர முடியாது. இது மாற வேண்டும்" என்கிறார் ரவிக்குமார்.
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு என ஐம்பது சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு நடக்கும் முதல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இது. "எந்த ஓர் இடத்திலும் எதாவது ஒரு பிரிவினர் 10 சதவீதத்திற்கு மேல் இருந்தால், அவர்களால் அங்கு மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பது நிரூபிக்கப்பட்ட ஒரு கருதுகோள். இப்போது பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பிறகும் மாற்றம் வரவில்லையெனில், சமூகத்தில் வேறு ஏதோ பிரச்னை இருக்கிறது என்று பொருள். மாற்றம் வந்தே ஆக வேண்டும்" என்கிறார் பழனித்துரை.
பிற செய்திகள்:
- மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: இலங்கை பல்கலைக்கழக விரிவுரையாளர் இடைநீக்கம்
- கொரோனா வைரசின் 'கவலைக்குரிய' திரிபுகள் குறித்த முக்கிய தகவல்கள்
- பசிபிக் டோங்கா, தென் அமெரிக்காவை சுனாமி தாக்கியது - மீட்புப் பணிகள் துரிதம்
- பிர்ஜு மகராஜ் : கமலின் விஸ்வரூபம் படத்தில் கதக் நடனத்திற்கு தேசிய விருது பெற்றவர்
- கிரிப்டோ கரன்சியில் பணத்தை இழந்தவர்கள் கிம் கர்தாஷியன் மீது வழக்கு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












