எல்ஜிபிடி சொற்களஞ்சியம்: "இது எங்களுக்கான அடையாளம்" - பால்புதுமையினர் விளக்கம்

Glossary of LGBTIQA+ terms

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், எம். ஆர். ஷோபனா
    • பதவி, பிபிசி தமிழ்

உங்கள் பெயரை ஒருவர் தவறாக அழைத்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? அதுவே பலமுறை தொடர்ந்தால், நீங்கள் எப்படி உணர்வீர்கள்?

இத்தகைய போக்கை நாம் ஒரு சமூகத்திடம் காலங்காலமாக திணித்து வருகிறோம். ஆம்! திருநர் அல்லது பால்புதுமை (Queer) சமூகத்தினர், நாம் பொதுவாக அழைக்கும் பதங்களோ அல்லது நாம் அவர்களை அழைக்கும் பதங்கள் என்று கருதப்படுபவையோ, உண்மையில் அவர்களை மதிப்புடனும் கண்ணியத்துடனும் அழைக்கப்படும் சொற்களாக கருதுகின்றனர் என்று நம்மால் உறுதியாக கூற முடியாது.

இந்த சமூக பிரச்னையை கருத்தில் கொண்டு, சென்னையைச் சேர்ந்த குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ், ஓரினம் என்ற அமைப்புகளும், 'தி நியூஸ் மினிட்' என்ற ஆங்கில செய்தி ஊடகமும் இணைந்து பால்சார் சொற்களஞ்சியத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளன.

பாலினம்சார் பதங்கள், பாலியல்பு சார் பதங்கள், ஒருமித்த பதங்கள், சமூகம்சார் பிற பதங்கள் என ஐந்து பிரிவுகளில், தமிழ் சொற்களும், அதற்கான விளக்கங்கள் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளிலும் வழங்கப்பட்டுள்ளன.

இது குறித்து, குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ் (https://www.queerchennaichronicles.com) அமைப்பின் இணை நிறுவனர் ச. மெளலி பிபிசி தமிழிடம் பேசுகையில், "2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், எங்களின் அமைப்பும், தி நியூஸ் மினிட் செய்தி வலைதளமும் இணைந்து LGBTIQA+ குறித்த பதங்களை சரியாக பயன்படுத்தவும், அவர்கள் குறித்த செய்திகளை எவ்வாறு வழங்க வேண்டும் என்பதையும் விளக்கும் ஊடகங்களுக்கான ஒரு கையேட்டை உருவாக்க முடிவு செய்தோம். அதன் ஒரு பகுதியாக இந்த சொற்களஞ்சியத்தை உருவாக்கியுள்ளோம்.

இச்சமூகத்தில் உள்ளவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் பதங்களையும், தமிழ் மொழியில் சரியாக பயன்படுத்தப்படும் வகையிலும், இதை உருவாக்கினோம்.

உதாரணமாக, Homosexuality என்ற ஆங்கில சொல்லுக்கு, ஓரின சேர்க்கை என்று தமிழில் குறிப்பிடுவது, இலக்கண ரீதியாக தவறு. இதை ஒருபால் ஈர்ப்பு என்று குறிப்பிடுவதே சரி.

இத்தகைய சொற்களின் பயன்பாட்டுகளை கண்டறிந்து, மேம்படுத்தி வழங்க நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்," என்றார்.

Glossary of LGBTIQA+ terms 1

பட மூலாதாரம், Getty Images

"இந்த சொற்பதங்களை உருவாக்கும்போது, அது பாலியல் வேறுபாடு கொண்டதாகவோ மேலாதிக்கத்தை பிரதிபலிப்பதாகவோ இல்லாமல் பார்த்துக்கொண்டோம்," என்கிறார் இந்த சொற்களஞ்சியத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்ட 'பால்புதுமை' வலைதளத்தின் ஆசிரியரும் எழுத்தாளருமான கிரீஷ்.

"மிகவும் சிக்கலான சொற்களாக அல்லாமல், ஒருவரது மதிப்பையும், அடையாளத்தையும் சரியாக குறிப்பிடும் வகையிலும், நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய வகையிலும் உள்ள சொற்களையே நாங்கள் பயன்படுத்த முயற்சி செய்தோம்" என்கிறார் கிரீஷ்.

சொற்களஞ்சியத்தை உருவாக்க அவர்களின் அடையாளத்தை சரியாக குறிப்பிடுவதை போல், மொழியின் பங்கும் அவசியம் என்கிறார் கிரீஷ்.

"நாங்கள் வெளியிட்டுள்ள சொற்களஞ்சியத்தில் நீங்கள் கவனித்தால், "Romantic orientation" என்பதை, தமிழில் "ரொமாண்டிக் ஓரியண்டேஷன்" என்றே குறிப்பிட்டுள்ளோம். தமிழில் 'Romance' என்பதற்கு அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய குறிப்பிட்ட சொல் எதுவும் இல்லை.

'காதல்களி' போன்ற சொற்களை சிலர் பயன்படுத்துகின்றனர். ஆனால் LGBTIQA+ சமூகத்தினர் அத்தகைய சொற்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதில்லை. சங்க இலக்கியத்தில் இதனை குறிக்கும் சொற்கள் நிச்சயம் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அதனை பரவலாக பயன்படுத்த முயற்சி செய்யலாம். இத்தகைய விஷயங்களில், மொழி மற்றும் அடையாளம் - இரண்டிற்கும் சமமான முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்," என்று அவர் விவரிக்கிறார்.

மேலும், இந்த சொற்கள் ஆங்கில சொற்களின் நேரடி மொழிபெயர்ப்பு அல்ல என்று மெளலி தெளிவுப்படுத்துகிறார்.

"ஒரு மொழியில் உருவாகும் சொற்களஞ்சியம் என்பது அந்த பகுதியில் வாழும் மக்களுடன் தொடர்புடையது. தமிழ் மொழியை எடுத்துக்கொண்டால், சிங்கப்பூர், இலங்கை என பிற நாடுகளிலும் தமிழ் பேசுபவர்கள் உள்ளனர். அவர்களின் மொழி பயன்பாடு வேறாக இருக்கும். அந்த வகையில், நாங்கள் இங்குள்ள தமிழ் மக்களின் வாழ்வியலுடன் தொடர்புடைய சொற்களை கருத்தில் கொண்டோம்.

மேலும், ஐக்கிய நாடுகள் அமைப்பு, ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு முன், இச்சமூகம் சார்ந்த ஆங்கில சொற்களுக்கு, SOGIESC ( sexual orientation, gender identity, gender expression and sex characteristics.) என்ற வடிவமைப்பை பயன்படுத்துக்கின்றனர். அதாவது, அவர்களின் அடையாளம் அல்லது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவர்களைக் குறிப்பிட வேண்டும் என்ற நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழ் மொழியை பொருத்தவரையில், தொடக்கம் முதலே, நாம் இத்தகைய சொற்களை பயன்பாட்டில் கொண்டுள்ளோம். உதாராணமாக, ஆங்கிலத்தில் லெசிபியன்/கே என்ற வார்த்தைகள் பயன்பாட்டில் இருக்கிறது. இதற்கான பொருள் நேரடியாக இல்லை. இதுவே தமிழில், ஒருபாலீர்ப்பு ஆண் அல்லது பெண் என்று நாம் பயன்படுத்தி வருகிறோம். அப்போது, இந்த வார்த்தைகள் யாரை குறிப்பிடுகிறது என்பதை நாம் ஓரளவு புரிந்து கொள்ளும்படி இருந்தது. இத்தகைய விவரங்களை நாங்கள் கருத்தில் கொண்டு பணியாற்றி வருகிறோம்.

இச்சொற்களஞ்சியம் உருவாக்கம் என்பதை நாங்கள் ஒரு பயணமாகவே பார்க்கிறோம். மேலும் பால்சார் சொற்கள் பலவும் உருவாக்க வேண்டிய தேவை உள்ளது", என்கிறார் மெளலி.

இந்த முயற்சிக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ் , பால்சார் சொற்பதங்களை குறித்து விவாதிக்கவும், இந்த சொற்களஞ்சியத்தை மேம்படுத்தவும், பால்புதுமையினர் சார்ந்த மொழியியல் வல்லுநர்கள், கல்வியாளர்கள் உள்ளடக்கிய ஓர் உலக தமிழ் வட்டமேசை மாநாட்டை நடத்தவுள்ளது.

Glossary of LGBTIQA+ terms 2

பட மூலாதாரம், Getty Images

இத்தகைய சொற்களஞ்சியம், தமிழில் மட்டுமல்லாமல், பிற இந்திய மொழிகளும் உருவாக்கும் நோக்கமும் இருப்பதாக கூறுகிறார் 'தி நியூஸ் மினிட்' செய்தி ஊடகத்தின் சிறப்புத் திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகள் பிரிவின் ஆசிரியர் ராகமாலிகா கார்த்திகேயன்.

"மலையாளம், கன்னடம், தெலுங்கு என பிற மொழிகளிலும், இத்தகைய முயற்சியை முன்னெடுக்க விரும்புகிறோம். இது வெறும் ஆவணமாக எங்கோ ஒரு மூலையில் இருக்காமல், ஊடகங்களும் பிற துறைகளும் பால்புதுமையினர் பற்றிய செய்திகளைச் சரியாக குறிப்பிட பயன்படும் ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்", என்று அவர் கூறி முடிக்கிறார்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: