எம்டன்: சென்னை மாநகரை பத்தே நிமிடங்களில் கதிகலங்கச் செய்த போர்க்கப்பல்

சென்னை மீது எம்டன் தாக்குதல்

பட மூலாதாரம், MADRAS LOCAL HISTORY GROUP

படக்குறிப்பு, சென்னையில் எம்டன் நடத்திய தாக்குதலில் பற்றி எரிந்த கட்டடங்கள்
    • எழுதியவர், சிவகுமார் இராஜகுலம்
    • பதவி, பிபிசி தமிழ்

அன்று 1914ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி...

நேரம் சரியாக இரவு 10 மணி இருக்கலாம்.

இப்போது சென்னை என்றழைக்கப்படும் அப்போதைய மெட்ராஸ் மாநகரை நோக்கி வேகமாக நெருங்கிய அந்தக் கப்பல் கரையில் இருந்து 2 கடல்மைல் தொலைவில் நின்றுவிட்டது. அடுத்த கனமே அந்த கப்பலில் பொருத்தப்பட்டிருந்த பீரங்கிகள் சென்னையை நோக்கி குண்டுமழை பொழிந்துவிட்டன.

வெறும் பத்தே நிமிடங்களில் 130 குண்டுகள் அந்த பீரங்கிகளில் இருந்து வெளிப்பட்டு சென்னையை துளைத்தெடுத்துவிட்டன.

சென்னை உயர்நீதிமன்ற வளாகம், துறைமுகத்தில் இருந்த பிரிட்டிஷ் கடற்படை அதிகாரிகளின் கிளப், பொது மருத்துவமனை, வெப்பேரி, நுங்கம்பாக்கத்தில் ஹாடோஸ் சாலை, பூந்தமல்லி ஹை ரோடு, ராயபுரத்தில் துப்பாக்கித் தொழிற்சாலை, காசா மேஜர் சாலை, ஜார்ஜ் டவுன் ஆகிய இடங்களில் எம்டன் போர்க்கப்பலின் பீரங்கிகளில் இருந்து வெளிவந்த குண்டுகள் தாக்கின.

சென்னை மீது எம்டன் தாக்குதல்

பட மூலாதாரம், MADRAS LOCAL HISTORY GROUP

படக்குறிப்பு, எம்டன் போர்க்கப்பல்
சென்னை மீது எம்டன் தாக்குதல்

பட மூலாதாரம், MADRAS LOCAL HISTORY GROUP

சென்னை மீது எம்டன் தாக்குதல்

பட மூலாதாரம், MADRAS LOCAL HISTORY GROUP

வெறும் பத்தே நிமிடங்களில 130 குண்டுகள்

பிரிட்டிஷ் அரசுக்குச் சொந்தமான பர்மா ஆயில் நிறுவனத்தில் 4 டேங்குகளில் இருந்த 3.5 லட்சம் கேலன் கச்சா எண்ணெய் தீப்பிடித்துக் கொண்டது. அதில் இருந்து வானளாவ தீ ஜூவாலைகள் வெளிப்பட்டன. சுற்றியிருந்த பகுதியை கரும்புகை சூழ்ந்தது.

எம்டன் போர்க்கப்பலின் பீரங்கிகளில் இருந்து வெளிப்பட்ட பல குண்டுகள் வெடிக்காமலேயே சென்னை மண்ணில் ஆங்காங்கே கண்டெடுக்கப்பட்டன.

சென்னை மீது எம்டன் தாக்குதல்

பட மூலாதாரம், MADRAS LOCAL HISTORY GROUP

சென்னை மீது எம்டன் தாக்குதல்

பட மூலாதாரம், MADRAS LOCAL HISTORY GROUP

சென்னை மீது யாரும் எதிர்பாராத நேரத்தில் எம்டன் தாக்குதல்

இது ஓர் எதிர்பாராத தாக்குதல்.

