திமுக சின்னத்தில் போட்டி - எதிர்கட்சி வரிசையில் இருக்கை - நீதிமன்றம் சென்ற வழக்கு தெரியுமா?

திமுக கூட்டணி கட்சிகள்

பட மூலாதாரம், MK STALIN

படக்குறிப்பு, திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டோலின் (கோப்புப்படம்)
    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

திமுக சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு சட்டப்பேரவையில் முன்னுரிமை அளிக்கப்படுவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

`உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டவர்களை எதிர்க்கட்சி வரிசையில் முன்னிலைப்படுத்துவது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல்' என்கிறார் வழக்கு தொடர்ந்த லோகநாதன். என்ன நடக்கிறது?

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், சி.பி.எம், சி.பி.ஐ, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதில், ம.தி.மு.க, ம.ம.க, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி உள்ளிட்டவை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டன.

`தனிச்சின்னத்தில்தான் போட்டி' என்பதில் வி.சி.க தலைவர் திருமாவளவன் உறுதியாக இருந்ததால், அவரது கட்சி சார்பாக பானை சின்னத்தில் போட்டியிட்ட ஆறு பேரில் நான்கு பேர் வெற்றி பெற்றனர்.

ஜெயலலிதா தொடங்கி வைத்த டிரெண்ட்

இந்த நிலையில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளை எதிர்கட்சிகளுக்கு நிகராக வரிசைப்படுத்துவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

`தி.மு.க சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் எட்டு பேரையும் எதிர்கட்சி எம்.எல்.ஏக்களாக கருத முடியாது. இவர்களுக்கு தனி இருக்கை வழங்கக்கூடாது; சட்டப்பேரவையில் பேசுவதற்கு தனியாக நேரம் ஒதுக்கக் கூடாது' என கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இவரது வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

வழக்கறிஞர் லோகநாதனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

``தமிழ்நாட்டில்தான் இப்படியொரு புதிய கலாசாரம் தொடங்கியது. ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் அந்தந்த கட்சிகளின் வேட்பாளர்கள் அவரவர் சின்னத்தில் போட்டியிட்டு வந்தனர். கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளை தங்களுடைய சின்னத்தில் போட்டியிட வைக்கும் வேலைகள், ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தொடங்கியது. இது புதிய டிரெண்டாகவே மாறிப்போனது. அதாவது, `கூட்டணியில் சீட் கொடுப்போம், ஆனால், எங்கள் சின்னத்தில் போட்டியிட வேண்டும்' என ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர்" என்கிறார்.

லோகநாதன்

பட மூலாதாரம், LOGANATHAN

படக்குறிப்பு, வழக்கறிஞர் லோகநாதன்

தொடர்ந்து பேசியவர், ``2011 சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட செ.கு.தமிழரசன், கொங்கு நாடு இளைஞர் பேரவையின் உ.தனியரசு, சமத்துவ மக்கள் கட்சியின் சரத்குமார் ஆகியோர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். ஆனால், இவர்களை சட்டமன்றத்தில் முதல் வரிசையில் அமரவைத்து ஆளும்கட்சியினரை பாராட்டச் செய்தனர். இவர்கள் தமது கூட்டணியை விட்டு வேறு எங்கும் போய்விடக் கூடாது என்பதற்காகத்தான் தனது சின்னத்தில் அ.தி.மு.க போட்டியிட வைத்தது. இதே கலாசாரத்தை தி.மு.கவும் பின்பற்றத் தொடங்கியது.

ஒருவருக்கு இரண்டு கட்சிகளில் பதவி

விடுதலை சிறுத்தைகள்

பட மூலாதாரம், THOL. THIRUMAVALAVAN

உதாரணமாக, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளராக ஈ.ஆர்.ஈஸ்வரன் இருக்கிறார். இன்றளவும் அவரது கட்சிக்கு அவர்தான் பொதுச்செயலாளராக இருக்கிறார். தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் செய்யும்போது, `நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளேன்' எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், `நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினராக இருக்கிறேன்' என்றொரு பிரமாண பத்திரத்தையும் அவர் தாக்கல் செய்தார்.

திமுக கூட்டணி கட்சிகள்

பட மூலாதாரம், Eswaran

அதேபோல், வேட்பாளருக்கு கொடுக்கப்படும் ஃபார்ம் ஏ, ஃபார்ம் பி போன்றவற்றை அவர் போட்டியிடும் கட்சியின் தலைவரோ பொதுச்செயலாளரோ கையொப்பமிட்டுக் கொடுக்கிறார். இது முக்கியமான அங்கீகாரமாக உள்ளது. அதாவது, சின்னத்தை ஒதுக்கீடு செய்து கொடுக்கின்ற படிவம் அது. அந்தப் படிவத்தில், `இவருக்கு இந்தச் சின்னத்தை ஒதுக்குங்கள்' என தி.மு.க சார்பில் துரைமுருகனும் அ.தி.மு.கவாக இருந்தால் ஓ.பி.எஸ், இ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆகியோர் கொடுக்கின்றனர்.

