ஒமிக்ரான்: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் - தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படையான தகவல்கள்

பட மூலாதாரம், ANI
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,79,000-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி, மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களில் தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. இந்தியா முழுவதும் ஒமிக்ரான் திரிபால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,033 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி இன்று (ஜன. 10) தொடங்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதாலும், புதிய ஒமிக்ரான் திரிபு பரவலாலும், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள், மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் செலுத்தும்போது, அவர்களுக்கு தொற்றிலிருந்து கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும் என்பது மருத்துவ வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
இந்தியாவில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட 91 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் முதல் தவணை தடுப்பூசியும், 66 சதவீதத்தினர் இரு தவணை தடுப்பூசியையும் செலுத்தியுள்ளனர். இன்னும் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பது, தொற்றினால் பாதிக்கப்படுதல் மற்றும் அதன் தீவிரத்தன்மையை அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் இன்று நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகளை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கிவைத்தார். தமிழ்நாட்டைப் பொறுத்தவை இன்று 4 லட்சம் பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட உள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, "தமிழ்நாட்டில் இதுவரை 8.83 கோடி கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சுமார் 5,65,218 சுகாதாரப் பணியாளர்கள், 9,78,023 முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ள 20,83,800 நபர்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டதில், தகுதியான 2,06,128 சுகாதாரப் பணியாளர்கள், 92,816 முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 1,01,069 இணை நோய் உள்ளவர்கள், என மொத்தம் 4,00,013 பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பூஸ்டர் டோஸ் குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் இதோ:

பட மூலாதாரம், ANI
பூஸ்டர் டோஸ் என்றால் என்ன?
கொரோனாவிலிருந்து காத்துக்கொள்ளும் வகையில் இன்னும் கூடுதலான நோய் எதிர்ப்பு சக்தியை பெறும் வகையில் மூன்றாவதாக செலுத்தப்படும் தடுப்பூசியே பூஸ்டர் டோஸ். இதனை, மூன்றாவது தடுப்பூசி, கூடுதல் தடுப்பூசி என்றும் அழைக்கின்றனர். பூஸ்டர் டோஸ் என்பது இந்தியாவில் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி என அழைக்கப்படுகிறது.
பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்வது எப்படி?
- முதல்கட்டமாக, சுகாதார மற்றும் முன்களப் பணியாளர்கள், இணை நோய்களால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இணை நோய்கள் இல்லாத 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தற்போது பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுவதில்லை.
- இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் அல்லது 39 வாரங்கள் நிறைவடைந்தவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு தகுதியுடையவர்கள்.
- முதல் இரண்டு டோஸ்கள் எந்த வகை தடுப்பூசி செலுத்தப்பட்டதோ, அதே வகை தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக செலுத்திக்கொள்ள முடியும். வெவ்வேறு தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக செலுத்துவதை மத்திய அரசு அனுமதிக்கவில்லை.
- பூஸ்டர் டோஸ் செலுத்தத் தகுதியுடையவர்கள், கோவின் இணையதளத்தில் புதிதாக பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மேலும், பூஸ்டர் டோஸ் செலுத்த மருத்துவர் சான்றும் தேவையில்லை. முன்பதிவு செய்தோ அல்லது தடுப்பூசி செலுத்தப்படும் மையங்களுக்கு நேரடியாக சென்றோ பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ளலாம்.
- ஆதார் அட்டை, பாஸ்போர்ட், வாகன ஓட்டுநர் உரிமம், பான் கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகளை காண்பித்து, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

பட மூலாதாரம், SOPA IMAGES
பூஸ்டர் டோஸ் அவசியமா? கொரோனா வராமல் தடுக்குமா?
இது தொடர்பாக, பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர் குழந்தைசாமி, பிபிசி தமிழிடம் பேசுகையில், "தடுப்பூசிகளில் மூன்று வகைகள் உள்ளன. முதலாவது, குறிப்பிட்ட தடுப்பூசியை செலுத்தினால் அந்த நோய் கட்டாயமாக வராது. உதாரணமாக, போலியோ தடுப்பூசி, தட்டம்மை, பெரியம்மை தடுப்பூசிகளை சொல்லலாம்.
மற்றொரு வகை, குறிப்பிட்ட தடுப்பூசியை செலுத்தினால் அந்த நோயும் வராது, நீண்ட கால விளைவாக அந்த கிருமியை உலகத்திலிருந்து ஒழித்தும் விடலாம். போலியோ, பெரியம்மை போன்றவை இதற்கான உதாரணங்கள்.
மூன்றாவது வகை, காசநோய் போன்றவற்றுக்கு செலுத்தப்படும் தடுப்பூசி. இந்த தடுப்பூசியை செலுத்தினாலும் வருங்காலத்தில் சிலருக்குக் காசநோய் ஏற்படலாம். ஆனால், உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில் இருக்கும். கொரோனா தடுப்பூசி இந்த வகையைச் சேர்ந்ததுதான்.
தடுப்பூசி செலுத்தினால் பெரும்பாலானோருக்கு தொற்றே ஏற்படாது. ஒருசிலருக்கு தொற்று ஏற்பட்டாலும், அதன் பாதிப்பு லேசானதாக இருக்கும், இறப்பை ஏற்படுத்தாது.
இந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பு, ஒமிக்ரான் திரிபு ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படும் தரப்பினராக மருத்துவப் பணியாளர்கள், இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். அவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் அதிகரிக்கும். எனவே, தகுதியுடையவர்கள் பூஸ்டர் டோஸை நிச்சயம் செலுத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.
பிற செய்திகள்:
- ஏழை நாடுகளை தனது கடன் வலையில் சிக்க வைக்கிறதா சீனா?
- மிளகாய் பொடியை நுகர வைத்த தாய்: விபரீத தண்டனையால் 10 வயது சிறுமி உயிரிழப்பு
- இந்தியாவில் பூதாகரமாக உருவெடுக்கும் வேலை இல்லா திண்டாட்டம் - தப்பிக்க வழி என்ன?
- கடன் நெருக்கடியைத் தீர்க்க சீன வெளியுறவு அமைச்சரிடம் கோட்டபய வைத்த கோரிக்கை
- "நரகத்தின் நுழைவாயிலை" மூட துர்க்மெனிஸ்தான் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












