பிரிட்டனில் சுற்றுச்சூழலை சீர்குலைக்கும் மிங்குகள் - மோப்ப சக்தியால் சமநிலையை கொண்டு வர உதவும் நாய்

பட மூலாதாரம், STEPHEN MACE
லேப்ரடார் ரிட்ரெய்வர் இனத்தைச் சேர்ந்த நாய் ஒன்றுக்கு அமெரிக்க மிங்க் எனப்படும் ஒரு வகையான உயிரினத்தை மோப்பம் பிடித்து கண்டுபிடிக்க பயிற்சியளிக்கப்பட்டது.
வாட்டர் லைஃப் ரெகவரி ஈஸ்ட் என்கிற அமைப்பு தான் ரிவர் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த லேப்ரடார் ரிட்ரெய்வர் நாயை பணிக்கு அமர்த்தி இருக்கிறது.
பிரிட்டனில் நார்ஃபோக் பகுதியில் பின்ட்ரீ என்கிற இடத்தில் ஓடும் வென்சம் நதிக்கரையில் இருக்கும் அமெரிக்க மிங்குகளை கண்டுபிடிப்பதுதான் அந்த நாயின் வேலை.
கிழக்கு ஆங்க்லியா பகுதியில் அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களை மீட்க, அமெரிக்க மிங்குகளை பிடித்து, கொல்லும் இந்த திட்டம் 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
1989ஆம் ஆண்டு முதல் 1998ஆம் ஆண்டு வரையான காலத்தில், வாட்டர் வோல் (Water Vole) என்றழைக்கப்படும் ஓர் உயிரினத்தின் எண்ணிக்கை சுமார் 90 சதவீதம் குறைந்ததற்கு அமெரிக்க மிங்க் உயிரினங்களே காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
பிரிட்டனில் இருக்கும் எந்த ஒரு காட்டு பாலூட்டி உயிரினமும், 20ஆம் நூற்றாண்டில் இந்த அளவுக்கு மிக அதிக எண்ணிக்கை சரிவு ஏற்பட்டதில்லை என 'அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களுக்கான மக்கள்' என்று பொருள்படும் 'பீப்பிள்ஸ் டிரஸ்ட் ஃபார் என்டேஞ்சர்ட் ஸ்பீசீஸ்' அமைப்பு விளக்குகிறது.

பட மூலாதாரம், VINCE LEA
தற்போது 18 மாதம் மட்டுமே ஆன பெண் நாய் ரிவர், 10 வார காலமாக இருந்ததில் இருந்து, அதற்கு மிங்குகளை மோப்பம் பிடிக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
"அவள் அடுத்தகட்ட சிக்கலான பயிற்சிக்கு முன்னேறி இருக்கிறாள் என்பதில் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. ஸ்டோட் என்கிற நீண்ட உடல் கொண்ட உயிரினம் மற்றும் அணில் ஆகியவற்றின் மனத்துடன் மிங்குகளை அடையாளம் காண்பதும் அதில் அடக்கம். அதற்கு பரிசாக அவளுக்குப் பிடித்த பந்து கொடுக்கப்படுகிறது" என கூறியுள்ளார் ஸ்டீஃபன் மேஸ்.
இவர் நார்ஃபோக் நதிகள் ட்ரஸ்ட் அமைப்பின் திட்ட அதிகாரி. இவ்வமைப்பு வாட்டர்லைஃப் லைஃப் ரெகவரி ஈஸ்ட் என்கிற அமைப்போடு செயல்படும் வேளாண்மை, வன விலங்கு பாதுகாப்பு குழுக்களில் ஒன்று.
மிங்குகளின் தடயங்களை ரிவர் கண்டுபிடித்த பின், அங்கு ஒரு மிதக்கும் பொறி அமைக்கப்படும். அப்பொறியில் அகப்பட்ட மிங்குகள் அரசின் வழிகாட்டுதலின்படி கொல்லப்படும்.

பட மூலாதாரம், Getty Images
1929ஆம் ஆண்டில், மிங்குகளின் மயிர் நிறைந்த தோலுக்காக அமெரிக்க மிங்குகள் பிரிட்டனுக்கு வந்தன. மிங்க் உயிரினங்கள் கால்வாய் மற்றும் நதி அமைப்பு தரவுகளின்படி, 1956ஆம் ஆண்டிலிருந்து காடுகளில் வளர்க்கப்பட்டது பதிவு செய்யப்பட்டது.
பொதுவாகவே மிங்குகள் பிரமாதமாக வேட்டையாடுபவை. எனவே அதன் எண்ணிக்கை அதிகரிப்பு, மற்ற பிரிட்டனின் நதியில் இருக்கும் கிங்ஃபிஷர், மூரன் சிக் போன்ற உயிரினங்களின் எண்ணிக்கையை கடுமையாக பாதித்தது என கன்ட்ரிசைட் ரெஸ்டோரேஷன் ட்ரஸ்ட் எனப்படும் அமைப்பின் வன விலங்கு கண்காணிப்பு பிரிவின் தலைவர் வின்ஸ் லே கூறினார்.
அதோடு மிங்குகளைக் கண்டுபிடிப்பதும் மிகவும் சிரமமானது. எனவே மிங்குகளை பிடிக்கும் அணியில் ரிவர் நாய் ஒரு வரவேற்கத்தக்க நபராக பார்க்கப்படுகிறது என கூறினார் வின்ஸ் லே.
"மிங்குகளை முழுமையாக நீக்கினால் மட்டுமே, நதியில் முன்பு இருந்த உயிரினங்களையும், சமநிலையையும், பல்லுயிர் பெருக்க சூழலையும் மீண்டும் கொண்டு வர முடியும்" எனவும் கூறியுள்ளார் அவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