இவ்வாறு கொடுக்கும்போது, தேர்தல் ஆணையத்தின் சின்னம் ஒதுக்கீடு விதி 1968-ன்படி, படிவம் ஏ, படிவம் பி கொடுக்கும்போது சம்பந்தப்பட்ட நபர் அக்கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது. அப்படிப் பார்க்கும்போது தி.மு.கவின் உறுப்பினராகத்தான் ஈஸ்வரன் கருதப்படுவார். தேர்தல் ஆணையம் அளிக்கும் வெற்றிச் சான்றிதழிலும், தி.மு.க உறுப்பினராகத்தான் அவர் பார்க்கப்படுகிறார். இதன்பிறகு மு.க.ஸ்டாலின் முதல்வராக தேர்வு செய்யப்படும் கூட்டம் ஒன்று அறிவாலத்தில் நடந்தது. அந்தக் கூட்டத்திலும் இவர்கள் சென்று கலந்து கொண்டனர். அங்கு ஸ்டாலினை முதல்வராக தேர்வு செய்து கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏக்கள் உள்பட 133 பேர் ஆதரவு தெரிவித்தனர். சட்டமன்றத்துக்குள் சென்ற பிறகு இவர்களுக்கான இடங்களை ஒதுக்குவதும் மிகத் திறமையாகக் கையாளப்படுகிறது" என்கிறார்.

8 கட்சிகளா... 13 கட்சிகளா?

திருமாவளவன்

பட மூலாதாரம், THIRUMALAVAN

``பேரவையில் இடங்களை ஒதுக்குவது என்பது சபாநாயகரின் அதிகாரத்துக்கு உட்பட்டதுதானே?" என்றோம்.

``ஆமாம். ஆனால் அவை சரியாக உள்ளதா என்பதுதான் முக்கியமானது. மு.க.ஸ்டாலினுக்கு பேரவையில் எண் 1 ஒதுக்கப்படுகிறது. அவருக்குப் பின்புறம் உதயநிதி ஸ்டாலின் அமர்ந்திருப்பார். யாரை எங்கு வேண்டுமானாலும் அமர வைக்கலாம். தி.மு.க சின்னத்தில் போட்டியிட்டவர்களை அமைச்சர்களுக்கு எதிர் வரிசையில் அமர வைக்கின்றனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், 16-வது சட்டப்பேரவையில் 8 கட்சிகள்தான் அங்கீகாரம் பெற்றவையாக உள்ளன. ஆனால், இவர்கள் 13 கட்சிகளை அங்கீகரித்துள்ளனர். அதேநேரம், பேரவையின் இணையத்தளத்தில் தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ம.க, விடுதலைச் சிறுத்தைகள், பா.ஜ.க, சி.பி.எம், சி.பி.ஐ ஆகியவை மட்டுமே உள்ளன.

பேரவையில் இடங்களை ஒதுக்கீடு செய்யும்போது ம.தி.மு.க, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, புரட்சி பாரதம் என கூடுதலாக ஐந்து கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கீடு செய்கின்றனர். இந்தக் கட்சிகள் அனைத்தும் 2021 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவில்லை. அவ்வாறு போட்டியிடாத கட்சிகளை சட்டப்பேரவைக்குள் அந்தந்தக் கட்சிகளின் பெயரால் ஆவணப்படுத்துவது என்பது சரியான ஒன்றல்ல. இதை ஜனநாயகப் படுகொலையாகத்தான் பார்க்கிறேன். சட்டமன்றம் நடக்கும்போது செய்தித்தாள்களிலும், `ம.தி.மு.க உறுப்பினர் பேசினார்', `மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் பேசினார்' என்றுதான் வகைப்படுத்துகின்றனர். இந்த 8 உறுப்பினர்களும் தி.மு.கவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சட்டசபையில் பேசுவதற்கு அதிக நேரமும் ஒதுக்குகின்றனர். தி.மு.க உறுப்பினராக அங்கீகரித்துப் பேசுவதற்கு வாய்ப்பு கொடுத்தால் நான் எந்தக் கேள்வியும் எழுப்பப் போவதில்லை.

இந்தத் தேர்தலில் ம.தி.மு.க போட்டியிடவில்லை. அப்படியிருக்கும்போது, `ம.தி.மு.க உறுப்பினர் சதன் திருமலைக்குமார் பேசுகிறார். இந்த நிதிநிலை அறிக்கையை வரவேற்றுள்ளேன் என்கிறார்' என சட்டமன்றக் குறிப்பில் பதிவு செய்கின்றனர். தேர்தலில் போட்டியிடாத ஒரு கட்சியை தவறாக ஆவணப்படுத்துகின்றனர். அடுத்ததாக, அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நேரத்தையும் இவர்கள் எடுத்துக் கொள்கின்றனர். இது ஜனநாயக மரபுக்கு விரோதமானது. அரசே தவறான ஒன்றை ஆவணப்படுத்தக் கூடாது" என்கிறார்.

தலைமை செயலரிடம் பதில் இல்லை

மேலும், ``அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் என்ற பெயரில் இரண்டு முறை கூட்டம் நடந்தது. ஒன்று, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும் இரண்டாவதாக மேக்கேதாட்டூ அணை விவகாரம் குறித்தும் பேசப்பட்டது. அதில், இந்த 13 கட்சிகளையும் அழைத்தனர். அனைத்துக் கட்சிக் கூட்டம் என்றால் இதில் எந்தக் கேள்வியும் எழப்போவதில்லை. அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் என்றால் 8 கட்சிகளைத்தான் இவர்கள் அழைத்திருக்க வேண்டும். இதையடுத்து, `ம.தி.மு.க, கொ.ம.தே.க, ம.ம.க ஆகிய கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் கொடுப்பது தவறானது' என தலைமைச் செயலருக்குக் கடிதம் எழுதினேன். எந்தப் பதிலும் வரவில்லை. `இது சபையை அவமதிக்கும் செயல். இதன்பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தினேன். எந்தப் பதிலும் வரவில்லை.

தமிழக அரசு சட்டப்பேரவை

சட்டப்பேரவை என்பது பி.எச்.பாண்டியன் கூறியதுபோல, வானளாவிய அதிகாரம் உள்ளதாக இருக்கிறது. இதில், நீதிமன்றம் தலையிட முடியாத அளவுக்கு விதிகள் உள்ளன. தற்போது புரட்சி பாரதம் கட்சி எதிர்க்கட்சி வரிசையில் உள்ளதால் பிரச்னையில்லை. ம.தி.மு.க உள்ளிட்ட 8 உறுப்பினர்களும் தி.மு.கவைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு முன்னிறுக்கை ஒதுக்கப்படுவதும் பிரதிநிதித்துவம் கொடுப்பதும் தவறானது. தி.மு.க கொறடா உத்தரவு இவர்களைக் கட்டுப்படுத்தும் என்றால் இவர்களுக்கு ஏன் தனியாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? இந்த விவகாரத்தை நீதிமன்றம் பரிசீலிக்கும் என நம்புகிறோம்" என்கிறார்.

பேரவைத் தலைவருக்குத்தான் அதிகாரம்

``தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளின் சின்னத்தில் போட்டியிட்டு எதிர்கட்சி வரிசையில் அமர்வது சரியானதா?" என கொங்கு இளைஞர் பேரவையின் தலைவரும் அ.தி.மு.க சார்பில் இரண்டு முறை போட்டியிட்டவருமான உ.தனியரசுவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` இவை அனைத்தும் பேரவைத் தலைவரின் விருப்பத்தைப் பொறுத்தது. சட்டமன்றத்துக்குள் நடக்கும் எந்த விதியையும் நீதிமன்றத்தால் கட்டுப்படுத்த முடியாது. பேரவைத் தலைவர் விரும்பினால் இதுபோன்ற வாய்ப்பைத் தரலாம் அல்லது தராமலும் இருக்கலாம். விதியைத் தளர்த்தி தீர்மானம் கொண்டு வருவது உள்பட அனைத்து அதிகாரங்களும் சபாநாயகருக்கு உண்டு. யாருக்கு எந்தெந்த இருக்கைகள், யாரை பேச அனுமதிப்பது, எவ்வளவு நேரம் என்பதெல்லாம் அவரது அதிகாரத்துக்குட்பட்டது. அது மரபாகவும் உள்ளது" என்கிறார்.

திமுக கூட்டணி

பட மூலாதாரம், THANIYARASU

படக்குறிப்பு, தனியரசு, கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர்

தொடர்ந்து பேசுகையில், `` பேரவையில் நான் பலநாள் கவனித்துள்ளேன். `விதிகளைத் தளர்த்தி' என்ற வார்த்தையை பலமுறை பயன்படுத்தியுள்ளனர். ஒரு தகவலைச் சொல்ல வேண்டும் என்றால் விதியைத் தளர்த்தி தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என அவை முன்னவர் கோரினால் பேரவைத் தலைவர் பரிசீலிப்பார். இதன்பிறகு மசோதா அல்லது தீர்மானம் நிறைவேற்றப்படும். அதேநேரம், உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கின் மூலம் ஒரு தெளிவு கிடைக்கும் என நினைக்கிறேன்" என்கிறார்.

கொறடாவுக்கான அதிகாரங்கள்

``கொறடா உத்தரவு கட்டுப்படுத்தும் என்றால் அவர்களை அந்தக் கட்சிகளின் பிரதிநிதிகளாகத்தானே பார்க்க வேண்டும்?" என்றோம். `` கொறடா அலுவலகத்தில் இருந்து வாய்மொழியாகவும் உத்தரவுகள் வரும். சட்டமன்றத்தில் அரசு மசோதா கொண்டு வந்தால் அதற்கு பெரும்பான்மையான ஆதரவு இருந்தும் அக்கட்சியின் சார்பாக போட்டியிட்ட உறுப்பினர் வாக்களித்த மறுத்தால் நடவடிக்கை எடுப்பார். அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதனை எதிர்த்து வாக்களித்தாலும் கொறடாவால் நடவடிக்கை எடுக்க முடியும். இந்த இரண்டு விஷயங்களைத் தவிர, பெரிய கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டவர்களை வேறு எதுவும் கட்டுப்படுத்த முடியாது.

திமுக கூட்டணி

பட மூலாதாரம், JAWAHIRULLAH

அதேநேரம், தி.மு.க சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் அறிவாலயத்தில் நடக்கும்போது வேல்முருகனுக்கோ, ஈஸ்வரனுக்கோ, ஜவாஹிருல்லாவுக்கோ அழைப்பு வருவதில்லை. அவர்கள் சின்னத்தைக் கொடுப்பதால் போட்டியிட்டு வெற்றி பெறுகிறோம். அப்படியிருக்கும்போது அவர்களின் செயற்குழு, பொதுக்குழுவுக்கு ஏன் அழைப்பு வருவதில்லை? காரணம், அக்கட்சிகளின் உள்விவகாரங்கள் தெரியக் கூடாது என்பதுதான். தவிர, அனைத்துக் கட்சிக் கூட்டம் என்பதில் இன்னொரு சிக்கல் இருக்கிறது. திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடுவதற்காக தி.மு.க உறுப்பினராகிவிட்டுத்தான் ஈஸ்வரன் போட்டியிட்டார்.

தி.மு.கவிடம் எதிர்பார்த்தேன்; ஆனால்?

ஒரே நேரத்தில் ஒருவர் இரண்டு கட்சிகளில் இருக்க முடியாது. இந்த விவகாரம் ஏற்கெனவே விவாதமாகியுள்ளது. தேர்தல் ஆணைய விதிகளின்படி, ஒரு நபர் இரண்டு கட்சிகளில் உறுப்பினராக இருக்க முடியாது. இது விதிப்படி முரணானதுதான். ஆனால், நடைமுறையில் இதனால் எந்தவித பாதிப்புகளும் இல்லை. ஜெயலலிதா இருக்கும்போது, `எங்களுக்குச் சமமான அந்தஸ்தில் இவர்களை அமர வைக்கக் கூடாது' என தி.மு.க கேள்வி எழுப்பியது. ஆனால், இதனை கூர்மையாக அவர்களால் எதிர்க்க முடியவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு இதில் மாறுதல் இருக்கும் என நினைத்தேன். ஆனால், எந்தவித மாற்றங்களும் இல்லை" என்கிறார்.

``கடந்த ஆட்சிக்காலத்தில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க விவகாரத்தில் பேரவைத் தலைவர் செய்தது செல்லும் என்பது நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேநேரம், ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 பேர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த வழக்கில் தீர்ப்பே வரவில்லை. 5 வருடங்களாக துணை முதல்வராகவே இருந்துவிட்டு ஓ.பி.எஸ் சென்றுவிட்டார். விதிகளைத் தளர்த்துவதற்கு சபாநாயகருக்கு அதிகாரம் இருக்கிறது என்பது மரபாக உள்ளது, அவையில் பெரும்பான்மை இருப்பதால் திருத்துவதற்கும் ஒப்புதல் கிடைக்கிறது. இதில் நீதிமன்றம் தலையிடுவதற்கு வாய்ப்பில்லை" என்கிறார்.

``உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டவர்களை எதிர்க்கட்சி அமரவைப்பது சரியான ஒன்றுதானா?" என தி.மு.க சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` இது ஏற்கெனவே நடைமுறையில் உள்ள ஒன்றுதான். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. நீதிமன்றம் சரியானதை சொல்லும்" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :