இறப்பிலும் இணை பிரியாத காதல் திருமணம் செய்த தம்பதியர் - சேலம் ஆத்தூர் அருகே நெகிழ்ச்சி நிகழ்வு

- எழுதியவர், ஏ.எம்.சுதாகர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
காதல் திருமணம் செய்துகொண்டு இணை பிரியாமல் வாழ்ந்த தம்பதியர், எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து நிகழ்ந்த வெவ்வேறு துன்ப நிகழ்வுகளின் விளைவாக ஒருவர் இறந்தது தெரியாமல் மற்றவர் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் உயிர்நீத்து, இறுதிப் பயணத்தையும் இணைந்தே மேற்கொண்ட நிகழ்வு சேலம் மாவட்டத்தில் நடந்துள்ளது.
தலைவாசல் சாமியார் கிணறு பகுதியை சேர்ந்தவர் விவசாயி சின்னசாமி. இவரது மனைவி முத்தம்மாள். காதல் திருமணம் செய்து கொண்டு எழுபது வயதுக்கு மேலும் ஒற்றுமையாக வாழ்ந்துவந்த தம்பதியர் இவர்கள்.
கணவருக்கு நடந்த விபத்து
கடந்த ஜூலை 22ம் தேதி சின்னசாமியிடம் திக்கித்தினறி பேசிய முத்தம்மாள், ''எனக்கு உடம்பு காய்ச்சல் அனலா அடிக்குது அதோட மூச்சிவிட சிரமமா இருக்குங்க, '' என்று கூறியுள்ளார்.
உடனே தொட்டுப்பார்த்த சின்னசாமி ''ஊரெல்லாம் கொரோனாவா இருக்கு, எதுக்கும் சேலம் போய் டெஸ்டு பன்னிடுவோம்... மருத்துவ செலவுக்கு நான் போயி தேவியாக்குறிச்சியில் உள்ள ஏடிஎம்-ல் பணம் எடுத்த்துட்டு வந்துடுறேன் நீ வீட்டில் பத்திரமாக இரு, '' என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.
தன்னுடைய பைக்கில் தேவியாக்குறிச்சி சென்றவர் சாலையை கடக்க முற்படும் போது அந்த வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக சின்னசாமி மீது மோதியது இதில் சின்னசாமி படுகாயம் அடைந்தார் அவரை மீட்ட உறவினர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்குள்ள மருத்துவர்கள் மேல் சிகிச்சை தேவை என்று கூறியுள்ளனர். அப்படியே கோவை தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர் சின்னச்சாமியின் உறவினர்கள்.
மனைவிக்கு கொரோனா தொற்று

கணவன் விபத்தில் சிக்கியது தெரியத முத்தமாளுக்கு நேரம் ஆக ஆக காய்ச்சல் அதிகமாகி கொண்டே போனதால், அவரை உறவினர்கள் சேலம் காவேரி மருத்துவமனையில் சேர்துள்ளனர்.
கணவன் எங்கே என்று கேட்டவரை, அவர் பணம் எடுத்துக்கொண்டு பின்னால் வருவதாக கூறி சமாதானப்படுத்தியுள்ளனர். மருத்துவமனையில் நடந்த சோதனையில் முத்தம்மாளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மருத்துவமனை நிர்வாகம் அவரை ஆக்சிஜன் படுக்கையில் வைத்திருந்தது.
தனது மனைவி முத்தம்மாள் கொரோனா பாதிப்பில் ஆபத்தான நிலையில் இருக்கிறார் என கணவன் சின்னசாமிக்கு தெரியாது. அதேபோல் தனது கணவர் விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார் என்பது முத்தம்மாளுக்கும் தெரியாத பரிதாபநிலை.
சிகிச்சைக்கு இடைபட்ட நாட்களில் தனது மனைவியை பார்க்க வேண்டும் என்று கணவனும், கணவனை பார்க்க வேண்டும் என்று மனைவியும் அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்தனர். உறவினர்களும் என்னென்னவோ சொல்லி சமாளித்து வந்தனர்.
சாவிலும் பிரிவில்லை
இந்த நிலையில் எதிர்பாராத விதமாக ஆகஸ்ட் 2ம் தேதி சிகிச்சை பலனின்றி சின்னசாமி இறந்து போனார். "கோவையில் இருந்து அவரின் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி கொண்டு சேலம் வரும் வழியில் எனக்கு முத்தம்மாள் சேர்த்திருந்த மருத்துவமனையில் இருந்து போன்கால் வந்தது. எடுத்து பேசினால் சேலத்தில் கொரோனா சிகிச்சைபெற்று வந்த மனைவி முத்தம்மாளும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துபோனார் என்று கூறுகின்றனர். அந்த செய்தியை எங்களால் தாங்கவே முடியவில்லை," என்று வேதனையுடன் கூறிகிறார் இறந்தவர்களின் உறவினரான பாரதி பிரபு.
மேலும் என்ன நடந்தது நாம் அவரிடம், பிபிசி தமிழுக்காக பேசினோம். "காதலித்து திருமணம் செய்துகொண்டு கடைசி வரை ஒற்றுமையாக வாழ்ந்து வந்தவர்கள். அவர்களை எப்படி பிரிப்பது. சாவிலும் அவர்கள் இணை பிரியக்கூடாது என சொந்தங்கள் கூறி முடிவெடுத்தோம். அவர்களின் சடங்கின்போது சாமியார் கிணறு அருகே உள்ள மயானத்தின் தகனமேடையில் இரு உடல்களையும் ஒன்றாக சேர்த்து வைத்து தகணம் செய்தோம்," என்று சோகத்தோடு கூறினார் பாரதி பிரபு.
பிற செய்திகள்:
- தலித் கிராம உதவியாளரை காலில் விழ வைத்தாரா ஆதிக்க சாதிக்காரர்? விசாரணைக்கு ஆணை
- பஜ்ரங் புனியா: பள்ளியை தவிர்க்க மல்யுத்தம் பயின்றது முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்றது வரை
- பல கோடி ரூபாய் மோசடி செய்து சிக்கிய ஹெலிகாப்டர் பிரதர்ஸ் யார்? அரசியல் பின்னணி என்ன?
- ரவிக்குமார் தஹியா: ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2-வது வெள்ளி வென்ற மல்யுத்த வீரன் யார்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












