சசிகலா மீதான ஊழல் வழக்கு: ஐஜி ரூபா குற்றச்சாட்டால் என்ன நடக்கும்?

சசிகலா அதிமுக ஜெயலலிதா

பட மூலாதாரம், AIADMK OFFICIAL

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

கர்நாடக சிறையில் சொகுசு வசதிகளைப் பெறுவதற்காக வி.கே.சசிகலா லஞ்சம் கொடுத்ததாக சொல்லப்பட்ட வழக்கில் அம்மாநில லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. `சிறைத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக எந்த இடத்திலும் ஐ.பி.எஸ் அதிகாரி ரூபாவால் நிரூபிக்க முடியவில்லை. வினய்குமார் அறிக்கையிலும் அது குறிப்பிடப்படவில்லை' என்கின்றனர் சசிகலா தரப்பு. என்ன நடந்தது?

ரூ.2 கோடி லஞ்சமா?

கர்நாடகாவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வி.கே.சசிகலா அடைக்கப்பட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத்தண்டனையை உச்ச நீதிமன்றம் விதித்ததைத் தொடர்ந்து சசிகலாவுடன் இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் சொகுசு வசதிகளைப் பெறுவதற்காக அப்போதைய சிறைத்துறை டி.ஜி.பி சத்யநாராயண ராவுக்கு சசிகலா தரப்பில் இருந்து ரூ.2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா மோட்கில் புகார் தெரிவித்திருந்தார்.

பரப்பன அக்ரஹாரா சிறையில் டி.ஐ.ஜியாக இருந்தபோது ரூபா மோட்கில் அங்குள்ள கைதிகளின் அறைகளில் நேரடியாக ஆய்வு செய்தார். இதற்கிடையே, சிறை வளாகத்தில் சாதாரண உடையில் சசிகலாவும் இளவரசியும் நடமாடுவது போன்ற வீடியோ காட்சிகளும் வெளியாயின.

இதையடுத்து, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணைக் குழு ஒன்றை கர்நாடக அரசு அமைத்தது. அந்தக் குழுவும், சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன என அறிக்கை அளித்தது.

இதன் தொடர்ச்சியாக, லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால், சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் கீதா என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணையின்போது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

குற்றப்பத்திரிகையில் சசிகலா, இளவரசி

சசிகலா நடராஜன்

பட மூலாதாரம், SASIKALA NATARAJAN

இதில், சிறைத்துறையின் தலைமை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், உதவி கண்காணிப்பாளர் அனிதா, காவலர்கள் சுரேஷ் உள்பட நான்கு பேர் மீது நடவடிக்கை எடுக்கவும் கர்நாடக அரசு அனுமதி வழங்கியதாக தகவல் வெளியானது.

இது தொடர்பாக, கடந்த ஜனவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் சசிகலா, இளவரசி ஆகியோர் பெயர் உள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது. அதேநேரம், அதிகாரி ரூபா குற்றம்சாட்டிய முன்னாள் டி.ஜி.பியின் பெயர் குறிப்பிடப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா, ``சிறைத்துறை கண்காணிப்பாளராக இருந்த கிருஷ்ணகுமார், உதவி கண்காணிப்பாளர் அனிதா மற்றும் 2 பேரின் பெயர்களும் சசிகலா, இளவரசி மற்றும் ஓர் அரசியல் பிரமுகர் ஆகியோரின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டிருப்பதாக அறிந்தேன்.

இந்த வழக்கு ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் தொடரப்பட்டுள்ளது. லஞ்சம் வாங்கியவர்கள் மட்டுமல்லாமல், லஞ்சம் கொடுத்தவர்களும் நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்ள வேண்டும்' என்றார்.

``சிறையில் பலன் அடைந்ததாக என்னால் குற்றம்சாட்டப்பட்ட சசிகலா, இளவரசி ஆகியோர் இந்த வழக்கில் முதல் மற்றும் இரண்டாவது நபர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். இந்த சம்பவம் நடந்த 2017 காலகட்டத்தில் சிறைத்துறையின் தலைமை இயக்குநராக இருந்த சத்யநாராயண ராவின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படவில்லை. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை முறையாக அனுமதி கேட்டுள்ளது'' என்கிறார் ரூபா.

மேலும், ``லஞ்சம் பெற்ற தகவலை நான் வெளியில் கொண்டு வந்ததால் என் மீது சிவில் அவதூறு வழக்கையும் குற்றவியல் அவதூறு வழக்கையும் சத்யநாராயண ராவ் தொடுத்தார். ஆனாலும் நான் என் கடமையை செய்தேன்'' என்கிறார்.

தற்போது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின் மூலம் லஞ்சம் வாங்கியதற்கான முகாந்திரத்தை லஞ்ச ஒழிப்புத்துறை கண்டறிந்துள்ளதாகவும் ரூபா தெரிவித்தார்.

சசிகலாவுக்கு சிக்கலை கொடுக்குமா?

சசிகலா இளவரசி

``இந்த வழக்கு சசிகலாவுக்கு சிக்கலை கொடுக்குமா?'' என அ.தி.மு.க முன்னாள் செய்தித் தொடர்பாளரும் இந்த வழக்கை நன்கு அறிந்தவருமான பெங்களூரு புகழேந்தியிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.

``தொடக்கத்தில் இருந்தே இந்த வழக்கை கவனித்து வருகிறேன். சிறைத்துறைக்கு என தனியாக டிஜிபி இருக்கிறார். அந்தத் துறைக்கு என ஏராளமான விதிமுறைகள் உள்ளன. ஐ.பி.எஸ் அதிகாரி ரூபாவை பொறுத்தவரையில் சசிகலா என்ற பெயரைப் பயன்படுத்தித்தான் பிரபலம் ஆனார். கர்நாடகாவில் எத்தனையோ நல்ல அதிகாரிகள் இருக்கின்றனர். வீரப்பன் விவகாரத்தில் அ.தி.மு.க அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது கர்நாடக காவல்துறைக்கு தனி மரியாதை உள்ளது.

சிறைத்துறையினருக்கு சசிகலா லஞ்சம் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட விவகாரம், நாடாளுமன்றம் வரையில் எதிரொலித்தது. `இதுபோன்ற பிரச்னைகளை பணியில் இருக்கும்போது பேசக் கூடாது' எனக் கூறியும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் ரூபா பேசி வருகிறார்.

இந்த வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என நீதிமன்றம் கூறியதால்தான் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. சிறைத்துறையில் இருந்து மாற்றப்பட்ட ரூபா, தொடர்ந்து இதைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் என்ன?'' எனக் கேள்வி எழுப்புகிறார்.

ஆதாரம் இல்லையா?

``உள்துறை, போக்குவரத்து என பல துறைகளுக்கு அவர் மாற்றப்பட்டுவிட்டார். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டுள்ளதால் ரூபா பேச வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.சிறையில் நல்லபடியாக நடந்துகொண்டதால்தான் சசிகலா வெளியில் வந்தார். சிறையில் இருந்த காலத்தில் கன்னட மொழியில் சசிகலாவும் இளவரசியும் புலமை பெற்றுவிட்டனர். ஓய்வுபெற்ற டி.ஜி.பி சத்யநாராயண ராவ், மிகவும் நேர்மையானவர் என்றுதான் கர்நாடகாவில் கூறுகின்றனர். லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது என்றுதான் ரூபா சொல்கிறாரே தவிர, அவரால் வேறு எந்த ஆதாரத்தையும் நிரூபிக்க முடியவில்லை,'' என குறிப்பிடும் புகழேந்தி,

சசிகலா இளவரசி

``சிறையில் கொடும் குற்றவாளிகள் இருப்பதால் சசிகலாவுக்கு தனி அறை கொடுத்து பாதுகாப்பை ஏற்படுத்தினர். வினய்குமார் அறிக்கையிலும், சிறை விதிகளின்படி 45 நிமிடம்தான் பார்வையாளர்களை சந்திக்க வேண்டும். ஆனால், கூடுதல் நேரம் சசிகலா சந்தித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதுதவிர, வேறு எந்தக் குற்றச்சாட்டுகளும் குறிப்பிடவில்லை. சிறையில் கைதிகளுக்கு வாட்ச் கிடையாது. சிறைத்துறை அதிகாரிகள் கூறாமல் எப்படிக் கூடுதல் நேரம் சசிகலாவால் சந்திக்க முடியும்?'' என்கிறார்.

சசிகலா தவறு செய்தாரா?

தொடர்ந்து பேசிய புகழேந்தி, ``ஒருமுறை நடிகை விஜயசாந்தி 2 மணிநேரம் தாமதமாக சசிகலாவை சந்திக்க வந்தார். அவர் வரும் வரையில் உணவருந்தாமல் ஒரே இடத்தில் சசிகலா அமர்ந்திருந்தார். இதன்பின்னர் அனுமதி வாங்கிவிட்டு வந்து சசிகலாவை சந்தித்தார். இது எப்படி விதிமீறல் ஆகும்? இந்த விவகாரத்தில் சசிகலா பணம் கொடுத்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லை.

தவிர, பரப்பன அக்ரஹாரா சிறையில் 96 கேமராக்கள் உள்ளன. யாராலும் தவறு செய்துவிட முடியாது. 2 கோடி கொடுத்ததாகக் கூறிய வழக்கில் என்னையும் அழைத்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்தது. இது தவறான குற்றச்சாட்டு எனக் கூறிவிட்டு வந்தேன். சிறைத்துறையில் ரூபா பணியாற்றிய காலத்தில் அவருக்கு 2 மெமோக்களை சத்தியநாராயணன் கொடுத்துள்ளார். அதனை திசைதிருப்புவதற்காகத்தான் இவ்வாறு அவர் பேசி வருகிறார். இது தொடர்பாக சிறையில் அவர் ஆய்வு நடத்தியபோது கஞ்சா கிடைத்துள்ளது. கைதிகள் இடையே மோதலும் நடந்துள்ளது. அவை தொடர்பான எந்த வழக்கையும் ரூபா பதிவு செய்யவில்லை'' என்கிறார் புகழேந்தி.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: