கிம் கர்தாஷியன் மீது இதிரியம் கிரிப்டோ கரன்சியில் பணத்தை இழந்தவர்கள் வழக்கு

கிம் கர்ஷாஷியன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிம் கர்ஷாஷியன்

இதிரியம் மேக்ஸ் கிரிப்டோ கரன்சியில் பணத்தை முதலீடு செய்து பணத்தை இழந்தவர்கள் தொடர்ந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று பிரபலங்களில் கிம் கர்தாஷியனும் ஒருவர்.

மற்ற பிரதிவாதிகளில் குத்துச்சண்டை வீரர் ஃபிளாய்ட் மேவெதர் ஜூனியர், கூடைப்பந்தாட்ட வீரர் பால் பியர்ஸ் மற்றும் கிரிப்டோ கரன்சியை உருவாக்கியவர்கள் ஆவர்.

கிரிப்டோ கரன்சியை "தவறான முறையில் விளம்பரப்படுத்தி விற்பதற்கு" பிரபலங்கள் இதிரியம் மேக்ஸ் உடன் ஒத்துழைத்ததாக வழக்கு ஆவணங்கள் குற்றம் சாட்டுகிறது.

இதிரியம் மேக்ஸ் குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும், உண்மை வெளிவருவதை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் கூறியது.

இதிரியம் மேக்ஸ் கிரிப்டோ கரன்சிக்கும், Ethereum என்கிற பெயரில் கிரிப்டோ சந்தையில் வர்த்தகமாகி வரும் கரன்சிக்கும் எந்த வித சட்ட ரீதியிலான அல்லது வணிக ரீதியிலான தொடர்பு இல்லை.

'முதலீடுகள் இழப்பு'

இதிரியம் மேக்ஸ் ஒரு "பம்ப் அண்ட் டம்ப்" திட்டத்தை இயக்கியதாக அதன் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கு கூறுகிறது. தவறாக சந்தைப்படுத்தப்பட்டு அதன் மூலம் ஒரு சொத்தின் விலையை உயர்த்தி, பின்னர் அதை அறியாத முதலீட்டாளர்களுக்கு லாபத்தில் விற்பது தான் ஆங்கிலத்தில் 'பம்ப் அண்ட் டம்ப்' திட்டம் என்கிறார்கள்.

"நிறுவனத்தின் நிர்வாகிகள், பல பிரபல விளம்பரதாரர்களுடன் இணைந்து, சமூக ஊடக விளம்பரங்கள் மற்றும் பிற விளம்பர நடவடிக்கைகள் மூலம் இதிரியம் மேக்ஸ் குறித்து முதலீட்டாளர்களுக்கு தவறான செய்திகளை அளித்தனர்" என கலிஃபோர்னியாவின் மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகாரில் கூறப்பட்டுள்ளது.

"எளிமையாகக் கூற வேண்டுமானால், இதிரியம் மேக்ஸ் கரன்சியின் முழு வணிக மாதிரியும் தொடர் சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர நடவடிக்கைகளைப் பயன்படுத்துவதைச் சார்ந்திருந்தது. முதலீட்டாளர்கள் நிதி வாய்ப்புகள் மீது நம்பிக்கை கொள்ள, அடிக்கடி 'நம்பகமான' பிரபலங்களைக் கொண்டு விளம்பரப்படுத்தி ஏமாற்றியது," என நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு விவரங்கள் குற்றம் சாட்டுகிறது.

குத்துச்சண்டை போட்டி

கிரிப்டோ கரன்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிரிப்டோ கரன்சி

முன்னாள் என்பிஏ கூடைப்பந்தாட்ட வீரர் பியர்ஸ், கடந்த மே 2021-ல் ட்விட்டர் தளத்தில் "பரவலாக விவாதிக்கப்பட்ட" இடுகையில் இதிரியம் மேக்ஸ் குறித்து விளம்பரப்படுத்தினார். தனக்காக இதிரியம் மேக்ஸ் கரன்சி பணம் ஈட்டும் திறனைப் பாராட்டினார்.

மறுபக்கம், இதிரியம் மேக்ஸ் கிரிப்டோ கரன்சியை விளம்பரப்படுத்த, 2021ஆம் ஆண்டில், உலகில் யூடியூப் மூலம் அதிகம் சம்பாதித்தவராகக் கூறப்படும், யூடியூபர் லோகன் பால் உடனான முன்னாள் உலக சாம்பியன் மேவெதரின் குத்துச்சண்டைப் போட்டியைப் பயன்படுத்தத் தொடங்கியது. குத்துச் சண்டை வீரர் மேவெதர் ஒரு கிரிப்டோ கரன்சி மாநாட்டில் இதிரியம் மேக்ஸை விளம்பரப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

கடைசியாக, ரியாலிட்டி டிவி ஆளுமையாக வலம் வரும் கிம் கர்தாஷியன் மீதும் புகார் கூறப்பட்டுள்ளது. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதிரியம் மேக்ஸ் தொடர்பாக ஒரு பதிவைச் செய்திருந்தார். அதில் "இது நிதி ஆலோசனை அல்ல, ஆனால் இதிரியம் மேக்ஸ் குறித்து எனது நண்பர்கள் என்னிடம் சொல்வதைப் பகிர்வது." என்ரு குறிப்பிட்டிருந்தார்.

கிம் கர்தாஷியன், தன்னைப் பின்தொடரும் 250 மில்லியன் மக்களை கிரிப்டோ கரன்சியில் பணத்தை முதலீடு செய்யச் சொல்கிறார் என விமர்சித்தார் பிரிட்டனின் நிதி நடத்தை ஆணையத்தின் தலைவரான சார்லஸ் ரேண்டல். மேலும் இது ஒரு விளம்பரம் என்றும், வரலாற்றிலேயே அதிக நபர்களைச் சென்றடைந்த நிதி விளம்பரம் இது என்றும் விமர்சித்தார்.

தரை தட்டிய இதிரியம் மேக்ஸ்

சட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சட்டம்

தனது சந்தைப்படுத்தல் மற்றும் மக்கள் தொடர்பு முயற்சிகள் "எப்பொழுதும் விழிப்புணர்வுக் கண்ணோட்டத்தில் இருக்கும் மற்றும் கரன்சியை வாங்குவதை ஊக்குவிக்காது என்று இதிரியம் மேக்ஸ் பிபிசி நியூஸிடம் கூறியது. கிம் கர்தாஷியனின் பதிவு வெறுமனே இத்திட்டம் மற்றும் அதன் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டது என்றும் கூறியது"

"எங்கள் சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர முயற்சிகள், ஒரு முடிவை எடுப்பதற்கு முன், எங்கள் திட்டத்தை ஆய்வு செய்ய மக்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்" என்றும் இதிரியம் மேக்ஸ் தரப்பு கூறியது.

"இந்த அணுகுமுறை அதிகம் நேரம், ஆற்றல் மற்றும் வளங்களை கோரக் கூடியவை. இது பம்ப் மற்றும் டம்ப் திட்டங்களுக்கு முற்றிலும் மாறானது."

கிம் கர்தாஷியனின் பதிவுக்கு ஒரு மாத காலத்திற்குப் பிறகு இதிரியம் மேக்ஸ் கரன்சியின் மதிப்பு 1,300% அதிகரித்தது. அதன் பின் தன் வாழ்நாளில் இல்லாத அளவுக்கு படு மோசமாக விலை சரிந்தது. விலை அதிகரித்த போது மற்ற முதலீட்டாளர்களிடம், இதிரியம் கரன்சியை லாபத்துக்கு விற்று வெளியேறியதாகவும், அப்போது முதலீடு செய்தவர்கள் சிக்கிக் கொண்டதாகவும் நீதிமன்ற வழக்கு ஆவணங்கள் குற்றம் சாட்டுகின்றன.

'ஏமாற்றும் கதை'

சட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சட்டம்

2021 மே 14 முதல் 2021 ஜூன் 27 வரை முதலீடு செய்தவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்றும், அவர்கள் வழக்கை நடத்தும் வாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இதிரியம் மேக்ஸ் அதை மறுத்துள்ளது. "குற்றச்சாட்டுகளை நாங்கள் மறுக்கிறோம். உண்மை வெளிவருவதை எதிர்நோக்கிக் காத்திருக்குகிறோம்." என இதிரியம் மேக்ஸ் கரன்சி நிறுவனர் என ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஸ்டீவ் ஜென்டைல் கூறியுள்ளார்.

கிம் கர்தாஷியன், மேவெதர், பியர்ஸ் ஆகியோரிடம் பிபிசி இது குறித்து கருத்து கேட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: