இந்திய அரசியலமைப்பின் முதல் திருத்தத்திற்கு வழிவகுத்த தமிழக வழக்கு தெரியுமா?

இடஒதுக்கீடு உச்ச நீதிமன்றம் இந்தியா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழ்நாடு தொடர்பான பல வழக்குகள் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. அந்த முக்கியமான வழக்குகள் குறித்த சிறிய தொடரை இன்று தொடங்கி வாரந்தோறும் புதன்கிழமை வழங்குகிறது பிபிசி தமிழ்.

முதலாவதாக இடம்பெறும் இன்றைய கட்டுரை, மெட்ராஸ் மாகாண அரசு VS சம்பகம் துரைராஜன் என்ற வழக்கைப் பற்றியது. இந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் மூலம் சென்னை மாகாணத்தில் வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. இந்த இட ஒதுக்கீட்டை திரும்பவும் அளிப்பதற்காக, இந்திய அரசியலமைப்புச் சட்டம் முதல் முறையாகத் திருத்தப்பட்டது. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு இது.

வழக்கின் பின்னணி

20ஆம் நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளில் உருவான பிராமணரல்லாதோர் இயக்கமான தென்னிந்திய நல உரிமைச் சங்கம், அரசாங்க வேலை வாய்ப்புகளை பெரிதும் பிராமணர்களே பெறுவதாகக் கூறி புள்ளிவிவரங்களை முன்வைத்தது. ஆகவே பிற ஜாதியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென வாதிட்டது. மாண்டகு - செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்களின்படி நடத்தப்பட்ட தேர்தலில் ஆட்சிக்கு வந்த நீதிக் கட்சி இப்படியான ஒரு இடஒதுக்கீட்டை நிறைவேற்ற முற்பட்டது. 1921ல் ஆட்சியில் இருந்த நீதிக் கட்சியின் முதலமைச்சர் பனகல் ராஜா 1921 ஆகஸ்டில் இதற்கான அரசாணையை (Communal G.O. 613) வெளியிட்டார்.

இருந்தபோதும் இந்த அரசாணை உடனடியாக அமலுக்கு வரவில்லை. 1927ல் சுயேச்சையான பி. சுப்பராயனின் அரசு, மீண்டும் ஒரு அரசாணையை வெளியிட்டு (அரசாணை எண் 1071) இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது. இதன்படி அரசு வேலை மற்றும் கல்வி வாய்ப்புகளில் பன்னிரண்டில் ஐந்து பங்கு (5/12) பிராமணரல்லாதோருக்கு ஒதுக்கப்பட்டது. பிராமணர், ஆங்கிலோ இந்தியர், முஸ்லீம்கள் ஆகியோருக்கு தலா பன்னிரண்டில் இரண்டு பங்கும், தாழ்த்தப்பட்டோருக்கு 1/12 பங்கும் ஒதுக்கப்பட்டது.

1947 இந்தியா விடுதலை அடைந்த பின்னர், இது சற்றே மாற்றியமைக்கப்பட்டது. பிராமணரல்லாத இந்துக்களுக்கு பதினான்கில் ஆறு பங்கும் (6/14), பிராமணர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கு தலா 2/14 பங்கும், ஆங்கிலோ இந்தியர், முஸ்லீம்களுக்கு தலா 1/14 பங்கும் வழங்கப்பட்டன.

ஆனால், இந்த 'கம்யூனல் ஜி.ஓ.' அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே தொடர்ச்சியாக எதிர்ப்பைச் சந்தித்துவந்தது. போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவை நடைபெற்றன. பத்திரிகைகளில் கட்டுரைகளும் எழுதப்பட்டன.

இடஒதுக்கீடு உச்ச நீதிமன்றம் இந்தியா

1947ல் இந்தியா பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்ற பிறகு, புதிய அரசியல் அமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு 1950ல் அமலுக்கு வந்தபோது, அதில் இட ஒதுக்கீடு தொடர்பாக எந்தப் பிரிவுகளும் இல்லை. நீண்டகாலமாக இடஒதுக்கீட்டை எதிர்த்து வந்தவர்களுக்கு இந்த அம்சம் சாதகமாக அமைந்தது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த சில வாரங்களிலேயே பொறியியல் கல்லூரியில் சேர விரும்பிய மாணவர் ஒருவரும் மருத்துவக் கல்லூரியில் சேர விரும்பிய மாணவி ஒருவரும் இந்த இட ஒதுக்கீட்டு முறையை எதிர்த்து மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்தனர். கம்யூனல் ஜி.ஓவால் தங்களுடைய அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுவதாக அவர்கள் முறையிட்டனர்.

மெட்ராஸ் மாகாண அரசு Vs சம்பகம் துரைசாமி வழக்கு

வழக்கைத் தொடுத்தவர்களில் முதலாமவர் சி.ஆர். ஸ்ரீநிவாஸன். பிராமண வகுப்பைச் சேர்ந்த இவர் சென்னை கிண்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் சேர விரும்பினார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் புகுமுக வகுப்பை முடித்த ஸ்ரீநிவாஸன், 450க்கு 369 மதிப்பெண்களைப் பெற்றிருந்தார். அந்தத் தருணத்தில் சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மொத்தமாக 365 இடங்களே இருந்தன. இந்தச் சூழலில் கம்யூனல் ஜி.ஓ. அமல்படுத்தப்பட்டால், தனக்கு இடம் கிடைக்காது என அவர் வாதிட்டார். இந்த இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படாவிட்டால், தனக்கு இடம் கிடைக்குமெனக் கூறினார்.

இரண்டாமவர் சம்பகம் துரைராஜன். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இவர் பி.ஏ. படிப்பை முடித்திருந்தார். மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து எம்.பி.பி.எஸ் படிக்க விரும்பிய சம்பகம், கம்யூனல் ஜி.ஓ. அமல்படுத்தப்பட்டால், தனக்கு இடம் கிடைக்காது என வாதிட்டார்.

இந்த வழக்குகள் இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கே, 'மெட்ராஸ் மாகாண அரசு Vs சம்பகம் துரைசாமி வழக்கு' எனக் குறிப்பிடப்பட்டது.

துரைசாமி

அந்தத் தருணத்தில் சென்னையின் மிகப் பெரிய வழக்கறிஞர்களில் ஒருவரான வி.வி. ஸ்ரீநிவாஸ அய்யங்கார் சி.ஆர். ஸ்ரீநிவாஸனுக்காக ஆஜரானார். சென்னை மாகாண அரசின் முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞரும் அரசியல் அமைப்பு அவையின் உறுப்பினருமாக இருந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் சம்பகத்திற்காக ஆஜரானார். சென்னை மாகாண அரசின் சார்பில், அட்வகேட் ஜெனரல் வி.கே. திருவேங்கடாச்சாரி ஆஜரானார்.

புதிதாக இயற்றப்பட்டிருந்த இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூன்றாவது பகுதியில் அடிப்படை உரிமைகள் பட்டியலிடப்பட்டிருந்தன. பிரிவு 15(1)ன் படி, எந்த ஒரு குடிமகனையும் மதம், இனம், பாலினம், பிறந்த இடம், ஜாதி ஆகியவற்றின் அடிப்படையில் அரசு பாகுபாடுடன் நடத்தக்கூடாது. அதேபோல, பிரிவு 29 (2)ன்படி அரசினாலோ, அரசின் நிதி உதவியைப் பெற்றோ இயங்கும் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் மதம், இனம், பாலினம், பிறந்த இடம், ஜாதி ஆகியவற்றின் அடிப்படையில் சேர்க்கையை மறுக்கக்கூடாது.

ஸ்ரீநிவாஸன் சார்பாகவும் சம்பகம் சார்பாகவும் ஆஜரான வழக்கறிஞர்கள், மதம், ஜாதி ஆகியவற்றை கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் இடங்களை வழங்கினால் தங்களுடைய கட்சிக்காரர்களுக்கு அவர்கள் விரும்பிய கல்விக் கூடங்களில் இடம் கிடைக்கும்; தற்போது அது மறுக்கப்படுகிறது என வாதிட்டனர்.

'மாணவர்கள் சேர்க்கையில் பாகுபாடு கூடாது'

அரசுத் தரப்பில் வாதிட்ட வி.கே. திருவேங்கடாச்சாரி, அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 46ஐ முன்வைத்து வாதிட்டார். அதன்படி, மக்கள் தொகையில் பலவீனமான பிரிவினரின் கல்வி உரிமைகளை அரசு கூடுதல் கவனத்துடன் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதோடு, சமூக அநீதிகளில் இருந்தும் சுரண்டலில் இருந்தும் அவர்களைக் காக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்த வழக்கை மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தது. தலைமை நீதிபதி பி.வி. ராஜமன்னார், நீதிபதி விஸ்வநாத சாஸ்திரி, நீதிபதி என்.பி. சோமசுந்தரம் ஆகியோர் அந்த அமர்வில் இடம்பெற்றிருந்தனர்.

தலைமை நீதிபதி பி.வி. ராஜமன்னாரும் நீதிபதி விஸ்வநாத சாஸ்திரியும் இந்த கம்யூயனல் ஜி.ஓ. ரத்துசெய்யப்படவேண்டுமென தீர்ப்பளித்தனர். இந்த அரசாணை மாணவர்களிடம் பாகுபாடு பார்க்கிறது என்றும், பலவீனமான பிரிவினரை முன்னேற்ற வேண்டியது அவசியம் என்றாலும், மனம்போன போக்கில் அதைச் செய்யக்கூடாது என்றும் ராஜமன்னார் குறிப்பிட்டார்.

நீதிபதி விஸ்வநாத சாஸ்திரியைப் பொறுத்தவரை, இந்த கம்யூனல் ஜி.ஓ. பிரிவு 15(1)ஐ மீறுகிறது என்றும் மாணவர்களிடம் மதம், ஜாதி ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டுகிறது என்று குறிப்பிட்டார். அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 46ஐ மனதில் கொள்ள வேண்டும் என்ற அட்வகேட் ஜெனரலின் வாதத்தை அவர் ஏற்கவில்லை. ஏனென்றால், அரசியலமைப்புச் சட்டம் உருவாவதற்கு முன்பே, கம்யூனல் ஜி.ஓ. வந்துவிட்டதால், பிரிவு 46க்காக இந்த அரசாணை வெளியிடப்பட்டதாக ஏற்க முடியாது என்றார்.

அரசாணை ரத்து

இடஒதுக்கீடு உச்ச நீதிமன்றம் இந்தியா

பட மூலாதாரம், Getty Images

மூன்றாவது நீதிபதியான என்.பி. சோமசுந்தரம், கம்யூனல் ஜி.ஓ. நீக்கப்பட வேண்டும் என்பதை 'தயக்கத்துடன்' ஏற்றுக்கொண்டார். 1950 ஜூலை 27ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. ஒருமனதாக வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பின் மூலம் இடஒதுக்கீட்டிற்கு வழிசெய்த கம்யூனல் ஜி.ஓ. ரத்துசெய்யப்பட்டது.

இதையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசும் மாகாண அரசும் தொடர்ந்து விவாதிக்கத் துவங்கின. தீர்ப்பு வெளிவந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு, இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்போவதாக மெட்ராஸ் மாகாண அரசு அறிவித்தது. மேலும், அரசியல் ரீதியான தீர்வுகள் குறித்தும் விவாதித்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டது. சொன்னபடி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

1951 மார்ச் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட எட்டு நீதிபதிகள்தான் உச்ச நீதிமன்றத்தில் இருந்தனர். அதில் தலைமை நீதிபதி எச்.ஜே. கனியாவும் மேலும் ஆறு நீதிபதிகளும் இணைந்து இந்த வழக்கை விசாரித்தனர். விசாரணை துவங்கிய சில நாட்களிலேயே, கம்யூனல் ஜி.ஓவுக்கு எதிராகத்தான் தீர்ப்பு வரப்போகிறது என்பது மத்திய அரசுக்குப் புரிந்தது.

இதற்கிடையில் தி.கவும் தி.மு.கவும் கம்யூனல் ஜிஓவுக்கு ஆதரவாக போராட்டங்களை நடத்த ஆரம்பித்திருந்தனர். தி.க. நடத்திய கூட்டத்தில் பேசிய பெரியார், மெட்ராஸ் உயர் நீதிமன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தினால் அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும் அல்லது திராவிடஸ்தான் வேண்டுமென்றார்.

இடஒதுக்கீட்டு போன்றவற்றை அளிப்பதற்கு ஏதுவாக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தலாம் என்ற யோசனையை மார்ச் மாத மத்தியிலேயே சட்ட அமைச்சகம் முன்வைத்தது. எதிர்பார்த்ததைப் போலவே, வழக்கின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டபோது, மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதிசெய்யப்படும் என்பதை மத்திய அரசின் அட்வகேட் ஜெனரலிடம் உச்ச நீதிமன்றம் கோடிகாட்டியது.

இந்த வழக்கில் அனைத்து நீதிபதிகளும் இணைந்து ஒரு மனதாகத் தீர்ப்பளித்தனர். நீதிபதி எஸ்.ஆர்.தாஸ் எழுதிய தீர்ப்பின்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையே உச்ச நீதிமன்றமும் உறுதிசெய்தது. மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.

அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 46ஐ முன்வைத்துத்தான் சென்னை மாகாண அரசு வாதாடியது. ஆனால், பிரிவு 46 என்பது வழிகாட்டு நெறிமுறையே தவிர, நீதிமன்றத்தால் செயல்படுத்தக்கூடிய ஒன்றல்ல என உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கூறியது. அடிப்படை உரிமைகளை, இந்தப் பிரிவு மீற முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது. ஆகவே, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 26(2)ஐ (சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பு) கம்யூனல் ஜி.ஓ. மீறுவதாக நீதிமன்றம் கூறியது.

இடஒதுக்கீடு உச்ச நீதிமன்றம் இந்தியா

பட மூலாதாரம், Getty Images

ஆனால், இந்த ஒட்டுமொத்த வழக்கிலும் வேறு சில விஷயங்கள் கவனிக்கத்தக்கதாக இருந்தன. இந்த வழக்கில் மனுதாரராக இருந்த சம்பகம் துரைசாமி, மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்கவேயில்லை என்பது வழக்கின் விசாரணையின்போது தெரியவந்தது. இதனை உச்ச நீதிமன்றம் சுட்டக்காட்டினாலும், அதனை கணக்கில் கொள்ளவில்லை. தன் தனி உரிமையைப் பாதுகாப்பதற்காக அல்லாமல், தன் சமூகத்தின் உரிமையை பாதுகாக்கவே இந்த வழக்கை சம்பகம் தொடுத்திருந்தார்.

இந்த வழக்கில் தீர்ப்பானது, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 26(2)ஐ முன்வைத்துத் தரப்பட்டது. கல்வி, வேலை வாய்ப்பு அனைத்திலும் பெரும்பான்மையாக இருக்கும் ஒரு இனத்தை எப்படி சிறுபான்மையினராகக் கருத முடியும் என்ற கேள்வியும் எழுந்தது. எல்லோரும் சமமான வாய்ப்புகளுடன், ஒரே மாதிரியான சூழலில் பிறந்து, வளர்கிறார்கள் என்ற அடிப்படையில், யாருடைய சமத்துவமும் குலையாமல் இருக்க வேண்டும் என தனது தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியது. ஆனால், நிஜத்தில் இருந்த கடுமையான சமூக வேறுபாடுகள் கவனத்தில் கொள்ளப்படவில்லையென்பது சட்டநிபுணர்களால் விவாதிக்கப்பட்டது.

நேருவின் பிடிவாதம்

இந்தத் தீர்ப்புக்கு சென்னை மாகாணத்தில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. ஏப்ரல் 27ஆம்தேதி முதலமைச்சர் குமாரசாமி ராஜா தலைமையில் அமைச்சர்கள் குழு தில்லி சென்று பிரதமர் நேருவைச் சந்தித்து, தீர்ப்பின் தாக்கும் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என்றார். நேரு மறுத்துவிட்டார். பிறகு, நிதியமைச்சர் தலைமையில் ஒரு குழு சென்று, கம்யூனல் ஜி.ஓ.வை முழுமையாக மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. நேரு ஒன்றும் சொல்லவில்லை.

இடஒதுக்கீடு உச்ச நீதிமன்றம் இந்தியா

அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்தலாம் என்ற ஆலோசனையை சட்ட அமைச்சகம் ஏற்கனவே முன்வைத்திருந்தும் துவக்கத்தில் நேரு இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், விரைவிலேயே அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த நேரு ஒப்புக்கொண்டார்.

அதன்படி, கல்வி மற்றும் சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வாய்ப்பளிக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை பிரிவு 15, பிரிவு 29 (2) ஆகியவை தடுக்காது என்ற திருத்தம் முன்வைக்கப்பட்டது. இதற்கான விவாதத்தில் டாக்டர் அம்பேத்கர் தனது வாதத்தை மிகக் கடுமையாக முன்வைத்தார். முதல் பொதுத் தேர்தல் 1952ல்தான் நடக்கவிருந்த நிலையில், தற்காலிக நாடாளுமன்றம், இந்தத் திருத்தத்தை நிறைவேற்றியது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த இரண்டே மாதங்களில், அந்தத் தீர்ப்பு செல்லாததாக்கப்பட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தத்திற்கு காரணமாக அமைந்த சென்னை மாகாண அரசு VS சம்பகம் துரைராஜன் வழக்கு இப்படியாக முடிவுக்கு வந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :