அதிமுக, பாஜக காக்கும் 'பரம ரகசியம்' என்ன? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் `ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற பா.ஜ.கவின் திட்டத்தை அ.தி.மு.க முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசி வருவதற்கு தி.மு.க தரப்பில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. `தமிழ்நாடு நன்றாக இருப்பதற்கு மத்திய அரசு முயற்சி எடுக்கும்போது ஒத்துழைப்பு கொடுப்போம். அது ரகசியம்' என்கிறார் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்.
தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசி வரும் சில விஷயங்கள், விவாதப் பொருளாக மாறியுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சேலம் மாவட்டத்தில் நடந்த பிரசார கூட்டத்திலும் அதற்கு முன்னதாக கரூரில் நடந்த கூட்டத்திலும் பேசிய எடப்பாடி பழனிசாமி, ` ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் 2024ஆம் ஆண்டு சட்டசபைக்குத் தேர்தல் வரும். இன்னும் 27 அமாவாசைகள்தான் உள்ளன. இந்த ஆட்சியும் மாறும், காட்சியும் மாறும்' என்றார். மேலும், `மேற்குவங்க சட்டமன்றத்தை ஆளுநர் முடக்கியதைப் போன்ற நிலை, எதிர்காலத்தில் இங்கு வரலாம்' என்றார்.
இது குறித்து மதுரை மாவட்டத்தில் காணொளி பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், `தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதன் மூலமாக, நாட்டு மக்களை ஏமாற்ற முடியுமா என்று பழனிசாமி பார்க்கிறார். 2024 முதல் நாட்டில் ஒரே நாடு - ஒரே தேர்தல் வரப் போகிறது என்று ஆருடம் சொல்கிறார். இவருடைய ஞானதிருஷ்டிக்கு மட்டும்தான், இதெல்லாம் தெரியும்போல. கற்பனையில் கோட்டை கட்டிக் கொண்டு, பா.ஜ.கவுக்கு டப்பிங் பேசுகிறார். மிசாவையே பார்த்த இந்த ஸ்டாலினை உங்களால் மிரட்ட முடியுமா?
கற்பனையில் கூட அவ்வாறு கனவு காணாதீர்கள். சசிகலாவின் காலைப் பிடித்து பதவியைப் பெற்று, சசிகலாவின் காலை வாரி தனது பதவியை நிலைப்படுத்திக் கொண்டு, தனது நாற்காலியை நான்காண்டு காலம் காப்பாற்றுவதற்காக, பா.ஜ.கவுக்குப் பாதம் தாங்குவதையே வழக்கமாக வைத்திருந்து, டெல்லிக்குக் காவடி எடுத்த சுயநலத்தின் மொத்த உருவம்தான் நீங்கள்' என ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் பிபிசி தமிழ் பேசியது.

முதலில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பேசிய ஜெயக்குமார், ``பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்தது. மாநில அரசு ஏன் குறைக்கவில்லை என மக்கள் கேட்கின்றனர். நீட் தேர்வுக்கு முதல் கையொப்பம் போடுவோம் என்றார்கள்.
இவர்கள் சொன்ன வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. தேர்தல் காலத்தில் வாக்குறுதி கொடுக்கும்போது கஜானா பற்றியெல்லாம் இவர்கள் யோசிக்கவில்லை. ஊரக உள்ளாட்சியில் போலியான வெற்றியைப் பெற்றார்கள். நகர்ப்புற உள்ளாட்சியில் தி.மு.க படுதோல்வி அடையும் என உளவுத்துறை அறிக்கை அனுப்பியுள்ளது. ஒன்பது மாதம் கழித்து மாதம் ஆயிரம் ரூபாய் தருவோம் என முதலமைச்சர் கூறியுள்ளார்,'' என்கிறார்.
மேலும், ``மக்களை சந்திக்க முடியாமல் காணொளி மூலம் பேசி வருகிறார் ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலினை விட்டு அவர் ஆழம் பார்க்கிறார். தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதியை அவர்கள் நிறைவேற்றட்டும். 2024 நாடாளுமன்ற தேர்தல் வரும்போது இல்லத்தரசிகளுக்குப் பணம் கொடுப்பார்களா என தெரியவில்லை. எங்கள் ஆட்சியில் நிதி நெருக்கடி இருந்தாலும் மக்களுக்கு தேவையான சலுகைகளை வழங்கினோம்,'' என்றார் ஜெயக்குமார்.
இதைத்தொடர்ந்து அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
``கடந்த சில நாள்களாக, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுவது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளதே?''
``மத்திய அரசு ஒரு கொள்கை முடிவின் அடிப்படையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்துப் பேசுகின்றது. ஒரு வகையில் பார்த்தால் ஒரே நாடு, ஒரே தேர்தல் நல்லதுதான். சட்டமன்ற தேர்தலோடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்திருந்தால் எவ்வளவோ செலவுகளை மிச்சப்படுத்தியிருக்கலாம். மக்கள் நலனுக்காக ஆக்கபூர்வமாக செயல்பட்டிருக்கலாம். அந்த அடிப்படையில்தான் எடப்பாடி பேசினார். அவ்வாறு 2024ஆம் ஆண்டு தேர்தல் வந்தால் இவர்கள் காலியாகிவிடுவார்கள். இன்னும் 2 வருடத்தில் தி.மு.க ஆட்சி கலைக்கப்படலாம் என்ற அர்த்தத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கலாம்.''
``ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் அ.தி.மு.க பங்கேற்றது. சட்டசபையின் பதவிக்காலம் முடியும் முன்பே கலைப்பது சரியல்ல என்று எதிர்ப்பு தெரிவித்துவிட்டு தற்போது ஆதரித்துப் பேசுவது முரண்பாடாக இல்லையா?''
``முதலில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைப் பார்க்க வேண்டும். நாட்டில் காவல்துறைக்குப் பாதுகாப்பு இல்லை. இன்றைக்கு அவர்கள் மரியாதை இல்லாமல் நடத்தப்படுகின்றனர். தூத்துக்குடியில் போலீஸ் எஸ்.ஐ வெட்டிப் படுகொலை செய்யப்படுகிறார். மாநிலத்தின் சூழல் எப்படியுள்ளது என்பது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளே பேசுகின்றனர். எங்கள் ஆட்சியில் மதநல்லிணக்கம் இருந்தது. நில அபகரிப்புப் புகார்களில் அதிகம் சிக்கியது தி.மு.கவினர்தான்.''

``ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் மத்திய அரசுக்கு தனது விருப்பத்தை எடப்பாடி பழனிசாமி சொல்வதாக சேகர்பாபு விமர்சிக்கிறாரே?''
`` இதுவே, `எங்கள் ஆட்சியைக் கலைப்பதாக இருந்தால் கலைத்துப் பார்' என கூறுவோம். ஆனால், அவர்களுக்கே அவர்கள் மீது நம்பிக்கை இல்லை. ஆட்சி கலைந்தாலும் மக்களை சந்தித்து மீண்டும் வருவோம் என்கிறார்கள். ஆனால், அவர்கள் மீண்டும் வரப் போவதில்லை. அப்படியே சென்றுவிடுவார்கள். நீட் தேர்வு ரத்து, நகைக்கடன் தள்ளுபடி என ஏமாற்றி மக்களை வஞ்சிக்கக் கூடிய செயலை தி.மு.க செய்து வருகிறது. அதனால்தான் எங்கள் சாதனைகளைக் கூறி வாக்குகளைக் கேட்கிறோம். தி.மு.க ஆட்சியால் மக்கள் வேதனையில் உள்ளனர். பொருளாதாரத்தை மேம்படுத்தாமல் கலெக்சன், கமிஷன் என செயல்படுகிறார்கள்''.
``கடந்த அ.தி.மு.க ஆட்சியையும் இதே வார்த்தைகளில்தானே ஸ்டாலின் விமர்சனம் செய்தார்?''
``எங்களைப் பற்றி என்ன வேண்டுமானாலும் கூறிவிட்டுப் போங்கள். எங்கள் மீது போடப்பட்ட வழக்குகள் பொய்யானவை. பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக உள்ளூர் நிறுவனங்களிடம் இருந்து பொருள்களை வாங்காமல் வடஇந்தியா சென்று வாங்கியுள்ளனர். அதில் 500 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இதற்காக சிபிஐ விசாரணை கோரியுள்ளோம். தூத்துக்குடியில் தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், சோலார் பவர் நிறுவனத்திடம் சண்டையிட்ட காட்சிகள் வைரலானது. கொலை வழக்கில் கடலூர் தி.மு.க எம்.பி சிக்கியுள்ளார். இந்த விவகாரத்தில் சட்டப்போராட்டத்துக்குப் பிறகுதான் முதல் தகவல் அறிக்கையை எம்.பி மீது பதிவு செய்தனர். திருவொற்றியூர் எம்.எல்.ஏ கே.பி.சங்கர், சாலை போட வந்த மாநகராட்சி அதிகாரியை அறைந்துவிட்டு, பொருள்களை எட்டி உதைத்தார். இப்படித்தான் இவர்கள் ஆட்சி சென்று கொண்டிருக்கிறது.''
``தவறு செய்த தி.மு.கவினர் மீது கட்சிரீதியாகவும் சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதே?''
``எம்.எல்.ஏ கே.பி.சங்கர் மீது முதல் தகவல் அறிக்கை மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜேந்திர பாலாஜியைப் பிடிக்க எட்டு தனிப்படை அமைத்தார்கள். ஆனால், கே.பி.சங்கர் இயல்பாக சுற்றிக் கொண்டுதான் இருக்கிறார். ஆளும்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்கட்சிக்கு ஒரு நீதியா? சட்டமன்றம் என்பது சட்டம் இயற்றும் இடம். அப்படிப்பட்ட உறுப்பினர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு செயல்படுவது எந்தவகையில் சரியானது?''
``ஒரே நாடு ஒரே தேர்தல் கோரிக்கை தொடர்பாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களே கேட்காதபோது, எடப்பாடிக்குப் பிரதமர் மட்டும் தனியாக கடிதம் எழுதியுள்ளாரா என தி.மு.க எம்.பி ஆர்.எஸ்.பாரதி கேட்கிறாரே?''
``அந்த ரகசியத்தை சொல்ல முடியாது. நேரம் வரும்போது நாடு நன்றாக இருக்க வேண்டும் என முடிவெடுத்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்போது அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு கொடுத்துத்தான் ஆக வேண்டும்.''
``மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஓர் அரசின் சட்டப்பேரவை முடக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி கூறுவது, மாநில அரசின் உரிமையின் மீது தொடுக்கப்படும் தாக்குதலாக கருதலாமா?''
``சட்டம் ஒழுங்கு பிரச்னை, வன்முறை, தீவிரவாத பிரச்னை ஆகியவற்றின் அடிப்படையில்தான் எதிர்கட்சித் தலைவர் பேசுகிறார். ஆனால், முதலமைச்சர் ஆக உள்ளவர், பகுந்தறிந்து பார்க்க வேண்டாமா? மேற்கு வங்க அரசின் பரிந்துரையின் பேரிலேயே அங்கு சட்டசபை கலைக்கப்பட்டது. அது குறித்து ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து முதலமைச்சர் ட்வீட் போடுகிறார். யாரோ எழுதிக் கொடுப்பதை கண்மூடித்தனமாக ட்விட்டரில் போடுகிறார்.''
தகவல் இல்லை
மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.Facebook பதிவின் முடிவு
``மேற்குவங்கத்தைப் போல எதிர்காலத்தில் தமிழ்நாடு சட்டசபைக்கும் நேரும்' என்று எடப்பாடியும் சொல்கிறார். அப்படியென்றால் அவரும் மேற்குவங்க நிலவரத்தை அறியாமல்தான் பேசினாரா?''
``மக்களின் கோபத்தைப் பிரதிபலிக்க வேண்டும் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி பேசிவிட்டார். சட்டசபையை ஒத்திவைத்ததைப் பற்றிக் கூறியுள்ளார். இவை இரண்டுமே தெரியாமல் முதலமைச்சர் பேசுவதை எப்படி எடுத்துக் கொள்வது?''
``ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் பா.ஜ.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் ஏதோ ரகசியம் இருப்பதாகச் சொல்கிறீர்கள். பா.ஜ.கவோடு கூட்டணி இல்லை என கூறிவிட்டு அவர்களின் திட்டங்களை முன்னெடுப்பது முரண்பாடாக இல்லையா?''.
``எங்களைப் பொறுத்தவரையில் சிந்தாந்தம் என்பது வேறு, கொள்கை என்பது வேறு. எங்களுக்கென்று கொள்கைகள் உள்ளன. அதன் அடிப்படையில்தான் செயல்படுகிறோம். அவர்களின் கொள்கைகளோடு எங்களை ஒப்பிட முடியாது. பா.ஜ.க வேறு, நாங்கள் வேறு. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கனிமொழியை சிறையில் அடைத்தனர். கூடா நட்பு என்றெல்லாம் கருணாநிதி பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எல்லாம் காங்கிரஸ் கட்சியை ஏற்றுக் கொள்ளவில்லை. இப்போது ஒன்றுகூடி கொடி பிடிக்கிறார்கள். தோழமை என்பது வேறு. அது ஓர் கூட்டணி. அதுகூட எங்களுக்கு இல்லை''.
``கோவையில் பிரசாரம் மேற்கொண்ட பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, `தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையில்தான் கருத்தியல்ரீதியாக மோதல் உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 80 சதவீதம் எங்களைத்தான் எதிர்த்துப் பேசுகிறார்' என்றார். அப்படியானால், உள்ளாட்சித் தேர்தல் களத்தில் அ.தி.மு.க இல்லையா?''
``அவர்கள் கட்சியை வளர்ப்பதற்கு அவர்கள் ஆயிரம் பேசுவார்கள். அதையெல்லாம் நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. சீமான் கட்சி கூட பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்''.
``சட்டமன்ற தேர்தலில் இருந்தே பா.ஜ.கவினர் இதே கருத்தைப் பேசிக் கொண்டுதானே இருக்கிறார்கள்?''
``அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே நாற்பது லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளோம். இந்த உயரத்தை யாராவது தொட முடியுமா?''

பிற செய்திகள்:
- கத்திப்பாரா நகர்புற சதுக்கம் முதல் சூளைமேடு சுவரோவியம் வரை: சென்னையை வண்ணமயமாக்கும் கெளசிகா மற்றும் குழுவினர்
- 100 வார்டுகள் கொண்ட கோவை மாநகராட்சி - நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்
- சென்னை: இந்தியாவிலேயே பழமையான மாநகராட்சியின் வரலாறு
- 117 ஒளி ஆண்டுகள் தொலைவில் உயிர்கள் வாழத் தகுதியான ஒரு கோள்
- அரியலூர் மாணவி தற்கொலை, தேவாலயங்கள் மீது தாக்குதல்: பிபிசி கள ஆய்வில் புதிய தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












