நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தலை திமுக ஆதரிப்பது ஏன்?

உள்ளாட்சி மன்றத் தலைவர் பதவிகள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் முடிவடைந்த பிறகு மேயர்கள், நகராட்சித் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள் மறைமுகத் தேர்தலின் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். ஆனால், பலர் இந்த மறைமுகத் தேர்தலை பிரச்சனைக்குரியதாகப் பார்க்கின்றனர்.

இந்திய அரசியலமைப்பின் 73வது, 74வது திருத்தச் சட்டங்களின்படி சுயாதீனமாக இயங்கக்கூடிய வகையில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் 1994ஆம் ஆண்டு ஜுலை 15ஆம் தேதி உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பாக மாநில அரசுகளே உள்ளாட்சித் தேர்தல்களை நடத்திவந்தன.

புதிதாக உருவாக்கப்பட்ட மாநில தேர்தல் ஆணையத்தால் முதன் முறையாக 1996 அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன. அதற்குப் பிறகு, 2001, 2006, 2011 ஆகிய ஆண்டுகளிலும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன.

புதிய சட்டப்படி 1996ல் தேர்தல் நடந்தபோது மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகள் நேரடித் தேர்தல் மூலம் நிரப்பப்பட்டன. 2001ஆம் ஆண்டில் சென்னை நகர மேயராக, மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டபோது, மறைமுகத் தேர்தல் முறை அறிமுகம் செய்யப்பட்டது. அவர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்ததால், அவர் மேயர் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது. இதற்குப் பிறகு துணை மேயராக இருந்த கராத்தே தியாகராஜன் மேயராக நியமிக்கப்பட்டடார்.

2006 தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, மீண்டும் நேரடித் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 2011ல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் மறைமுகத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், தற்போது நடக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகள் மறைமுகமாவே நிரப்பப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தமாக தற்போது 21 மாநகராட்சிகள் இருக்கின்றன. இவற்றில் 1,374 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் இருக்கின்றன.

138 நகராட்சிகள் இருக்கின்றன. இதில் 3,843 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் இருக்கின்றன. 490 பேரூராட்சிகளும் அவற்றில் 7,621 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும் இருக்கின்றன. மொத்தமாக 12,838 நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தேர்வுசெய்யப்படுவார்கள்.

இந்தத் தேர்தல் முடிவடைந்து, வெற்றிபெற்றவர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு மார்ச் நான்காம் தேதி மறைமுகத் தேர்தல் நடக்கும்.

சென்னை மாநகராட்சி

பட மூலாதாரம், Getty Images

இவ்வாறு 21 மேயர்கள், 21 துணை மேயர்கள், 138 நகர் மன்ற தலைவர்கள், 138 நகர் மன்ற துணைத் தலைவர்கள், 490 பேரூராட்சி மன்றத் தலைவர்கள், 490 பேரூராட்சித் துணைத் தலைவர்கள் என 1,298 பதவிகளுக்கானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆனால், மேயர் மற்றும் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடப்பது என்பது சிறிய கட்சிகளின் நலன்களுக்கு முரணானது என்றும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத இடங்களில் குதிரை பேரத்திற்கு வழிவகுக்காதா என்ற குரல்களும் இருக்கின்றன.

"இந்த மறைமுகத் தேர்தலை எதிர்ப்பவர்கள் இதனை அறிமுகப்படுத்தியவர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும். இந்த முறையை அறிமுகப்படுத்தியது யார்? மு.க. ஸ்டாலின் நேரடியாகத்தான் மேயராகத் தேர்வு செய்யப்பட்டார். ஜெயலலிதாதான் ஒரு சட்டத்தைக் கொண்டுவந்து, அவரை நீக்கி, கராத்தே தியாகராஜனை மேயராக்கினார்" என்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டைன்டீன்.

இந்த மறைமுகத் தேர்தல் முறை இருக்கும்வரை, மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் ஆகிய பதவிகளுக்கு தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வரமுடியும் என்ற நிலை உருவாகியிருப்பதாக சிறிய கட்சிகளைச் சேர்ந்தவர்களே கருதுகிறார்கள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான து. ரவிக்குமார் இந்தக் கருத்தை வெளிப்படையாகவே தெரிவித்து வருகிறார்.

கோவை மாநகராட்சி

பாரதிய ஜனதா கட்சியும் நேரடித் தேர்தல் முறையையே ஆதரிக்கிறது. "மேயர் போன்ற பதவிகளுக்கு நேரடித் தேர்தல்தான் இருக்க வேண்டும். தங்களுக்குப் பிடித்தவரை மக்கள் தாங்களே தேர்வுசெய்ய வேண்டும். இந்த மறைமுகத் தேர்தலில் கட்சிகளுக்கும் பல பிரச்சனைகள் இருக்கலாம். உதாரணமாக, சென்னை மாநகராட்சி பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதிக இடங்களைப் பிடிக்கும் கட்சியில் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் வெற்றிபெறாவிட்டால், சிக்கலாகிவிடும். இதெல்லாம் குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும்" என்கிறார் பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.

இந்த மறைமுகத் தேர்தல் முறையை அ.தி.மு.கதான் அறிமுகப்படுத்தியது; அதில் தி.மு.கவுக்கு ஒப்புதல் இல்லையென்றால் இதனை மாற்றலாமே? "அ.தி.மு.க. ஆட்சியிலிருக்கும்போது ஒரு சட்டத்தின் கீழ் பாதித் தேர்தல்கள் நடந்துவிட்டன. இப்போது மாற்றினால், யாராவது நீதிமன்றத்திற்குச் சென்றால், அந்த இடங்களுக்கு மறுபடி தேர்தல் நடத்த வேண்டியிருக்கும். தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும். ஆகவேதான் மறைமுகத் தேர்தல் முறையைத் தொடர வேண்டியிருக்கிறது" என்கிறார் கான்ஸ்டைன்டீன்.

கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் இந்த முறையால் தங்களுக்கு தலைவர், மேயர் பதவிகள் கிடைக்காதது குறித்த வருத்தத்தில் இருப்பது குறித்துக் கேட்டபோது, இதில் தேர்தல் அரசியல் ரீதியாக பல சிக்கல்கள் இருக்கின்றன என்கிறார் கான்ஸ்டைன்டீன்.

உள்ளாட்சி மன்றத் தலைவர் பதவிகள்

பட மூலாதாரம், Getty Images

"நேரடித் தேர்தல் முறையைக் கொண்டுவந்து, நீங்கள் சொல்வதுபோல, கூட்டணியில் உள்ள சில கட்சிகளுக்கு சில மேயர் பதவிகளை ஒதுக்கீடுசெய்வதாக வைத்துக் கொள்வோம். அப்படி ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களில் அ.தி.மு.க. மிகத் தீவிரமாக வேலை செய்து, அவற்றைக் கைப்பற்றும். 2016 சட்டமன்றத் தேர்தலில் அதுதான் நடந்தது" என்கிறார் கான்ஸ்டைன்டீன்.

இந்த முறையை அறிமுகப்படுத்திய அ.தி.மு.க. இது குறி்த்து என்ன கருதுகிறது? இது குறித்து பிபிசியிடம் பேசிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன், நேரடித் தேர்தல்தான் நல்லது என்கிறார். "நேரடித் தேர்தல் முறையில்தான் எவ்வித காழ்ப்புணர்ச்சிக்கும் இடமிருக்காது. மறைமுகத் தேர்தல் ஆளும்கட்சியின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கும்" என்கிறார்.

ஆனால், அ.தி.மு.கதானே இந்த முறையை அறிமுகப்படுத்தியது என்று கேட்டபோது, "நாங்கள் ஒரு சில காரணங்களுக்காக மறைமுகத் தேர்தலை நடத்தினோம். ஆனால், இப்போது நேர்முகத் தேர்தலைத்தான் நடத்தியிருக்க வேண்டும்" என்கிறார் அவர்.

மார்ச் 4ஆம் தேதி மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல்கள் நடக்கும்போது இந்த விவாதங்கள் இன்னமும் சூடுபிடிக்கக்கூடும்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: