சேலத்தில் ஆசிட் வீச்சு: 20 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த மனைவி மீது ஆசிட் வீசி கொன்ற கணவர்

சேலத்தில் ஆசிட் வீச்சு: 20 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த மனைவி மீது ஆசிட் வீசி கொன்ற கணவர்

பட மூலாதாரம், kemalbas / getty images

படக்குறிப்பு, படம் சித்தரிப்புக்காக

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் ஒருவர் தன் மனைவி மீது ஆசிட் வீசி கொன்ற சம்பவம் சேலத்தை அதிர வைத்திருக்கிறது.

என்ன நடந்தது?

சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் இயேசுதாஸ். இவருக்கும் நாமக்கல் மாவட்டம் வையப்பமலையை சேர்ந்த ரேவதி என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் இயேசுதாஸ் மனைவியின் மீது சந்தேகப்பட்டு அடிக்கடி அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்துள்ளார் என்று ரேவதி தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாத ரேவதி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதைத் தொடர்ந்து ரேவதி சேலம் நகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது கணவர் கொடுமை செய்வதாக புகாரும் கொடுத்துள்ளார்.

இதையடுத்து நேற்று (ஆகஸ்டு 30) காவல் நிலையத்திலிருந்து கணவன் மனைவி இருவரையும் விசாரணைக்கு வர சொல்லியிருக்கின்றனர்.

'சேர்ந்து வாழ விருப்பம் இல்லை'

ரேவதி
படக்குறிப்பு, ரேவதி

பின்னர் நடந்த விசாரணையில், "அவரு கூட எல்லாம் வாழவே முடியாதுங்க. எப்ப பாத்தாலும் சந்தேகப்பட்டு அடிச்சிட்டே இருக்காரு. நான் நீதிமன்றத்தில் விவாகரத்து வாங்கிக்கிறேங்க,"என்று காவல்துறையிடம் கூறிய ரேவதி அதையே எழுதியும் கொடுத்தார்.

ரேவதியின் தாயார் ஆராயி
படக்குறிப்பு, ரேவதியின் தாயார் ஆராயி

அதை அவரது கணவர் ஏற்றுக்கொள்ள மறுத்ததாகக் கூறுகிறார் ரேவதியின் தாயார் ஆராயி.

மீண்டும் சேர்ந்து வாழ விரும்புவதாக இயேசுதாஸ் கூறியதை ஏற்காத ரேவதி, தன்னுடன் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றபோது, பின்னாலேயே வந்த இயேசுதாஸ் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை ரேவதி மீது ஊற்றிவிட்டு தப்பி ஓடியதாக ஆராயி தெரிவிக்கிறார்.

ஆசிட் வீசியதால் ரேவதியின் முகம் மற்றும் மார்பு பகுதியெல்லாம் வெந்து போனது என்றும் தன் மகள் வலி தாங்க முடியாமல் அலறித் துடித்தாகவும் கண்ணீருடன் கூறினார் அந்தத் தாய்.

இன்று கைது செய்யப்பட்ட இயேசுதாஸ்
படக்குறிப்பு, இன்று கைது செய்யப்பட்ட இயேசுதாஸ்

இந்தக் கொடுமையைப் பார்த்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து ரேவதியை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் ரேவதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு பலனளிக்காமல் அவர் நேற்று இரவு இறந்து போனார். இந்த சம்பவம் தொடர்பாக சேலம் டவுன் போலீஸ் உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டது.

அவர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் கரூரில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த இயேசுதாஸ் கைது செய்யப்பட்டார் என்று காவல்துறை தெரிவிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :