"கபடிக்கு களம் கொடுங்கள்" - திறமையோடு காத்திருக்கும் கிராமப்புற ஹீரோக்கள்

பட மூலாதாரம், @tamilthalaivas FB
- எழுதியவர், ஜோ. மகேஸ்வரன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டாக உள்ள கபடி, இன்றைக்கு சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது. உபகரணங்கள், வசதிகள் அதிகம் தேவையின்றி, எளிமையாக கிராமங்களில் மண் தரையில் ஆடப்பட்டு வந்த கபடி செயற்கை தளங்கள், சர்வதேச வெளிச்சம் என்று வளர்ந்துள்ளது.
குறிப்பாக புரோ-கபடி போட்டிகள் தற்போது வணிக ரீதியில் வெற்றி பெற்று, வீரர்களுக்கு நட்சத்திர அந்தஸ்தை தந்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் கபடி வீரர்கள் வாய்ப்புகள் இல்லாமல் தவிக்கின்றனர். திறமையாக விளையாடியும் தேசிய போட்டிகளில் பங்கேற்றும் வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தால், சோர்ந்து விடுவதாக கபடி வீரர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் மீண்டும் கபடி அணிகள் உருவாக்கப்பட்டு, வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சொல்கிறது. கபடி வீரர்களின் பிரச்னைகள் என்ன?
"வீரர்களுக்கு பஞ்சம் இல்லை"
இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருது கபடிக்காக தமிழ்நாட்டில் முதன் முதலில் 1994 -95ஆம் ஆண்டு ராஜரத்தினம் பெற்றார்.
அதைத் தொடர்ந்து 1995-96ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே மனத்தி கிராமத்தைச் சேர்ந்த பெ. கணேசன் பெற்றார். இவர்களுக்கு பிறகு தமிழ்நாட்டு கபடி வீரர்கள் யாரும் அர்ஜுனா விருது பெறவில்லை.
"தற்போது நடைபெற்று வரும் புரோ-கபடி போட்டியில் தமிழ்நாடு வீரர்களின் எண்ணிக்கை சொற்ப அளவில்தான் உள்ளது. திறமையான வீரர்களுக்கு பஞ்சம் இல்லை. ஆனால், வாய்ப்பு கிடைக்காமல் முடங்கியுள்ளனர். தமிழ் தலைவாஸ் அணியில் கூட தமிழ்நாட்டு வீரர்கள் பெயரளவில்தான் உள்ளனர்" என்கிறார் பெ.கணேசன்.

பட மூலாதாரம், @tamilthalaivas FB
மேலும் அவர் பிபிசி தமிழிடம் கூறுகையில், "கிராமப்புற இளைஞர்களுக்கு கபடி மூலம் அரசு வேலை என்பது சாத்தியம். நான் கிராமத்தில் இருந்து வந்தவன். சன் பேப்பர் மில், பின்னர் தமிழ்நாடு அரசின் மின் வாரியத்தில் வேலை பெற்று, இந்திய அணியில் 10 ஆண்டுகளுக்கு மேல் இடம் பெற்றேன். அர்ஜுனா விருதும் பெற்றேன். இதற்கு கபடிதான் காரணம். என்னைப் போல் திறமையான விளையாட்டு வீரர்கள் தமிழ்நாட்டு கிராமங்களில் இப்போதும் உள்ளனர்."
"ஆனால், எவ்வளவுதான் விளையாடினாலும், வேலைவாய்ய்பு இல்லாமல் போனதால், மன திருப்திக்காக விளையாடி விட்டு, திறமை இருந்தும் முடங்கி விடுகிறார்கள். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விளையாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. அதேநேரத்தில் பாரம்பரிய விளையாட்டான கபடிக்கு இன்னும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். குறிப்பாக அனைத்து மாவட்டங்களிலும் கபடிக்கு என தனியாக பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும். விளையாட்டு விடுதிகளை உருவாக்க வேண்டும். தற்போது ஆண்களுக்கு 2 மாவட்டங்கள், பெண்களுக்கு 2 மாவட்டங்களில் மட்டுமே கபடிக்கென தனி பயிற்சியாளர்கள் உள்ளனர்," என்கிறார்.

தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக மாநில அமைப்புச் செயலாளர், முன்னாள் தேசிய வீரர் ராஜ.ராஜேந்திரன் பிபிசி தமிழிடம் கூறுகையில், தமிழ்நாட்டில் முன்பு கபடிக்கு முக்கியத்தும் கொடுக்கப்பட்டது. மின்வாரியம், போக்குவரத்து, நுகர்பொருள் வாணிபக் கழகம் என அரசுத் துறைகளில் கபடி அணிகள் இருந்தன. இவற்றுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் தேர்வின் மூலம், கிராமப்புறத்தில் இருந்து பலரும் அரசுத் துறைகளில் பணி வாய்ப்பு பெற்றனர்.
ஆனால், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் அரசுத் துறைகளில் காவல் துறை தவிர எந்த துறையிலும் கபடி அணி இல்லை. இதனால் வேலைவாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது. இப்போது புரோ-கபடி கொஞ்சம் உயிர் கொடுத்துள்ளது. ஆனால் திறமை இருந்தும் வாய்ப்பில்லாத வீரர்கள் இப்போதும் கிராமங்களில் உள்ளனர்," என்கிறார்.
தமிழ்நாடு கபடி அணி தேசிய அளவில் முத்திரை பதிக்காததும் விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பில்லாமல் போகிறது என்கிறார்கள் மூத்த வீரர்கள்.
இந்திய அஞ்சல் துறையின் வீரரான மாயா என்கிற மகேஷ்குமார் கூறுகையில், "பாரம்பரிய விளையாட்டு என்று சொல்லிக் கொண்டிருப்பதால் எந்த பலனும் இல்லை. இன்றைக்கு நடைபெற்று வரும் புரோ-கபடி போட்டிகளில் தமிழ்நாட்டில் இருந்து நேரடியாக தேர்வானவர்கள் சொற்பமே. சிலர் வேறு மாநிலங்களில் பணி நியமனம் பெற்று அந்த மாநிலங்களின் பிரதிநிதிகளாக விளையாடி வருகிறார்கள். தேசிய அளவில் விளையாடும் வீரர்களில் இருந்துதான் புரோ-கபடி போன்ற போட்டிகளுக்கு வீரர்களை தேர்வு செய்கிறார்கள். ஆனால், தேசிய அளவில் தமிழ்நாடு அணி முதலிடம் பெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டது," என்கிறார்.

பட மூலாதாரம், @tamilthalaivas FB
தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத்தின் தலைவரும் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணைத் தலைவருமான சோலை ராஜா பிபிசி தமிழிடம் கூறுகையில்,"மண் தரைகளில் நடைபெறும் கபடிப் போட்டிகளில் தமிழ்நாட்டு வீரர்கள் குறிப்பாக கிராமப்புற வீரர்கள் எப்போதும் சிறந்து விளங்குகிறார்கள். ஆனால், செயற்கை தளங்களில் (மேட்) போதிய பயிற்சி இல்லாததால், பின்னடைவைச் சந்திக்கின்றனர். ஒரு செயற்கை தளம் ₹ 4 - 7 லட்சம் ஆகிறது. இது அனைவருக்கும் சாத்தியம் இல்லை."
"தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் மாவட்ட விளையாட்டரங்குகளில் கபடி மேட் (செயற்கை தளம்) உள்ளன. ஆனால், கபடி போட்டிகள் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. தினசரி பயிற்சி செய்ய மேட் வழங்கப்படுவதில்லை. ஆகையால் திறமை இருந்தும் பயிற்சி இல்லாமல் வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடுகிறது. எனவே அனைத்து மாவட்டங்களிலும் ஆண்கள், பெண்கள் பயிற்சி பெறும் வகையில் 2, 3 செயற்கை தளங்கள் வழங்கப்பட வேண்டும்."
"மிக முக்கியமாக 1984 முதல் அரசுத் துறைகளில் கிடைத்த வேலை வாய்ப்புகள படிப்படியாக குறைந்து, கடந்த 25 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டிற்கான விதிமுறைகள் கடுமையாக உள்ளன. இதனால், கிராமப்புறங்களில், எளிய பின்னணியைக் கொண்ட கபடி வீரர்களுக்கு வாய்ப்பு குதிரைக் கொம்பாகி விட்டது." என்கிறார்.

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ மெய்யநாதன் பிபிசி தமிழிடம் கூறுகையில், "தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களை உலகளாவியப் போட்டிகளுக்கு தயார்படுத்தும் வகையில் திருச்சி, மதுரை, ஊட்டி, சென்னை என 4 இடங்களில் ஒலிம்பிக் அகடாமி அமைக்கப்பட உள்ளது. இதில், பாரம்பரிய விளையாட்டான கபடிக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும். மேலும், தமிழ்நாடு அரசுத் துறைகளில் மீண்டும் கபடி அணிகள் உருவாக்கப்படும். வேலைவாய்ப்பு வழங்குவது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஜப்பான், இரான் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளில் கபடி விளையாடப்படுகிறது. உலகளாவிய போட்டிகளில் இந்திய கபடி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
குறிப்பாக, ஆசிய விளையாட்டுப் போட்டியில் கடந்த 1990ஆம் ஆண்டு கபடி சேர்க்கப்பட்டது. அப்போது முதல் இந்திய ஆண்கள் அணி 7 முறை தங்கமும் கடந்த முறை வெண்கலப் பதக்கமும் பெற்றுள்ளது. பெண்கள் கபடி கடந்த 2010 ஆண்டு சேர்க்கப்பட்டு, இதில் 2 முறை தங்கப் பதக்கமும் கடந்த முறை வெள்ளிப் பதக்கமும் பெற்றுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












