நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: கோவையில் பண விநியோகம் நடப்பதாக அதிமுக, மக்கள் நீதி மய்யம் போராட்டம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற திமுகவினர் பண விநியோகம் செய்வதாகக் கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணியை காவலர்கள் குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று வேனில் ஏற்றினர்.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் நிறைவடைந்தது. வாக்குப்பதிவு வருகிற பிப்ரவரி 19ம் தேதி நடைபெறுகிற நிலையில் பிப்ரவரி 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் கோவை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக கூறி அதிமுகவினர் அக்கட்சியின் கொறடா எஸ் பி வேலுமணி தலைமையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பது அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எஸ் பி வேலுமணி, "கோவை மற்றும் திருப்பூரில் அதிமுக அமோகமாக வெற்றி பெறப் போகிறது என்பதை உணர்ந்த ஆளும்கட்சி பணத்தை கொடுத்தும் மிரட்டியும் வெற்றி பெற்றுவிடலாம் என நினைக்கின்றது. அதற்கு காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் உறுதுணையாக இருக்கிறது. இங்கு தேர்தல் நியாயமாக நடக்கும் என நம்பிக்கை இல்லை. எனவே துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்." என்று கூறினார்.
"கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவினரை உடனடியாக வெளியேற்ற வேண்டும். ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படும் அதிகாரிகளை நீக்கி புதிய அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவை நடத்த வேண்டும். கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட கூடாது." என்று அவர் மேலும் கூறினார்.

"கோவை மாவட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்த எல்லா வாய்ப்புகளும் இருக்கின்றன. இதற்காக தான் துணை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் தேர்தலை நடத்த வேண்டும் என்கிறோம். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் என அனைவரிடமும் புகார் அளித்துள்ளோம். மத்திய உள்துறை அமைச்சருக்கும் உள்துறை செயலாளருக்கும் டெல்லியில் புகார் அளித்துள்ளோம்"
"இந்த முறை மின்னணு வாக்கு இயந்திரத்தில் வி. வி.பேட் கருவியும் பொருத்தப்படவில்லை. இதனால் தேர்தல் முறைகேடு நடப்பதற்கு எல்லா வாய்ப்புகளும் உள்ளன. கோவை மாவட்டம் முழுவதும் கரூர் திமுகவினர் முகாமிட்டுள்ளனர். தேர்தல் பிரச்சாரம் முடிந்ததும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் வெளியேற வேண்டும் என்பது விதி. ஆனால் கரூர் திமுகவினர் யாரும் வெளியேற்ற வில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் அவர்களை வெளியேற்ற வேண்டும்,நியாயமான அதிகாரிகளை நியமித்து தேர்தல் நடத்த வேண்டும். அதுவரை நாங்கள் இங்கிருந்து செல்லப் போவதில்லை" என்றார்.
இதன் பிறகு தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அதிமுகவினர் காவல்துறை, மாவட்ட நிர்வாகம், திமுகவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அதிமுகவினர் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அதிமுகவினர் அளித்துள்ள புகார்களின் மீது நடவடிக்கை உரிய எடுப்பதாக அவர்களிடம் கூறினார்.

மாவட்ட ஆட்சியர் உத்தரவாதம் அளித்து பிறகு போராட்டத்தை கைவிட வேண்டும் என காவல்துறை அதிகாரிகள் அதிமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வெளியேற்றும் வரை போராட்டத்தை தொடருவோம் என அதிமுகவினர் தெரிவித்துவிட்டனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அதிமுக கொறடா எஸ் பி வேலுமணி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
மக்கள் நீதி மய்யம் போராட்டம்
அதேபோல் மக்கள் நீதி மையத்தின் உள்ளாட்சி வேட்பாளர்களும் நிர்வாகிகளும் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மையத்தின் துணை தலைவர் தங்கவேல், 'கோவையில் அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சியினரும் வாக்குக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுக்கின்றனர் இதுதொடர்பாக புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை.
தேர்தல் பரப்புரை முடிந்தபிறகு கருத்துக் கணிப்புகள் வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ஆனால் அதையும் மீறி தமிழ் நியூஸ் என்கிற பத்திரிகை முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தைப் போட்டு கோவை மாவட்டம் முழுவதும் 'திமுக வசமாகும் கோவை' என போஸ்டர் ஒட்டி உள்ளது. இது வெளிப்படையான விதிமீறல். இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவையில் நியாயமாக தேர்தல் நடைபெறவில்லை இதனால் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நிறுத்த வேண்டும்' என்றார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சமீரனை நேரில் சந்தித்த மக்கள் நீதி மையத்தினர் தங்களுடைய புகார் மனுக்களை அளித்து விட்டு கலைந்து சென்றனர்.

பிற செய்திகள்:
- நியூட்ரினோ திட்டத்தால் என்ன ஆபத்து? தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியது என்ன?
- "தேர்தலில் வெற்றிபெற பணத்தையும் பரிசுப் பொருள்களையும் வாரியிறைக்கும் கட்சிகள்"
- திருவள்ளூர் சாமியாரின் ஆசிரமத்தில் விஷம் குடித்து இறந்த கல்லூரி மாணவி - என்ன நடந்தது?
- கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிரான போராட்டம்: கனடாவில் அவசரநிலை
- "என்னுடைய நிர்வாணப் படங்களை டெலிகிராம் நீக்காதது ஏன்?"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













