சென்னை: இந்தியாவிலேயே பழமையான மாநகராட்சியின் வரலாறு - தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

Chennai

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

விரைவில் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் சென்னை மாநகராட்சி, ஐரோப்பாவுக்கு வெளியில் பிரிட்டிஷாரால் ஏற்படுத்தப்பட்ட பழமையான மாநகராட்சியாக விளங்குகிறது. இந்த மாநகராட்சி உருவாக்கப்பட்டது எப்படி?

1687ஆம் ஆண்டு. முகலாய பேரரசு தனது உச்சகட்டத்தில் இருந்த நேரம். மாமன்னரான ஔரங்சீப் இந்தியாவின் பெரும்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். தமிழ்நாட்டின் பல பகுதிகள் திருமலை நாயக்கரின் பேரனான சொக்கநாத நாயக்கரின் கீழ் இருந்தன.

தற்போது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை, கிழக்கிந்திய கம்பெனியின் பரபரப்பான வர்த்தக மையமாக இயங்கிக் கொண்டிருந்தது.

பிற்காலத்தில் யேல் பல்கலைக்கழகத்தை நிறுவ உதவியவர்களில் ஒருவரான எலிஹு யேல் அந்தத் தருணத்தில் புனித ஜார்ஜ் கோட்டையின் தலைவராக இருந்தார். அப்போது கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநராக இருந்த ஜோசையா சைல்ட் சென்னை நகர நிர்வாகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல நினைத்தது.

சென்னைக்கென ஒரு நகர நிர்வாக அமைப்பை உருவாக்க வேண்டுமென வலியுறுத்தி 1687 செப்டம்பரில் 28ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்த அதிகாரிகளுக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதினார் ஜோசையா சைல்ட். அப்படி ஒரு நிர்வாக அமைப்பு உருவானால் தன்னுடைய அதிகாரம் குறையும் எனக் கருதியதாலோ என்னவோ, யேல் இதனைப் பெரிதாக விரும்பவில்லை என்கிறார் சென்னை நகர வரலாற்றை தொடர்ந்து ஆவணப்படுத்திவந்த வரலாற்றாசிரியர் எஸ். முத்தைய்யா.

இருந்தபோதும் ஜோசையா பின்வாங்கவில்லை. மூன்று மாதங்களுக்குப் பிறகு ஜோசையா சைல்டும் துணை ஆளுநர் ஒருவரும் இங்கிலாந்து சென்று மன்னர் இரண்டாம் ஜேம்சைச் சந்தித்து இது குறித்து விவாதித்தனர். முடிவில், அதே ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி சென்னையை மாநகராட்சியாக அறிவித்து, அரச பிரகடனத்தை வெளியிட்டார் இரண்டாம் ஜேம்ஸ்.

சென்னை மாநகராட்சி உருவாவதற்கு முன்பாக, புனித ஜார்ஜ் கோட்டையின் ஆளுநரே கோட்டையில் உள்ளவர்கள், கோட்டையைச் சுற்றி வசிப்பவர்களின் விவகாரத்தை முடிவு செய்துவந்தார். ஸ்ட்ரேஷாம் மாஸ்டர் ஆளுநராக இருந்த காலத்தில் வரி விதிக்கும் முறையும் அமலுக்கு வந்துவிட்டது. வரி விதிப்பில் ஏற்பட்ட தகராறுகள், தொடர்ந்து நகரம் வளர்ந்து வந்ததால் ஏற்பட்ட செலவுகள் ஆகியவற்றின் காரணமாக முறையான ஒரு நகர நிர்வாகத்தை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

புனித ஜார்ஜ் கோட்டை

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, புனித ஜார்ஜ் கோட்டை

மன்னரின் பிரகடனம் 1688 செப்டம்பர் 29ஆம் தேதி அமலுக்கு வந்தது. ஒரு மேயர், ஆல்டர்மென் எனப்படும் 12 கவுன்சிலர்கள், பர்ஜெஸ் எனப்படும் பிரதிநிதிகள் (60 முதல் 100 பேர்வரை) ஆகியோருடன் சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டது. ஆல்டர்மென் எனப்படும் கவுன்சிலர்கள் பிரிட்டிஷ், பிரெஞ்ச், இந்திய வர்த்தக சமூகத்திலிருந்து தேர்வுசெய்யப்பட்டு மேயரால் நியமிக்கப்பட்டனர்.

முதல் ஆல்டர்மென்களில் மூன்று பேர் இந்தியர்களாக இருந்தார்கள். மூன்று பேர் புனித ஜார்ஜ் கோட்டையின் நிர்வாகியாக இருந்த ஆங்கிலேயர்கள், ஒருவர் பிரஞ்சு வர்த்தகர், 2 பேர் போர்ச்சுகீசியர்கள்.

அப்போது புனித ஜார்ஜ் கோட்டை கவுன்சிலின் இரண்டாவது நிலையில் இருந்த நத்தேனியல் ஹிக்கின்சன் சென்னை மாநகராட்சியின் முதல் மேயராக நியமிக்கப்பட்டார். மேயரின் பதவிக் காலம் ஓராண்டுதான். ஆனால், ஆல்டர்மென்கள் ஆயுட்காலத்திற்கும் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

1727ல் ஆல்டர்மென்களின் எண்ணிக்கை 9ஆகக் குறைக்கப்பட்டது. 1746லிருந்து 1749வரை சென்னை பிரஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்தது பிறகு மீண்டும் பிரகடனம் வெளியிடப்பட்டது. அப்போது நியமிக்கப்பட்ட ஆல்டர்மென்களில் ஒருவராக ராபர்ட் கிளைவும் இருந்தார்.

சென்னை மாநகராட்சியின் முதல் கூட்டம் புனித ஜார்ஜ் கோட்டைக்குள், தற்போது புனித மேரி தேவாலயத்திற்கு அருகில் உள்ள ஒரு கட்டடத்தில் நடைபெற்றது.

சென்னை மாநகராட்சி என்பது நிறுவப்பட்டதிலிருந்து தொடர்ந்து செயல்பாட்டில் இருந்தாலும், மாநகராட்சியின் கவுன்சிலும் மேயர் பதவியும் 1801ல் ஒழிக்கப்பட்டன. அதற்குப் பதிலாக மண்டல ஆணையர்களும் அவர்களுக்கு ஒரு தலைவரும் நியமிக்கப்பட்டனர். பிறகு மீண்டும் 1919ல்தான் கவுன்சிலும் அதற்கு ஒரு தலைவர் பதவியும் நிறுவப்பட்டது. அப்போது நகரத்திற்கு 50 கவுன்சிலர்கள் இருப்பார்கள் என முடிவுசெய்யப்பட்டது. இதில் 30 பேர் தேர்வுசெய்யப்படுவார்கள். முதல் தலைவராக நீதிக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சர் பிட்டி தியாகராயர் தேர்வானார். இவர்தான் சென்னை மாநகராட்சியின் தலைவராக இருந்த முதல் இந்தியர். இவர் 1923வரை அந்தப் பதவியில் இருந்தார்.

1933ஆம் ஆண்டின் நகர முனிசிபல் சட்டத்தின்படி, தலைவர் பதவியின் பெயர் மேயர் என மீண்டும் மாற்றப்பட்டது. அப்போது கவுன்சிலின் தலைவராக இருந்த குமாரராஜா முத்தைய்யா செட்டியாரின் பரிந்துரையின்பேரில், சென்னை மாகாண பிரதமராக இருந்த பொப்பிலி ராஜா இதனைச் செய்தார். மேயர் பதவிக்கான ஆடைகள், சின்னம், நடைமுறைகள் ஆகியவை உருவாக்கப்பட்டன. மேயர் பதவிக்கான நாற்காலியும் செய்யப்பட்டது. சென்னை மாகாண சட்டமன்றத்தின் தலைவரது நாற்காலியைப் போலவே இந்த நாற்காலியும் வடிவமைக்கப்பட்டது.

1936ல் முனிசிபல் சட்டம் மீண்டும் திருத்தப்பட்டு கவுன்சிலர்களின் எண்ணிக்கை 65ஆக உயர்த்தப்பட்டது. 1970களில் கவுன்சில் கலைக்கப்படும்வரை இந்த எண்ணிக்கையே நீடித்தது.

Ribbon Building

பட மூலாதாரம், Getty Images

மாநகராட்சியின் மக்கள் பிரதிநிதிகளின் தேர்வு இவ்வாறு இருந்ததென்றால், அதிகாரிகள் மட்டத்தில் தலைவர் என்ற பெயரில் ஒரு ஐசிஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டார். 1919ல் இந்தப் பதவி ஆணையர் என்று மாற்றப்பட்டது. தற்போது ஐஏஎஸ் அதிகாரிகள் அந்தப் பதவியில் நியமிக்கப்படுகின்றனர்.

சென்னை மாநகராட்சியின் தற்போதைய கட்டடம் ஜி.எஸ்.டி. ஹாரிஸ் என்பவரால் வடிவமைக்கப்பட்டு, பி. லோகநாத முதலியாரால் 1913ல் கட்டப்பட்டது. 1880 முதல் 1884வரை பிரிட்டிஷ் இந்தியாவின் வைசிராயாக இருந்த ரிப்பன் பிரபு, உள்ளாட்சி முறையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார்.

இவரது ஆட்சிக் காலத்தில் பல நகராட்சிகளும் மாவட்ட போர்டுகளும் உருவாக்கப்பட்டன. இதன் காரணமாக அந்தக் கட்டடத்திற்கு ரிப்பனின் பெயரே சூட்டப்பட்டது. இந்த மாளிகையை அப்போது வைசிராயாக இருந்த ஹார்டிங் பிரபு திறந்துவைத்தார். இந்தக் கட்டடத்தைக் கட்டி முடிக்க ஏழரை லட்ச ரூபாயும் நான்கு ஆண்டுகளும் ஆயின.

1944ல் சென்னை மாநகராட்சியின் ஆணையராக இருந்த ஜே.பி.எல். ஷெனாயின் காலத்தில், செப்டம்பர் 29ஆம் தேதியை சென்னை மாநகராட்சியின் துவக்க நாளாக கொண்டாடும் வழக்கம் உருவானது.

1970களில் மாநகராட்சி கலைக்கப்பட்ட பிறகு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் வெகுநாட்களாக நடைபெறவில்லை. 1996ல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்தபோது மேயர் பதவி மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் பதவியாக மாறியது. அதன்படி மு.க. ஸ்டாலின் மேயராகத் தேர்வுசெய்யப்பட்டார்.

தற்போது, சென்னை மாநகராட்சி 200 கவுன்சிலர்களுடன் இயங்குகிறது. மேயர்கள் நேரடியாக மக்களால் தேர்வுசெய்யப்படும் முறை மாற்றப்பட்டு, மீண்டும் கவுன்சிலர்களால் தேர்வுசெய்யப்படும் முறை கொண்டுவரப்பட்டிருக்கிறது.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: