ராயல் என்ஃபீல்டு புல்லட்: கர்நாடகாவில் காணாமல் போன தந்தையின் வண்டியை 15 ஆண்டுகள் தேடி கண்டுபிடித்த மகன்

Arun Srinivasan, right, with his father after bringing the beloved motorbike home

பட மூலாதாரம், SRINIVASAN FAMILY

படக்குறிப்பு, மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு கொண்டு வந்த பிறகு தந்தையுடன் நிற்கும் அருண் சீனிவாசன்
    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி இந்தி

நாராயணப்பா சீனிவாசனுக்கு, அவர் மனதிற்கு நெருக்கமான கருப்பு ராயல் என்ஃபீல்டு வெறும் மோட்டார் சைக்கிள் மட்டுமல்ல; அதற்கும் ஒரு படி மேலானது. 90களின் இடைக்காலத்தில் இந்த மோட்டார் சைக்கிள் காணாமல் போன பிறகு, அவரது மகன் அருண் 15 ஆண்டுகளாக அதை தேடிக்கொண்டிருந்தார்.

"அப்போது புல்லட் பைக்குகளின் விலை அதிகம். அதை வாங்குவதற்கு எனக்கு முழுத் தொகையையும் வங்கி கடனாகக் கொடுத்தது", என்று இப்போது 75 வயதாகும் சீனிவாசன் நினைவுகூர்கிறார்.

இது 1970களில் நடந்த ஒன்று. அப்போது, அவர் 6,400 ரூபாய் கடனாகப் பெற்றார். ராயல் என்ஃபீல்டு வாங்க, இப்போது கிட்டத்தட்ட 3 லட்ச ரூபாய் ($4,000) ஆகும்.

அந்த காலத்தில் இது மிகவும் அதிகமான தொகை. அதுவும் அப்போது இந்தியா இதற்கு அதிகம் பரிச்சயமாகாத நிலையில், சீனிவாசன் போன்றவர்களுக்கு வெகு சில விருப்பத்தேர்வுகளே இருந்தன.

அதன் புகை வெளியேற்றத்தின் "டொப்...டொப்.. ஒலிக்கு பிரபலமான ராயல் என்ஃபீல்டு, அந்த காலகட்டத்தில் பலருக்கு பொக்கிஷமாக வாங்கப்படும் ஒன்றாக இருந்தது.

இந்த பைக்கை சீனிவாசன் வாங்கியபோது அவருக்கு வயது 24. இரண்டு தசாப்தங்களாக அது அவருடன் இருந்தது. விவசாயிகளுக்கான வங்கிக் கடன்களை எளிதாக்கும் விவசாய அதிகாரியாக இருந்த அவரது பணி, அவர் வாழ்ந்த தென் மாநிலமான கர்நாடகா முழுவதும் அவரை அழைத்துச் சென்றது. அவருடைய பைக்கும் அவருடன் எல்லா இடங்களுக்கும் சென்றது.

"நானும் என் சகோதரிகளும் அந்த பைக்கில்தான் வளர்ந்தோம். அது எங்கள் குடும்பத்தின் முதல் வாகனம்", என்று 38 வயதான அவரது மகன் அருண் சீனிவாசன் கூறுகிறார். அவர் ஒரு மென்பொருள் பொறியாளர்.

ஆனால், 1995 \ஆம் ஆண்டு, சீனிவாசனின் வங்கி அவரை கர்நாடகாவின் மணிபால் நகரத்திலிருந்து வட மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோவிற்கு மாற்றியது.

இதனால், ராயல் என்ஃபீல்டை தன்னுடன் கொண்டு செல்ல சீனிவாசனால் முடியவில்லை. அவர் அதை ஒரு நண்பருக்கு விற்றார். அந்த நண்பருக்கு தேவைப்படாதபோது அதை மீண்டும் வாங்கி கொள்ளலாம் என்ற ஒரு நிபந்தனையுடன் அவர் அதனை அவருக்கு விற்றார்.

ஆனால், அதற்கு அடுத்த ஆண்டு, அவரது நண்பரின் வீட்டில் அந்த பைக் திருடப்பட்டது. சீனிவாசன் உடனடியாக காவல்துறைக்கு புகார் அளித்தார். ஆனால் அவர்களுக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை.

தனது பைக் இன்னும் இந்த நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருக்குமா என்று பல வருடங்களாக அவர் யோசித்துக்கொண்டிருந்தார்.

Mr Srinivasan (right) with his friend to whom he had sold the bike

பட மூலாதாரம், SRINIVASAN FAMILY

படக்குறிப்பு, தனது பைக்கை விற்ற நண்பருடன் சீனிவாசன் (வலது)

இதற்கிடையில், அவரது மகன் பைக்கைப் பற்றிய கதைகளைக் கேட்டே வளர்ந்திருந்தார். "எங்கள் வீட்டில் பைக் நிறுத்தப்பட்டிருப்பது எனக்கு எப்போதும் ஞாபகத்தில் இருக்கும் ஒன்று", என்கிறார் அருண்.

இறுதியில், அவர்களது குடும்பம் மீண்டும் கர்நாடகாவிற்கு குடிபெயர்ந்தது. அவர்கள் இப்போது அம்மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் வசிக்கின்றனர்.

ஒவ்வொரு முறையும் சீனிவாசன் ஒரு புல்லட்டைப் சாலைகளில் பார்க்கும்போது, அவருக்கு தொலைந்து போன தனது பைக் பற்றிய ஏக்கம் ஏற்படுகிறது.

"என் மகன் சிறுவயதில் அந்த பைக்கில் செல்வதை விரும்பினான். அவருக்கு அந்த பைக் பல இனிய நினைவுகளைக் கொடுத்திருந்தது.

அதனால், பெங்களூரு சாலைகளில் ஒரு நாள் அதைப் பார்க்கமுடியும் என்ற நம்பிக்கையை அவர் ஒருபோதும் கைவிடவில்லை.

"நான் அவருடன் பயணம் செய்யும்போது, அவர் எந்த ஒரு புல்லட் பைக்கையும் கவனிக்காமல் இருக்க, நான் வேண்டுமென்றே [காரின்] வேகத்தைக் குறைப்பேன்," என்று அருண் கூறுகிறார்.

புகை வெளியேற்றத்தின் அந்த குறிப்பிட்ட சத்தம், அவரது தந்தையின் காதுகள் தட்டி எழுப்பும் என்று அவர் கூறுகிறார். மேலும், அந்த வழியாக செல்லும் அனைத்து பைக்குகளிலும் புல்லட்டை அடையாளம் காண அவரது கண்கள் தேடிக்கொண்டே இருக்கும் என்றும் அவர் கூறுகிறார் - பின்னர், அது தனது பழைய பைக் அல்ல என்பதை உணரும்போது அவர் ஏமாற்றம் அடைவார்.

இறுதியில், பழைய வாகனங்களை விரும்பும் அருண், தன் தந்தையின் பைக்கை கண்டுபிடிக்க முடிவு செய்தார்.

2006 ஆம் ஆண்டு தனது 22வது வயதில் அவரது தேடலைத் தொடங்கினார் அருண்.

"என் அப்பாவின் பழைய கார் இன்றும் என்னிடம் உள்ளது. 1960ஆம் ஆண்டு வாங்கிய என் மாமாவின் காரும் என்னிடம் உள்ளது. எங்கள் வீட்டில் ஆறு முதல் ஏழு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன," என்று அருண் கூறுகிறார்.

ராயல் என்ஃபீல்டு மட்டுமே காணாமல் போனது என்று அவர் கூறுகிறார்.

The Royal Enfield back at the Srinivasan home along with their other vehicles

பட மூலாதாரம், SRINIVASAN FAMILY

படக்குறிப்பு, சீனிவாசன் வீட்டில் மற்ற வாகனங்களுடன், கண்டுப்பிடிக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு

தேடும் பணியை அவர் மணிப்பாலில் இருந்து தொடங்கினார். அங்கு அவர் கேரேஜ் உரிமையாளர்களுடன் பேசினார். ஆனால், அவர்களுக்கு அதைப் பற்றிய விவரங்களை கூற இயலவில்லை.

வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலோ, உள்ளூர் காவல் நிலையங்களிலோ எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

பின்னர், மாநிலத்தின் போக்குவரத்து அலுவலகம் டிஜிட்டல் மாயமானது என்று அவர் கூறுகிறார். அதாவது, கர்நாடகாவில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களுடன் இணைக்கப்பட்ட அனைத்து தரவுகளும் இப்போது ஆன்லைனில் கிடைக்கும்.

அதனால், 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில், வாகனத்தின் பதிவு எண் மற்றும் காப்பீட்டு விவரங்களைப் பயன்படுத்தி, ராயல் என்ஃபீல்டைக் கண்டுபிடித்தார் அருண்.

பல மாதங்களாக போக்குவரத்து அலுவலகங்களுக்குச் சென்று பார்த்த நிலையில், அது மைசூரு மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாயிக்கு சொந்தமானது என்பதையும் அவர் கண்டுபிடித்தார்.

அந்த விவசாயிக்கு போன் செய்தார். தனது தந்தையை மகிழ்விக்க அந்த பைக்கை தேடி கொண்டிருப்பதைப் பற்றி அவர் விளக்கினார்.

பின்னர், இது ஒரு டீலரிடம் இருந்து வாங்கப்பட்டது என்பதை அவர் தெரிந்துக்கொண்டார். அந்த டீலர், இதனை திருடப்பட்ட அல்லது கைவிடப்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்த காவல்துறை நடத்தும் ஏலத்தில் இருந்து வாங்கினார் என்றும் தெரிந்துகொண்டார்.

இந்த பைக்கை 1,800 ரூபாய்க்கு வாங்கிய டீலர், அதனை விவசாயிக்கு 45,000 ரூபாய்க்கு விற்று இருக்கிறார்.

தொடக்கத்தில், அந்த விவசாயி பைக்கை விட்டு பிரிய மிகவும் தயக்கம் காட்டினார். ஆனால், அவர் பல மாதங்களுக்குப் பிறகு ஒப்புக்கொண்டார் என்று அருண் கூறுகிறார்.

"நான் அதற்கு 1 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் செலுத்த வேண்டியிருந்தது," என்று அருண் கூறுகிறார்.

இறுதியாக அவர் தனது தந்தையை நல்ல செய்தியுடன் அழைத்தபோது, சீனிவாசன் மகிழ்ச்சியில் மூழ்கினார்.

அந்த திருட்டு நடந்து 15 ஆண்டுகளுக்கும் மேல், கடந்த ஆண்டு சீனிவாசன் வீட்டிற்கு திரும்பியது ராயல் என்ஃபீல்டு .

உற்சாகமடைந்த சீனிவாசன், 50 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய அதே பைக்தானா என்பதை உறுதிசெய்ய முழுமையாக அதனை சோதனை செய்தார்.

"இது எனது வாகனம் என்று நான் நம்பவில்லை. என்னிடம் இருந்த பழைய பதிவு அட்டையுடன் சேஸ் (Chassis) எண்ணை சரிபார்த்தேன்," என்று அவர் கூறினார்.

அவர்களின் குடும்பம் மாறி மாறி அந்த பைக்கில் ஏறி அமர்ந்து பார்த்தனர்.

"புல்லட்டைப் பயன்படுத்துவதற்கு என் உயரம் சற்றே குறைவு. ஆனால், இந்த புல்லட்டில் மிகவும் வசதியாக இருக்கும். அதே வசதியை நான் இப்போது உணர்ந்தேன். அந்த பைக் என்னுடையதுதான் என்பதற்கு இது மற்றொரு சாட்சி", என்று அவர் கூறுகிறார். அவருடைய உற்சாகம் இன்னும் தெளிவாகத் தெரிகிறது.

"காணாமல் போன எங்கள் குதிரை தானே திரும்பி வந்தது போல் இருந்தது."

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: