ஒமிக்ரான்: தமிழ்நாட்டில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் என்னென்ன? ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

ஸ்டாலின்

பட மூலாதாரம், TNDIPR

தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று முடிவுக்கு வர இருக்கின்றன. இதையடுத்து கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடக்கிறது.

அமைச்சர்கள், மருத்துவத்துறை அதிகாரிகள், நிபுணர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர். குறிப்பாக மருத்துவத்துறை செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குநர், மருத்துவக்கல்வி இயக்குநர் பங்கேற்கின்றனர்.

ஏற்கெனவே, மாநிலம் முழுவதும் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவை செயல்பட அனுமதி இல்லை.

ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரங்கு அமல்படுத்தப்பட்டது.இந்த நாளில் பொதுப் போக்குவரத்து, மெட்ரோ இரயில் ஆகியவை இயங்கவில்லை. முழு ஊரடங்கின் போது, உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அனுமதிக்கப்பட்டது.

வார ஊரடங்கு நாள்களில்,உணவகங்கள், விடுதிகள், அடுமனைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுக்கும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமலும் அனுமதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இவற்றில் எந்தெந்த கட்டுப்பாடுகளைத் தொடருவது புதிதாக எந்தக் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது என்பது உள்ளிட்டவை தொடர்பாக ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தின் முடிவில் புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: