சினிமா பாணியில் ரகசிய கருக்கலைப்பு - பெண்களை பின்தொடர்ந்து கும்பலை போலீசார் பிடித்தது எப்படி?

சினிமா பாணியில் ரகசிய கருக்கலைப்பு

பட மூலாதாரம், Getty Images

மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பார்ஷி நகரில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் வாடகை அறையில் வைத்து 32 பெண்களுக்கு சட்டத்துக்கு புறம்பாக கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக பார்ஷி நகர போலீசார் சில பெண்கள் உட்பட எட்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இவர்களில் தனியார் மருத்துவமனை செவிலியர் சுஷ்மா கிஷோர் கெய்க்வாட், மருத்துவமனை பணிப்பெண் உமா பாபுராவ் சர்வாடே, தடை செய்ய கருக்கலைப்பு மாத்திரைகளை வைத்திருந்த ராகுல் தோரட் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை பார்ஷி நகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின், நீதிமன்ற உத்தரவுப்படி அவர்களை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நந்தா கெய்க்வாட், தாதா சர்வே, சோனு போஸ்லே, சுனிதா ஜாதவ் மற்றும் பரிசோதனை மைய மருத்துவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருக்கலைப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அடுக்குமாடி குடியிருப்பு அறைக்கு போலீசார் சென்றபோது, அங்கு கருக்கலைப்பு மருந்துகள் கொடுக்கப்பட்ட பெண் ஒருவர் வலியால் துடித்துக் கொண்டிருந்தார்.

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்

சுஷ்மா கிஷோர் கெய்க்வாட் எனும் 40 வயது பெண், பார்ஷி நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். அத்துடன் அந்த நகரிலேயே ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் (போயிட் கன்ஸ்ட்ரக்ஷன் அப்பார்மென்ட்) அறை ஒன்றையும் அவர் வாடகைக்கு எடுத்திருந்தார். சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ய விரும்பும் பெண்களுக்கு அதை மேற்கொள்ளும் இடமாக அந்த அறையை அவர் பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில்தான், அந்த குடியிருப்பில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு நடைபெற்று வருகிறது என்ற ரகசிய தகவல் ஜூலை 22 அன்று காவல்துறைக்கு கிடைத்தது.

அதையடுத்து, அன்றிரவு 8:30 மணியளவில் பார்ஷி நகர போலீஸ் குழு அந்த அடுக்குமாடி குடியிருப்பை அடைந்தது. இரண்டு நீதிபதிகளும் அவர்களுடன் சென்றிருந்தனர்.

கருக்கலைப்பு மகாராஷ்டிரா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெண்ணின் வயிற்றில் வளரும் கருவின் நிலையை காட்டும் மாதிரிப் படம்

உண்மையை உரைத்த பெண்

ஒன்பது மணியளவில் சந்தேகத்துக்கிடமாக ஒரு பெண் கையில் பையுடன் குறிப்பிட்ட அறைக்குள் நுழைந்தார். அப்போது அந்த வளாகத்தில் மறைந்திருந்த போலீசார் அந்த பெண்ணை பின்தொடர்ந்து அறைக்குள் சென்றபோது அங்கு நான்கு பெண்கள் காத்திருந்தனர். அவர்களில் ஒருவர் கட்டிலில் உறங்கியிருந்தார்.

போலீசாரை கண்டதும் பயந்து போன அந்தப் பெண், கருக்கலைப்பு செய்து கொள்ள தான் இங்கு வந்ததாக கூறினார். கட்டிலில் படுத்திருந்த அப்பெண்ணுக்கு அருகில் நின்று கொண்டிருந்த இரண்டு பெண்கள் தங்களின் பெயர் சுஷ்மா கிஷோர் கெய்க்வாட் மற்றும் உமா பாபுராவ் சர்வாடே என்று போலீசிடம் தெரிவித்தனர்.

அந்த அறையில் இருந்த 6,106 ரூபாய் மதிப்புள்ள மருந்து, மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது என்ன?

கருக்கலைப்பு நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, அடுக்குமாடி குடியிருப்பு அறைக்கு போலீசார் சென்றபோது, அங்கு கருக்கலைப்பு மருந்துகள் கொடுக்கப்பட்ட பெண் ஒருவர் வலியால் துடித்துக் கொண்டிருந்தார். பார்ஷி நகர போலீஸ் குழுவில் இடம்பெற்றிருந்த மருத்துவர், அப்பெண்ணின் நிலையை கண்டு உடனே 108 என்ற எண்ணை தொடர்பு கொண்டு அவசர ஊர்தியை வரவழைத்தார்.

அதில் பார்ஷி நகருக்கு அருகில் இருந்த ஊரக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்தப் பெண்ணுக்கு சிறிது நேரத்தில் அங்கு கருச்சிதைவு நடைபெற்றது. அந்தப் பெண் கரு, கருக்கலைப்பு நிகழ்ந்த சில நிமிடங்களிலேயே இறந்து போனது. அதையடுத்து கருக்கலைப்பு செய்யப்பட்ட அந்தப் பெண் மேல்சிகிச்சைக்காக சோனாப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கருக்கலைப்பு மகாராஷ்டிரா

பட மூலாதாரம், MAHARASHTRA POLICE

படக்குறிப்பு, பார்ஷி நகர காவல் நிலையம்

6 மாதங்கள் 32 கருக்கலைப்புகள்

இதனிடையே, அடுக்குமாடி குடியிருப்பில் அறையை வாடகைக்கு எடுத்து அங்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்து வந்த செவிலியர் சுஷ்மா கெய்க்வாட், மருத்துவமனை பணிப்பெண் உமா சர்வாடே ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

“தற்போது மேல்சிகிச்சைக்காக சோனாப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண், கருக்கலைப்பு செய்ய விரும்புவதாக பரிசோதனை மையத்தின் மருத்துவர் மூலம் தெரிய வந்தது. அதையடுத்து அவரை இங்கு வரவழைத்து கருக்கலைப்பு மாத்திரைகள் கொடுத்தோம்” என்று சுஷ்மா தெரிவித்தார்.

அத்துடன், “கிட்டதட்ட கடந்த ஆறு மாதமாக இங்கு கருக்கலைப்பு செய்து வருகிறோம். தாதா சர்வே எனும் முகவர் மூலம் எங்களிடம் அனுப்பப்பட்ட 15 முதல் 20 பெண்களுக்கும், சோனு போஸ்லே என்பவர் அனுப்பிய 5 முதல் 7 பெண்களுக்கும் கருக்கலைப்பு செய்துள்ளோம். சுனிதா ஜாதவ் எனும் முகவர் மூலம் வந்த 4-5 பெண்களுக்கும் இங்கு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது” என்றும் அவர் போலீசாரிடம் கூறினார்.

நாங்கள் கருக்கலைப்பை மேற்கொள்வதற்கு நந்தா கெய்க்வாட் என்ற பெண் எங்களுக்கு உதவி புரிந்து வந்தார். தடை செய்யப்பட்ட கருக்கலைப்பு மாத்திரைகளை ராகுல் பலிராம் தோரட் என்பவரிடம் இருந்து பெற்று வந்தோம் என்றும் போலீசாரின் விசாரணையின்போது சுஷ்மா கெய்க்வாட் மற்றும் உமா சர்வாடே தெரிவித்திருந்தனர்.

8 பேர் மீது வழக்குப்பதிவு

இருவரும் அளித்த வாக்குமூலத்தின்படி சுஷ்மா கிஷோர் கெய்க்வாட், உமா பாபுராவ் சர்வாடே, நந்தா கெய்க்வாட், முகவர்கள் தாதா சர்வே, சோனு போஸ்லே மற்றும் சுனிதா ஜாதவ், ராகுல் பலிராம் தோரட், பரிசோதனை மைய மருத்துவர் (இவரது முழுப் பெயர் மற்றும் முகவரி இன்னும் கிடைக்கப் பெறவில்லை) ஆகிய எட்டு பேர் மீது பார்ஷி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 34, 313, 315, 316 மற்றும் 1994 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட, முன் கருத்தரிப்பு மற்றும் பிறப்புக்கு முந்தைய நோயறிதல் நுட்பங்கள் சட்டத்தின் 4, 5 (2,3, 4), 6 ஆகிய பிரிவுகளின் கீழ், எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பார்ஷி நகர காவல் துணை ஆய்வாளர் கஜனன் கர்னே வாட் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்.

“இந்த வழக்கில் இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது” என்று விசாரணை அதிகாரியான கஜனன் கர்னே வாட் பிபிசி மராத்தியிடம் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் தொடர்புடையவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறும் போலீசார், கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை அறியும் சட்ட விரோத பரிசோதனை மற்றும் கருக்கலைப்பை மேற்கொள்ள வேண்டாம் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: