மேற்குவங்க சட்டப்பேரவை ஒத்திவைப்பு விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்த ட்வீட் - சர்ச்சையானது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
மேற்குவங்க மாநில ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முதல்வர் பதிவிட்ட ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. `அரசு கேட்டுக் கொண்டதாலேயே சட்டசபை முடித்து வைக்கப்பட்டது' என மேற்கு வங்க ஆளுநர் பதில் அளித்துள்ளார். `இந்த விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்க வேண்டும்' என பா.ஜ.கவினர் பேசி வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசின் முதல்வர் மமதா பானர்ஜிக்கும் ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கும் இடையில் உரசல் நீடித்து வருகிறது. இந்நிலையில், அரசியலமைப்புச் சட்டத்தின் 174 ஆவது பிரிவின் மூலம் ஆளுநர் தனக்கான அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்குவங்க சட்டமன்றத்தை கடந்த 12 ஆம் தேதி முதல் முடக்கி வைப்பதற்கு உத்தரவிட்டுள்ளார். இது நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியது.
இதனைச் சுட்டிக் காட்டி சேலத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, `தமிழ்நாட்டில் நடக்கும் தேர்தலில் தேர்தல் ஆணையம் தீவிர கவனம் செலுத்த வேண்டும். மேற்கு வங்கத்தில் என்ன ஆனது என்று ஸ்டாலின் பார்க்க வேண்டும். அம்மாநிலத்தில் சட்டசபையையே ஆளுநர் முடக்கியுள்ளார். அதேபோல் தமிழ்நாட்டிலும் ஆட்சியில் தவறுகள் நடந்தால் ஆளுநர் சட்டசபையை முடக்கும் நிலை வரலாம். அதே நிலைமை எதிர்காலத்திலும் வரலாம்' என்றார்.
இதற்குப் பதில் அளித்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, `தமிழ்நாடு சட்டமன்றத்தை முடக்க நினைக்கும் எடப்பாடியின் பகல் கனவு பலிக்காது. அ.தி.மு.கவின் விருப்பத்தை தனது பேச்சின் மூலம் மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தியுள்ளார்' எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து மேற்குவங்க நிலவரம் தொடர்பாக, ட்விட்டரில் பதிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், `மேற்குவங்க ஆளுநரின் செயல், விதிகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது. அரசியலமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்துவதற்கு மாநிலத்தின் தலைவர் முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை கொடுப்பதில்தான் ஜனநாயகத்தின் அழகு உள்ளது' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேற்குவங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் பதில் அளித்துள்ளார். `மேற்குவங்க சட்டப்பேரவை விவகாரத்தில் ஸ்டாலின் தெரிவித்த கருத்துகளில் உண்மையில்லை' என அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், ` 11 ஆம் தேதி மாலை மேற்குவங்க சட்டப்பேரவை விவகார அமைச்சரவையில் இருந்து அடுத்த பேரவைக் கூட்டத் தொடர் மார்ச் 2 ஆம் தேதி தொடங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதில் அரசு கேட்டுக் கொண்டதையடுத்து பேரவை முடித்துவைக்கப்பட்டது' எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, `தவறாகக் கருத்துப் பதிவிட்டு மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்க வேண்டும்' என பா.ஜ.க நிர்வாகிகள் பேசி வருகின்றனர். இதுதொடர்பாக, தமிழ்நாடு பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறுகையில், ``மேற்குவங்க ஆளுநர் அம்மாநில சட்டசபையை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்ததையடுத்து சமூக ஊடகங்களில் அம்மாநில முதல்வருக்கு எதிராக ஆளுநர் சட்டசபையை முடக்கி வைத்துவிட்டதாக வதந்திகள் பரவியது. இதையடுத்து, மாநில அரசின் பரிந்துரையின் பேரிலேயே ஆளுநர் ஒத்திவைத்ததாக விளக்கமும் வெளியானது. ஆனால், பலரும் தங்களின் அறியாமையின் காரணமாக ஆளுநருக்குக் கண்டனத்தை பதிவு செய்து வந்தார்கள்'' என்கிறார்.
மேலும், ``இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் ஆளுநரை கண்டித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது வியப்பளிக்கிறது. ஒரு மாநிலத்தின் முதல்வர் நடைமுறை, சட்டம், விதிகள் குறித்து அறியாமல் வதந்தியின் அடிப்படையில் இதுபோன்ற பதிவை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இதில், உண்மை நிலைமையை ஆராயாமல் தமிழக முதல்வர் இவ்வாறு பதிவிட்டதை மேற்குவங்க ஆளுநர் கண்டித்துள்ளார். தவறுகள் நடப்பது இயற்கைதான் என்றாலும், உண்மை என்ன என்பதை ஆராயாமல் பதிவிட்ட முதல்வர், தவறுக்கு வருத்தம் தெரிவிப்பது மட்டுமே இதுபோன்ற பதிவுகளை செய்பவர்களுக்கு முன்னுதாரணமாக அமையும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சரின் ட்வீட் ஏற்படுத்திய சர்ச்சைக்கு பிபிசி தமிழிடம் விளக்கம் அளித்து தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி, `` நேற்று இரவில் இருந்து இந்தச் செய்தி நாடு முழுவதும் விவாதிக்கப்படுகிறது.
ஆனால், எந்தவித விளக்கத்தையும் மேற்குவங்க மாநில ஆளுநர் கொடுக்கவில்லை. சொல்லப்போனால், இன்று காலை வரையில் விளக்கம் கொடுக்கப்படவில்லை. அங்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் விளக்கம் கொடுக்கவில்லை. இந்த விவகாரத்தில், உண்மையான ஜனநாயகத்தையும் மாநில சுயாட்சியைப் பற்றியும் பேசும் தி.மு.கவுக்கு அதில் அக்கறை உள்ளது. அதனால்தான், சட்டசபையைக் கலைத்தது தவறு என அம்மாநில ஆளுநருக்கு, முதலமைச்சர் ட்வீட் செய்தார்'' என்கிறார்.
``மாநில சட்டமன்றம் கேட்டுக் கொண்டாலும்கூட மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை நிறுத்தி வைப்பது என்பது ஜனநாயகத்துக்கு விரோதமான ஒன்றுதான். அங்கு எந்தவகையில் திரிணமூல் காங்கிரஸ் அரசு கேட்டுக் கொண்டது என்பதை இனிமேல்தான் அம்மாநில அரசு தெரிவிக்கும். தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆளுநர் கலைப்பதாகக் கூறுவதை ஜனநாயகத்துக்கு எதிரான ஒன்றாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். ட்வீட் சரியா, தவறா என்பதைத் தாண்டி சிலவற்றை இங்கே விவாதிக்க வேண்டும். அரசிலமைப்புச் சட்டத்தில் தவறு நடந்துவிடக் கூடாது என்பதுதான் எங்களின் நோக்கம். ஆளுநர் மீது குற்றம் சுமத்துவது அல்ல'' என்கிறார்.

பிற செய்திகள்:
- கத்திப்பாரா நகர்புற சதுக்கம் முதல் சூளைமேடு சுவரோவியம் வரை: சென்னையை வண்ணமயமாக்கும் கெளசிகா மற்றும் குழுவினர்
- 100 வார்டுகள் கொண்ட கோவை மாநகராட்சி - நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்
- சென்னை: இந்தியாவிலேயே பழமையான மாநகராட்சியின் வரலாறு
- 117 ஒளி ஆண்டுகள் தொலைவில் உயிர்கள் வாழத் தகுதியான ஒரு கோள்
- அரியலூர் மாணவி தற்கொலை, தேவாலயங்கள் மீது தாக்குதல்: பிபிசி கள ஆய்வில் புதிய தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













