தமிழக கபடி வீராங்கனைகள்: களம் கொடுத்த திருவாரூர் கிராமம்: நிஜத்தில் ஒரு ''கென்னடி கிளப்''

பட மூலாதாரம், Thiruvaru District kabadi association
- எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
- பதவி, பிபிசி தமிழ்
கிராமத்தில் உள்ள ஒரு பெண்கள் கபடி அணி தேசிய அளவில் வெற்றி பெற்று, முத்திரை பதிப்பதை ''கென்னடி கிளப்'' என்கிற திரைப்படத்தில் இயக்குநர் சுசீந்திரன் சொல்லியிருப்பார். அந்த படத்தில் பெண்கள் கபடி அணியின் பயிற்சியாளராக இயக்குநர் பாரதிராஜா, நடிகர் சசிக்குமார் ஆகியோர் நடித்து, அவர்களின் ஊக்கத்தால் வீராங்கனைகள் சாதனை படைப்பார்கள். அது போல் நிஜத்திலும் தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்கள் கபடி அணி சாதனை படைத்து வருகிறது என்று தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்தினர் தெரிவிக்கின்றனர். அந்த கபடி அணி குறித்து இப்போது பார்க்கலாம்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் வடுவூர் அருகே கட்டக்குடி கிராமத்தில் பெண்கள் கபடி அணியில் இருந்து மாநில, தேசிய அளவில் பங்கேற்கும் வீராங்கனைகளை உருவாக்கி வருகின்றனர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள், பெண்கள் கபடி அணிக்கு களம் அமைத்து, ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
கட்டக்குடியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் உள்ளிட்ட வீராங்கனைகளுக்காக, தொடர் பயிற்சி, போட்டிகளுக்கு செல்வதற்கான பொருளாதார உதவிகளை அளித்து வருகின்றனர். இந்த உதவியும் ஊக்கமும் மாநில, தேசிய அளவிலான போட்டிகளுக்கு வீராங்கனைகளை அனுப்பி வருகிறது.
திருவாரூர் மாவட்ட அணியில் இந்த கிராமத்து வீராங்கனைகள் மட்டுமே சிறந்து விளையாடி, மாநில அளவில் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் பரிசுகளை பெற்றுத்தருகின்றனர் என்கின்றனர் தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக நிர்வாகிகள்.
தொடரும் வீராங்கனைகளின் வெற்றிகள்

பட மூலாதாரம், Yohaa
குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான மகளிர் கபாடி போட்டியில் கட்டக்குடி கிராம மகளிர் அணியினர் இரண்டாமிடம் பெற்றனர்.
சென்னை ராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற ஜூனியர் பெண்கள் கபடி சாம்பியன் போட்டியில் திருவாரூர் மாவட்ட ஜூனியர் பெண்கள் அணி மூன்றாம் இடத்தை பெற்றது.
2016 - 17 ஆண்டு குடியரசு தினவிழா மாநில விளையாட்டுப்போட்டியில் 2வது இடம், மாநில அளவிலான கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் 2ம் இடமும் பெற்றனர்.
ஈரோடு பெருந்துறையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் 3வது இடம் பெற்றனர். அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற போட்டி, தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியிலும் முதலிடம் பெற்றனர். கடந்த ஆண்டு அரியலூரில் நடைபெற்ற சீனியர் பெண்கள் மாநில அளவிலான போட்டியில் மூன்றாமிடம் பெற்றனர் என்று கபடி நாயகிகளின் தொடர் வெற்றிகளை பட்டியலிடுகின்றனர்.
அணியின் வெற்றியால் கவனம் பெற்று, தமிழ்நாடு அணியிலும் இந்த குழுவின் வீராங்கனைகள் தேர்வாகி, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கெடுத்து வருகின்றனர்.
அதன்படி, கடந்த 2017-18ஆம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற இந்திய அளவிலான போட்டியில் 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் தமிழ்நாடு அணியில் எஸ்.சவுமியா, சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாடு அணியின் கேப்டனாக சரண்யா பங்கேற்றனர். டெல்லியில் நடைபெற்ற கேலோ இந்தியா போட்டியில் எஸ். செளமியாவும் பங்கேற்றனர்.
தொடர்ந்து 2018-19ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு அணியியில் செளமியா பங்கேற்றார். மேலும் சப் ஜூனியர் பிரிவில் தேசிய அளவிலான போட்டியில் சி.அட்சயா தமிழ்நாடு அணியில் விளையாடினார். அப்போது தமிழ்நாடு அணி 3வது இடம் பெற்றது. 2020ஆம் ஆண்டில் அசாம் மாநிலம் குவாஹட்டியில் வீராங்கனை செளமியா பங்கேற்ற தமிழ்நாடு அணி 2ஆம் இடம் பிடித்தது.
வெற்றிகளால் சிரமங்கள் தெரியவில்லை

பட மூலாதாரம், Yohaa
அடுத்த மாதம் ஹரியாணாவில் நடைபெறும் 68வது இந்திய அளவிலான சீனியர் பெண்கள் கபடி போட்டியில் தமிழ்நாடு அணியில் விளையாட உள்ள கல்லூரி மாணவியும் கபடி வீராங்கனையுமான சி.அட்சயா பிபிசி தமிழிடம் கூறுகையில், ''கட்டக்குடி அரசு பள்ளியில் நான் 8ஆம் வகுப்பு படிக்கையில் கபடி விளையாடத் தொடங்கினேன்.
முதலில் வாலிபால் விளையாடத்தான் ஆர்வம் இருந்தது. ஆனால், உடற்கல்வி ஆசிரியர் உதயகுமார்தான் கபடி விளையாடு என்று சொன்னார். இதையடுத்து கபடிக்கு மாறினேன். ஆரம்பத்தில் சிரமாக இருந்தாலும் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கெடுத்து, வெற்றி பெற்றதும் சிரமம் எதுவும் கண்ணுக்கு தெரியவில்லை.
முதலில் பெற்ற வெற்றிதான் தொடர்ந்து பங்கெடுக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்கிற வேகத்தை தந்தது. தேசிய அளவிலான போட்டியில் தொடர்ந்து பங்கேற்று வருவது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இதற்கு, அம்மா, அப்பா, அண்ணன் மற்றும் கிராமத்து பெரியவர்கள் என அனைவரும் ஊக்கமளித்து வருகின்றனர்.
ஒரு முறை கூட கபடி வேண்டாம் என்று சொல்லவில்லை. பள்ளியில் தொடர்ந்து நடைபெற்று வரும் பயிற்சி மற்றும் தொடர் ஊக்கமும் நாங்கள் தேசிய போட்டிகளுக்கும் தமிழ்நாட்டில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற காரணமாக இருக்கிறது. எங்க கிராமத்தினர் மட்டுமின்றி, சுற்றியுள்ள பிற கிராமத்தினரும் இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர்,'' என்கிறார் உற்சாகமாக.
கூட்டு முயற்சியின் பலன்

பட மூலாதாரம், J Udayakumar
கபடி வீராங்கனைகளின் ஆர்வம், வெற்றியை தொடர வேண்டும் என்று இந்த கிராமத்தில் ''கட்டக்குடி ஸ்போர்ட்ஸ் கிளப்'' என்கிற குழுவை உருவாக்கியுள்ளனர். பெற்றோர்கள் தடை சொல்லாமல் கபடி விளையாட அனுப்புவதும் அதற்கு கிராம மக்கள் உதவி, ஊக்கப்படுத்துவதுமே இந்த வீராங்கனைகளின் சாதனைகளுக்கு முக்கிய காரணமாக உள்ளதாக சொல்கிறார் கட்டக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியரும் கபடி அணியின் பயிற்சியாளருமான முனைவர் ஜெ.உதயகுமார்.
தொடர்ந்து அவர் பிபிசி தமிழிடம் கூறுகையில், ''முதலில் வாலிபால் அணியை உருவாக்கத்தான் திட்டமிட்டோம். ஆனால், மாணவிகளின் ஆர்வம், உடல்திறன் அடிப்படையில் கபடி அணியை 2014-15ம் ஆண்டு தொடங்கினோம்.
அந்த ஆண்டு மாவட்ட அணியில் இந்த பள்ளி அணி முதலிடம் பெற்றது. இது எங்களுக்கு பெரிய நம்பிக்கையை, உத்வேகத்தைக் கொடுத்தது. அடுத்த ஆண்டும் மாவட்ட அளவில் முதலிடம் மாநில அளவில் 2ம் இடம் பெற்றோம். இதையடுத்து கிராம மக்கள் மாணவிகளை ஊக்கப்படுத்தினர்.
ஊக்கமளிப்பதோடு நின்று விடாமல், பொருளாதார உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை அளித்து வருகின்றனர். இது ஒரு கூட்டு முயற்சியின் பலன்.'' என்றார்.
திறமையால் ஜொலிக்கும் வீராங்கனைகள்

பட மூலாதாரம், Yohaa
கிராமத்தில் பெண்களுக்கென ஒரு குழுவை உருவாக்கியது குறித்து கட்டக்குடி ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் மு.சுரேஷ்குமார் பிபிசி தமிழிடம் கூறுகையில், ''நான் தற்போது சிங்கப்பூரில் உள்ளேன். கிராமத்து பின்னணியைக் கொண்ட எங்களுக்கு இயல்பாகவே கபடியில் ஒரு ஈர்ப்பு இருக்கும். ஆண்கள் கபடி குழுக்கள் கிராமம் தோறும் உள்ளன.
ஆனால், பெண்களுக்கான கபடிக்குழு விரல் விட்டு எண்ணும் அளவிற்கே உள்ளன. ஆகையால், எங்கள் ஊர் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் ஆர்வம், வெற்றியை தொடரச் செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த கிராமத்தைச் சேர்ந்தவரும் ஓய்வு பெற்ற காவல் துணை கண்காணிப்பாளர் சி.கணேசமூர்த்தியை தலைவராக கொண்டு விளையாட்டுக் குழுவைத் தொடங்கினோம்.
குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரா.அன்பரசன் உள்ளிட்ட பலர் குழுவை நடத்தி வருகிறோம். கிராமத்தில் இருந்து உதவியும் நிதியும் கொடுக்கிறோம். திறமையால் வீராங்கனைகள் ஜொலிக்கிறார்கள். அவர்களின் வளர்ச்சியே எங்களுக்கு மனநிறைவாக இருக்கிறது.
வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக அமைப்புச் செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பெரும் ஊக்கம் அளிக்கின்றனர். இதனால், இந்த கிராமத்து பெண்களுக்கு மட்டுமின்றி அனைத்து பெண்களுக்குமான கோடைக்கால பயிற்சி முகாமையும் இங்கு நடத்தினோம்.
கபடி போட்டிகளில் கிடைக்கும் பரிசுத் தொகையை வீராங்கனைகளுக்கு பகிர்ந்து கொடுக்கிறோம். தொடர்ந்து எங்களால் இயன்ற உதவிகளைச் செய்வோம்''என்கிறார்.
கபடி அணியில் சகோதரிகள்

பட மூலாதாரம், Yohaa
கபடி களத்தில் அனைவரும் சகோதரிகள் போல் பழகினாலும், ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகளும் இந்த கபடி குழுவில் உள்ளனர். தேசிய அளவில் பங்கேற்ற சகோதரிகள் செளமியா, சரண்யா சகோதரிகள், ஸ்ரீநிதி, ஸ்ரீவர்த்தினி சகோதரிகள், சினேகா, கார்த்திகா சகோதரிகள், ஆர்த்தி, அகல்யா சகோதரிகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகளும் கபடி அணியில் விளையாடி வருகின்றனர்.
தற்போது 10ஆம் வகுப்பு படித்து வரும் கபடி வீராங்கனை ஸ்ரீவர்த்தினி கூறுகையில், ''எனது அம்மா தென்றல் ஒரு கபடி வீராங்கனையாக இருந்தவர். நான் 7ம் வகுப்பில் இருந்து கபடி விளையாடி வருகிறேன்.
எனது அக்காவும் என்னோடு விளையாடி வருகிறார். சீனியர் அக்காக்கள் தேசிய அளவில் விளையாடுவதைப் பார்த்து, நாங்களும் அவர்கள் போல விளையாட வேண்டும் என்கிற விருப்பம் ஏற்பட்டு, விடாமல் பயிற்சிக்கு வருகிறோம்.'' என்கிறார்.
கபடி களத்தில் தடம் பதித்திருக்கும் இந்த வீராங்கனைகள் அனைவரும் கழனியில் கால் பதித்திருக்கும் விவசாய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். பெற்றோரின் விவசாயப் பணிகளுக்கும் தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர்.
விரைவில் செயற்கைத் ஆடுகளம் (மேட்)

பட மூலாதாரம், SPM Suresh
கட்டக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள மைதானத்தில் இந்த வீராங்கனைகள் மண் தரையில் கபடி பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மண் தரையில் பயிற்சி பெற்றாலும் செயற்கை ஆடுகளங்களில் (மேட்) நடைபெறும் மாநில, தேசிய அளவிலான போட்டிகளிலும் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆனால், ''மண் தரையில் சிறந்து விளங்கும் அளவிற்கு செயற்கை தளங்களில் விளையாட முடிவதில்லை. சிரமங்களை சந்திக்கின்றனர். ஆகையால், விரைவில் செயற்கை தளத்தையும் அமைத்து கொடுப்போம். இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்'' என்கின்றனர் விளையாட்டு குழுவினர்.

பிற செய்திகள்:
- கேரளாவில் 40 மணி நேரத்திற்கும் மேல் மலை இடுக்கில் சிக்கியிருந்த இளைஞர் மீட்பு
- சசிகலா மீதான ஊழல் வழக்கு: ஐஜி ரூபா குற்றச்சாட்டால் என்ன நடக்கும்?
- பாலியல் துன்புறுத்தல் வழக்குகளைக் கையாண்டதில் தவறுகள்: ஒப்புக்கொண்ட முன்னாள் போப்
- ஹிஜாப் Vs காவி துண்டு: கர்நாடகாவில் தீவிரமாகும் ஆடை விவகாரம் - அடுத்தது என்ன
- பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது: பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் அறிவிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













