தன்பாலின ஈர்ப்பு வரக் காரணம் என்ன? காதலுக்காக பெற்றோரை எதிர்க்கத் துணிந்த கேரள தம்பதி உருக்கம்

- எழுதியவர், எஸ்.மகேஷ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
"என்னை அவளும் அவளை நானும் நன்கு புரிந்து வைத்திருந்தோம். இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருந்ததால் எங்களுக்கான இணையை தேர்வு செய்கையில் பாலினம் பார்த்து நாங்கள் தேர்வு செய்யவில்லை," என்கின்றனர் கேரளாவை சேர்ந்த லெஸ்பியன் தம்பதிகளான அபிபாவும் சுமையாவும்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கொண்டோட்டி பகுதியில் வசிப்பவர்கள், சுமையா ஷெரீன் (21) மற்றும் அஃபிஃபா (21). தன்பாலின தம்பதிகளான இவர்கள் பெற்றோரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நீதிமன்ற தலையீட்டால் சேர்ந்து வாழத் துவங்கியுள்ளனர். இவர்கள் தாங்கள் சந்தித்த இன்னல்கள் குறித்து பிபிசி தமிழிடம் பேசினர்.
ஒரே பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்தபோது நண்பர்களாக இருந்த இவர்களுக்குள் கொரோனா ஊரடங்கின்போது பந்தம் ஏற்பட்டு தன்பாலின தம்பதிகளாக வாழத் துவங்கியுள்ளனர்.
’ஒரு விஷயத்தை நான் கூறுவதற்கு முன்பே அவளால் அதைப் புரிந்து கொள்ளமுடியும், அதேபோல் என்னாலும் அவளைப் புரிந்துகொள்ள முடியும். எங்களுக்குள் இருந்த இந்தப் புரிதல்தான் நாங்கள் காதல் வயப்படக் காரணம். ஒத்த புரிதல் இருந்ததால், நாங்கள் இணைந்து வாழ முடிவு செய்வதில் பாலினத்தை பார்க்கவில்லை,’ என்றார் அஃபிஃபா.
இவர்களது உறவு குறித்து முதலில் அஃபிஃபாவின் வீட்டில் உள்ளவர்களுக்குத்தான் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 2023 ஜனவரி 27இல் வீட்டில் இருந்து வெளியேறிய இவர்களை, காணவில்லை என்று பெற்றோர் மலப்புரம் கொண்டோட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து ஜனவரி 29இல் மலப்புரம் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜரான தம்பதி, சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்துள்ளது. அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இவர்களைச் சேர்ந்து வாழ அனுமதித்துள்ளது.
மீண்டும் பிரிந்த தம்பதி
எர்ணாகுளத்தில் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த தம்பதி அந்த நகரத்திலேயே வசிக்கத் துவங்கியுள்ளனர். ஆனால் கடந்த மே 30ஆம் தேதி அவர்கள் வேலை பார்க்கும் இடத்திற்கு வந்த அஃபிஃபாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அவரை வலுக்கட்டாயமாக சுமையாவிடமிருந்து பிரித்து கூட்டிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து எர்ணாகுளம் புத்தன்குருசு மற்றும் கொண்டோட்டி காவல் நிலையங்களில் சுமையா புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஜூன் 5ஆம் தேதி சுமையா கேரள உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜூன் 9ஆம் தேதி நீதிமன்றம் அஃபிஃபாவை ஆஜர்படுத்த உத்தரவிட்டும் அவர் ஆஜர்படுத்தப்படவில்லை. அவர்கள் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. தொடர்ந்து ஜூன் 19ஆம் தேதி அஃபிஃபாவை அவரது பெற்றோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
ஆனால் சுமையாவுடன் தொடர்ந்து வாழ தனக்கு விருப்பமில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்த அஃபிஃபா பெற்றோருடன் செல்லவே தனக்கு விருப்பம் என்று கூறி அவர்களுடன் சென்றுள்ளார்.

பட மூலாதாரம், Kerala High Court
வலுக்கட்டாயமாக சிகிச்சை
கன்வர்ஷன் தெரபி(Conversion Therapy) எனப்படும் தன்பாலின ஈர்ப்பு சமூகத்தினரை மாற்றுவதற்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதால், நீதிமன்றத்தில் தன்னால் தன்னிச்சையாகப் பேச முடியவில்லை என்று சில நாட்களுக்குப் பிறகு சுமையாவுக்கு அஃபிஃபா ஃபோன் மூலம் தகவல் கொடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து விளிம்பு நிலை மக்களுக்காகப் போராடும் வனஜா கலெக்டிவ் (Vanaja Collective) என்ற அமைப்பின் மூலம் காவல்துறை உதவியோடு அஃபிஃபாவை அவரது வீட்டில் இருந்து மீட்க முயற்சி நடந்துள்ளது.
ஆனால் அஃபிஃபாவின் பெற்றோரும் அவரது ஊரைச் சேர்ந்தவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடும் போராட்டத்துக்குப் பின்னர் காவல்துறையினர் உதவியோடு அஃபிஃபா மீட்கப்பட்டார்.
சுமையாவுடன் செல்ல விருப்பம் இல்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தது குறித்து அஃபிஃபா நம்மிடம் விளக்கம் அளித்தார்.
அஃபிஃபாவை சுமையாவிடம் இருந்து பிரித்து கூட்டிச் சென்ற அவரது பெற்றோர், மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் வரை அஃபிஃபாவிற்கு "தன்பாலின ஈர்ப்பை சரி செய்வதற்காக கன்வர்ஷன்" தெரபி மருத்துவ சிகிச்சை அளித்துள்ளனர்.
"கோழிக்கோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வலுக்கட்டாயமாக என்னை சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு ரத்த பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறி எனக்கு மயக்க மருந்து செலுத்தினர்.
இதனால் இரண்டு நாட்கள் நான் மயக்க நிலையிலேயே இருந்தேன். அதன் பிறகு நான் மருத்துவரிடம் எங்களது உறவு குறித்து தெரிவித்து சுமையாவிடம் செல்ல வேண்டும் எனக் கூறினேன்."

பட மூலாதாரம், Getty Images
ஆனால் "அங்கிருந்த மருத்துவரும், ஆற்றுப்படுத்துனரும் (councillor) எனக்கு ஏற்பட்டிருப்பது Homo Sexuality disorder என்ற குறைபாடு. இரண்டு பெண்களுக்கு இடையிலான இந்த உறவு இயற்கைக்கு முரணானது, ஆனால் எளிதாகக் குணப்படுத்தக் கூடியது தான்" எனக் கூறி சிகிச்சை அளித்ததாகக் கூறுகிறார் அஃபிஃபா.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பு தான் மீண்டும் சுமையாவுடன் செல்ல வேண்டும் எனக் கூறியதாகவும், இதைக் கேட்டு கோபம் கொண்ட மருத்துவர் தனக்கு கூடுதல் அளவு (dose) மயக்க மருந்து அளித்ததாகவும் அவர் கூறினார்.
இதனால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது "ஒருவித மயக்க நிலையில், உடல் தளர்வுற்று, நடக்கும்போது கீழே விழுந்துவிடுவது போன்ற உணர்வும், எதையும் யோசனை செய்யவோ சரியாகப் பேசவோகூட முடியாமல் இருந்துள்ளார்."
மேலும் தனது பெற்றோர் "நீ இறந்தாலும் சரி உன்னை சுமையாவுடன் சேர விடமாட்டோம். சுமையாவை கொன்றுவிடுவோம்" என மிரட்டியிருந்தார்கள்.
இதனால் தாம் ஏதாவது பேசினால் சுமையாவுக்கு ஏதாவது நிகழ்ந்துவிடுமோ என்ற பயத்தில்தான் நீதிமன்றத்தில் அவ்வாறு தெரிவித்ததாகக் கூறினார் அஃபிஃபா.
சமுதாயம் தங்களது காதலை அங்கிகரிக்கவில்லை எனக் கூறும் சுமையா-அஃபிஃபா தம்பதி வெறும் உடல் சுகத்துக்காகத்தான் நாங்கள் இணைந்துள்ளதாக விமர்சிக்கின்றனர் என வேதனையுடன் கூறினார்.

பட மூலாதாரம், Empics
“இரண்டு பெண்கள் சேர்ந்து வாழ்வது வெறும் பாலியல் இச்சைகளுக்காக மட்டும்தான், ‘காமக் கிறுக்கு’ என்றுதான் பார்க்கிறார்கள். அப்படிப்பட்டவர்களிடம் பேசிப் பயனில்லை. அவர்களுக்குப் புரிய வைக்கவும் முடியாது."
"மருத்துவர்களாலேயே எங்கள் உறவைப் புரிந்து கொள்ள முடியவில்லை. பிறகு எப்படி பெற்றோரும் சக மனிதர்களும் புரிந்து கொள்ளவார்கள். அதை எப்படி அவர்களிடம் எதிர்பார்க்க முடியும்,” என்று குரலில் வெறுமை ஒலிக்கப் பேசுகிறார் சுமையா.
சமூக ஊடகங்களில் போலி கணக்குகளில் இருந்து தங்களைப் பலரும் விமர்சிப்பதாக அவர்கள் கூறுகின்றனர். "காம கிறுக்கு தான் எங்கள் உறவுக்கு காரணம் என்கின்றனர். ஆனால் அதைக்கூட அவர்களது நிஜ கணக்கில் இருந்து விமர்சிக்க அவர்களுக்கு தைரியம் இல்லை," என்று வேதனை தெரிவித்தனர் இருவரும்.
தன்பாலின தம்பதிகள் சட்டபூர்வமாக திருமணம் செய்து வாழ இந்தியாவில் வழியில்லை என்பது குறித்து இருவரும் கவலை தெரிவித்தனர்.
ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படாத நிலையில், "உச்சநீதிமன்றம் தங்கள் உணர்வுகளையும் புரிந்துகொண்டு, தன்பாலின திருமணத்தை அங்கீகரித்து எங்களைப் போன்றவர்கள் சட்டப்பூர்வமாகச் சேர்ந்து வாழ அனுமதியளிக்க வேண்டும்," என்கின்றனர் அஃபிஃபா- சுமையா தம்பதி.
காவல்துறை பாதுகாப்பு கோரிய தம்பதி
தங்களுக்கு அஃபிஃபாவின் பெற்றோர் மற்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் மிரட்டல் வருவதாகவும், இருவரையும் முன்பு போல் வலுக்கட்டாயமாகப் பிரிக்க அவர்கள் முயலக்கூடும் எனவும் கூறி அஃபிஃபா- சுமையா தம்பதி மீண்டும் கேரள உயர் நீதிமன்றத்தை நாடியது.
ஜூலை 5ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி குன்கி கிருஷ்ணன் இருவருக்கும் தகுந்த காவல்துறை பாதுகாப்பு அளிக்க கேரள மாநில காவல்துறை டி.ஜி.பி., மற்றும் எர்ணாகுளம் காவல்துறை காவல் ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு ஜூலை 21ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












