கொரோனா வைரஸ்: கோவிட் தொற்றுநோய் பேரிடர் அதன் இறுதி ஆட்டத்திற்குள் நுழைகிறதா?

கோவிட் தொற்றுநோய் பேரிடர்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஜேம்ஸ் கல்லேகர்
    • பதவி, சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர், பிபிசி

"கோவிட் பெருந்தொற்றுப் பேரிடர் முடிந்துவிட்டதா?", "நான் எப்போது என் வாழ்க்கையை இயல்பாகத் தொடர முடியும்?" கடந்த இரண்டு ஆண்டுகளில் இத்தகைய மனப்போக்கு யாருக்குத்தான் ஏற்படவில்லை. எனக்கு ஏற்பட்டது என்று எனக்குத் தெரியும்.

அந்தக் கேள்விகளுக்கான பதில், மிக விரைவில்...

பெருந்தொற்றுப் பேரிடரின் இறுதி ஆட்டத்தில், ஒமிக்ரான் அதிகமாகக் காயப்படுத்தக்கூடும் என்ற கணிப்பு வளர்ந்து வருகிறது.

ஆனால், அடுத்ததாக என்ன வரும்?

ஒரு விரல் சொடுக்கில் கொரோனா வைரஸை மறையச் செய்யமுடியாது. அதற்குப் பதிலாக, "எண்டெமிக் (ஆண்டு முழுவதுமே பரவக்கூடிய நோய்)" என்ற புதிய வார்த்தைக்குப் பழகியாக வேண்டும். அதாவது, சந்தேகத்திற்கு இடமின்றி கோவிட் இங்கேயேதான் இருக்கப் போகிறது.

ஆக, ஒரு புதிய கோவிட் சகாப்தம் உண்மையிலேயே நெருங்கிவிட்டதா, நம் வாழ்க்கைக்கு அது உண்மையில் என்ன மாதிரியான அர்த்தத்தைக் கொடுக்கிறது?

லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் தொற்று மற்றும் உலகளாவிய சுகாதார துறைக்கான தலைவரான பேராசிரியர் ஜூலியன் ஹிஸ்காக்ஸ், "நாம் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டோம். குறைந்தபட்சம் இங்கிலாந்தில், இது முடிவுக்கான தொடக்கம்," என்கிறார்.

"2022-ல் நம் வாழ்க்கை, தொற்றுநோய்க்கு முன்பிருந்த நிலைக்குத் திரும்பும் என்று நினைக்கிறேன்."

நம்முடைய நோய் எதிர்ப்பாற்றல் மாறி வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சீனாவின் வூஹானில் முதன்முதலாக புதிய கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியது. நாம் அதற்குப் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருந்தோம். நம்முடைய நோய் எதிர்ப்பாற்றல் அமைப்பு இதுவரை எதிர்கொண்டிராத, முற்றிலும் புதிய வைரஸாக இது இருந்தது. அதற்கு உதவ நம்மிடம் மருந்துகள், தடுப்பூசிகள் எதுவுமே இருக்கவில்லை.

ஒரு பட்டாசு ஆலைக்குள் நெருப்பைக் கக்கும் இயந்திரத்தை எடுத்துச் செல்வதைப் போல அதன் விளைவு இருந்தது. உலகம் முழுவதும் கோவிட் வெடித்துப் பரவியது. ஆனால், அந்த நெருப்பு தொடர்ச்சியாக அதி தீவிரமாகவே எரிந்துகொண்டிருக்க முடியாது.

மேற்கு ஆப்ரிக்காவில் இபோலா பரவலின்போது செய்ததைப் போல் கோவிட் பரவலைத் தடுப்பது அல்லது இந்தப் பேரிடரின் தாக்கம் அதுவாகவே அழிந்துவிடும், ஆனாலும் நீண்டகாலத்திற்கு நம்மிடையே இருக்கும் என இரண்டு விதமான சாத்தியக்கூறுகள் அப்போது இருந்தன.

சாதாரண சளி, எச்.ஐ.வி, தட்டம்மை, மலேரியா, காசநோய் போன்ற இப்போதுள்ள நோய்களின் வரிசையில் இதுவும் எப்போதும் இருக்கும்.

பலருக்கும், இது ஒருவர் நோய்வாய்ப்பட்டிருப்பதை அறியும் முன்பே காற்றில் பரவும் வைரஸின் தவிர்க்க முடியாத விதி. லண்டன் பல்கலைக்கழகத்தின் செயிண்ட் ஜார்ஜஸில் நச்சுயிரியல் வல்லுநர் மருத்துவர்.எலிசபெட்டா க்ரோப்பெல்லி, "வைரஸ்களைப் பொறுத்தவரை, எண்டெமிசிட்டி, அதாவது தொடர்ந்து பரவுவது, என்பது எழுதப்பட்டது."

கோவிட் தொற்றுநோய் பேரிடர்

"நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். நம்மிடையே வைரஸ் சுற்றிக்கொண்டே இருக்கும். பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொண்டு இருக்கக்கூடிய சூழ்நிலையில் இருப்போம். மற்ற நபர்கள் சாதாரணமாக இருப்பார்கள்," என்று கூறுகிறார்.

நோய்களின் பரவலைப் பற்றி ஆய்வு செய்யும் தொற்றுநோயியல் வல்லுநர்கள், தொற்றுநோய்களில் இதுவரை இருந்த "தீவிரமாவது மற்றும் வெடிப்பது," போன்ற அலைகளைப் போலன்றி, பொதுவான நோய்களைப் போல் சீரான நிலையிலும் யூகிக்கக்கூடியதாகவும் இருக்கும் என்று கருதுகின்றனர்.

ஆனால், லண்டனின் இம்பீரியல் கல்லூரியின் தொற்றுநோயியல் வல்லுநர் பேராசிரியர் அஸ்ரா காணி, கோவிட் காலம் முழுக்க நம்முடனேயே இருக்கும் என்ற அர்த்தத்தில் மற்றவர்கள் இதைப் பொருள் கொள்கிறார்கள். ஆனால், நாம் இனி வாழ்க்கையைக் கட்டுப்படுத்த வேண்டியிருக்காது என்று கூறுகிறார்.

நாம் "விரைவாகவே" அந்த இடத்தை அடைவோம் என்று அவர் நினைக்கிறார். மேலும், "இது நீண்ட காலம் எடுத்ததைப் போல் தெரிகிறது. ஆனால், ஓராண்டுக்கு முன்புதான் நாம் தடுப்பூசி போடத் தொடங்கினோம். அதனால், நாம் ஏற்கெனவே சுதந்திரமாக இருக்கிறோம்."

ஒரே திருப்பமாக இருக்கக்கூடியது, ஒமிக்ரானைவிட குறிப்பிடத்தக்க அளவில் கடுமையான நோயை ஏற்படுத்தக்கூடிய ஒரு புதிய திரிபு வருவது தான்.

எவ்வளவு மோசம்?

ஆண்டு முழுவதும் வழக்கமாக இருக்கும் எண்டெமிக் என்று கூறுவதாலேயே அது வீரியம் குறைவான, லேசானதாக இருக்கும் என்றில்லை. அதை நினைவில் கொள்வது அவசியம். "உயிரைப் பறிக்கக்கூடிய நோய்களும் எண்டெமிக் வகைப்பாட்டில் நம்மிடையே இருக்கின்றன," என்கிறார் பேராசிரியர் கானி.

பெரியம்மை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பரவிக் கொண்டிருந்தது. அதனால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் உயிரிழந்தனர். மலேரியா ஓராண்டுக்கு 600,000 மரணங்களை ஏற்படுத்துகிறது.

கோவிட் தொற்றுநோய் பேரிடர்

ஆனால், கோவிட் தொற்று வீரியம் குறைவானதாக மாறி வருவதற்கான அறிகுறிகளை நாம் ஏற்கெனவே பார்க்கிறோம். நம் உடல் அதைக் கண்டறிந்து எதிர்த்துப் போராடுகிறது.

இங்கிலாந்தில் தடுப்பூசி பிரசாரம், பூஸ்டர் பிரசாரம் மற்றும் கோவிட் அலைகள், ஆகியவை கோவிட் வைரஸின் நான்கு வெவ்வேறு திரிபுகளை உள்ளடக்கியது.

எடின்பரோ பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு வல்லுநரான பேராசிரியர் எலினோ ரிலே, "ஒமிக்ரான் பரவல் முடிவடைந்து, அதிலிருந்து நகர்ந்து வந்தால், இங்கிலாந்தி நோய் எதிர்ப்பாற்றல் அதிகமாக இருக்கும்.

இந்த நோய்த்தொற்றுக்கு இங்கிலாந்தில் 150,000-க்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆனால், அது நம்முடைய நோய் எதிர்ப்பு அமைப்புகளில் ஒரு பாதுகாப்பு மரபை விட்டுச் சென்றுள்ளது. அந்த நோய் எதிர்ப்பாற்றல் குறையும். எனவே எதிர்காலத்தில் கோவிட் தொற்று ஏற்படும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால், அது இன்னும் தீவிரமாக நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கவேண்டும்.

பேராசிரியர் ஹிஸ்காக்ஸ் - அரசின் புதிய மற்றும் வளர்ந்து வரும் சுவாசம் தொடர்பான வைரஸ் அச்சுறுத்தல்கள் குறித்த ஆலோசனைக் குழுவில் இருக்கிறார். அவர், இதன்மூலம் பெரும்பாலான மக்கள் மோசமாக பாதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறுகிறார்.

"ஒரு புதிய திரிபு அல்லது பழைய திரிபு வந்தால், நம்மில் பெரும்பாலோருக்கு, மற்ற பொதுவான கொரோனா வைரஸ் சளியைப் போலவே, மூக்கடைப்பு மற்றும் தலைவலியைப் பெறுவோம், பின்னர் சரியாகிவிடும்.

காய்ச்சல் பருவம் கொரோனா வைரஸ் பருவமாகவும் இருக்கும்

ஆண்டு முழுவதும் வரும் நோயாக கோவிட் இருக்கையில், அதனால் உயிரிழக்கும் நபர்கள், முதியவர்கள் மற்றும் எளிதில் நோய்வாய்ப்படக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். எனவே அதோடு நாம் எப்படி வாழ்கிறோம் என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவேண்டியுள்ளது.

"ஒரு மோசமான காய்ச்சல் பருவத்தில், குளிர்காலத்தில் நாளொன்றுக்கு 200-300 பேர் உயிரிழக்கின்றனர். யாரும் முகக்கவசம் அணிவதில்லை, சமூக இடைவெளியைப் பின்பற்றுவதில்லை.

ஊரடங்குகள் மற்றும் வெகுஜனக் கூட்டங்களுக்கான கட்டுப்பாடுகள் மீண்டும் வராது. மேலும் கோவிட்டுக்கான பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு சோதனை இந்த ஆண்டு முடிவடையும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.

குளிர்காலத்தில் தங்கள் பாதுகாப்பை அதிகரிக்க இலையுதிர் காலத்தில், பாதிக்கப்படக்கூடிய அளவுக்கு உடல்நிலை உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் இருக்கும் என்பதைக் கிட்டத்தட்ட உறுதியாகச் சொல்லமுடியும்.

"காய்ச்சல் பருவமும் கொரோனா வைரஸ் பருவமாக இருக்கும் என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அது நமக்கொரு சவாலாக இருக்கும்," என்று மருத்துவர். க்ரோப்பெல்லி கூறுகிறார்.

ஆயினும், காய்ச்சல் மற்றும் கோவிட் ஆகியவற்றால் உயிரிழக்கும் நபர்கள் ஒரே மாதிரியாக இருப்பதால், குளிர்காலம் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. ஒரு விஞ்ஞானி சொன்னதைப் போல், "நீங்கள் இரண்டு முறை உயிரிழக்க முடியாது."

கோவிட் தொற்றுநோய் பேரிடர்

பட மூலாதாரம், Getty Images

ஒமிக்ரானுக்குப் பிறகு முக்கவசம் அணியவேண்டிய கட்டாயம் இல்லை என்று பேராசிரியர் ரிலே நினைக்கிறார். ஆனால், மக்கள் நெரிசலான இடங்களில் அவற்றை அணிந்துகொள்ளலாம் என்று முடிவெடுப்பதால், ஆசியாவின் சில பகுதிகளில் அவை, "மிகவும் பொதுவான காட்சியாக" மாறும்.

அவர் மேலும், "வாழ்க்கை, 2019-ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் நாம் அனைவரும் காய்ச்சல் தடுப்பூசிகளுக்குத் திரும்பியபோது இருந்ததைவிடப் பெரியளவில் வித்தியாசமாக இருக்காது," என்றும் கூறினார்.

உலகின் மற்ற பகுதிகளின் நிலை?

தடுப்பூசிகள் மற்றும் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் காரணமாக, உலகின் பெரும்பாலான பகுதிகளைவிட இங்கிலாந்து முன்னணியில் இருந்தாலும், தொற்றுநோயின் முடிவைக் காணும் தொலைவில் உலகம் இல்லை.

பிந்தங்கிய நாடுகள் தங்களின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய உடல்நிலையைக் கொண்டுள்ள மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்காக இன்னும் காத்திருக்கின்றன. இதற்கிடையே, கோவிட் நோய்த்தொற்றை மிகக் குறைவான எண்ணிக்கையில் வைத்திருக்கும் நாடுகளில் மிகக் குறைவான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆனால், அவற்றின் மக்கள்தொகையில் குறைவான நோய் எதிர்ப்பாற்றலும் உள்ளது.

உலக சுகாதார நிறுவனம், கோவிட் தொற்றுநோயை எண்டெமிக் நோய் என்று வரையறுக்கப்படும் காலம் வெகுதொலைவில் இருக்கிறது என்பதில் தெளிவாக உள்ளது.

இறுதியாக, "உலகத்தைப் பொறுத்தவரை இது மற்றுமொரு தொற்றுநோய் மற்றும் கடுமையான அவசரநிலை," என்று மருத்துவர் க்ரோப்பெல்லி கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: