தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முக்கிய தகவல்கள்: வாக்குப்பதிவு நாளில் நடந்தது என்ன? - அரசியல் செய்திகள்

தேர்தல்

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.

மாநிலம் முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகளில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது.

நேற்று மொத்தமாக 12,838 நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளைத் தேர்வுசெய்வதற்கான வாக்குப்பதிவு நடந்தது.

இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22தேதி நடக்கும்.

நேற்று நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடந்த சில முக்கிய விஷயங்களை இங்குப் பார்ப்போம்.

'முன்னாள் அதிமுக அமைச்சர் அடம்பிடித்தார்' - மு.க, ஸ்டாலின்

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின், பொது மக்களுடன் வரிசையில் நின்று சென்னை தேனாம்பேட்டையில் தங்களது வாக்குகளைச் செலுத்தினர்.

அப்போது, கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று கைது செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்கப்பட்டது, "கோவையில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது, அந்தக் கட்சியைச் சேர்ந்த ஓர் அமைச்சரின் அடவாடித்தனங்கள் பல நடந்தன. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் வேலுமணி உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தினார். ராணுவம் அங்கு வரும் வரை போராட்டம் நடைபெறும் என்று அடம்பிடித்தார். ராணுவம் வரும் அளவுக்கு எந்தப் பெரிய சம்பவமும் அங்கு நடக்கவில்லை. அதிமுக தோல்வி பயத்தால் செய்த நாடகம் அது" என்று கூறினார்.

காலை வாக்குப்பதிவு தொடங்கிய சில மணிநேரங்களிலேயே நடிகர் விஜய் சென்னைக்கு அருகில் அமைந்துள்ள நீலாங்கரை வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

'கோயம்புத்தூரில் பணப் பட்டுவாடா' - பாஜக

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ராமநாதபுரத்தில் திமுகவினர் பணப் பட்டுவாடாவில் ஈடுபடுவதாக பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாநகராட்சியின் 63வது வார்டில் உள்ள சரஸ்வதி திருமண மண்டபத்தில் இந்தப் பணப்பட்டுவாடா நடைபெற்றதாக பாஜகவினர் குற்றம் சாட்டியிருந்தனர்.

தேர்தல்

இரு கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் காவல்துறையினர் வந்து கூட்டத்தைக் கலைத்தனர்.

கோயம்புத்தூர் மற்றும் தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்ததாக தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலையும் ட்விட்டர் பதிவில் குற்றம் சாட்டியிருந்தார்.

'தேர்தல் ஆணையம் கண்னை மூடிக் கொண்டு இருக்கிறது' - ராமதாஸ்

பாமக நிறுவனர் தலைவர் ராமதாஸ் மற்றும் அவருடைய மனைவி சரஸ்வதி ஆகியோர், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரொட்டிகார வீதியிலுள்ள 20வது வாக்குச் சாவடிமையத்தில் தங்கள் வாக்குகளைச் செலுத்தினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர்ம், "தமிழகத்தில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் தேர்தல் ஆணையம் கண்னை மூடிக் கொண்டு இருக்கிறது," என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மதுரையில் ஹிஜாப் பிரச்னை

மதுரையில் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வந்த பெண்ணிடம், அதை நீக்குமாறு கூறி பாஜக வாக்குச்சாவடி முகவர் வலியுறுத்தியதால், அந்த வாக்குச் சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது.

பாஜகவினரின் வலியுறுத்தலுக்கு, திமுக, அதிமுக உறுப்பினர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்தனர். பின்னர் காவல்துறை தலையிட்டு, இரண்டு தரப்பையும் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றியது. இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கூறியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நீக்கப்பட்ட பாஜக முகவர் கிரினந்தன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "திமுகவினர் கள்ள ஓட்டு போடுவதற்காக இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுகின்றன," என்று குற்றம் சாட்டினார்.

பிற கட்சி முகவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் நேற்று மாலை அவரை மதுரை மாவட்ட காவல்துறை கைது செய்தது.

ஜெயலலிதா இல்லாமல் வாக்களித்தது பற்றி சசிகலா வருத்தம்

சசிகலா சென்னை தியாகராய நகரில் தனது வாக்கைச் செலுத்தினார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் சசிகலாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. அதனால் அப்போது அவர் வாக்களிக்கவில்லை. இந்நிலையில், இந்த முறை உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த அவர், செய்தியாளர்களிடம் பேசியபோது, "என் அக்காவுடன் (ஜெயலலிதா) சேர்ந்துதான் வாக்களித்திருக்கிறேன். இந்த முறைதான் நான் தனியாக வாக்களிப்பது கஷ்டமாக உள்ளது," என்று கூறினார்.

தேர்தல்

வாக்குச் சாவடி மாற்றப்பட்டதால் பரமத்திவேலூரில் தேர்தலைப் புறக்கணித்து கறுப்புக் கொடி ஏந்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு வீடுகளிலும் கறுப்புக் கொடி ஏந்தி தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி போராட்டம் நடத்தினர்.

திமுக-பாஜக நிர்வாகிகள் இடையே மோதல் நிலை

சேலத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய்க்கான விண்ணப்ப படிவத்தை விநியோகித்து திமுகவினர் வாக்களிக்குமாறு குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் திமுக-பாஜக நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்படும் நிலை உண்டானது. பின்னர் காவல்துறையினர் தலையிட்டு இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர்.

ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனின் வாக்கை வேறு யாரோ கள்ள ஓட்டாகப் போட்டுவிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டை முன்வைத்தார். பிறகு தேர்தல் அதிகாரிகள் எல்.முருகன் வாக்களிக்க அனுமதித்தனர்.

கோவை மாநகராட்சியின் 80வது வார்டுக்கு உட்பட்ட புலியகுளம் புனித தெரசா நடுநிலைப் பள்ளி, மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஆகிய வாக்குச் சாவடிகளில், "தாமதமாக வந்ததால் தேர்தல் அதிகாரிகள் தங்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. தாங்கள் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்." எனக் கூறி பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுபோல தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் தாமதமாக வந்தததாகக் கூறி அதிகாரிகளால் வாக்களிக்க மறுக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டி பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: