நரேந்திர மோதி ஆட்சியில் ரூ.5.35 லட்சம் கோடி வங்கி மோசடி - ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
நரேந்திர மோதி ஆட்சியில் ரூ.5.35 லட்சம் கோடி வங்கி மோசடி நடந்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார் என்கிறது தினத்தந்தி செய்தி.
பாரத ஸ்டேட் வங்கி உள்பட 28 வங்கிகளை ரூ.22 ஆயிரத்து 842 கோடி மோசடி செய்ததாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஏ.பி.ஜி. கப்பல் கட்டும் தள நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது பக்கத்தில் ஒரு ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ளார்.
''நரேந்திர மோதி ஆட்சியில் இதுவரை ரூ.5 லட்சத்து 35 ஆயிரம் கோடி அளவுக்கு வங்கி மோசடிகள் நடந்துள்ளன. கொள்ளையும், மோசடியும் நிறைந்த இந்த நாட்கள்தான், மோதியின் நண்பர்களுக்கு மட்டும் நல்ல நாட்கள்,'' என்று அவர் கூறியுள்ளார் என்கிறது தினத்தந்தி செய்தி.
'இஸ்லாமியர்களுக்கு ஹிஜாப் அத்தியாவசியமில்லை' - கேரளா ஆளுநர்

பட மூலாதாரம், Getty Images
சீக்கியர்களுக்கு தலைப்பாகை அணிவது அவசியம் என்பதைப் போல இஸ்லாமில் ஹிஜாப் அத்தியாவசியமல்ல என்று கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார் என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.
ஹிஜாப் இஸ்லாம் மதத்தின் ஓர் அங்கமல்ல. ஹிஜாப் என்ற வார்த்தை 7 முறை மட்டுமே குரானில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் உடை ரீதியிலான கோணத்தில் கூறப்படவில்லை. இஸ்லாமிய பெண்களின் கல்வியையும் அவர்களின் முன்னேற்றத்தையும் தடுக்கவே ஹிஜாப் விவகாரத்தை சர்ச்சையாக்க சதி நடக்கிறது என்று ஆரிப் முகமது கான் கூறியுள்ளார் என்கிறது அந்தச் செய்தி.
நீங்கள் எந்த உடையை வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் அணியலாம். ஆனால் நீங்கள் ஒரு நிறுவனத்தில் சேரும்போது அங்குள்ள விதிமுறைகள் மற்றும் உடை விதிகளை பின்பற்ற வேண்டும். நீங்கள் அந்த விதிகளை பின்பற்றவில்லை என்றால் நீங்கள் வேறு நிறுவனங்களுக்கு செல்ல உங்களுக்கு சுதந்திரம் உள்ளது என்றும் கேரள ஆளுநர் கூறியுள்ளார்.
15-17 வயதினரில் 70% பேருக்கு தடுப்பூசி

இந்தியாவில் 15 முதல் 17 வயதினரில் 70 சதவீதம் பேருக்கும் மேல் குறைந்தது முதல் தவணை கோவேக்சின் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வயது வரம்பில் இந்தியா முழுவதும் சுமார் 7.4 கோடி பேர் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்திய சுகாதார அமைச்சர் மனசுக் மாண்டவியா இந்த வயது வரம்பில் இருப்பவர்களில் தடுப்பூசி பெறத் தகுதியானவர்கள் அனைவரும் கூடிய விரைவில் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:
- பாகிஸ்தானில் குரானை எரித்ததாக கும்பல் கொலை; மரத்தில் கட்டித் தொங்கவிடப்பட்ட நபர்
- மேற்குவங்க விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்த ட்வீட் - சர்ச்சையானது ஏன்?
- அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர், ஏலத்தில் எடுக்கப்படாத வீரர்கள் யார்யார்?
- ஆடை களையப்பட்டு முகலாய இளவரசர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட கதை
- சென்னை: இந்தியாவிலேயே பழமையான மாநகராட்சியின் வரலாறு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













