வேலைவாய்ப்பு இன்மை: இந்தியாவில் உருவெடுக்கும் தீவிர வேலை இல்லா திண்டாட்டம் - தீர்வுகள் என்ன?

பட மூலாதாரம், AFP
- எழுதியவர், செளதிக் பிஸ்வாஸ்
- பதவி, இந்தியா செய்தியாளர்
கடந்த வாரம் சட்டத் துறை பட்டதாரி ஒருவர் இந்தியாவில் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பித்தார்.
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் குறைந்த திறன் தேவைப்படும் 15 அரசுப் பணிகளுக்கு விண்ணப்பித்த 10,000 இளைஞர்களில் ஜிதேந்திர மெளரியாவும் ஒருவர். அவர்களில் பலரும் அதிகம் படித்தவர்கள். பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள், பொறியாளர்கள், எம்பிஏ பட்டதாரிகள், ஜிதேந்திரா போன்றவர்கள், போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதாகக் கூறுகிறது ஓர் அறிக்கை.
"சில நேரங்களில் புத்தகம் வாங்கக் கூட பணமில்லை. எனவே, எனக்கு இங்கு ஏதாவது வேலை கிடைக்கும் என்று கருதினேன்" என அவர் ஒரு செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
ஜிதேந்திராவின் சொற்கள் இந்தியாவின் மோசமான வேலையில்லா திண்டாட நெருக்கடியை வெளிப்படுத்துகிறது. ஏற்கனவே மந்தநிலையை எதிர்கொண்டு வந்த இந்திய பொருளாதாரத்தை, கொரோனா பெருந்தொற்று மிகுந்த சிரமத்துக்கு உள்ளாக்கியது.
இந்திய பொருளாதாரத்தில் திடிரென ஏற்பட்டுள்ள வலுவான தேவை காரணமாகவும் (ஆங்கிலத்தில் பென்ட் அப் டிமாண்ட் என்பார்கள்), அரசின் செலவீனங்களாலும் வளர்ந்து கொண்டிருக்கிறது.
ஆனால் வேலை வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. சென்டர் ஃபார் மானிட்டரிங் இந்தியன் எகானமி (சி எம் ஐ இ) என்கிற அமைப்பின் தரவுப் படி, இந்தியாவின் வேலையில்லாதோர் எண்ணிக்கை கடந்த டிசம்பர் 2021-ல் 8 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 7 சதவீதமாகவே தொடர்ந்தது.
"குறைந்தபட்சம் கடந்த மூன்று தசாப்த காலமாக, இது இந்தியாவில் காணப்பட்ட எதையும் விட மிகவும் அதிகமானது, இதில் 1991ஆம் ஆண்டில் ஏற்பட்ட மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியும் அடக்கம்" என்று என்னிடம் கூறினார் முன்னாள் உலக வங்கியின் முதன்மை பொருளாதார நிபுணர் கெளஷிக் பாசு.
பெரும்பாலான நாடுகளில் 2020ஆம் ஆண்டில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் இந்தியாவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை, மற்ற பல வளரும் நாடுகளை விட அதிகமாக இருந்தது. வங்கதேசம் 5.3%, மெக்சிகோ 4.7%, வியட்னாம் 2.3% என குறிப்பிடுகிறார் கெளஷிக் பாசு.
சம்பளம் பெரும் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை கூட குறைந்துள்ளது என்கிறது சி.எம்.ஐ.இ. பல நிறுவனங்கள், பெருந்தொற்று காலத்தில் தங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், செலவீனங்களைக் குறைக்கவும் இக்காலத்தைப் பயன்படுத்திக் கொண்டன, அதுவும் இதில் அடக்கம். 15 - 23 வயதுடையோர்தான் 2020 ஊரடங்கில் பெரிதும் பாதிக்கப்பட்டனர் என்கிறது அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் அறிக்கை.

பட மூலாதாரம், AFP
"ஊரடங்கு காலத்துக்கு முன் சம்பளத்துக்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த பாதிக்கு மேற்பட்டோரால், தற்போது தங்கள் வேலையை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை என்பதை கண்டுபிடித்துள்ளோம்" என்று என்னிடம் கூறினார் அப்பல்கலைக்கழகத்தில் பொருளாதார நிபுணராக இருக்கும் அமித் பசோல்.
வேலைவாய்ப்புகள் கணிசமாக குறைந்ததற்கு, பெருந்தொற்றும் ஒரு காரணம் அவ்வளவுதான் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.
ஊழியர்கள் மற்றும் சிறு வியாபாரிகளின் நலன் குறித்து அதிக கவனம் செலுத்தாமல் தொடர்ந்து கொள்கைகள் வகுக்கப்பட்டு வருகிறது. அதை 2020 ஊரடங்கு காலத்தில் பார்க்க முடிந்தது என்கிறார் பேராசிரியர் பாசு.
இந்த ஒரு தரவு, இந்தியாவில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம் தொடர்பான மொத்த சூழலையும் வெளிப்படுத்தாது.
இந்தியாவில் வேலை செய்யத் தகுதியான வயதுடையோர்களில், வேலை தேடுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 15 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய வேலை பார்க்கத் தயாராக இருக்கும் பெண்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் என்பது படித்த இளைஞர்கள், முறையான பொருளாதாரத்தில் வேலை தேடுவதை மட்டுமே பெரும்பாலும் குறிக்கிறது. ஆனால் இந்தியாவில் அமைப்புசாரா பொருளாதாரம் தான் இந்தியாவின் 90% வேலை செய்யத் தயாராக இருக்கும் மக்களுக்கு வேலையையும், ஒட்டுமொத்த இந்திய பொருளாதாரத்தில் பாதிக்கு மேற்பட்ட பொருள் மற்றும் சேவை உற்பத்தியில் பங்களிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
"வேலையின்மை என்பது மெத்தப் படித்தவர்கள், குறிப்பாக ஓரளவுக்கு நல்ல செல்வ வளம் கொண்டவர்கள் மட்டுமே எதிர்கொள்ள முடிந்த ஒன்று. ஏழை, திறனற்றவர்கள் அல்லது பாதி திறன் கொண்ட மக்களால் அதை எதிர்கொள்ள முடியாது" என்கிறார் தொழிலாளர் துறைசார் பொருளாதார நிபுணர் ராதிகா கபூர்.
அதிகம் படித்தவர்கள், மிக அரிதாகவே வேலையின்றி இருப்பர் அல்லது குறைவாக சம்பளம் கிடைக்கும் முறைசாரா பொருளாதாரப் பணிகளில் ஈடுபட விரும்பமாட்டார்கள்.
மறுபுறம், அதிகம் படிக்க முடியாத ஏழை மக்களோ, தங்களை நோக்கி வரும் பணி வாய்ப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாய சூழல் ஏற்படுகிறது.
எனவே வேலையில்லாதோர் எண்ணிக்கை, தொழிலாளர்கள் மொத்த விநியோகம் தொடர்பான அதிக விவரங்களை வெளிப்படுத்தாது.
இந்தியாவில் வேலை பார்க்கத் தயாராக இருப்பவர்களில் நான்கில் ஒருவர் சுயமாக வேலை செய்து சம்பாதித்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு எந்த வித சமூக பாதுகாப்பு நலன்களும் இல்லை.

பட மூலாதாரம், Getty Images
வேலை பார்க்கத் தயாராக இருப்பவர்களில் 2% பேருக்கும் கொஞ்சம் அதிகமானோருக்கு மட்டுமே முறையான பொருளாதாரத்தில் வேலை பார்க்கின்றனர். அவர்களுக்கு மட்டுமே சமூக பாதுகாப்பு திட்டங்களான ஓய்வூதிய சேமிப்புத் திட்டங்கள், சுகாதார நலன் சார் திட்டங்கள், பேறு கால விடுப்பு போன்ற நன்மைகள் கிடைக்கின்றன. மேற்கூறிய திட்டங்களில் குறைந்தபட்சம் ஒரு சமூக நலன்சார் திட்டமாவது கிடைக்கும் வகையில் 9% பேர் மட்டுமே உள்ளனர்.
"இந்தியாவின் பெரும்பகுதியான வேலை பார்க்கத் தயாராக இருக்கும் மக்கள் எளிதில் பாதிக்கப்படக் கூடிய இடத்தில் இருக்கின்றனர், ஆபத்தான சூழலையும் எதிர்கொண்டு வருகின்றனர்" என்கிறார் ராதிகா.
சம்பளம் பெறும் மொத்த பணியாளர்களில் 45% பேர் மாதம் 9,750 ரூபாய் சம்பளமாகப் பெறுகின்றனர் (நாள் ஒன்றுக்கு 375 ரூபாய்). இது 2019ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்ட குறைந்தபட்ச கூலித் தொகையாகக் கோரப்பட்ட தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பொருளாதாரம் வளர்ந்து வரும் போதும், விவசாயத்திலிருந்து, சேவை துறை சார் பொருளாதாரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இது இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பதற்கு ஒரு காரணம்.
இந்திய பொருளாதார வளர்ச்சி மென்பொருள், நிதி போன்ற துறைகளில், அதிக திறன் கொண்ட பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறைந்த திறன் கொண்டவர்கள் அல்லது திறனற்ற அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களை முறையான பொருளாதாரத்துக்குள் சேர்த்துக் கொள்ள போதுமான உற்பத்தி துறை சார் தொழிற்பணிகள் அல்லது ஆலை சார் பணிகள் குறைவாகவே இருக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் வேலையில்லா திண்டாட்டம் பெரிதும் கவலைக்குரியது, காரணம் இந்தியாவின் வளர்ச்சி மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறதென்றாலும், இந்தியாவில் உள்ள அடித்தட்டு மக்களின் நிலை, மற்ற பல நாடுகளை விட மோசமாக இருப்பதாகக் கூறுகிறார் கெளஷிக் பாசு.
அரசு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும், தொழிலாளர்களை ஆதரிக்க வேண்டும்.
2014ஆம் ஆண்டு அதிகாரத்துக்கு வந்த நரேந்திர மோதி நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக உறுதியளித்தார். பல துறைக்கு நிதி சார் ஊக்கத் தொகைகளையும், உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் மேக் இன் இந்தியா என்கிற லட்சியத் திட்டத்தையும் நடத்தி வருகிறார். தேவை சரிவு காரணத்தினால், இத்திட்டங்கள் எதுவும் உற்பத்தி பெருக்கையோ அல்லது வேலை வாய்ப்பு அதிகரிப்பையோ காணவில்லை.
குறுகிய காலத்தில், இந்தியாவின் அடித்தட்டில் வாழும் 20% குடும்பங்களுக்கு பணப் பரிமாற்றம் அல்லது வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என டாக்டர் பசோல் போன்ற பலரும் கருதுகிறார்கள். அவர்கள் பொருட்களை வாங்கி நுகரவும், தங்கள் கடன்களைத் திருப்பிச் செலுத்தவும் உதவ வேண்டும் என்கிறார்கள். நீண்ட காலத்தில் அனைத்து பணியாளர்களுக்கும் ஒரு குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் இருப்பதையும் சமூக பாதுகாப்பு இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
"அதுவரை நம்மால் எந்த அர்த்தமுள்ள வேலை சார் சீர்திருத்தங்களையும் கொண்டு வர முடியாது" என்கிறார் ராதிகா.
பிற செய்திகள்:
- "நரகத்தின் நுழைவாயிலை" மூட துர்க்மெனிஸ்தான் முடிவு
- புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மரத்துக்கு நடிகர் டிகாப்ரியோ பெயரை விஞ்ஞானிகள் வைத்தது ஏன்?
- கொரோனா நோய் தொற்று விந்தணு எண்ணிக்கையை குறைக்கிறதா?
- மொரிஷியஸ் விமானத்தின் கழிவறை குப்பைத்தொட்டியில் பச்சிளம் குழந்தை
- சத்ய பால் மாலிக்கின் சர்ச்சை பேச்சுகள்: மோதி, அமித் ஷா பொறுமைக்கு என்ன காரணம்? யார் இவர்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்








