கர்நாடகா ஹிஜாப் தடை: 'சீருடை நிறத்தில் ஹிஜாப் அணிய அனுமதி வேண்டும்' - நீதிமன்றத்தில் இஸ்லாமிய மாணவிகள்

கர்நாடக அரசு விதித்த ஹிஜாப் தடையை எதிர்த்து வழக்கு தொடுத்த உடுப்பியைச் சேர்ந்த ஜூனியர் கல்லூரி மாணவிகள்

பட மூலாதாரம், @RUCONLINE

படக்குறிப்பு, கர்நாடக அரசு விதித்த ஹிஜாப் தடையை எதிர்த்து வழக்கு தொடுத்த உடுப்பியைச் சேர்ந்த ஜூனியர் கல்லூரி மாணவிகள்

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

இந்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இஸ்லாமிய மாணவிகள் தங்கள் சீருடையின் கால் சட்டை நிறத்திலேயே ஹிஜாப் அணிய அனுமதிக்கப்படுவது போல கர்நாடக அரசின் கல்வி நிறுவனங்களிலும் ஹிஜாப் அணிய அனுமதிக்கப்பட வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று வாதிடப்பட்டது என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கர்நாடக அரசு விதித்த ஹிஜாப் தடைக்கு எதிராக உடுப்பியைச் சேர்ந்த ஜூனியர் கல்லூரி மாணவிகள் தொடர்ந்த வழக்கு நேற்று கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராய் அவஸ்தி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது மாணவிகள் தரப்பில் இந்த கோரிக்கை வைக்கப்பட்டது.

''கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவிகளின் கால்சட்டை இருக்கும் நிறத்திலேயே தலையை மூடும் முக்காடு அணிய இஸ்லாமிய மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது,'' என்று மாணவிகள் சார்பில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத் வாதிட்டார்.

கேந்திரிய வித்யாலயாக்களில் இஸ்லாமிய மற்றும் சீக்கிய மாணவிகள் முக்காடு அணிய அனுமதிக்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த வழக்கு விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) தொடர உள்ளது.

54 சீன செயலிகளை முடக்கிய இந்திய அரசு

54 சீன செயலிகளை முடக்கிய இந்திய அரசு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 54 சீன செயலிகளை முடக்கிய இந்திய அரசு

நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்களின் தன்மறைப்பு உரிமை ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் செயல்பட்ட 54 சீன செயலிகளை மத்திய அரசு முடக்கியுள்ளது என்கிறது தினமணி செய்தி.

இதன் மூலமாக முடக்கப்பட்ட சீன செயலிகளின் எண்ணிக்கை 300-ஐ கடந்துள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூனில் டிக்டாக், யுசி பிரௌசா் உள்ளிட்ட 59 சீன செயலிகளை மத்திய அரசு முடக்கியது.

ஏற்கெனவே முடக்கப்பட்ட செயலிகளின் நகல்களாக அறியப்பட்ட மேலும் 47 செயலிகள் அதே ஆண்டு ஆகஸ்டில் முடக்கப்பட்டன. 2020-ஆம் ஆண்டு செப்டம்பரில் மேலும் 118 சீன செயலிகளை மத்திய அரசு முடக்கியது. அந்த ஆண்டில் மட்டும் ஒட்டுமொத்தமாக 267 சீன செயலிகள் முடக்கப்பட்டன.

இந்நிலையில், மேலும் 54 சீன செயலிகளை மத்திய அரசு திங்கள்கிழமை முடக்கியது. மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த பரிந்துரையை ஏற்று அச்செயலிகளை மத்திய தகவல்-தொழில்நுட்ப அமைச்சகம் முடக்கியது என்று தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

'சிறைக்கு செல்லும் பாஜக தலைவர்கள் பெயர்களை அறிவிப்பேன்'

சஞ்சய் ராவத்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சஞ்சய் ராவத்

இன்னும் சில நாட்களில் சிறை செல்லும் பா.ஜனதா தலைவர்கள் யார் என்பதை இன்று அறிவிக்க போவதாக சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார் என்கிறது தினத்தந்தி செய்தி.

மாகாராஷ்டிர மாநிலத்தில் மகாவிகாஸ் கூட்டணி (காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா) ஆட்சியை கவிழ்க்க உதவி செய்யுமாறு சிலர் தன்னை அணுகியதாக கடந்த சில நாட்களுக்கு முன் சஞ்சய் ராவத் கூறியிருந்தார்.

மத்திய முகமைகளின் அதிகாரத்தை வைத்து எங்களை மிரட்ட வேண்டாம். நாங்கள் அதற்கு பயப்படபோவதில்லை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், நான் அஞ்சப்போவதில்லை என்று அவர் கூறியுள்ளார் என்கிறது அந்தச் செய்தி.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: