"பாஜக, அதிமுக கூட்டணி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இல்லை" - அண்ணாமலை அறிவிப்பின் பின்னணி என்ன?

பட மூலாதாரம், Annamalai BJP TN
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாடு நகப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். `அ.தி.மு.கவுக்கு செல்வாக்கு உள்ள இடங்களை எல்லாம் பா.ஜ.கவும் கேட்டது. இதனால் உடன்பாடு எட்டப்படவில்லை' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். என்ன நடந்தது?
முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் சர்ச்சை
தமிழ்நாட்டில் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடம் இடங்கள் குறித்து அ.தி.மு.க நிர்வாகிகளுடன் பா.ஜ.க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
கடந்த இரு தினங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. `விரைவில் அறிவிப்பு வரலாம்' எனப் பா.ஜ.க நிர்வாகிகள் பேசி வந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை, தனித்தே போட்டியிடுகிறோம் என்ற அறிவிப்பை பாஜக வெளியிட்டது.
இந்த அறிவிப்பு, அந்த இரு கட்சிகளும் கொண்டுள்ள அரசியல் கூட்டணி உறவில் முக்கியத்துவம் வாய்ந்த திருப்பமாக கருதப்படுகிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
முன்னதாக, கடலூர் மாநகராட்சி, சிதம்பரம், விழுப்புரம், விருத்தாச்சலம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, திட்டக்குடி, தருமபுரி ஆகிய நகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க வெளியிட்டது.
பா.ஜ.கவுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே அ.தி.மு.க வெளியிட்ட வேட்பாளர் பட்டியல் என்பது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியது. இன்று (31.01.22) இரண்டாம்கட்ட வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க வெளியிட உள்ளது.
கூட்டணி முறிவு ஏன்?
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க தனித்துப்போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், `அ.தி.மு.க தலைவர்களுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தினோம். எங்கள் கட்சி நிர்வாகிகளும் அதிக இடங்களில் போட்டியிட விரும்புகின்றனர். தொண்டர்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் என்பது தலைமையின் முடிவு. இதனை டெல்லியில் உள்ள தலைவர்களும் ஏற்றுக் கொண்டனர். அதைவைத்துத்தான் அ.தி.மு.க தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம்,'' என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், ``நகர்ப்புற உள்ளாட்சியில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் எங்கள் கட்சியின் தொண்டர்கள் நிற்க வேண்டும் என விரும்புவது நியாயமான கோரிக்கை. அ.தி.மு.கவுக்கும் நிறைய பிரச்னைகள் உள்ளன. இந்தத் தேர்தலில் பா.ஜ.க தனித்துப் போட்டியிடுவது என முடிவு செய்துள்ளோம். அனைத்து இடங்களிலும் நிற்கப் போகிறோம். அதேநேரம், 2024 தேர்தல் வரையில் தொடர்ந்து இந்தக் கூட்டணியில் இருப்போம்.
வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட இருக்கிறோம். கட்சியின் அடுத்தகட்டப் பயணத்துக்கு இலக்கை அடைவதற்கு வாய்ப்பாக இருக்கும். அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவதற்காக கடுமையாக உழைப்போம். தமிழ்நாட்டில் இல்லம்தோறும் தாமரை மலர வேண்டும். தொண்டர்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் என்பது எங்கள் எண்ணம். வரும் நாள்களில் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி தொடரும்,'' என்றார்.
நயினாரின் பேச்சு காரணமா?
` நயினார் நாகேந்திரனின் பேச்சுதான் கூட்டணி முறிவுக்குக் காரணமா?' என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, `அனைத்துக் கட்சியிலும் தலைவர்களின் கருத்துகள் முரண்பாடாக இருக்கும். நயினார் நாகேந்திரன் பேசியதற்காக வருத்தம் தெரிவித்திருந்தார். அதனை இரு கட்சிகளும் பெரிதுபடுத்தவில்லை. இந்தத் தேர்தல் மூலம் பா.ஜ.க அடுத்தகட்டத்துக்குச் செல்ல வேண்டும். அ.தி.மு.க தலைவர்கள் மீது எந்த வருத்தமும் கிடையாது. மிகவும் கடினமான நேரங்களில் அ.தி.மு.க தலைவர்கள் கட்சியை வழிநடத்தி வருகின்றனர். நாங்களும் அடுத்தகட்டமாக கட்சியைக் கொண்டு செல்வதற்கான பணியாகப் பார்க்கிறோம்.
கடந்த உள்ளாட்சியில் 8 மாவட்டங்களில் கூட்டணியில் நின்றோம். கள்ளக்குறிச்சியில் தனித்துப் போட்டியிட்டோம். இந்தமுறை அ.தி.மு.க தரப்பில் 10 சதவீதம் ஒதுக்கியிருந்தனர். நாங்கள் கூடுதலாகக் கேட்டோம். நாங்கள் எதிர்பார்த்த இடங்கள் கிடைக்கவில்லை' என்றார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
கேட்டது 20 சதவீதம், ஆனால்?
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய பா.ஜ.க நிர்வாகி ஒருவர், ``கூட்டணி பேச்சுவார்த்தையில் எங்களுக்கு வெற்றிவாய்ப்புள்ள இடங்களை ஒதுக்குவதற்கு அ.தி.முக தயாராக இல்லை. மாநிலம் முழுவதும் 20 சதவீத இடங்களைக் கேட்டு, அதற்காக வருவாய் மாவட்ட ரீதியிலான பட்டியலை அ.தி.மு.க தலைமையிடம் கொடுத்திருந்தோம். கோவை, திருப்பூர், காஞ்சிபுரம், மதுரை புறநகர், திருநெல்வேலி, நாகர்கோவில் என சில மாநகராட்சிகளின் மேயர் இடங்களையும் கேட்டிருந்தோம். இதற்கு அ.தி.மு.க தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. எங்களுக்கு பத்து சதவீத இடங்களுக்கு மேல் அவர்கள் ஒதுக்கவில்லை. ஒருகட்டத்தில் தனித்துப் போட்டி என்ற முடிவை தலைமை எடுத்தது. இதன்மூலம் எங்கள் வலிமையைக் காட்டுவதற்கான வாய்ப்பாக பார்க்கிறோம்,'' என்கிறார்.
அண்ணாமலையின் பேட்டி தொடர்பாக பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், ``ஒவ்வொரு கட்சிக்கும் எதிர்பார்ப்புகள் இருக்கும். அதனைப் பூர்த்தி செய்யக் கூடிய அளவுக்கு எங்கள் கட்சியின் நலனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாத சூழலை தெரிவித்தோம். குறிப்பாக, தற்போது அதிகப்படியான இடங்களை ஒதுக்க முடியாத நிலையில் இருக்கிறோம். தனித்துப் போட்டி என்பது அவர்கள் கட்சி எடுத்த முடிவு'' என்றார்.

நியாயமான இடங்களைத்தான் கேட்டோம்
இதுதொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், ``இன்றுள்ள சூழலில் அ.தி.மு.க, பா.ஜ.க ஆகியவற்றின் வாக்கு வங்கி என்பது ஒன்றுதான். இருவரும் தனித்தனியாக நின்றால் வாக்குகள் சிதறிப் போகும். பா.ஜ.க மிக வேகமாக வளர்ந்து வருகிறது. மாநில தலைவராக அண்ணாமலை வந்த பிறகு இளைஞர்களின் கூட்டமும் பெருகிவிட்டது. தேர்தல் வேலைகளையும் நன்றாகத் தெரிந்து கொண்டோம். பூத் கமிட்டிப் பணிகளும் நிறைவடைந்துவிட்டன. பிரதமரின் திட்டங்களையும் வீடுதோறும் கொண்டு சென்றுள்ளோம். நாங்களும் நியாயமான இடங்களைத்தான் கேட்டோம். நாங்கள் கூற வேண்டியதை அ.தி.மு.கவிடம் தெரிவித்தோம். தலைமையின் முடிவே இறுதியானது,'' என்கிறார்.
``பா.ஜ.கவுடன் தேர்தல் உடன்படிக்கை சரிவரவில்லை. இதில் சதவீதக் கணக்குகளுக்கு இடமில்லை. எங்களுக்கு வெற்றிவாய்ப்புள்ள இடங்களை அவர்களும் கேட்கிறார்கள். அந்தப் பகுதிகளில் நீண்டகாலமாக தேர்தல் வேலை பார்த்த எங்கள் கட்சியின் நிர்வாகிகளும் இருக்கிறார்கள். நாங்கள் வலுவாக இருக்கிறோம். எங்கள் மீது பயணம் செய்வதற்குத்தான் மற்ற கட்சிகள் காத்திருக்க வேண்டும். கூட்டணி தர்மத்தின்படி எங்களை நம்பி வருகிறவர்களுக்கு நல்ல இடங்களைக் கொடுப்போம். அவ்வாறு இல்லாவிட்டால் வருத்தப்பட ஒன்றும் இல்லை,'' என்கிறார் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல்.
அ.தி.மு.க முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்ட நிலையில், பா.ஜ.கவும் வேட்பாளர் பட்டியலை அறிவிக்க உள்ளது. இது களத்தில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது வாக்கு எண்ணிக்கை நாளில் தெரிந்துவிடும்.
பிற செய்திகள்:
- இந்திய பட்ஜெட் -2022 தேர்தல் பட்ஜெட்டாக இருக்குமா? யாருடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும்?
- இந்தியாவில் கடந்த ஆண்டு ரூ.3.4 லட்சம் கோடிக்கு தங்கம் வாங்கிய மக்கள்: 81 சதவீதம் அதிகரிப்பு
- யேமன் உள்நாட்டுப் போர்: பல நூறு குழந்தை போராளிகள் மரணம்
- நரேந்திர மோதிக்கு தமிழ் கட்சிகள் எழுதிய கடிதத்தால் இலங்கையில் அரசியல் சர்ச்சை
- ஆஸ்திரேலிய ஓபன்: ரஃபேல் நடால் 21 கிராண்ட்ஸ்லாம் வென்று உலக சாதனை
- திப்பு சுல்தான் மதமாற்றம் செய்த கொடுங்கோலனா? விடுதலைக்கு போராடிய வீரனா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