ஐரோப்பாவில் பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ரஷ்யா என்று நேச நாடுகளும், ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, பல்கேரியா, துருக்கி என்று அச்சு நாடுகளும் எதிரெதிரே நின்று போரிட்டுக் கொண்டிருந்தன. முதல் உலகப்போர் என்று வரலாற்றில் குறிப்பிடப்பட்டாலும், போர் பிரதானமாக ஐரோப்பாவையே மையம் கொண்டிருந்தது.

இதனால், ஐரோப்பாவில் இருந்து பல ஆயிரம் கி.மீ தொலைவில் இந்தியா மீது அச்சுநாடுகள், குறிப்பாக ஜெர்மனி தாக்குதல் நடத்தும் வாய்ப்புகள் குறித்தே கூட யாரும் சிந்தித்திருக்கவில்லை. அதுவும் சென்னை மாநகரம் 1758ஆம் ஆண்டு பிரெஞ்சு தாக்குதலுக்குப் பிறகு 150 ஆண்டுகளாக எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொண்டதே இல்லை. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் அமைதிப் பூங்காவான நகரங்களில் ஒன்றாகவே திகழ்ந்து வந்தது.

ஆகவே, சென்னை மீது ஜெர்மனி தாக்குதல் நடத்தும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவே இல்லை. வழக்கமான போர்க்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவுமே மேற்கொள்ளப்படவில்லை. சென்னை மாநகரில் இயல்பு வாழ்க்கை அப்படியே தொடர்ந்தது. அதுவும், நவராத்திரி காலம் என்பதால் சென்னை மாநகரமே அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

கலங்கரை விளக்கம் வழக்கம்போல் ஒளி வீசிக் கொண்டிருந்தது. துறைமுகத்தில் இருந்த பிரிட்டிஷ் கடற்படை அதிகாரிகளின் கிளப்பில் கூட விடிய விடிய கேளிக்கைகள் களைகட்டியிருந்தன. எதிரிகள் வர வாய்ப்பே இல்லை என்று கருதியதால் எம்டன் தாக்குதலை எதிர்கொள்ள யாருமே தயாராக இருக்கவில்லை.

சென்னை மீது எம்டன் தாக்குதல்

பட மூலாதாரம், MADRAS LOCAL HISTORY GROUP

சென்னை மீது எம்டன் தாக்குதல்

பட மூலாதாரம், MADRAS LOCAL HISTORY GROUP

மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்த எம்டன்

அந்த நேரத்தில், முன்னெச்சரிக்கை ஏதுமின்றி திடீரென வந்த எம்டன் போர்க்கப்பல் வெறும் பத்தே நிமிடங்களில் சென்னை மாநகரை கதிகலங்கச் செய்துவிட்டு, பிரிட்டனின் எதிர்த் தாக்குதலைச் சந்திக்க காத்திருக்காமல், கனநேரத்தில் கிழக்கு நோக்கிச் சென்றுவிட்டது.

இந்தத் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயம் அடைந்தனர். எம்டன் போர்க்கப்பல் நடத்திய சென்னையில் நடத்திய திடீர் தாக்குதலில் ஏற்பட்ட நேரடி சேதத்தைக் காட்டிலும் உளவியல் ரீதியிலான பாதிப்புகள் மிகவும் அதிகம். எம்டனின் எதிர்பாராத தாக்குதல் சென்னை மக்களின் நம்பிக்கையை ஒரேடியாக குலைத்துவிட்டது.

சென்னையில் எம்டன் கப்பல் தாக்குதல் நடத்தியபோது, அப்போதைய சென்னை மாகாண ஆளுநர் பென்ட்லாண்ட், உதகமண்டலத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.

தாக்குதல் குறித்துக் கேள்விப்பட்டதும் அடுத்த 3 நாட்களில் சென்னைக்கு விரைந்து வந்த அவர், ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே தலைநகரில் தங்கினார். சென்னையில் நிலைமை சீரவடைவதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் அவர் மீண்டும் உதகைக்கே ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார்.

சென்னை மீது எம்டன் தாக்குதல்

பட மூலாதாரம், MADRAS LOCAL HISTORY GROUP

படக்குறிப்பு, சென்னை மாகாண ஆளுநர் பென்ட்லாண்ட்

சென்னையை காலி செய்துவிட்டு வெளியேறிய மக்கள்

ஆனால், இது மக்கள் மத்தியில் வேறுவிதமான சமிக்ஞைகளை வெளிப்படுத்திவிட்டது.

'சென்னையில் இருப்பது பாதுகாப்பானதாக இல்லை என்று ஆளுநரே கருதுகிறார்' என்ற வதந்தி தீயாய் பரவ அதுவும் ஒரு காரணமாகிவிட்டது. இதனால், சென்னையில் இருக்கவே பயந்துபோன மக்கள் அவசர அவசரமாக நகரை காலி செய்துவிட்டு வெளியேறத் தொடங்கினர்.

இதனால், சென்னையை விட்டு வெளியேறுவதற்கான சாலைகள், ரயில் நிலையங்கள் மக்கள் வெள்ளத்தில் திணறிப் போயின. பேருந்துகள், ரயில்களில் இடம் கிடைக்காத மக்கள் மாட்டு வண்டிகளில் சென்னையை விட்டு வெளியேறினர்.

இன்னும் ஏராளமானோர் மூட்டை, முடிச்சுகளை சுமந்துகொண்டு நடந்தே சென்றனர். அவர்கள் அனைவரின் ஒரே குறிக்கோள், சென்னையைவிட்டு முடிந்தவரை பாதுகாப்பாக வெகுதூரம் செல்வதாகவே இருந்தது.

சென்னையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. இன்னொருபுறம் உணவுப் பற்றாக்குறை மக்களை வாட்டி வதைத்தது. இதையடுத்து, மக்களின் அச்சத்தைப் போக்க குஜிலிப்பாட்டு வகையில் துண்டுப் பிரசுரங்களை சென்னை மாகாண அரசு ஏராளமாக அச்சடித்து வெளியிட்டது.

சென்னை மீது எம்டன் தாக்குதல்

பட மூலாதாரம், MADRAS LOCAL HISTORY GROUP

எம்டன் கப்பலுக்கு முடிவுரை எழுதிய பிரிட்டிஷ் கடற்படை

சென்னை மீதான எம்டன் போர்க்கப்பலின் திடீர் தாக்குதலை தங்களுக்கு விடப்பட்ட நேரடி சவாலாகவே பிரிட்டன் எடுத்துக் கொண்டது. ஏனெனில், பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தை தாக்குதலுக்கு ஜெர்மனி தேர்வு செய்யும் என்று பிரிட்டிஷ் அரசு எதிர்பார்க்கவே இல்லை.

இதையடுத்து, எம்டன் போர்க்கப்பலை தேடிப் பிடித்து அழித்தொழிக்கும் வேலையில் பிரிட்டிஷ் கடற்படை முனைப்புடன் ஈடுபட்டது. இந்த வலுவான கடற்படையைக் கொண்டுதானே இந்தியா உள்பட பூமிப்பந்து முழுவதும் பல நாடுகளை அவர்கள் ஆக்கிரமித்தார்கள்.

உச்சம் தொட்ட எல்லாமே கீழே வந்துதானே ஆகவேண்டும். அந்த விதிக்கு எம்டன் போர்க்கப்பல் மட்டும் விதிவிலக்கா என்ன!

சுமார் 56 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு வெற்றிகரமாகப் பயணித்து 40க்கும் மேற்பட்ட எதிரி நாட்டு போர்க்கப்பல்களை ஆழ்கடலிலேயே சமாதியாக்கிய பெருமை கொண்ட எம்டன் போர்க்கப்பலுக்கான முடிவுரையும் அந்த நாளில் எழுதப்பட்டது.

சென்னை மீது எம்டன் தாக்குதல்

பட மூலாதாரம், MADRAS LOCAL HISTORY GROUP

படக்குறிப்பு, எம்டன் போர்க்கப்பலின் நகர்வைக் காட்டும் வரைபடம்
சென்னை மீது எம்டன் தாக்குதல்

பட மூலாதாரம், MADRAS LOCAL HISTORY GROUP

சென்னையில் தாக்குதல் நடத்திய 50 நாட்கள் கழித்து, 1914ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி கொக்கோஸ் தீவுக் கூட்டம் அருகே எம்டன் போர்க்கப்பலை பிரிட்டிஷ் கடற்படைக்குச் சொந்தமான 3 கப்பல்கள் சுற்றி வளைத்தன.

அங்கே நடந்த கடும் சண்டையில் பிரிட்டிஷ் கடற்படையின் எச்.எம்.ஏ.எஸ்.சிட்னி போர்க்கப்பல் நடத்திய கடும் தாக்குதலால் நிலைகுலைந்த எம்டன் போர்க்கப்பல், எதிரி நாடுகளின் 40 கப்பல்களை எங்கே அனுப்பியதோ அதே ஆழ்கடலுக்குள் சமாதியாகிப் போனது.

சென்னையை தாக்க எம்டன் தீர்மானித்தது ஏன்?

வெறும் பத்தே நிமிட தாக்குதலில் ஒட்டுமொத்த சென்னை மாநகரையும் கதிகலங்கச் செய்ததுடன், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கோபத்தையும் சம்பாதித்த எம்டன் போர்க்கப்பல் குறித்தும், அது தாக்குதல் நடத்திய நேரத்தில் சென்னை எப்படி இருந்தது என்பது குறித்தும் எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான வெங்கடேஷிடம் பேசினோம்.

முதல் உலகப்போர் காலகட்டத்தில் யாருமே எதிர்பார்க்காத வகையில் சென்னையை தாக்குதல் இலக்காக எம்டன் போர்க்கப்பல் தேர்வு செய்தது ஏன் என்ற கேள்வியை முன்வைத்தோம்.

சென்னை மீது எம்டன் தாக்குதல்

பட மூலாதாரம், MADRAS LOCAL HISTORY GROUP

படக்குறிப்பு, வெங்கடேஷ், வரலாற்று ஆய்வாளர்

அதற்குப் பதிலளித்த அவர், "முதல் உலகப்போரில் இந்தியா நேரடியாக பங்கேற்கவில்லையே தவிர, பிரிட்டனுக்கு ஆதரவாக இந்தியாவை சேர்ந்த 15 லட்சம் ராணுவ வீரர்கள் போரிட்டுக் கொண்டிருந்தனர்.

அதோடு, 1.7 லட்சம் குதிரைகள், ஒட்டகங்கள் பிரிட்டனுக்கு போரில் உதவிபுரிய இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. ஆகவே, இந்தியா மீது தாக்குதல் நடத்துவதற்கு அந்த நேரத்தில் ஜெர்மனிக்கு போதுமான காரணங்கள் இருந்தன," என்றார்.

எம்டன் கப்பலின் தந்திரக்கார கேப்டன் வான் முல்லர்

அதேநேரத்தில், "ஜெர்மன் கடற்படையில் இடம் பெற்றிருந்த எம்டன் போர்க்கப்பல் ஒரு இலகுரக நாசகாரி போர்க்கப்பல். அது ஜெர்மன் கடற்படையின் மத்திய கட்டளை மையத்தின் உத்தரவுக்காக காத்திராமல், தானே தனது தாக்குதல் இலக்கை தேர்வு செய்துகொள்ளும் சுதந்திரத்தைப் பெற்றிருந்தது.

அந்த போர்க்கப்பலை தலைமையேற்று வழிநடத்திய லெப்டினன்ட் கர்னல் வான் முல்லர் மிகுந்த திறமைசாலி, தந்திரசாலியும்கூட. அவரது வியூகங்களும், தாக்குதல் உத்திகளும்தான் எம்டன் போர்க்கப்பலை பிரிட்டிஷ் கடற்படைக்கு சிம்மசொப்பனமாக மாற்றின.

தன்னுடைய நேர்த்தியான திட்டங்களால்தான் 40க்கும் மேற்பட்ட நேச நாட்டுப் போர்க்கப்பல்களை எம்டன் மூலம் அவர் ஆழ்கடலுக்குள் அனுப்பியிருந்தார். அந்த நேரத்தில் சீன கடல் பகுதியில் எம்டன் கப்பல் நிலைகொண்டிருந்த போதுதான், சென்னை மீது எதிர்பாரா திடீர் தாக்குதலை நடத்த அவர் திட்டமிட்டிருக்க வேண்டும்.

இதன் மூலம் ஜெர்மனியால் உலகின் எந்த மூலையிலும் தாக்குதல் நடத்த முடியும் என்று பிரிட்டிஷ் அரசை திகைக்கச் செய்யவேண்டும் என்பது அவரது நோக்கமாக இருந்திருக்கலாம். ஆனால், அதுவே எம்டன் போர்க்கப்பலின் முடிவுக்கும் காரணமாகிவிட்டது," என்று கூறினார் வெங்கடேஷ்.

சென்னை மீது எம்டன் தாக்குதல்

பட மூலாதாரம், MADRAS LOCAL HISTORY GROUP

படக்குறிப்பு, லெப்டினன்ட் கர்னல் வான் முல்லர், கேப்டன், எம்டன் போர்க்கப்பல்

தமிழில் அச்சுறுத்தலை குறிக்கும் சொல்லாக நிலைபெற்றுவிட்ட 'எம்டன்'

மேலும் தொடர்ந்த அவர், "கொகோ தீவுக் கூட்டத்தின் அருகே பிரிட்டிஷ் கடற்படையின் 3 போர்க்கப்பல்கள் சுற்றி வளைத்துவிட்ட பிறகும்கூட எம்டன் கப்பல் சரணடையவில்லை. அதன் கேப்டன் லெப்டினன்ட் கர்னல் வான் முல்லர் இறுதி வரை தீரத்துடன் போரிடவே தீர்மானித்தார்.

இதனால், கடும் சேதமடைந்து எம்டன் போர்க்கப்பல் மூழ்கத் தொடங்கிய போதும்கூட பிரிட்டிஷ் கப்பல்களை நோக்கிச் சுட்டுக் கொண்டேதான் இருந்தது," என்று விளக்கினார்.

இந்தக் கடும் சண்டையில் எம்டன் போர்க்கப்பலில் இருந்த பாதி பேர் உயிரிழந்துவிட்டனர். முடிவில் கப்பலில் எஞ்சியிருந்த பாதி பேர் பிரிட்டிஷ் கடற்படையிடம் சரணடைந்தனர்.

"எம்டன் போர்க்கப்பல் பிரிட்டிஷ் கடற்படையால் மூழ்கடிக்கப்பட்டாலும் கூட, ஜெர்மனியில் வீர, தீரத்தை வெளிப்படுத்தியதற்காக வழங்கப்படும் இரும்புச் சிலுவை பதக்கத்தை அந்த போர்க்கப்பலுக்கு அன்றைய ஜெர்மானிய சக்கரவர்த்தி வில்லியம் கெய்சர் வழங்கி கௌரவித்தார். அதில் பணியாற்றிய உயிர் தப்பிய ஜெர்மானிய வீரர்கள் அனைவரும் தங்களது பெயரில் எம்டன் என்பதைச் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்," என்று கூறினார் வெங்கடேஷ்.

முதல் உலகப்போரைப் பொருத்தவரை, இந்தியா ஒரே ஒருமுறை மட்டுமே தாக்குதலை எதிர்கொண்டது. அதுவும், சென்னை மண்ணில் நடத்தப்பட்டது.

எம்டன் போர்க்கப்பலின் எதிர்பாரா திடீர் தாக்குதல் தமிழ் மக்களிடையே உளவியல்ரீதியாக ஏற்படுத்திய தாக்கம் அளவிட முடியாத அளவுக்கு மிகப்பெரியது. ஆகவேதான், 'எம்டன்' என்ற பெயர் அச்சுறுத்தலைக் குறிக்கும் சொல்லாக இன்றும்கூட தமிழில் நிலைபெற்றுவிட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: