மணிப்பூர் வன்முறையால் அண்டை மாநிலங்களுக்கும் அச்சம் பரவுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், திலீப் குமார் சர்மா
- பதவி, பிபிசி ஹிந்திக்காக, கவுகாத்தியிலிருந்து
39 வயதான என் அஞ்சலி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), கடந்த சனிக்கிழமை காலை மிகவும் பயந்துபோயிருந்தார்.
அஞ்சலி மிசோரம் தலைநகர் ஐசாலில் தனது மகனுடன் வசித்து வருகிறார். அவர் மணிப்பூரின் மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்தவர், ஆனால் ஐசாலில் குடியேறியுள்ளார்.
சனிக்கிழமை காலை, மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்த பலர் மிசோரமிலிருந்து வெளியேறி வருவதாக அஞ்சலி கேள்விப்பட்டதும், அவரது வழக்கமான நாள் சட்டென முடிவுக்கு வந்தது.
மணிப்பூரில் குகி மற்றும் மெய்தேய் சமூகங்களுக்கு இடையே நடந்து வரும் இன வன்முறையின் விளைவு, மிசோரம் உட்பட வடகிழக்கு மாநிலங்களில் இப்போது தெரியத் துவங்கியிருக்கிறது.
மிசோரமில் பழங்குடியின மக்களின் கோபத்தையும் எதிர்ப்பையும் ஆபத்தின் அறிகுறிகளாகப் பலர் கருதுகின்றனர்.
இந்தக் கோபத்தின் வெளிப்பாடாக, Peace Accord MNF Returnees Association (PAMRA) என்ற அமைப்பு கடந்த வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், மிசோரமில் வசிக்கும் மெய்தேய் மக்கள் ‘தங்கள் சொந்தப் பாதுகாப்பிற்காக மிசோரமில் இருந்து வெளியேற வேண்டும்’ என்றும், இல்லாவிட்டால் ‘அவர்களுக்கு எதிராக ஏதேனும் வன்முறை நடந்தால் அதற்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும்’ என்றும் கூறியிருந்தது.
PAMRA என்பது முன்னாள் மிசோ தேசிய முன்னணியின் தலைமறைவுப் போராளிகளுடன் தொடர்புடைய ஒரு அமைப்பாகும்.
அச்சத்தில் வாழும் மிசோரமின் மெய்தேய் மக்கள்

பட மூலாதாரம், ANUP BISWAS
மணிப்பூரில் இரண்டு குகி இனப்பெண்களை ஒரு கும்பல் சாலையில் நிர்வாணமாக அழைத்துச் செல்லும் வீடியோ வைரலானது முதல் மற்ற வடகிழக்கு மாநிலங்களின் பழங்குடியின மக்களிடையே மிகுந்த அதிருப்தியும், அங்குள்ள மெய்தேய் மக்களிடையே பீதியும் ஏற்பட்டுள்ளது.
இதுவரை ஐசாலில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெய்தேய் மக்கள் வெளியேறியுள்ளனர்.
மிசோரமில் திடீரென ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையால், அஞ்சலி கடந்த சனிக்கிழமையில் இருந்து அவர்கள் பயந்திருப்பதாகவும், ஒரு இரவு கூட தங்களால் சரியாகத் தூங்க முடியவில்லை என்றும் கூறினார்.
“இதுவரை மிசோரமில் எல்லாம் நல்லபடியாகத்தான் போய்கொண்டிருந்தது, ஆனால் இப்போது ஒரு பயம் இருந்துகொண்டே இருக்கிறது,” என்கிறார் அஞ்சலி.
PAMRA மிசோ மொழியில் எழுதிய அறிக்கையில், மணிப்பூரில் சோ (Zo) (குகி) இன மக்களுக்கு எதிரான வன்முறை மிசோ மக்களின் உணர்வுகளை ஆழமாக காயப்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. எனவே இப்போது மிசோரமில் மெய்தேய் மக்கள் வாழ்வது பாதுகாப்பானது இல்லை. இந்த அறிக்கைக்குப் பிறகு, சனிக்கிழமை பிற்பகலில் இருந்து மெய்தேய் மக்கள் மிசோரத்தை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
‘சோ’ சமூகம் குகி, சின் (Chin) மற்றும் மிசோ (Mizo) மக்களை உள்ளடக்கியது.
மாநில அரசின் உறுதிமொழிக்குப் பிறகும் அச்சம் நீடிக்கிறது

பட மூலாதாரம், EZRELA DALIDIA FANAI
மிசோரமில் வசிக்கும் அனைத்து மணிப்பூரிகளின் சங்கம் கொடுத்த தகவலின்படி, மிசோரமில் சுமார் 3,000 மெய்தேய் மக்கள் குடியேறியுள்ளனர். இவர்களில் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் வேலை செய்பவர்கள் ஆகியோர் உள்ளனர்.
மிசோரம் தலைநகர் ஐசாலில் சுமார் இரண்டாயிரம் மெய்தேய் மக்கள் வாழ்கின்றனர். மிசோரமில் வசிக்கும் அனைத்து மணிப்பூரிகளின் சங்கத்தின் தலைவர் ஒருவர் பெயர் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு பிபிசியிடம் பேசினார். "மிசோரம் அரசு மெய்தேய் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாகக் கூறியிருக்கலாம். ஆனால் மக்கள் மிகவும் பயந்திருக்கிறார்கள்," என்றார். மிசோரமில் இருந்து பாதிக்கும் மேற்பட்ட மெய்தேய் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக அவர் கூறினார். ஏனெனில், சில உள்ளாட்சி அமைப்புகள் பத்திரிகை செய்திகளை வெளியிட்டு எச்சரிக்கைகளை கொடுத்து வருகின்றன. “எங்கள் அமைப்பு மிசோரமின் உள்துறை ஆணையருடன் இரண்டு மூன்று சந்திப்புகளை நடத்தியது, ஆனால் இன்னும் எங்களுடைய மெய்தேய் மக்களை மிசோரமில் தங்கும்படி அறிவுறுத்த முடியாது,” என்று அவர் கூறுகிறார்.
இருப்பினும், அவர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பு வெறும் அறிவுரை மட்டுமே என்று PAMRA தெளிவுபடுத்தியுள்ளது.
மணிப்பூரில் நடந்து வரும் வன்முறைகள் காரணமாக மிசோரமில் மக்கள் உணர்வு அவர்களுக்கு எதிராக இருப்பதால், மிசோரமில் வசிக்கும் மெய்தேய் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஆனால் மிசோரத்தை விட்டு வெளியேற யாருக்கும் எந்த உத்தரவும் அல்லது நோட்டீசும் வழங்கப்படவில்லை.
மிசோரமில் உள்ள மெய்தேய் மக்கள் வெளியேறுவதற்கான உத்தரவுக்கு பதிலடியாக, அசாமில் வசிக்கும் அனைத்து மணிப்பூரி மாணவர்களின் சங்கம் என்ற அமைப்பும், அசாமின் பராக் பள்ளத்தாக்கில் குடியேறிய மிசோ மக்களை அப்பகுதியை விரைவில் காலி செய்யுமாறு கேட்டுக் கொண்டது. ஆனால், சில மணி நேரங்களிலேயே இந்த மாணவர் அமைப்பும் தனது அறிக்கையை திரும்பப் பெற்றுக்கொண்டது.
இது தவிர, மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்களைக் கண்டித்து, அசாமின் திமா ஹசாவ் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்கிழமை ஆயிரக்கணக்கான பழங்குடியின பெண்கள் வீதிகளில் இறங்கி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி போராட்டம் நடத்தினர்.
‘வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை பரவும் அபாயம் உள்ளது’

பட மூலாதாரம், EZRELA DALIDIA FANAI
வடகிழக்கு சமூக ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் வால்டர் பெர்னாண்டஸ், மணிப்பூரில் நடக்கும் வன்முறைக்கு மற்ற வடகிழக்கு மாநிலங்களில் எழும் எதிர்ப்புகள் அச்சுறுத்தலாகவே பார்க்கப்படவேண்டும் என்கிறார்.
"மணிப்பூரில் இவ்வளவு நாட்களாக வன்முறை நடந்து வருகிறது. இதை பரந்த அளவுக்குக் கொண்டு செல்ல விரும்பும் சில அரசியல் சக்திகள் இருப்பதாக நான் உணர்கிறேன். இதை நாம் நிறுத்த வேண்டும். இந்தச் சக்திகள் உள்ளூர் பிரச்சினைகளைச் சொந்த நலன்களுக்காகப் பயன்படுத்திக்கொள்கின்றன," என்கிறார் அவர்.
வடகிழக்கு இந்தியாவின் ஏழு மாநிலங்களிலும் பிரிவினைவாதத்தால் நீண்ட காலமாக அமைதியின்மை நிலவி வருகிறது.
ஆனால் 2014-ம் ஆண்டு, இப்பகுதியில் உள்ள மிகப்பெரிய நாகா கிளர்ச்சி அமைப்பான நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (NSCN-IM) உடன் அரசாங்கம் ஒரு கட்டமைப்பு ஒப்பந்தம் செய்துள்ளது.
இது தவிர, வேறு மாநிலங்களிலும் பிரிவினைவாதம் பேசும் தீவிரவாதிகளை சமூகத்தின் மைய நீரோட்டத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றும் கூறப்பட்டது. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) பல மாநிலங்களில் இருந்து நீக்கப்பட்டது. இதனால் வடகிழக்கு மாநிலங்களில் அமைதி திரும்புவதாக மக்கள் உணர ஆரம்பித்தனர்.
ஆனால், மணிப்பூரில் நடந்த வன்முறை அந்த அமைதிக்கான நம்பிக்கைகளையெல்லாம் தகர்த்து விட்டது.
வடகிழக்கு பிராந்தியத்தில் அமைதி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த வால்டர் பெர்னாண்டஸ், “கடந்த சில ஆண்டுகளில், சில மோதல்கள் நிறுத்தப்பட்டு ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது, ஆனால் அதே நேரத்தில் வேறு சில வகுப்புவாத மோதல்களும் அதிகரித்துள்ளன. மணிப்பூரில் மட்டுமல்ல, மற்ற இடங்களிலும்," என்றார்.
"உதாரணமாக, அசாமின் நிலையைப் பாருங்கள். இங்கு சாதிப் பிரச்சனைகளுக்குள் கம்யூனிசம் நுழைகிறது. இந்தச் சக்திகள் இப்போது சாதிப் போராட்டத்தை வகுப்புவாதப் போராட்டமாகத் தங்கள் அரசியல் நோக்கங்களுக்காக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்."
மிசோ-குகி மக்களிடையே நிலவும் இனப் பிணைப்புகள்

பட மூலாதாரம், EZRELA DALIDIA FANAI
மணிப்பூரில் நிலவும் இனக்கலவரம் காரணமாகத் தற்போது 12,584 சின்-குகி-சோ மக்கள் மிசோரமில் தஞ்சமடைந்துள்ளனர்.
மிசோரமின் மிசோ மக்கள் மணிப்பூரின் குகி-சோ பழங்குடியினருடன் ஆழமான இனப் பிணைப்பைக் கொண்டுள்ளனர்.
மிசோரமின் மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் வீடுகளை இழந்திருக்கும் சின்-குகி-சோ இன மக்கள் மீது அனுதாபப்படுவதாகவும், அவர்கள் மெய்தேய் மக்கள் மீது மிகுந்த கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மிசோரம், அசாம் போன்ற மாநிலங்களில் இதன் பாதிப்பு குறித்து மூத்த பத்திரிக்கையாளர் சமீர் கே புர்காயஸ்தா கூறுகையில், “இந்த வன்முறையின் விளைவு வடகிழக்கு மாநிலங்களில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளைச் சார்ந்தே உள்ளது,” என்றார்.
"மிசோராமைப் பொறுத்த வரையில், மிசோ மக்கள் குக்கி இனத்தவருடன் இனரீதியாக பிணைக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல, இருவரும் ஒரே கிறிஸ்தவ மதத்தால் பிணைக்கப்பட்டவர்கள். எனவே, குக்கி மக்கள் மீதான தாக்குதல் மிசோ மக்களின் உணர்வுகளை நேரடியாகப் புண்படுத்துகிறது. அதனால் அதன் விளைவு மிசோரமிலும் தெரியும்," என்றார் அவர்.
அவர் மேலும் கூறுகிறார், "இரு பழங்குடியின மக்களும் வசிக்கும் அசாமின் சில பகுதிகளில் கூட சிறிது பதற்றம் இருக்கலாம். ஆனால் மற்ற மாநிலங்களில், இந்த வன்முறையின் நேரடி விளைவு தற்போது தெரியவில்லை. ஏனெனில் பழங்குடி சமூகத்தின் எல்லைகள் முற்றிலும் வேறுபட்டவை."
இருப்பினும், மே 3-ம் தேதி மணிப்பூரில் தொடங்கிய வன்முறைக்குப் பிறகு, மேகாலயாவில் கலவரத்தைத் தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் குறைந்தது 16 பேரைக் காவல்துறை கைது செய்தது.
மேகாலயாவில் ஆரம்பகால பதற்றத்தைக் கருத்தில் கொண்டு, மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது. ஏனெனில் குகி-மேய்தேய் மக்கள் இடையேயான வன்முறை, பழங்குடியினருக்கும் பழங்குடியினர் அல்லாதவர்களுக்கும் இடையிலான சண்டையாக மாறியுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் குடியேறிய பழங்குடியின சமூகத்தின் அதிருப்தியின் விளைவு என்னவாக இருக்கும்?
இந்தக் கேள்விக்கு பதிலளித்த சமீர், "மணிப்பூரில் நடக்கும் வன்முறைகளால் மேய்தேய் சமூகத்தினர் மீது பழங்குடியினர் கோபமடைந்துள்ளனர். குறிப்பாக இரண்டு குக்கி பெண்களை நிர்வாணமாக அணிவகுத்துச் சென்ற சம்பவத்திற்குப் பிறகு, மிசோரம், அசாம், மேகாலயா உள்ளிட்ட பழங்குடியினர் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்,” என்றார்.
"ஆனால், 2001-ம் ஆண்டு மணிப்பூரில் நடந்த பெரிய மோதல் போன்ற பல உதாரணங்களைப் பார்த்தால், அது நாகாலாந்தில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால், இந்தப் பிரச்சினையை தாங்குல் பழங்குடியினர் கையாளுவார்கள் என்று நாகாக்கள் சொன்னார்கள். ஏனெனில் NSCN-IM இன் முக்கியத் தலைவர்கள் தாங்குல் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். குகி-நாகா வன்முறையின் போது கூட வடகிழக்கு மாநிலங்களில் எந்தப் பாதிப்பும் இல்லை," என்கிறார்.

பட மூலாதாரம், Reuters
மிசோரம்-அசாம் எல்லையில் என்ன சூழ்நிலை?
மிசோரமில் குடியேறிய பெரும்பாலான மேய்தேய் மக்கள் அசாமின் பராக் பள்ளத்தாக்கில் வசிப்பவர்கள்.
மிசோரம், அசாமின் பராக் பள்ளத்தாக்குப் பகுதியுடன் ஒரு எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இதே சர்ச்சைக்குரிய அஸ்ஸாம்-மிசோரம் எல்லையில்தான் 2021-ம் ஆண்டு வன்முறை வெடித்தது, அதில் ஐந்து அஸ்ஸாம் போலீஸார் கொல்லப்பட்டனர்.
பராக் பள்ளத்தாக்கின் இந்த பகுதி மிசோரத்தை ஒட்டியுள்ளதால், மிசோ மக்களும் இங்கு குடியேறினர். மணிப்பூரி மாணவர் தலைவர்களின் எச்சரிக்கையை அடுத்து இங்கும் பதற்றம் நிலவுகிறது.
மணிப்பூரில் நடந்து வரும் வன்முறைகள் குறித்து கவலை தெரிவித்துள்ள வடகிழக்கு மாநில மாணவர் அமைப்பின் தலைவர் சாமுவேல் ஜிர்வா, "எந்தவிதமான வன்முறைகளையும் சரியான நேரத்தில் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். நடப்பவற்றைப் பற்றி அனைத்து சமூகங்களும் அறிந்துகொள்ள வேண்டும். மணிப்பூர் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் யாரேனும் நமக்கு தீங்கு விளைவிக்கலாம்.ஆனால் தற்போது மணிப்பூரில் நடந்த வன்முறை வடகிழக்கு மாநிலங்களில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை," என்கிறார்.
இதற்கிடையில், மிசோரம் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலத்தில் இதுவரை எந்த வன்முறையோ, அசம்பாவிதமோ நடக்கவில்லை,” என்று கூறியுள்ளது.
மணிப்பூரில் நடந்து வரும் வன்முறையில் இதுவரை 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 60,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












