முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை பேச்சு: இந்து சாமியார் யதி நரசிங்கானந்த் ஹரித்துவாரில் கைது

யதி நரசிங்கானந்த்

பட மூலாதாரம், SAMEERATMAJ MISHRA/BBC

படக்குறிப்பு, யதி நரசிங்கானந்த்

இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியாகியுள்ள சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

உத்தராகண்ட் மாநிலத்தில் சென்ற மாதம் நடந்த இந்து சாமியார்களின் 'தர்ம சன்சத்' (மத நாடாளுமன்றம்) கூட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதாக, அதன் முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவரான சாமியார் யதி நரசிங்கானந்த் சனிக்கிழமை இரவு உத்தராகண்ட் காவல்துறையால் கைது செய்யப்பட்டார் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய ஊடகங்கள் பலவற்றிலும் இந்தச் செய்தி பிரதானமாக வெளியாகியுள்ளது.

ஹரித்வாரில் நடந்த மதங்களின் நாடாளுமன்றத்தில், யதி நரசிங்கானந்த், "இஸ்லாமியர்களைக் கொல்ல, வாள் தேவையில்லை. ஏனென்றால் அவர்கள் உங்கள் ஆயுதங்களால் மடியக்கூடியவர்கள் அல்லர். தொழில்நுட்பத்தில் நீங்கள் அவர்களைவிட முன்னேற வேண்டும்," என்று கூறியுள்ளார்.

டிசம்பர் 17 முதல் 19 வரை ஹரித்துவாரில் 'தர்ம சன்சத்' கூட்டம் நடந்தது. இதில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக ஏற்கனவே ஜிதேந்திர நாராயண் தியாகி என்கிற வாசிம் ரிஸ்வி வியாழனன்று கைது செய்யப்பட்டிருந்தார்.

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள டாஸ்னா கோயிலின் பீடாதிபதியான நரசிங்கானந்த், ஜிதேந்திர நாராயண் தியாகியின் கைதைக் கண்டித்து ஹரித்துவாரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

''ஜிதேந்திர நாராயண் தியாகி இஸ்லாமிய மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறியதே அவரது கைதுக்கு காரணம்; அப்போதுதான் இனி எந்த இஸ்லாமியரும் இந்து மதத்துக்கு மாறக் கூடாது என்று கைது செய்யப்பட்டார்,'' என்று நரசிங்கானந்த் கூறியிருந்தார்.

உத்தர பிரதேசம், பஞ்சாப் முதல்வர்கள் போட்டியிடும் சட்டப்பேரவைத் தொகுதி

சரண்ஜித் சன்னி

பட மூலாதாரம், CHARANJIT SINGH CHANNI

படக்குறிப்பு, சரண்ஜித் சிங் சன்னி

உத்தர பிரதேசத்தில் ஆளும் பாஜகவும், பஞ்சாபில் ஆளும் காங்கிரஸும் அடுத்த மாதம் நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான முதல் வேட்பாளா் பட்டியலை சனிக்கிழமை வெளியிட்டன என்று தினமணி செய்தி தெரிவிக்கிறது.

உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், கோரக்பூா் தொகுதியிலும், பஞ்சாப் முதல்வா் சரண்ஜித் சிங் சன்னி, ரூப்நகா் மாவட்டத்திலுள்ள சம்கெளா் சாஹிப் தொகுதியிலும் போட்டியிடுகின்றனா்.

அயோத்தி அல்லது மதுராவில் யோகி ஆதித்யநாத் போட்டியிடுவார் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், கோரக்பூர் தொகுதி அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ADITYANATH

பட மூலாதாரம், FACEBOOK ADITYANATH

படக்குறிப்பு, யோகி ஆதித்யநாத்

கோரக்பூர் மக்களவைத் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக ஐந்து முறை தோ்ந்தெடுக்கப்பட்ட யோகி, முதல் முறையாக வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுகிறார் என அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

குடியரசு நாள் கொண்டாட்டம்

டெல்லியில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள 24 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட உள்ளது என்று தினத்தந்தி செய்தி கூறுகிறது.

குடியரசு தினம் ஆண்டுதோறும் வருகிற ஜனவரி 26ஆம் தேதி கொண்டாடப்படும். இதனை முன்னிட்டு டெல்லியில் நடைபெறும் விழாவில் 1.25 லட்சம் பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள்.

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக 25 ஆயிரம் பேர் மட்டுமே விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: