ராகுல் பஜாஜ்: மோதி அரசை வெளிப்படையாக விமர்சித்த தொழிலதிபர்

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் மூத்த தொழிலதிபர் ராகுல் பஜாஜ் புனேயில் சனிக்கிழமையன்று காலமானார். அவருக்கு வயது 83.
இன்று பிற்பகல் 2.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.
அவர் காலமானதை பிடிஐ செய்தி முகமை உறுதி செய்துள்ளது. ராகுல் பஜாஜுக்கு நிமோனியா மற்றும் இதயம் தொடர்பான நோய் இருந்தது என்று அந்த செய்தி மேலும் கூறியது. உடல்நிலை மோசமடைந்ததால் கடந்த ஒரு மாதமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ராகுல் பஜாஜ் நீண்ட காலமாக நாட்டின் பழமையான தொழில்துறை நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் குழுமத்தின் தலைவராக இருந்தார். அவர் தொழில்துறையின் வெளிப்படையான குரல் என்று அறியப்பட்டார். எல்லாப் பிரச்னைகளிலும் நேர்மையாகப் பேசுவதில் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார்.
ராகுல் பஜாஜ் 1938 ஜூன் 30 ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக பஜாஜ் குழுமத்தின் தலைவராக இருந்தார். கடந்த ஆண்டு ஏப்ரலில் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததையடுத்து அவர் 'எமரிட்டஸ் தலைவராக' நியமிக்கப்பட்டார். 2001 இல் அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. அவர் மாநிலங்களைவை உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.
ராகுல் பஜாஜ் வெளிப்படையாக பேசுவதற்கு பெயர் பெற்றவர். இந்தியாவில் காப்பரேட் ஆதிக்கம் குறித்த கவலையாக இருந்தாலும் சரி, நாட்டின் நலன் சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்தாலும் சரி, வெளிப்படையாகப் பேச அவர் தயங்கியதில்லை. எகனாமிக் டைம்ஸ் ஏற்பாடு செய்த ஒரு விழாவில் ராகுல் பஜாஜ், தான் எப்போதுமே அதிகாரத்திற்கு எதிரானவர் என்று கூறியதாக 'பிசினஸ் ஸ்டாண்டர்ட்' நாளேட்டின் செய்தி தெரிவிக்கிறது. 2006ல் பாஜக, என்சிபி மற்றும் சிவசேனை ஆதரவுடன் ராகுல் பஜாஜ் சுயேச்சை உறுப்பினராக மாநிலங்களவைக்கு வந்தார். ஆனால் அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில், "மக்கள் (தொழில்துறையினர்) உங்களை (மோதி அரசு) பார்த்து பயப்படுகிறார்கள். UPA-2 அரசு இருந்தபோது, நாங்கள் யாரையும் விமர்சிக்க முடிந்தது. ஆனால் இப்போது வெளிப்படையாக விமர்சித்தால் உங்களுக்கு பிடிக்கும் என்று தோன்றவில்லை." என்று கூறினார்.
தேசிய கீதம் போல் ஆன 'ஹமாரா பஜாஜ்'
ராகுல் பஜாஜ் தனது வணிக புத்திசாலித்தனத்தால் தனது குழுவான பஜாஜை நாட்டின் ஆட்டோமொபைல் துறையில் முதன்மையாக்கினார். பஜாஜ் ஸ்கூட்டர் அவரது தலைமையில் பெரும் புகழ் பெற்றது. இந்த ஸ்கூட்டரின் 'ஹமாரா பஜாஜ்' விளம்பரம், தேசிய கீதம் போல் ஆனது. அது இந்தியாவின் தற்சார்பின் அடையாளமாக மாறியது.
1970களில், இத்தாலிய நிறுவனமான பியாஜியோ, பஜாஜின் உரிமத்தைப் புதுப்பிக்காததால், தனது சொந்த பிராண்டுகளான சேடக் மற்றும் சூப்பர் என்ற பெயர்களில் பஜாஜ் நிறுவனம் ஸ்கூட்டர்களைத் தயாரிக்கத் தொடங்கியது.

பட மூலாதாரம், Getty Images
உரிமம்- லைஸென்ஸ் ராஜூக்கு எதிர்ப்பு
உரிமம்-அனுமதி முறையை அவர் எதிர்த்தார். லைஸென்ஸ் காரணமாக எழுபது-எண்பதுகளில் ஸ்கூட்டர் முன்பதிவு செய்து, டெலிவரிக்காக வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருந்தது. இதற்கு எதிராக ராகுல் பஜாஜ் பேசினார்.
நாட்டு மக்களுக்குத் தேவையான பொருட்களைத் தயாரிப்பதற்காக சிறைக்குச் செல்ல நேர்ந்தால், நான் செல்வேன் என்றார் அவர்.
பஜாஜ், லைசென்ஸ் பெர்மிட் அரசை எதிர்த்தாலும், அவர் உள்நாட்டு தொழில்துறையின் குரலாக இருந்தார் என்று மூத்த பத்திரிக்கையாளர் டிகே அருண் பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.
"1992-94ல் நடந்த தொழில் சீர்திருத்தங்களுக்கு எதிராகவும் ராகுல் பஜாஜ் வெளிப்படையாகப் பேசினார். இது இந்திய தொழில்துறைக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றும், உள்நாட்டு நிறுவனங்களுக்கு போட்டியை கடினமாக்கும் என்றும் அவர் வாதிட்டார்" என்று அருண் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
ராகுலின் பெயர் மற்றும் இந்திரா காந்தி
ராகுல் பஜாஜ் பிறந்தபோது, இந்திரா காந்தி காங்கிரஸ் தலைவர் கமல்நயன் பஜாஜின் (ராகுலின் தந்தை) வீட்டிற்குச் சென்று, தன்னிடமிருந்து ஒரு மதிப்புமிக்க பொருளை எடுத்துக் கொண்டதாக அவரது மனைவியிடம் புகார் செய்தார். ஜவஹர்லால் நேரு தனக்கு மிகவும் பிடித்தமான 'ராகுல்' என்ற பெயரைத்தான் இந்திராவின் மகனுக்கு சூட்ட வேண்டும் என்று நினைத்திருந்தார். ஆனால் நேரு இந்த பெயரை முன்னால் பிறந்த கமல்நாயன் பஜாஜின் மகனுக்கு சூட்டிவிட்டார்.
பின்னர் இந்திரா காந்தி ராஜீவ் காந்தியின் மகனுக்கு ராகுல் என்று பெயரிட்டார். ஏனெனில் இந்த பெயர் அவரது தந்தைக்கு மிகவும் பிடித்தமானது.
தலைமை நிர்வாக அதிகாரி பதவியை அடைந்த இளம் வயது இந்தியர்
தந்தை கமல்நயன் பஜாஜைப் போலவே, ராகுல் பஜாஜும் வெளிநாட்டில் படித்தவர்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பொருளாதாரம் படித்த பிறகு, ராகுல் பஜாஜ், பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் சுமார் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றார். அந்த நேரத்தில் பம்பாய் பல்கலைக்கழகத்தில் சட்டமும் பயின்றார்.
ராகுல் பஜாஜ் 60களில் அமெரிக்காவின் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ பட்டம் பெற்றார்.
படிப்பை முடித்து, 1968ல், தனது 30வது வயதில், 'பஜாஜ் ஆட்டோ லிமிடெட்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ராகுல் பஜாஜ் பொறுப்பேற்ற போது, இந்தப் பதவியை எட்டிய இளம் இந்தியர் என்ற பெருமையைப்பெற்றார்.
பஜாஜ் சேடக் (ஸ்கூட்டர்) மற்றும் பஜாஜ் பல்சர் (மோட்டார் சைக்கிள்) போன்ற தயாரிப்புகள் சந்தையில் தனது பிராண்டின் நம்பகத்தன்மையை அதிகரித்ததாகவும், அதனால்தான் 1965 இல் 3 கோடி ரூபாயாக இருந்த நிறுவனத்தின் வர்த்தகம், 2008ல் சுமார் பத்தாயிரம் கோடியை எட்ட முடிந்தது என்றும் அவர் கூறினார்.
ராகுல் பஜாஜ் ஒருமுறைதான் மாநிலங்களைவை உறுப்பினராக இருந்தார். இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) தலைவராக அவர் இருந்துள்ளார். இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கத்தின் (சியாம்) தலைவராகவும், இந்தியன் ஏர்லைன்ஸ் தலைவராகவும் அவர் இருந்துள்ளார். 'பத்ம பூஷண்' விருது பெற்றவர்.

பட மூலாதாரம், Getty Images
தனது வெற்றிக்கான புகழை மனைவிக்கு கொடுத்த பஜாஜ்
1961 ஆம் ஆண்டு நானும் ரூபாவும் திருமணம் செய்து கொண்டபோது, இந்தியாவின் முழு மார்வாரி-ராஜஸ்தானி தொழில்துறை இல்லத்தில் நடந்த முதல் காதல் திருமணம் அது என்று 2016 ஆம் ஆண்டு மூத்த பத்திரிக்கையாளர் கரண் தாப்பருக்கு அளித்த பேட்டியில் ராகுல் பஜாஜ் கூறியிருந்தார்.
"ரூபா மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிராமணர். அவரது தந்தை அரசு ஊழியர். நாங்கள் வணிகர் குடும்பம் என்பதால் இரு குடும்பத்தினரையும் சமரசம் செய்வது சற்று கடினமாக இருந்தது. ஆனால் நான் ரூபாவை மிகவும் மதிக்கிறேன். ஏனென்றால் நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்," என்று அவர் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:
- ஹிஜாப், புர்கா தடை: இஸ்லாமிய பெண்களின் ஆடைகளுக்கு தடை உள்ள நாடுகள்
- தமிழர் வரலாறு: தமிழ்நாட்டில் 3 இடங்களில் புதிதாக அகழாய்வு
- அம்பானி Vs அதானி: ஆசிய பெரும் கோடீஸ்வரர் பட்டியலில் போட்டி போடும் கெளதம் அதானியின் கதை
- இறந்த மகனின் விந்து வேண்டும் என்று கேட்டுப் போராடும் பெற்றோர் - என்ன சிக்கல்?
- அரியலூர் மாணவி தற்கொலை, தேவாலயங்கள் மீது தாக்குதல்: பிபிசி கள ஆய்வில் புதிய தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













